கவிதை எனும் வாள் வித்தை

லி போ (Li Po) அல்லது லி பாய் (Li Bai ) என்று அழைக்கப்படும் சீனக்கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுத்தாளர் ஹா ஜின் The Banished Immortal என விரிவான நூலாக எழுதியிருக்கிறார். மிக முக்கியமான நாவலாசிரியர் ஒரு கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருப்பது அபூர்வமான விஷயம். ஆகவே இதை விரும்பி வாசித்தேன்.

லி போ (Li Po) மற்றும் து ஃபூ (Tu Fu) இருவரும் நெருக்கமான நண்பர்கள், சீனாவின் மிகப் பெரிய கவிஞர்களில் இவர்களைக் கொண்டாடுகிறார்கள். டாங் வம்சத்தின் இந்த இரண்டு கவிஞர்களும் இரட்டையர்கள் போலவே பேசப்படுகிறார்கள். லிபோவின் கவிதைகளில் ஏற்பட்ட விருப்பம் காரணமாகவே து ஃபூ கவிதைகள் எழுதத் துவங்கியிருக்கிறார்.

லி போ ஏழாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர். தன்னுடைய இருபத்துமூன்று வயது முதல் சீனா முழுவதும் சுற்றியலைந்திருக்கிறார். இந்தத் தேடலில் இவர் தாவோயிசம் மற்றும் சீனமரபு இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

லி போ கவிஞராக உருவான விதம் இந்த நூலில் அதிகம் விவரிக்கப்படவில்லை. அவரது கவிதையின் தனித்துவம் மற்றும் இயற்கையின் மீதான புரிதல் பற்றிய பகுதிகள் குறைவே, மாறாக லிபெய் ஒரு அரசாங்க வேலையைப் பெற வேண்டி மேற்கொண்ட தொடர் முயற்சிகளும், அதன் தோல்விகளும் இதனால் ஏற்பட்ட மனச்சோர்வு, அலைக்கழிப்பு மற்றும் விரக்தி பற்றியுமே ஹா ஜின் அதிகம் எழுதியிருக்கிறார்.

அந்த வகையில் ஏழாம் நூற்றாண்டிலிருந்த சமூக வாழ்க்கை, அரசியல் மற்றும் ராஜசபையில் கவிதைக்கு இருந்த இடம் போன்றவை விரிவாகப் பேசப்பட்டிருக்கின்றன

லி பாய் தன் வாழ்நாளில் அரசுப்பதவியைப் பெற முடியவேயில்லை 764 ஆண்டு ஜனவரி மாதம் புதிதாக அரியணை ஏறிய பேரரசர் டைசோங் நீதிமன்றத்தில் ஆலோசகராகப் பணியாற்ற லி பாயைத் தேர்வு செய்து ஒரு ஆணை பிறப்பித்தார். இந்த உத்தரவை அவரிடம் நேரில் கொடுக்க அதிகாரிகள் சென்ற போது அவர் இறந்து போய் ஒராண்டுகாலம் ஆனது தெரிய வந்தது. எப்போது எப்படி இறந்தார் என்று காரணம் அறியமுடியவில்லை. அவர் மிதமிஞ்சிய போதையால் இறந்து போனார் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். வேறு சிலரோ அவர் தொண்டை அழற்சி காரணமாக நோயுற்று இறந்து போனார் என்று குறிப்பிடுகிறார்கள்

இன்று ஒரு கவிதை வாசகன் லிபெய்யை எப்படி நினைவு கொள்கிறான். அவர் கவிதையில் காட்டும் படிமங்கள். மற்றும் இயற்கை காட்சிகள் வழியாகவே அவர் நினைவு கொள்ளப்படுகிறார். குறிப்பாக நிலவை அவரைப் போல எழுதியவரில்லை. மலையின் உச்சியில் தனிமையில் அமர்ந்து கையில் மதுக்கோப்பையுடன் அவர் நிலவைத் தோழனாக்கி கவிதையில் உரையாடுகிறார்.

இன்றும் தனிமையில் தொலைவில் ஒளிரும் நிலவைக் காணும் ஒருவன் அந்த நிலவொளியின் வழியே லி பாயின் கவிதைகளை நினைவு கொள்கிறான். அவரது கவிதைகளில் நிலவு, வீடு திரும்புதலின் அடையாளமாக, நிரந்தரத் துணையாக, தனிமையில் பயணிப்பவனின் உற்ற தோழனாக இடம் பெறுகிறது.

லி பாயின் வாழ்க்கை வரலாற்றில் என்னைக் கவர்ந்த விஷயம். அவர் சிறந்த வாள்வீர்ர் மற்றும் சித்திர எழுத்துக்கலை நிபுணர் என்பதே.. இந்த இரண்டு கலைகளும் துல்லியத்திற்கு முதலிடம் தருபவை. ஆழ்ந்து ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டியவை. சீனாவில் வாள் பயிற்சியை ஜென் கலையாகக் கருதுகிறார்கள். துறவிகளும் கற்றுக் கொள்கிறார்கள். மனதை ஒருமுகப்படுத்துவதுடன் வெறுமையைத் துண்டிப்பதும் வாள்வீச்சின் வழியே பெற முடியும் எனக் கருதுகிறார்கள். இது போலவே தான் சித்திர எழுத்துக்கலையும் அதில் ஒருவன் தூரிகையைக் கொண்டு மனதின் ஆழ்நிலைகளை வெளிப்படுத்துகிறான். மலர் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வது போல எழுத்துத் தன்னைச் சித்திரமாக வெளிப்படுத்திக் கொள்கிறது என்கிறார்கள்.

லி பாயின் குடும்பம் பராம்பரியமானது. அவரது தந்தையின் பெயர் லி கே. அவர் சீன மரபு இலக்கியங்களையும் தாவோயிசத்தையும் ஆழ்ந்து கற்றவர். தந்தையின் தூண்டுதலில் தான் லி பெய் கவிதைகள் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டார்.

அந்த நாட்களில் அரச சபையில் கவிஞர்களுக்குப் பெரிய கௌரவமும் அங்கீகாரமும் கிடைத்தன. இசையோடு கவிதை பாடுவதை அரசர்கள் விரும்பினார்கள். ஆகவே அரசாங்க வேலைக்குச் செல்வதாக இருந்தாலும் கவிதை புனைவதில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும் என்று தந்தை சொன்ன அறிவுரையே அவரைக் கவிஞராக்கியது.

நீதித்துறை மற்றும் வரிவசூல் செய்யும் அரசுப் பணிக்கு அந்த நாட்களில் தனித்தேர்வுகள் இருந்தன. அதில் வெற்றி பெறுவது எளிதாகயில்லை. ஆகவே லி பாய் நிர்வாகவியல் சார்ந்த நூல்களை ஆழ்ந்து படித்தார். இளமையில் அவர் எழுதிய கவிதைகள் யாவும் அவர் ரசித்த கவிதைகளின் தாக்கத்திலிருந்தன. அந்தக் கவிதைகளை நண்பர்கள் பாராட்டிய போதும் அது அசலான அனுபவத்திலிருந்து உருவாகவில்லை என்று அவரது தந்தை கறாரான விமர்சனத்தை முன்வைத்தார். ஆகவே அசலான அனுபவத்தைத் தேடியும் வேலை தேடும் முனைப்பாகவும் அவர் நீண்ட பயணத்தைத் திட்டமிட்டார். அந்தப் பயணம் அவரது ஆளுமையில் பெரிய மாற்றத்தை உருவாக்கியது.

பயண வழியில் வசித்த கவிஞர்களைச் சந்தித்து உரையாடினார். அறிஞர்களிடம் பாடம் கேட்டார். பௌத்த மடாலயங்களில் தங்கி ஞானசூத்திரங்களைப் பயின்றார்.

இந்தப் பயணத்தில் அவர் அறிஞர் ஜாவோவுடன் நெருங்கிப் பழகினார். அவர் வழியாக இராணுவ சட்டங்கள். நிர்வாகம், விவசாயம்,மருத்துவம் முதலியவற்றைக் கற்றுக் கொண்டார். அவரோடு இருந்த நாட்களில் தான் வாள் பயிற்சியில் தீவிரமாக ஈடுபாட்டு அதில் நிகரற்றவராக மாறினார்.

ஜாவோவின் வழியே மருத்துவத்தில் லி பாயிற்கு ஆர்வம் உண்டானது. மூலிகை மருந்துகளைக் கற்றுக் கொண்டார். வாழ்நாள் முழுவதும் அவர் எளியோர்களுக்கு மருத்துவ உதவி செய்திருக்கிறார்.

லி பெய்யின் வரலாற்றை வாசிக்கும் போது ஒற்றை ஆளாக அவர் குதிரையில் பரந்த நிலவெளியில் பயணிக்கும் காட்சி மனதில் தோன்றி மறைகிறது. தன் பயணத்தில் கண்ட மாறுபட்ட நிலக்காட்சிகள். மலை ,நதி, புயல் மழை,. மற்றும் கிராமிய வாழ்க்கை மற்றும் பெரிய நகரங்களின் உல்லாச வாழ்க்கை, மதுவிடுதிகள் என்று அத்தனையும் பற்றிக் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் சொந்தவாழ்க்கையின் நெருக்கடி, பிரிவு. குடும்பப் பிரச்சனைகள், அதிகாரம் தன்னை மண்டியிடச்சொல்லும் அவலம் என எதையும் அவர் கவிதைகளில் வெளிப்படுத்தவில்லை. தூய அன்பின் வெளிப்பாடாகவே அவரது கவிதைகள் காணப்படுகின்றன.

அரசாங்க வேலை கிடைக்காத சூழலில் பணக்காரப் பெண்ணான மிஸ் சூ என்பவரை லி பாய் திருமணம் செய்து கொள்ள முன்வந்தார்… அவளுக்கும் கவிதையில் மிகுந்த ஆர்வமிருந்தது. அவளது வீட்டில் பெரிய நூலகமிருந்தது. இந்தத் திருமணம் காரணமாக மாமனார் வழியாக அரசாங்க வேலை கிடைக்கக்கூடும் என்று நம்பினார். அதற்கான முயற்சிகள் நடந்த போதும் லி பாயிற்கு வேலை கிடைப்பது எளிதாகயில்லை. அவர் அரசாங்க உயரதிகாரிகளிடம் பணிந்து பேசாமல் அதிகாரமாக உரையாடியதே நிராகரிப்பிற்கான காரணம் என்கிறார்கள்

உங்கள் நற்பெயரை வளர்த்துக் கொள்ளுங்கள். மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகும் என்று அவரது மனைவி நம்பிக்கையூட்டினார். இந்த முறை வேலை தேடி அவர் மூன்று ஆண்டுகள் வடதிசையில் பயணம் செய்தார். இடையிடையே பௌத்த மடாலயங்கள் தங்கி கவிதை எழுதினார். அவருக்குத் தேவையான பணஉதவிகளைச் செய்ததோடு அவர் மனைவி தொடர்ந்து கடிதங்கள் எழுதி ஊக்கப்படுத்தினார்.

எதிர்பாராத விதமாக அவரது மனைவியின் குடும்பம் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அவரது மைத்துனர் சொத்துகளைத் தனதாக்கிக் கொண்டு லி பாயின் மனைவியை வெறும் ஆளாகத் துரத்திவிட்டார். தன் பங்கிற்கு அவள் வீட்டின் நூலகத்தை மட்டுமே எடுத்துக் கொண்டாள். விசுவாசமான பணியாளர்கள் அவளுடன் இருந்து அவளைக் கவனித்துக் கொண்டார்கள். வீடு திரும்பிய லி பாய் மனைவியைத் தன்னோடு அழைத்துக் கொண்டு சுகவாசஸ்தலம் ஒன்றுக்குப் பயணமானார். பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தன் மகளைப் பற்றி லி பெய் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். மகளின் வாழ்க்கை என்னவானது என்பதைப் பற்றி அறிய முடியவில்லை என்கிறார்கள்.

வேலை தேடுவதில் மட்டுமின்றி லி பாய் எடுத்த எல்லா முடிவுகளும் தோல்வியில் தான் முடிந்தன. அரசியல் ரீதியாக அவர் முன்னெடுத்த சார்புகளும் தவறாக முடிந்தன. இதனால் லி பெய் சிறைபிடிக்கப்பட்டார். ஊழல் மலிந்த நீதிமன்றம் அவரை நாடுகடத்தும்படி தண்டனை அளித்தது. அதன்பிறகு அவர் கவிதைகள் எழுதுவதை விட்டு போக்கிடமின்றி ஒடுங்கிப் போனார்.

கவிதையின் வழியாக நாம் காணும் லி பெய் இளமையின் துடிப்போடு காணப்படுகிறார். அவரிடம் கவலையில்லை. வருத்தமில்லை. தனிமை பற்றிய புகார் எதுவுமில்லை. ஆனால் வாழ்க்கை வரலாற்றில் வரும் லி பாய் கனவிற்கும் ஏமாற்றத்திற்கும் இடையில் ஊசலாடுகிறார். உலகெங்கும் கவிஞர்கள் வாழ்க்கை ஒன்று போலதானிருக்கிறது.

இத்தனை அலைக்கழிப்புக்கள். அவமானங்கள். புறக்கணிப்பிற்கு இடையில் எப்படி இயற்கையில் மனதைக் கரைத்துக் கொண்டு நுண்மையான கவிதைகள் எழுதியிருக்கிறார் என்று வியப்பாகவே இருக்கிறது

கவிஞன் உலகியல் வாழ்க்கை தரும் நெருக்கடிகளை மோசமாக எதிர்கொண்ட போதும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனித்த உலகில் சஞ்சரிக்ககூடியவன் என்பதன் அடையாளமாகவே லி பெயின் வாழ்க்கை உள்ளது

.

0Shares
0