கவிதையின் நாயகி

The heart asks pleasure first and then excuse from pain.

– Emily Dickinson

அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கின்சன் பற்றி A Quiet Passion திரைப்படத்தினைப் பார்த்தேன். படத்தின் ஒரு காட்சியில் பாதிரியார் எமிலியின் வீட்டிற்கு வந்து பிரார்த்தனை நடத்துகிறார். எமிலியின் தந்தையும் சகோதரியும் தாயும் மண்டியிட்டு பிரார்த்தனைக்குத் தயார் ஆகும் போது  எமிலி மட்டும் மண்டியிட்டு பிரார்த்திக்க விரும்பவில்லை என மறுக்கிறார்.

கடவுளிடம் உன் பாவங்களுக்காக மண்டியிட வேண்டியதில்லையா எனப் பாதிரியார் கோபத்துடன் கேட்டதற்கு, எனக்குள்ளே கடவுள் இருக்கிறார். அவருக்கு என்னைப் பற்றி எல்லாமும் தெரியும் எனப் பிடிவாதமாக மறுத்துவிடுகிறார்.

இந்தக் காட்சியில் வெளிப்படும் எமிலியின் பிடிவாதமும் கடவுள் நம்பிக்கையும் முக்கியமானது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் இப்படி வெளிப்படையாக மதமறுப்பில் ஈடுபடுவது எளிதானதில்லை. அதுவும் நிறைய மதக்கட்டுபாடுகள் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இறையியல் கல்லூரியில் படித்த ஒரு பெண் இப்படிப் பேசுவது வியப்பிற்குரியது. ஆனால் எமிலி அப்படிபட்டவர் தான்.

தீராத் தனிமையே எமிலி டிக்கின்சனை கவிஞராக்கியது. தன் வாழ்நாளில் மிகக் குறைவான கவிதைகளையே அவர் வெளியிட்டிருக்கிறார். கையடக்கமான நோட்டில் ரகசியமாக அவர் எழுதி வைத்த 1800 கவிதைகள் அவரது வாழ்நாளுக்குப் பின்பு தான் வெளியிடப்பட்டன.

எமிலி டிக்கின்சன் திருமணம் செய்து கொள்ளவில்லை. வீடு தான் உலகம். அதுவும் படுக்கையறை தான் அவரது எழுத்தின் பிறப்பிடம். எப்போதும் வெள்ளை உடை அணிந்து கொண்டு வீட்டின் மாடியிலிருந்து கிழே இறங்கி வராமலே முழுமையான தனிமையில் வாழ்ந்தவர் எமிலி.

எமிலிக்கு எட்டு வயதான போது குடும்ப நண்பர் ஒருவர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகளை அறிமுகம் செய்துவைத்தார் அதுவே கவிதைகளின் முதற்பரிச்சயம் .1847-ல் பள்ளிக் கல்வி முடிந்தவுடன் மவுன்ட் ஹோல்யோக் பெண்கள் இறையியல் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். ஆனால் ஆசிரியர்கள் கடுமையான கட்டுபாடுகள் காரணமாக அங்கு படிப்பை முடிக்காமல் வீடு திரும்பினார்.

தந்தையின் வீட்டில் உலகம் அறியாத கவிஞராகவே தன் வாழ்நாளை கழித்தார் எமிலி டிக்கின்சன்

ஒரு காட்சியில் அவரது கவிதைகளை வாசித்துவிட்டு பாராட்ட வருகிறவனை முகம் பார்க்க மறுத்தபடியே  மாடியில் நின்றபடி அவனது குரலை மட்டும் கேட்கிறார் எமிலி.

நான் உங்களைப் பார்த்து பேச விரும்புகிறேன் என அந்த நபர் ஆதங்கத்துடன் கேட்டபோது என் கவிதைகளைப் பார்ப்பதே போதுமானது. நீங்கள் பேசுவது எனக்குக் கேட்கிறது. அதுவே போதும் என அனுப்பி வைக்கிறார்.

சிறுவயது முதலே மரணத்தின் மீதான அச்சமும் குழப்பமும் அவரைப்பீடித்திருந்தன. அதிகம் உணர்ச்சிவசப்படுகிறவராக இருந்தார். இளமையில் மற்ற பெண்களை போல காதல், திருமணம் என கனவு காணாமல் தனக்கென ஒரு கனவுலகை உருவாக்கிக் கொண்டு அதிலே சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார். கவிதைகள் தான் அவரது ஒரே ஆறுதல்.

விமர்சகர்கள் எமிலிக்கு agoraphobia எனக்கூறுகிறார்கள். இந்த மனநிலை கொண்டவர்களால் கூட்டத்திற்குள் செல்லமுடியாது. பொதுநிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்ள இயலாது.

படத்தின் இன்னொரு காட்சியில் தன்னைத் தேடி வரும் பதிப்பாளரிடம் தன் கவிதையில் ஒரு கமா, புல்ஸ்டாப் மாற்றக்கூடாது. அப்படி மாற்ற அவருக்கு எந்த உரிமையும் இல்லை எனக்கோவித்துக் கொள்கிறார். எமிலி டிக்கின்சனின் கவிதைகளை வாசித்தவர்களுக்கு அவர் சொல்வது எவ்வளவு முக்கியமானது என நன்றாகவே புரியக்கூடும்.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் பிறந்தார் எமிலி டிக்கின்சன். வில்லியம் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை விரும்பி படித்தார். ஷேக்ஸ்பியர் ஒருவரே தனக்குப் போதும் என நாட்குறிப்பு ஒன்றில் எழுதியிருக்கிறார்.

A Quiet Passion திரைப்படத்தினை மூன்று பெண்களைக் கதை என்றே கூறவேண்டும். ஒருவர் எமிலி. மற்றவர் சூசன் கில்பர்ட் மூன்றாவது நபர் லாவினியா . இவர்களுடன் Vyrling Buffam என்ற நவீன யுவதியின் வாழ்வும் இடைவெட்டாக வந்து போகிறது. இந்த பெண்களின் தினசரி உலகும், ரகசியப்பேச்சுகளும், தேவாலயத்திற்கு போய் வருவதும். ஆளுக்கு ஒரு கனவில் ஊசலாடுவதும் அழகாக சித்தரிக்கபட்டுள்ளது.

அடிமை ஒழிப்பில் முன்னோடியாக இருந்த தாமஸ் வெண்ட்வொர்த் ஹிக்கின்ஸனுக்குத் தனது நான்கு கவிதைகளை அனுப்பி வைத்தார் எமிலி. காரணம் ஹிக்கின்ஸன் பெண்களின் சுதந்திரம் மற்றும் புத்திலக்கிய முயற்சிகள் பற்றி அக்கறை கொண்டதாகும்.. இந்தக் கடிதமே எமிலியின் கவிதை வாழ்க்கையின் துவக்கம்.

கவிதைகள் மனவெழுச்சி தரக்கூடியதாக இருந்தன என ஹிக்கின்ஸ்ன் கடிதம் எழுதினார். அதன்பிறகு அவர் ஹிக்கின்ஸனுக்குச் சில வாரங்களுக்குப் பிறகு இன்னொரு கடிதம் எழுதினார். அதில் மூன்று கவிதைகளை இணைத்திருந்தார். அசலான, புதுமையான சிந்தனையுடன் ஒரு கவி உதயமாவதை ஹிக்கின்ஸன் கண்டுகொண்டார். அதைப்பாராட்டி எழுதினார்.

தனது கவிதைகளை அச்சில் காண எமிலி டிக்கின்சன் ஆர்வம் காட்டவேயில்லை. தனக்குத் தானே சொல்லிக்கொள்ளும் ஆறுதல் வார்த்தைகளைப் போலவே அவற்றை எழுதியிருக்கிறார். கற்பனையும் கனவும் ஒன்று கலந்த கவிதைகள். உணர்ச்சிகளின் ஊசலாட்டத்தைத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறார்.

படத்தின் ஒரு காட்சியில் தனது தந்தையிடம் இரவு மூன்று மணிக்கு எழுந்து தான் விரும்புகிறவற்றை எழுதிக் கொள்ள அனுமதி வேண்டும் எனக்கேட்கிறாள். அவரும் தலையாட்டுகிறார். நிச்சயமாக யாருக்கும் தொந்தரவாக இருக்காது என உறுதி சொல்கிறாள். அப்படித் தான் எமிலி எழுதினாள். உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் போது அவள் விழித்துக் கொண்டிருந்தாள். எமிலியின் கவிதைகள் வலியையும் வேதனையும் நிராகரிப்பையும் புரிந்து கொள்ளப்படாத அன்பையும் விவரிப்பவை. தனது சகோதரியை தவிர வேறு யாருடனும் தன் அன்பை அவள் பகிர்ந்து கொள்ளவில்லை.

எமிலியின் வாழ்க்கை திருப்பங்கள் அற்றது. மெய்தேடல் கொண்ட கவிஞராகவே இன்றும் கொண்டாடப்படுகிறார். அவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக்குவது எளிதானதில்லை. ஆனால் A Quiet Passion அதை மிக அழகாகச் செய்து காட்டியிருக்கிறது

எமிலி டிக்கின்சனின் ஆளுமை தான் படத்தின் மையப்புள்ளி. அவள் உருவான விதம். அவளது விருப்பு வெறுப்புகள். குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல். கவிதைகள் குறித்த அவளது எண்ணங்கள். பதிப்பாளருடன் ஏற்பட்ட சண்டை, தன்னை நேசிக்கும் மனிதர்களைக் கூட நெருங்கவிடாமல் ஒதுக்கும் வீம்பு. என எமிலியின் அகம் படத்தில் மிக அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

எமிலி டிக்கன்ஸன் என்றாலே நினைவிற்கு வருவது அவரது கறுப்பு வெள்ளை புகைப்படம் தான். வழித்துச் சீவிய தலை. கறுப்பு கவுன் அணிந்து ஒடுங்கிய முகத்துடன் கழுத்தில் ரிப்பன் கட்டிக் கொண்டு இடது கையில் மலரும் அருகிலுள்ள மேஜையில் பைபிளுமாக எமிலி நாற்காலியில் அமர்ந்துள்ள தோற்றம் வசீகரமானது. குறிப்பாக எமிலியின் கண்களை உற்றுப்பாருங்கள். விவரிக்கமுடியாத சோகம் கலந்த கண்கள்.

இந்தப் புகைப்படம் எடுக்கும் காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் புகைப்படம் எடுப்பது என்பது எமிலியின் குடும்பத்தில் எவ்வளவு முக்கியமான நிகழ்வு என்பதை விளக்குகிறது

எமிலியின் தந்தை வழக்கறிஞர். சகோதரன் ஆஸ்டினும் வழக்கறிஞரே. அண்ணனுடன் எமிலிக்கு நெருக்கமான அன்பும் பாசமும் இருந்தது. ஆரம்ப நாட்களில் அவனிடமே தனது கவித்துவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

ஆஸ்டின் சூசன் திருமணத்தின் பிறகு அவர்கள் வீட்டிற்கு வரும் போது சூசனிடம் அவளும் தனது சகோதரியே எனக்கூறுகிறாள் எமிலி டிக்கின்சன் . காரணம் ஆஸ்டின் திருமணத்திற்கு முன்பாகவே சூசனோடு நெருக்கமான தோழமை கொண்டிருந்தார்.

ஒரு இரவில் எமிலி எழுதிக் கொண்டிருக்கும் போது சூசன் வந்து பார்க்கிறாள். அவர்களுக்குள் நடைபெறும் உரையாடலும் இவருக்குமான உறவும் அற்புதமாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது

எமிலியின் அம்மாவிற்குப் பக்கவாதம் வந்துவிடுகிறது. நோயாளியாகப் படுக்கையில் கிடக்கிறார். இதனால் வீட்டின் பொறுப்பு முழுமையாக எமிலியிடம் வந்து சேருகிறது. ரொட்டி சுடுவது, தோட்டவேலைகளில் ஈடுபடுவது என வாழ்க்கை ஒடுகிறது

ஒரு நாள் கோபத்தில் பணியாளர்களை எமிலி கோவித்துக் கொள்ளும் போது தந்தை அவர்கள் வெறும் வீட்டுவேலையாட்களில்லை, அவர்களிடம் மன்னிப்பு கேள் எனக் கூறுகிறார். அவர்களிடம் எமிலி மன்னிப்பு கேட்கிறார். தந்தைக்கும் எமிலி டிக்கின்சனுக்குமான உறவு மிகச்சிறப்பாக படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தனது மரணத்தின் பிறகு தனது கவிதைகளை எரித்துவிடும்படியாகவே லிவினியாவிடம் எமிலி டிக்கின்சன்  சொல்லியிருந்தார். ஆனால் லிவினியா அவற்றை முறையாகத் தொகுத்து தனித்தனி தொகுதிகளாக வெளியிட்டார். பின்பு 1955 ல் முழுமையான தொகுப்பு வெளியிடப்பட்டது .

எமிலியின் கவிதைகள் பெரிதும் தன்னிலையை வெளிப்படுத்தி எழுதப்பட்டவை. எமிலி டிக்கின்சன் அளவிற்கு I என்ற சொல்லை பயன்படுத்திய இன்னொரு கவி கிடையாது. ஆனால் இந்த “நான்“ எமிலி மட்டுமில்லை. அவர் தன்னை ஒரு அடையாளமாகக் கருதுகிறார்.  தன் வழியே உலகிற்குச் சில விஷயங்கள் வெளிப்படுவதாக நம்புகிறார். அவர் ஒரு ஊடகம் என்பது போல அவரது கவிதைகள் அமைந்திருக்கின்றன.

இயற்கையை எமிலி வெறும் புறத்தோற்றமாகக் காணவில்லை. மாறாக அதன் இருப்பும் இன்மையும் அகத்தாலே உருவாக்கபடுகிறது. கொந்தளிக்கும் அகத்திற்கே இயற்கையின் உன்மத்தம் புரியும் என்கிறார்.

பைபிள் வழியாகக் கடவுள் அவருக்கு அறிமுகமாகியிருந்த போதும் கவிதையில் வரும் கடவுள் எமிலி உருவாக்க கொண்டவரே. அன்பின் அடையாளம் போலவே அவர் கடவுளை முன்வைக்கிறார். சொர்க்கம், நகரம் வீழ்ச்சி, மறதி, துயரம், தனிமை, மரணம், நித்யம் என நீளும் அவரது கவிதையின் பாடுபொருள்கள் தவிப்பும் கொந்தளிப்பும் கொண்ட மனதின் வெளிப்பாடாகவே உள்ளன.

I am afraid to own a Body –

I am afraid to own a Soul –

என எமிலியின் கவிதை ஒன்று துவங்குகிறது. உடலைக் கையாளுவது எளிதானதில்லை. உடல் அவரது கட்டுக்குள் இருக்கவில்லை. உடலை கொண்டு வாழ்வதும், மனதால் வாழ்வதும் ஒன்றல்ல, உடலுக்கு நிறைய அடையாளங்கள் தேவைப்படுகிறது. ஆசையின் விளைநிலமாக இருக்கிறது உடல். ஆன்மாவோ தனது தூய்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போராடுகிறது. ஆன்மாவின் வலி, வேதனைகளைத் தவிர்ப்பதற்காக ஆன்மாவே வேண்டாம் என்ற நிலைக்குப் போய்விடுகிறார் எமிலி டிக்கின்சன். அமெரிக்கக் கவிஞரான விட்மன் கூறும் I am the poet of the Body and I am the poet of the Soul என்பதன் நேர் எதிர்நிலை எமிலியுடையது.

Terence Davies படத்தை இயக்கியுள்ளார். இவர் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களை இயக்கியுள்ளார். Cynthia Nixon எமிலியாக நடித்திருக்கிறார். பிரமிப்பூட்டும் நடிப்பு. குறிப்பாகக் கோபத்தில் அவர் பேசும்போது ஏற்படும் நடுக்கமும் சமையலறையில் மயங்கி விழும் காட்சியும் அற்புதம்.

படத்தின் வழியே எமிலி டிக்கின்சன் என்ற கவியின் வாழ்வை நாம் அறிந்து கொள்கிறோம். அவரது கவிதையின் உலகம் நம் முன்னே வாசிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறது. அது இப்படத்தை விடவும் வீரியமும் சவாலும் கொண்டது.

படம் முடிந்தபிறகு இரவு எமிலி டிக்கின்சன் கவிதைகள் தொகுப்பை வாசிக்கத் துவங்கினேன். நூற்றாண்டினைக் கடந்தும் அவரது கவிதைகள் ஒளிர்ந்து கொண்டேதானிருக்கின்றன.

••

0Shares
0