கவிதையே அடையாளம்

நேற்று வெய்யிலின் கவிதைகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தேன்.

அந்த அரங்கில் ஒரு இளைஞர் தயக்கத்துடன் ஒரு புத்தகத்தில் கையெழுத்து வேண்டும் என்று கேட்டார். மகிழ்ச்சியோடு கையெழுத்திட்டுத் தருகிறேன் என்று அவரிடமிருந்து புத்தகத்தை வாங்கினேன்.

அது கவிதையின் கையசைப்பு என்ற சமகால உலகக் கவிஞர்கள் பற்றிய எனது புத்தகம். முன்பே வாங்கிப் படித்திருக்கிறார்.

கையெழுத்திடுவதற்கு முன்பாக அந்தப் புத்தகத்தை லேசாகப் புரட்டினேன். நிறைய வரிகளை அடிக்கோடிட்டிருக்கிறார். சில பக்கங்களின் ஓரத்தில் ஏதோ குறிப்புகள் போல கிறுக்கலாக எழுதியிருக்கிறார். சில கவிதை வரிகளை அடுத்து பூவின் படம் வரைந்திருக்கிறார். மேலும் கீழுமாக கோடுகள் போன்ற இரண்டு வரிகளை இணைத்துப் பார்த்திருக்கிறார். இப்படி விருப்பமான முறையில் ஆழ்ந்து ரசித்துப் படித்திருப்பது எனக்குப் பிடித்திருந்தது.

சமகால உலகக் கவிதைகளின் தொகுப்பினை பிரம்மராஜன் 1989ல் கொண்டு வந்திருந்தார். அற்புதமான தொகுப்பு. அந்தத் தொகுப்பினை இப்போதும் வைத்திருக்கிறேன். அடிக்கடி எடுத்துப் படிக்கிறேன். பிரம்மராஜனுக்குப் பிறகு அப்படியான விரிவான தொகை நூல் எதுவும் தமிழில் வெளியாகவில்லை.

கொரியக் கவிஞர் கோ யுன் கவிதைகளை ஆங்கிலத்தில் வாசித்த போது இவரைப் போன்ற மகத்தான கவிஞரைத் தமிழில் அறிமுகம் செய்யலாமே என்ற எண்ணம் தோன்றியது. கோ யுன் நிறைய எழுதியிருக்கிறார். தொடர்ச்சியாக அவரது இருபது கவிதை தொகுப்புகளை வாங்கிப் படித்தேன். அதைத் தேடி வாங்கியதே பெரிய கதை. படிக்க படிக்க வியப்பும் மயக்கமும் உருவானது. இவரைப் போன்ற மகத்தான கவிகளை அறிமுகம் செய்யலாமே என்று உருவானது தான் கவிதையின் கையசைப்பு தொடர்.

தடம் இதழில் ஓராண்டு வெளியானது. இதில் 12 முக்கியக் கவிஞர்களின் கவிதைகளை அறிமுகம் செய்து சமயவேல் மொழியாக்கம் செய்த கவிதைகளுடன் வெளியிட்டிருந்தேன். இந்தத் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நூலைத் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பொதுவாக நாவல், சிறுகதைகள். கட்டுரை நூல் அளவிற்குக் கவிதை சார்ந்த நூல்களுக்கு விமர்சனம் வருவதில்லை. யாரும் பொதுவெளியில் பேசுவதில்லை. ஆனால் தீவிரமான வாசகர்கள் கவிதை சார்ந்த நூல்களைக் கவனமாக வாசிக்கிறார்கள். ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறேன்.

மேஜையின் மீது வைக்கப்பட்ட ரொட்டி

ஒரு குவளை நீர்

அல்லது ஒரு துளி உப்பு

போன்றதே கவிதையும்

என்ற ரூபஸின் வரிகளுக்குக் கீழே அந்த இளைஞன் கோடு போட்டிருந்ததைக் கவனித்தேன்.

ஒரு புத்தகம் எப்படி வாசிக்கப்படுகிறது. எந்த வரிகள் யாரை மகிழ்ச்சிப்படுத்துகின்றன அல்லது துயரமடையச் செய்கின்றன என்பது புதிரானதே. ஒரு புல் நிசப்தமாக வளர்ந்து கொண்டிருப்பது போலத் தான் புத்தகங்களும் வளர்ந்து கொண்டிருக்கின்றன.

அந்த இளைஞருடன் பேச விரும்பினேன். ஆனால் கையெழுத்து வாங்கியதும் கூச்சத்துடன் விலகிப்போய்விட்டார்.

அதுவும் எனக்குப் பிடித்திருந்தது. அவர் நிச்சயம் ஒரு இளம் கவிஞராக இருக்கக்கூடும். அல்லது கவிதைகளை ரகசியமாக எழுதிக் கொண்டிருக்கக் கூடும்.

உலகின் முன்னால் தன்னை ஒருவன் கவிஞனாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கு முன்னால் கூச்சமும் தயக்கமும் நிராகரிக்கப்படுவோமோ என்ற பயமும் கொண்டிருப்பது இயல்பே.

இந்தத் தயக்கங்களை அவனது கவிதைகளே தாண்ட வைக்கும். கவிதையே அவனை வழிநடத்தி அழைத்துச் செல்லும். கவிஞர்கள் அந்தரங்கமாகக் கவிதையோடு உரையாடிக் கொண்டேயிருக்கிறார்கள். கவிதைகளைத் தனது தனிமைத்தோழனாகக் கொண்டிருக்கிறார்கள்.

கவிதையின் கையசைப்பு என்ற புத்தகம் இது போன்ற ஒரு இளைஞன் கையில் சென்று சேர வேண்டும் என்று எழுதும் நாளில் ஆசை கொண்டிருந்தேன்.

புத்தகம் பல்லாயிரம் பேரால் வாசிக்கப்படுவதை விடவும் நாம் விரும்பும் சிலரால் வாசிக்கப்படுவது ஏற்படுத்தும் மகிழ்ச்சி நிகரில்லாதது.

••

வண்ணங்கள் எதையும் தொடாமல் தூரிகை இல்லாமலே சிறுவர்கள் காற்றில் ஓவியம் வரைவார்கள். அந்த அரூப ஓவியங்கள் அவர்கள் கண்ணுக்கு மட்டுமே புலப்படக்கூடியது. பால்யத்தின் வாசனையில்லாமல் ஒருவனால் கவிதை எழுதிவிட முடியாது. காற்றில் குதிரையை வரைந்து அதைப் பறக்கச் சொல்லும் சிறுவனின் ஆசை போன்றதே கவிஞனின் மனதும். உலகம் இச்செயலைப் பரிகசிக்கக் கூடும். ஆனால் வாழ்க்கை இது போலத் தூய சந்தோஷங்களை வேண்டவே செய்கிறது

மரங்களைப் பற்றிப் பேசுவதென்பதும்

குற்றமே.

காரணம் அது நீதியின்மையைப் பற்றிய மௌனத்தை

உள்ளுணர்த்துகிறது

என்றொரு பெர்டோல்ட் பிரக்டின் கவிதைவரியிருக்கிறது. இக்கவிதை இயற்கையை அதிகாரத்திற்கு எதிரான மௌனசாட்சியாக முன்னிறுத்துகிறது. வோர்ட்ஸ்வொர்த் போன்ற் கவிஞர்கள் இயற்கை வியந்து பாடும் சூழலில் இயற்கையை நீதியின்மையின் சாட்சியமாகப் பிரெக்ட் முன்வைக்கிறார்.

ஆயுதங்களைக் கொண்டு மட்டுமில்லை

சிரிப்பாலும் ஒருவரைக் காயப்படுத்த

முடியும்

என்றொரு ரூபஸின் கவிதைவரியிருக்கிறது. பொதுப்புத்தி உருவாக்கி வைத்துள்ள பிம்பங்களுக்கு மாற்றை உருவாக்குவது கவிதைகளே.

 –கவிதையின் கையசைப்பு நூலில் ஒரு பகுதி

0Shares
0