சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் – குறித்த அறிமுகம்
மீ. சித்ரா ராஜம்.

உலகச் சினிமாவை நேசிக்கும் பார்வையாளனுக்கும், உலகச் சினிமாவே தெரியாத சாமானியனுக்குமான அருமையான புத்தகம் .இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து எஸ்.ரா சொன்ன படங்களைத் தேடித் தேடி பார்க்க ஆரம்பித்ததால் இந்தப் புத்தகத்தை முடிக்கவே எனக்கு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.
ஆயினும் ஓரிரண்டு படங்களே பார்க்க முடிந்தது. அவர் குறிப்பிட்டுள்ள ஒரு படத்தைக் கூடக் கடந்து செல்ல முடியாமல் ஒரு வரியையேனும் நானும் இப்பகிர்வில் குறிப்பிட்டிருக்கிறேன்.
தேர்ந்த கலை நேர்த்தியுடன் ஆழமான உணர்ச்சிகள், செறிவான அழகியல் சார்ந்த படங்களை எஸ்.ரா சிறப்பாக நம் கண்முன்னே காட்சிப்படுத்துகிறார்.
அகிரா குரோசாவா படங்களில் அதிகம் பேசப்படாத படம் l live in fear.
அணு ஆயுத வீச்சில் ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகியில் பல லட்சம் மக்கள் அழிவிற்கு உள்ளானார்கள். அதைக் குறித்த பயம் ஜப்பானின் எளிய மனிதர்கள் மனதிலிருந்து மறையவில்லை என்பதை மிக வலிமையாகக் குரோசாவா இப்படத்தில் சொல்லி இருக்கிறார். திரைக்கதையை நுட்பங்களோடு எஸ்ரா அவர்கள் விவரிக்கும் விதம் நாம் படத்தைக் காண வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. உதாரணமாகப் படம் எங்கும் பின்புலத்தில் கேட்கும் சைரனொலி மக்களின் சிதைவுற்ற மனதின் வெளிப்பாடு. இயல்பான வாழ்வு சிதைந்து போய்ப் புறநெருக்கடிகளுக்குள் மக்கள் வாழ்கிறார்கள் என்பதைப் போர் விமானம் சீறிட்டு போகின்ற ஓசை, மிதமிஞ்சிய வெக்கை, காற்றோட்டம் இல்லாத புழுக்கம் ஆகியவை காலத்தின் குறியீடு , படத்தில் வரும் ஆண்கள் யாவரும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். பெண்கள் தங்கள் இயல்பான எண்ணங்களைக் கூட வெளிப்படுத்த முடியாமல் ஒடுங்கிப் போய் இருக்கிறார்கள் என்பது போன்ற நுட்பங்களை ஒரு தேர்ந்த விமர்சகராகப் பதிவு செய்கிறார்.
சாமுராய்கள் என்றாலே சாவுக்கு அஞ்சாத போர் வீரர்கள் என்ற பிம்பத்தை உடைத்துத் தனது ஏழு சாமுராய்கள் படத்தில் பசித்திருக்கும் சாமுராய்களைக் காட்டுகிறார் அகிரா குரோசாவா. சாமுராய்கள் வாள்வீரர்களாகப் புகழ்பெற்றிருந்த காலத்தை விட்டுவிட்டு அவர்கள் வீழ்ச்சி அடைந்த 16ஆம் நூற்றாண்டை தனது கதைக்களமாகத் தேர்வு செய்திருக்கிறார். இப்படம் குறித்து விரிவாகவும் சிறப்பாகவும் எழுதியுள்ளார் எஸ்ரா.
Quest for fire என்ற படம் மனிதர்களுக்கும் நெருப்பிற்குமான நீண்ட உறவை பேசுகிறது.80 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் மனிதகுலம் நெருப்பைக் கைவசப்படுத்த மேற்கொண்ட போராட்டத்தின் கதையைச் சுவாரஸ்யமாகச் சொல்ல முடிந்திருப்பது படத்தின் வெற்றி.
மிலாஸ் ஃபோர்மனின் Amadeus திரைப்படம் ஒரு இசை காவியம். இசை மேதை மொசார்ட்டின் வாழ்வினை விவரிக்கும், இப்படம் அவரை மிகவும் வெறுத்த மூத்த இசை கலைஞரான ஆண்டோனியா சலேரியின் தற்கொலையில் துவங்கி அவர் நினைவூட்டத்தின் வழியே மொசார்ட்டின் மேதமையை வெளிப்படுத்துகிறது.

Caterpillar என்ற ஜப்பானிய திரைப்படம் போரில் கை கால்கள் வெட்டப்பட்டுத் தனது சொந்த ஊருக்கு திரும்பும் குரோகவா என்ற ஜப்பானிய ராணுவ வீரனின் காமமும், பசியும், பிணியும் ,அவன் மனைவி ஒரு பௌத்த துறவி போல அவனைச்சகித்துக் கொள்வதையும், யுத்தம் என்ற அதிகாரத்தின் கோரப் பசி போர் முனையில் உள்ள வீரர்களை விடவும் அப்பாவி பெண்களையே அதிகமாக வன்முறைக்கு உட்படுத்திச் சிதைத்து அழிக்கிறது என்பதையும் வலிமையாகச் சொல்கிறது.
A thousand years of good prayers. அமெரிக்காவிற்குப் படிக்கச் சென்று அங்கேயே திருமணம் செய்து கொண்டு மணவிலக்காகி தனித்து வாழும் மகளைக் காண்பதற்காகச் சீனாவில் இருந்து வரும் அவளது வயதான தந்தைக்கும் அவளுக்குமான உறவு மவுனத்தின் வழியே கவித்துவமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது .
The grocer’s son என்ற french திரைப்படம் வேனில் ஊர் ஊராகச் சென்று நடமாடும் பல சரக்கு நடத்தும் தனது அப்பா இதய நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவரைப் பார்க்க வரும் அன்டோனைப் பற்றியது.. இந்தப் படம் தனிமையின் வலியை பதிவு செய்தாலும், உறவுகள் கசந்து போன வாழ்க்கையில் பயணமும், அர்ப்பணிப்பு மிக்க வேலையுமே மீட்சி தருவதாக உள்ளன என்பதை அடையாளம் காட்டுகிறது.
இந்த நூலில் கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட படங்களை விவரிக்கிறார் எஸ்.ரா.
படங்களின் ஈரம் மாறாத உரையாடல்கள், இசை, காட்சிகளின் அழகியல் என எஸ்.ரா குறிப்பிட்ட எல்லாம் என் மனதில் இன்னும் ததும்பிக் கொண்டே இருக்கின்றன.
நல்ல சினிமா எப்போதுமே உரையாடல்களை விடவும் காட்சியை அதிகம் நம்புகிறது .காட்சியின் உண்மையில் அது சொல்ல வேண்டியதை சொல்லிவிடுகிறது. ஒரு மௌனத்தை உருவாக்கி பார்வையாளனுக்குக் கதாபாத்திரத்தின் அகத்துயரை ,வலியை, மேன்மையை, மகிழ்ச்சியை எளிதாகப் புரிய வைக்கிறது.
அதை இங்கே எழுத்தில் காட்சிப்படுத்திய எஸ்.ராவுக்கு Hats off.