காகிதச் சிற்பங்கள்

                                                                                                   

ஒரிகாமி எனப்படும் காகிதச் சிற்பங்களை உருவாக்குவதைப் பற்றிய Between the Folds  என்ற ஆவணப்படத்தினைப் பார்த்தேன், சிறந்த டாகுமெண்டரி படத்திற்காக பதினைந்திற்கும் மேற்பட்ட உலகத் திரைப்பட விழா விருதுகளைப் பெற்றிருக்கிறது,

காகிதத்தை மடித்துக் கப்பல் செய்வது மட்டும் தான் நாம் அறிந்த கலை, ஆனால் ஒரிகாமி எனப்படும் ஜப்பானிய காகிதச் சிற்பக்கலையில் காகிதம் ஒரு மாயப்பொருள் போலாகி விலங்குகள், மனிதர்கள், கற்பனைஉருவங்கள் என்று எல்லா வடிவங்களும் கொள்கின்றன,

இது வெறும் பொழுது போக்குக்கலையில்லை, விஞ்ஞான நுட்பம் கொண்ட உயர்ந்த கலை என்கிறார்கள் அறிவியலாளர்கள், ஒரிகாமியின் துவக்கம் முதல் இன்றுள்ள உலக அளவிலான வளர்ச்சிவரை இந்த ஆவணப்படம் விவரிக்கிறது,

படத்தில் காகிதம் என்னென்ன வடிவங்களை எடுக்கிறது என்ற விந்தையை கண்முன்னே உருவாக்கிக் காட்டுகிறார்கள் காகித சிற்பக்கலைஞர்கள், இன்று உலகின் பலநாடுகளில் இக்கலை பள்ளிகளில் கணிதமும் விஞ்ஞானமும் கற்பிக்கப் பயன்படுத்தபடுகிறது, தமிழகத்தில் இன்னமும் ஒரிகாமி குறித்து அதிகக் கவனம் உருவாகவேயில்லை, எளிமையாக, இலகுவாகக் கற்றுக் கொள்ள கூடிய அற்புதமான கலையிது, Origametria என்று கணிதமும் ஒரிகாமியும் ஒன்றிணைந்த கல்விமுறை இஸ்ரேலியப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தபட்டிருக்கிறது,

கோடை விடுமுறையில் மாணவர்கள் ஒரிகாமி கற்றுக் கொண்டால் அவர்களின் கற்பனையும் கற்றுக்கொள்ளும் திறனும் அதிகமாக மேம்படும் என்பதை நான் சில பள்ளிமாணவர்களின் வழியே நேரடியாக அறிந்திருக்கிறேன்,

பெரும்பாலும் நாம் காகித்த்தை வெறும் குப்பையாகவே நினைக்கிறோம், அந்த மனநிலையை மாற்ற அதிலிருந்து நல்ல கலைப்படைப்புகளை உருவாக்க முடியும் என்று காட்டுகிறது இப்படம்

காகிதத்தை மடித்துப் பணமாக மாற்றுகிறேன் என்கிறார் ஒரு ஒரிகாமி கலைஞர், அது தான் உண்மை, இன்று இந்தக் காகிதச் சிற்பங்கள் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன.

ஒரி என்றால் மடித்தல், காமி என்றால் காகிதம் . ஜப்பானில் உருவான கலையிது, ஒரே காகிதத்தை துண்டிக்காமல் மடிப்பதன் மூலமே உருவங்களைச் செய்ய வேண்டும்  என்பதே இந்த கலையின் மரபு, ஆனால் இன்று வெட்டி ஒட்டிச் சேர்த்து புதிய உருவங்கள் படைக்கபடுகின்றன

Between the Folds  டாக்குமெண்டரி படத்தில் காகிதங்கள் நம்முன்னே பாலே நடனம் ஆடுபவர்களின் உடல் மாறுவது போல சட்சட்டென விசித்திர வடிவம் கொள்கின்றன, இசையோடு இந்தக் காகிதச் சிற்பம் உருவாக்கபடுவதைக் காணும் போது மாயாஜாலம் நடப்பது போலவேயிருக்கிறது, அற்புதமான இசை, காகிதசிற்பக்கலைஞர்களின் ஈர்ப்புமிக்க உரையாடல்கள் என மிகச்சிறந்த ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது

இதை இயக்கிய வனேஸா ஒரிகாமி என்பது கலைக்கும் விஞ்ஞானத்திற்குமானதொரு பாலம், கணிதமும் இயற்பியலுமே இந்தக் கலையின் ஆதாரங்கள் என்கிறார்,

ஒரு காகிதம் மடிக்கப்படும் போது அதில் எத்தனை விதமான கோணங்கள்.  மடிப்புகள் உருவாகச் சாத்தியமிருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறோம் இது தான் கணிதத்தின் அடிப்படை என்றும் சொல்கிறார் வனேஸா

இப்படத்தின் வழியே இரண்டு முக்கியக் காகிதச் சிற்பக்கலைஞர்களை அறிந்து கொண்டேன். அவர்களைப் பற்றி தேடி வாசித்து அவர்கள் உருவாக்கிய ஒரிகாமி சிற்பங்களைப் பார்த்து வியந்து போனேன், இருவருமே இக்கலையின் முக்கியப் படைப்பாளிகள்,

எரிக் ஜோசில் (Eric Joisel) எனப்படும் காகிதச் சிற்பக்கலைஞர் பிரான்சைச் சேர்ந்தவர், அடிப்படையில் இவர் ஒரு ஒவியர், ஆனால் ஒவியம் வரைவதை விடவும் காகிதச் சிற்பங்களை உருவாக்குவதிலே  அதிக கவனம் செலுத்தி அதில் அரிய சாதனைகள் செய்திருக்கிறார்

எரிக் காகிதங்களை மடிப்பதை ஒரு தியானம் என்றே சொல்கிறார், நாம் குப்பை என்று வெளியே எறியும் ஒரு காகிதத்திற்குள் அழகான உருவம் ஒன்றிருக்கிறது, அதை நம்மால் உருவாக்க முடியவில்லை, ஒருவேளை நாம் அதைச் சரியாக உணர்ந்து கொண்டால் காகிதங்களைக் காதலிப்போம் என்கிறார்,

சிற்பமாக உள்ளது மட்டும் புத்தனில்லை, வெறும் கல்லும் புத்தனே என்ற ஜப்பானியப் பௌத்த மரபு தான் தன்னைக் காகித சிற்பக்கலைஞராக்கியது என்றும் சொல்கிறார் எரிக் ஜோசில்,

சில மாதங்களுக்கு முன்பு இறந்து போன இந்தக் கலைஞரின் 1000 காகிதச் சிற்பங்கள் கொண்ட விரிவான புத்தகம்  வெளியாகி உள்ளது, மற்ற ஒரிகாமிக் கலைஞர்களிடமிருந்து இவரை வேறுபடுத்துவது இவர் உருவாக்கும் முப்பரிமாணம் கொண்ட சிற்பங்களே, அவை காகிதம் தானா என்று நம்பமுடியாதபடியே உருவாக்கபட்டிருப்பதே அதன் தனிச்சிறப்பு.

முப்பதைந்துஆண்டுகாலம் இவர் ஒரிகாமிக் கலையில் ஈடுபட்டிருக்கிறார், எண்ணிக்கையற்ற  விருதுகள். பரிசுகள் வென்றுள்ள இவர் காகிதசிற்பங்களுக்கான கலைக்கூடம் ஒன்றினையும் வைத்திருக்கிறார்,

ஆவணப்படத்தில் ப்யானோ வாசிப்பவரின் விரல்களை போல அவரது கைகளில் இருந்து ஒரு மாயம் வெளிப்படுகிறது, சிரித்தபடியே அவர் காகிதங்களை மடித்துக் காட்டி ஒரு வண்ணத்துபூச்சியைப் பறக்கவிடுகிறார், ஒரு மலரை உருவாக்கிகாட்டுகிறார். காகிதம் மடிந்து ஒரு எலியாகிறது, கொக்காகிறது, அதைக் காண்கையில் ஆஹா இதுவல்லவா விந்தை என மனம் களிப்படைகிறது

ஒரிகாமி கலையின் சென்சாய் என்று கொண்டாடப்படுபவர் Akira Yoshizawa . இந்த ஆண்டு இவரது நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது, அகிரா யோசிஷவா பதின்வயதில் ஒரு தொழிற்சாலையில் கூலியாக வேலை செய்தவர், அந்த நாட்களில் வேலை தரும் அலுப்பைப் போக்கி கொள்ள அவர் காகிதங்களை மடித்துச் சிற்பமாக்கும் கலையில் ஈடுபடத்துவங்கினார், அதைக் கண்ட தொழிற்சாலையின் உயரதிகாரி அவரை வரைபடக் கலைஞராக பதவி உயர்வு செய்து கௌரவித்திருக்கிறார்,

அதிலிருந்து வளர்ந்து அகிரா ஒரு முழுநேர காகிதச் சிற்பக்கலைஞராகியிருக்கிறார் ஆனால்காகிதச் சிற்பங்களை யாரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை, அதை நம்பி மட்டும் வாழ முடியவில்லை, ஆகவே வீடுவீடாகப்போய் சூப் விற்றுக்கொண்டு எஞ்சிய நேரத்தில் தனது காகிதக்கலையைத் தொடர்ந்திருக்கிறார்

தனது அனுபவத்தை முன்வைத்து இவர் எழுதிய New Origami Art  புத்தகம் 1954ல் வெளியானது, இன்று வரை அது தான் ஒரிகாமி கலையின் ஆதாரப் புத்தகமாக உள்ளது, ஜப்பானின் மிக உயரிய விருதுகளை பெற்றுள்ள இவரே இன்றும் ஒரிகாமிகலையின் சாதனை நாயகனாகக் கொண்டாடப்படுகிறார்

நமது டிஎன்ஏ விசித்திரமான மடிப்புகளைக் கொண்டுள்ளது. நாம் கர்ப்பத்தில் காலைமடித்து சுருண்டு தானிருக்கிறோம், இயற்கையில் புல்வெளி, பாறைகள், மலைகள், அலைகள் என எத்தனை விதமான மடிப்புகள்,  இது போல தான் காகிதத்தை மடித்தலும் என்று படத்தில் பால் ஜாக்சன் என்ற கலைஞர் குறிப்பிடுகிறார்,  அவர் விஞ்ஞானியில்லை ஆனால் தனது காகிதக் கலையின் வழியே விஞ்ஞானச் சாத்தியங்களை தான் அறிந்து கொண்டதாகச் சொல்கிறார்

காகிதம் சிற்பமாக உருவானவுடனே அது மூச்சுவிடுகிறது, சிரிக்கிறது, நடனமாடுகிறது, அந்த விந்தையை நீங்களே செய்து பார்க்க முடியும் உங்கள் குழந்தைகளை மகிழ்விக்க இதைக் கற்றுக் கொடுங்கள் நீங்களே ஒரிகாமி செய்து காட்டுங்கள் அது அவர்களுக்கு நீங்கள் தரும் அரிய பரிசு என்கிறார் படத்தின் இயக்குனர் வனேஸா

ஒரிகாமிக்காக ஆண்டுதோறும் உலகஅளவில் கருத்தரங்குகள் கண்காட்சிகள் நடைபெறுகின்றன, உயர்கணித்த்தில் ஆய்வு செய்பவர்கள் இந்தகலையின் வழியே கணிதப் பரிமாணங்களை பல்வேறு ஜியோமித வடிவங்களைச் சோதனை செய்கிறார்கள்

இந்த படம் ஒரிகாமி கலையின் மீது மிகப்பெரிய விருப்பத்தை உருவாக்குகிறது, படத்தின் பின்னணி இசை கூட காகிதத்தைப் பயன்படுத்தியே அமைக்கப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு,

எரிக் ஜோசல் பற்றிய குறும்படங்கள் இணையதளத்தில் காணக் கிடைக்கின்றன, அவரது ஒரிகாமி வரைபடங்களும் எளிதாக தரவிறக்கம் செய்யகிடைக்கின்றன, அதைப் பயன்படுத்தி ஆர்வமானவர்கள் எளிதாக ஒரிகாமி கற்றுக் கொள்ளலாம்

இணைப்புகள்

Eric Joisel

https://www.youtube.com/watch?v=HTB_n-hR6VY

How to Make an Origami Butterfly

https://www.youtube.com/watch?v=X4L5nDDgEEk

Origami

https://www.youtube.com/watch?v=8fWhYOt57i8

origami cat

  https://www.youtube.com/watch?v=ukzFwRoFj4k

 **

0Shares
0