கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்களே கிடையாது. ஆனால் எல்லோரும் கவிதை எழுதிவிடுவதில்லை.
ஒரு சிலர் ரகசியமாக டயரியில் கவிதை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். வேறு சிலர் மனதிலே கவிதை எழுதி அழித்துவிடுகிறார்கள். பறக்க ஆசைப்படுவதும் கவிதை எழுத ஆசைப்படுவதும் இயல்பான ஒன்றும் தான். எந்த வயதிலும் ஒருவர் கவிதை எழுதத் துவங்கலாம். சிறந்த கவிஞராக வெளிப்படலாம்.

சாங்-டாங் லீ இயக்கிய Poetry என்ற கொரியப்படத்தில் யாங் மி-ஜா என்ற 66 வயதான பெண் கவிதை எழுத விரும்புகிறார். இதற்காகக் கவிதைப் பள்ளி ஒன்றில் சேருகிறாள்
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வசதியான முதியவரைப் பராமரித்து வரும் மிஜாவிற்குத் திடீரென ஒரு நாள் நினைவு இழப்பு ஏற்படுகிறது. இதற்காக மருத்துவரைக் காணச் செல்கிறாள். அவளுக்கு அல்சைமர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைச் சொல்லும் மருத்துவர் தேவையான மருத்துவ ஆலோசனைகளைச் சொல்கிறார்.
தனது நினைவுகளைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் நிலையில் தான் யாங் மி-ஜா கவிதை வகுப்பில் இணைகிறாள்.
ஒரு மாதகாலப் பயிற்சி தரும் கவிதை பள்ளியது. அந்தப் பள்ளியில் கவிதை எழுத பயிற்சி அளிக்கும் ஆசிரியர் உங்களைச் சுற்றி நடக்கும் எதிலிருந்தும் கவிதை பிறக்கலாம். ஆகவே அவற்றை நுட்பமாகக் கவனியுங்கள் என்கிறார்.

யாங் மிஜா கையில் சிறிய குறிப்பேடு ஒன்றுடன் தன்னைச் சுற்றிய விஷயங்களைக் குறித்துக் கொள்ள ஆரம்பிக்கிறாள். பூக்களைப் பற்றிக் குறிப்பு எழுத ஆரம்பிக்கிறாள். திடீரென உலகம் புதிதாக மாறுகிறது. தரையில் விழுந்த பாதாம் பழங்களிலும் உருண்டோடும் ஆப்பிளிலும் எளிமையின் அழகைக் காண்கிறாள்
படத்தில் இடம்பெற்றுள்ள கவிதை குறித்த வகுப்பறைக் காட்சிகள் மிக அழகானவை. அவை கவிதையின் அடிப்படை இயல்புகளை விவரிக்கின்றன.
படத்தின் துவக்கக் காட்சியில் நதிக்கரையொன்றில் சிறார்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தண்ணீரில் சீருடை அணிந்த ஆக்னஸ் என்ற மாணவியின் உடல் மிதந்து செல்கிறது. அந்த மாணவியின் மரணத்தைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கிறது

யாங் மி ஜாவின் மகள் நகரில் கணவனைப் பிரிந்து வாழும் தனியே வாழுகிறாள். பேரன் ஜாங்-வூக்கை தன்னோடு வைத்துக் கொண்டு வளர்த்து வருகிறாள் மி ஜா. பேரன் ஜாங் வூக் பாட்டி சொல்வதைக் கேட்பதேயில்லை. அவள் தரும் உணவை விருப்பமில்லாமல் சாப்பிடுகிறான். எப்போதும் கதவைப் பூட்டிக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறான். பாட்டியால் அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஜாங் வூக் பள்ளியில் பயின்ற மாணவி தான் இறந்து போனவள். அவளைப் பள்ளிச் சிறுவர்கள் ஒன்றுசேர்ந்து கூட்டு வன்புணர்வு செய்திருக்கிறார்கள் எனக் கேள்விப்படும் பாட்டி பேரனிடம் இதைப்பற்றி விசாரிக்கிறாள்
ஜாங்-வூக் அதைப்பற்றித் தனக்குத் தெரியாது என்று பொய் சொல்லுகிறான்.
இறந்து போன மாணவிக்காக நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் பாட்டி கலந்து கொள்கிறாள். இதற்கிடையில் பேரனின் பள்ளியிலிருந்து அவளை நேரில் வரும்படி அழைக்கிறார்கள்.
அங்கே ஐந்து மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள். ஆக்னஸை கூட்டு வன்புணர்வு செய்தவர்களில் தனது பேரனும் ஒருவன் என அறிந்து மிஜா அதிர்ந்து போகிறாள். ஆக்னஸின் அம்மாவைப் பேசிச் சரிக்கட்டி பணம் கொடுத்துப் போலீஸ் கேஸ் ஆகாமல் பார்த்துக் கொள்வது எனப் பள்ளி நிர்வாகம் முடிவு செய்கிறது
இதை யாங் மி ஜா ஏற்க மறுக்கிறாள். ஆனால் மற்ற பெற்றோர்கள் தனது பிள்ளையின் தவற்றை மறைத்து. பணம் கொடுத்து வாயை அடைத்துவிடலாம் என்று எளிதாக நினைக்கிறார்கள்.
இறந்து போன ஆக்னஸின் அம்மாவைச் சந்தித்து அவளைச் சமாதானப்படுத்தி பணம் பெற்றுக் கொள்ள வைக்க யாங் மி ஜா செல்ல வேண்டும் என்கிறார்கள்.
கட்டாயத்தின் பெயரில் அவள் ஆக்னஸின் அம்மாவைக் காணச் செல்கிறாள்
அது படத்தின் மிக அழகான காட்சிகளில் ஒன்று. ஆக்னஸின் அம்மா வயலில் வேலை செய்வதைக் காண்கிறாள், அங்குள்ள பூக்கள், மரங்கள் மற்றும் பழங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பாட்டி பேசத் தொடங்குகிறாள். தான் வந்த நோக்கத்தைத் தெரிவிப்பதில்லை.

தனது பேரனைக் காப்பாற்ற நிறையப் பணம் வேண்டும் என்பதற்காக மி ஜா தான் வேலையும் வீட்டிலுள்ள பக்கவாதம் வந்த கிழவரின் ஆசையை நிறைவேற்றுகிறாள். ஆக்னஸுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றிய உண்மையை அவள் அறிந்து கொள்வது போலவே அந்தக் காட்சி இடம்பெறுகிறது.
பணம் போதாது என்ற நிலையில் கிழவரை மிரட்டிப் பணம் பெறுகிறாள். இவ்வளவு செய்தும் அவளால் பேரனைக் காப்பாற்ற முடியவில்லை.
தனது சொல்ல முடியாத தவிப்பை, துயரை, வலியை அவள் கவிதையாக எழுதுகிறாள். அதை அவள் பயிலும் பள்ளியின் வகுப்பில் வாசிக்கிறார்கள்.
ஒருவர் ஏன் கவிதை எழுத விரும்புகிறார். எதைக் கவிதையாக எழுதுகிறார் என்பதற்கான சிறந்த அடையாளமாக அந்தக் கவிதை இடம் பெறுகிறது
மி-ஜாவின் குரலில் தொடங்கும் கவிதை, ஆக்னஸின் குரலில் இணைவது வியப்பளிக்கிறது. உண்மையில் அவர்கள் பேசிக் கொள்வது போன்றே கவிதை எழுதப்பட்டிருக்கிறது. இறந்தவளிடம் பாட்டி அவளது செயலை, வலிகளைப் புரிந்து கொண்டதாகத் தெரிவிக்கிறாள். செய்யத் துணியாத வாக்குமூலமாகவே கவிதை வெளிப்படுகிறது
கவிதை என்பது ஒருவகை வாக்குமூலம். உண்மையின் குரல் ஒரு விடுதலை உணர்வு. துயரத்தின் வடிகால்.. மனதிலிருந்து எழும் வானவில் தான் கவிதை. இதை யாங் மி-ஜா உணர்ந்து கொள்கிறாள்.

கவிதை வகுப்பில் இரட்டை அர்த்தம் தரும் கவிதைகளை வாசிக்கும் காவலர் தான் முடிவில் அவளது பேரனைக் கைது செய்ய வருகிறார். வீட்டின் வாசலில் போலீஸ் வந்து நின்று விசாரிப்பது, பேரனை விசாரணைக்காக அழைத்துச் செல்வது என அந்தக் காட்சி மிக இயல்பாக, நிஜமாகப் படமாக்கப்பட்டுள்ளது
குற்றவுலகையும் அதன் மறுபக்கமாகக் குற்றவாளியைக் காப்பாற்ற விரும்பும் பாட்டியின் குற்றவுணர்வையும் பற்றிய இந்தப் படத்தில் கவிதை சேர்ந்தவுடன் படம் புதியதாகிவிடுகிறது.
கவிதை எழுதுவதற்காகத் தன்னைச் சுற்றிய பொருட்களை. இயற்கையை ஆழ்ந்து அவதானிக்கத் துவங்கிய . யாங் மி-ஜா மெல்லத் தனது உறவுகளை, தன்னைச் சுற்றிய மனிதர்களை, அவர்களின் போலித்தனங்களை, குரூரங்களை அடையாளம் கண்டு கொள்கிறாள். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பக்கவாதம் வந்த கிழவர் பயன்படுத்திக் கொள்கிறார். தப்ப முடியும் சந்தர்ப்பத்தைப் பெற்றோர்கள் பயன்படுத்த நினைக்கிறார்கள். ஏமாற்ற முடியும் என்ற சந்தர்ப்பத்தை யாங் மிஜாவும் பயன்படுத்துகிறாள்.
ஆனால் நெருக்கடியான. மோசமான சூழ்நிலைகளில் நேர்மறையான விஷயங்களைக் கண்டறியவும் சரியான முடிவு எடுக்கவும் கவிதையே அவளுக்கு வழி காட்டுகிறது. அவளது மனசாட்சியின் வெளிப்பாடாகவே அந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறது.
யுன் ஜியோங்-ஹை பாட்டி யாங் மிஜாவாகச் சிறப்பாக நடித்துள்ளார். நேர்த்தியான ஒளிப்பதிவு. கவித்துவமான தருணங்கள் எனப் படம் சிறந்த கலை அனுபவத்தைத் தருகிறது.