காகிதப்பறவைகள் குறித்து

இலக்கிய அச்சு இதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் வெளியாகும் சிறந்த படைப்புகள் குறித்து கலந்துரையாடும் நண்பர்கள் குழுவாக அசைவு உருவாக்கபட்டிருக்கிறது

அசைவு இலக்கிய விவாதக் குழு நண்பர்கள் இம்முறை விவாதத்திற்கு எனது சிறுகதை காகிதப்பறவைகளைத் தேர்வு செய்து உரையாடியிருக்கிறார்கள்.

காகிதப்பறவைகள்  குறித்து விவாதித்த கருத்துக்கள் தொகுத்து கீழே பதிவுச் செய்யப்பட்டிருக்கிறது.

அசைவு இலக்கிய விவாதக்குழு நண்பர்கள் ம.கண்ணம்மாள், க.விக்னேஷ்வரன், சரவணன் மாணிக்க வாசகம், சுஷில் குமார், சக்திவேல், சுஜா, நவீன், காயத்ரி, பால ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இந்தக் கதை எனது இணையதளத்தில் வெளியாகியுள்ளது

இணைப்பு

https://www.sramakrishnan.com/?p=11173

•••

பால ராமகிருஷ்ணன்:

இலக்கியத்தில் சோகக் கதைகள் என் தனி விருப்பத்திற்குரியவை அல்ல. அக்கதைகள் தரும் அழுத்தம் என்னை விழிக்கச் செய்பவை. அலையச் செய்பவை. இருக்கும் துயரம் போதாதா என்கிற எண்ணம். வாழ்வு கொண்டாத்திற்குரியது. இலக்கியமும் அவ்வாறே.

பாதசாரியின் காசி, புதுமைப்பித்தனின் செல்லம்மாள், இந்த வரிசையில் என்னை அழுத்திய கதை காகிதப் பறவைகள். நான் கற்பனை செய்ய விரும்பாத களங்களைக் கொண்டவை.

சரவணன் மாணிக்க வாசகம்:

“அவர்களுக்குப் பூவை பாக்க தெரியலை. பூ தானேனு நினைக்குறாங்க“ இதுவே ஸ்டெல்லாவுக்கும் கூடப் பொருந்தும். மனவளர்ச்சி குன்றியோரின் சிந்தனைகளை சாதாரணமாக இருப்போர் தொடர்வது கடினம். போலவே அவர்களுக்கு எது புரியும்? எப்படிப் புரியும் என்பதுவும். Siblings love and hate relationship இதில் நன்றாக வந்திருக்கிறது. மரியா காகிதப் பறவைகளைச் செய்வதன் மூலம் ஸ்டெல்லாவுடன் ஏதோ தொடர்பில் இருப்பதாக நினைத்துக் கொள்கிறாள். A spoiled child and a retarded one. ஸ்டெல்லாவின் சிந்தனை என்னவாக இருந்திருக்கும்? அந்த சிறிய கற்பனை உலகத்தை வெளியில் கண்டிப்பாக சிதைத்திருப்பார்கள். அவள் உடனே இறந்திருந்தால் நல்லது.  மரியாவிற்காக ஸ்டெல்லா வீட்டை விட்டு வெளியேறுதலும் சகோதரியின் இழப்பு தன்னால் தான் என்ற குற்றஉணர்வினால் மரியாவின் மனமாற்றமும் இந்தக் கதையின் உயிர்நாடி. காகிதப்பறவைகள் சகோதரிகளை இணைக்கும் மையப்புள்ளி.

காயத்ரி :

காகித பறவைகள்..  வீட்டில் அடைபட்டு இருக்கும் பொண்ணுக்கு அவள் சொல் படி கேட்க, பேச, சிரிக்க எல்லாவற்றுக்கும் காகித பறவையை தயார் செய்கிறாள். உண்மையான பறவை அவளின் கைகளுக்குள் இருக்காது, அதனால் அவள் கைகளுக்குள் இருக்கும் பறவைகளை செய்கிறாள்.

தன்னை பலவீன படுத்தும் விசயங்கள் அனைத்திற்கும் சிரிப்பை வைத்து அதனை கடந்து விடுகிறாள்.

ஆனால் குற்ற உணர்ச்சி கிட்ட இருந்து மட்டும் அவளால் வெளியே வர முடியவில்லை. அதனால் அந்த இடம், அந்த மனிதர்கள் அனைத்தும் விட்டு ஓடி போகிறாள்.

உணர்வாக இருக்கும் பெண்ணை உணர்ச்சி வசப்பட்ட பெண்ணாக மாற்றும் நிகழ்வை தெளிவா எழுத்தாளர் சொல்லி இருக்கிறார்.

நவின்:

காகித பறவை

*”அவ்வளவு தான் வாழ்க்கை. ஏதோவொரு புள்ளி பிசகிவிட்டால் வீடு விலகிப்போய்விடும். ஒரு மனிதன் வீட்டிலிருந்து விடுபட்டுப் போய்விட்டால் உலகில் அவனைக் கண்டறிவது எளிதானதில்லை”.*

அடைபட்டுக் கிடந்த ஸ்டெல்லா காகித பறவையுடன் உரையாடி நாட்களைக் கழிந்து வருகிறாள்.இறுதியில் உயிரியற்ற காகித பறவை உயிர்பெற்று மறைகிறது.பெண் சுதந்திரம் மற்றும் உயிர் உள்ள மனிதர்களைவிட உயிரியற்ற பறவையுடன் வாழ்வதே மேல் என்ற ஸ்டெல்லாவின் முடிவும்.பறக்கும் கொக்கினை பாக்கும் போதும் எல்லாம் சுபாஷ்க்கு  வரும்  ஸ்டெல்லாவின் நினைவும் கதையின் சிறப்பு.பிடிவாதம் பிடித்த மரியா ஸ்டெல்லா சென்ற பின் பிடிக்காத காகித பறவையை தானும் செய்யத் தொடங்குகிறாள்.வாழ்க்கையின் மாறுதல் அவ்வளவு தான்.காலத்தின் கட்டாயத்தில் தான் நாம் சென்று கொண்டு இருக்கிறோம் என எழுத்தாளர் எஸ்.ரா இக்கதையின் மூலம் எஸ். ரா இக்கதையின் மூலம் கூறியுள்ளார்.

அர்ச்சனா:

இந்தகதையை படிக்கும் போது Sadoko saski 1000 காகித கொக்குகள் ஞாபகம் வந்தது .  ஸ்டெல்லா கூட பிறந்த தங்கை இப்படி வன்மமாக நடந்து கொள்ளுவது மன நெருடலாக இருக்குது.இறுதியில் மனமாற்றம் அடைந்து அக்காவை நினைத்து காகித பறவைகளை செய்ய தொடங்குகிறாள்.இருக்கும் போது  அவளுக்கு வருத்தத்தை கொடுத்துட்டு இப்போ வருந்திகிறாள். தன்னால் செய்ய முடியாத காரியத்தை சிலுவை போட்டு இறைவனிடம் ஒப்படைத்து விடுகிறாள் ஸ்டெல்லா.

ஸ்டெல்லா எங்கு போய்விட்டாய்?!! .காற்றோடு காற்றாக பறந்து விட்டாயா பறக்க முடியாத பறவைகளோடு!!!

ம.கண்ணம்மாள்:

படைப்பில் வரும் உருவங்களுக்கும், அவ்வுருவங்களுக்கும், காலத்துக்குமான உறவு எவ்வகைப்பட்டதென்பதை படைப்பு மனநிலையில் படைப்பாளர்கள் வெளிப்படுத்திக்

கொண்டேயிருப்பார்கள்.

அது ஒரு மனதைச் சரண் செய்தல்.நிஜப்பறவைகள் மனிதர்களைப்பார்த்தால் பயப்படுகிற ஒலியெழுப்பும். எனக்குப் பயப்படும் பறவையைப் பிடிக்காதென்று கூறும் இடமொன்றே ‘காகிதப்பறவைகள்’ பற்றிய முழு வடிவத்தைத் தந்து விடுகின்றது. உணர்ச்சியின் பொருட்டு இயங்கும் மனித இயங்கலின் சமிக்ஞை அது. அந்தச் சமிக்ஞை தான் ஒரு செய்தியை நமக்குச் சொல்லிச்செல்கின்றது. திட்டும் போது சிரிச்சிட்டா வலிக்காதென்பதை பறவைகளின் வழியாகத் தான் உணர்ந்ததென்பதை ஸ்டெல்லா சொல்லும் போது அவ்வுருவம்

பக்குவப்பட்ட முழு சமிக்ஞையாகத்தான் தெரிகின்றது. வாசிக்கும் போது கதையின் உந்துதலாகவும்.

வாழ்வு, அனுபவம் இவை இரண்டும் என்னவாக இருக்கின்றனதென்பதை உணர்ந்தோ, கற்பனையிலோ அறிந்துக்கொள்ளவேண்டியக் கடப்பாடு நிறைந்தச் சூழல் இது. இதில், காகிதப் பறவைகளின் ஸ்டெல்லா போல ஒரு உரு பறந்துக்கொண்டேதானிருக்கும். அப்படி பறக்கும் நிலையின் உணர்தலும், தெளிதலுமான நிலைப்பாடொன்றே படைப்பின் புரிதல்.

ஸ்டெல்லா எங்கோ பறந்துக்கொண்டிருப்பாள். தன்னை ஒளித்தலின்றி.

சுஜா:

‘நிஜப்பறவைகள் மனுஷங்களைப் பார்த்தா பயப்படும். சப்தம் போடும். எனக்குப் பயப்படுற பறவையைப் பிடிக்காது’ என்று பயமில்லாப் பறவையாகத் தன்னையும் உருவேற்றிக்கொள்ளும் ஸ்டெல்லா மனிதர்களைக் கண்டால் பயம்கொள்வதில்லை, சொல்லப் போனால் மனிதர்களுக்கு ஏங்குபவளாகத்தான் தெரிகிறாள். தனக்கென விதிக்கப்பட்ட வாழ்வில் எதையும் மாற்றிவிட முடியாத இயலாமை ஒரு கட்டத்தில் கிடைத்ததை ஏற்றுக்கொண்டு அந்த வட்டத்திற்குள் தனக்கானதாக என்ன செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வரும். தன்னை உள்ளபடி ஏற்றுக்கொள்ளும் மனிதர்களற்ற வாழ்வில், தனக்கான உலகத்தை உருவாக்கிக்கொள்கிறாள். தனக்காகவே விரிந்து காத்திருக்கும் வானம், தன் கஷ்டங்களுக்கு விடுதலை தரத் தயாராக இருக்கும் நட்சத்திரங்கள், கூரையை வானமாக்கக் கொண்ட காகிதப் பறவைகள் சூழ் உலகம். பொது உலகத்தில் இருந்து தான் மட்டும் துண்டிக்கப்பட்டதற்குக் காரணமான மனம் மற்றும் உடற்கூறு வேறுபாட்டை முற்றிலும் உணர்ந்தவளாக ‘ரோஜா’வைப் பார்த்து அழுகிறாள். தனிமைக்குத் துணையாகத் தன்னைப் போலவே பேச முடியாத, எல்லையில்லா வானம் கண்முன் விரிந்திருந்தும் வீட்டுக்கூரையை வானமாகக் காணும் காகிதப்பறவைளை உருவாக்குகிறாள். அவர்கள் வெளியாட்களிடம் பேசவில்லை என்றாலும் ஸ்டெல்லாவுடன் ரகசிய உரையாடல் நிகழ்த்துபவை என்பது அவள் எந்நேரமும் அவைகளைச் சுமந்து திரிவதில் புலப்படுகிறது.

அவளுக்கும் அவள் தங்கைக்குமான செயல் முரணும் அதற்குள் பொதிந்திருக்கும் பாசமும் வெவ்வேறு வாழ்க்கைத்தரத்தில் வாழும் சகோதர உறவின் இயல்பு.

எஸ் ராமகிருஷ்ணன் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த அம்சங்களான கவித்துவமான காட்சிகளும் படிமங்களும் இக்கதையிலும் நிறைந்துள்ளன.

‘காகிதத்துக்குள்ளே பறவை எப்படி வந்துச்சி.. அது ஒரு இரகசியம். நட்சத்திரம் தான் இப்படி மேஜிக் பண்ணுது’

‘ஒவ்வொரு பறவை செய்து முடித்தவுடன் அவள் அதை வெளியே எடுத்து வந்து வானத்தைக் காட்டுவாள். ஏன் அப்படிச் செய்கிறாள் என்று சுபாஷ் கேட்டதற்குத் திக்கித் திக்கிப் பேசியபடியே பறவைகள் வானத்தைத் தான் முதலில் பார்க்க வேண்டும் என்றாள்.’

‘இந்தப் பறவைகள் கஷ்டம்னா என்னை வானத்துக்கு அழைச்சிட்டு போயிடும். அதான் ரகசியம்’

வான் வெளியை இலக்காகக் கொண்ட ஸ்டெல்லா என்னும் பறவையின் ரகசியம்.

••

நன்றி :

https://asayvu.wordpress.com/about/

0Shares
0