(உயிர்மை 100 வது இதழில் வெளியான சிறுகதை)

1891ம் ஆண்டு நடைபெற்ற பில்வமங்கன் கொலை வழக்கு எனப்படும் மோகன்பூர் ஜமீன்தார் கொலைவழக்கினை விசாரணை செய்வதற்காக நியமிக்கபட்டிருந்த போலீஸ் சூப்ரெண்டெண்ட் யதோத்தகாரி எழுதிய டயரிக் குறிப்புகள் அவரது மறைவிற்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்பு அவரது குடும்பத்தினரால் கண்டறியப்பட்டு நூலாக்கம் பெறுவதற்காக நவயுகம் பதிப்பகத்திற்கு அனுப்பி வைக்கபட்டிருந்தது.
இந்த வழக்கின் விசித்திரம் கொலையாளியாகச் சந்தேகிக்கபடும் பில்வமங்கனின் மனைவி வருணா கொலை நடந்த இரவு காணாமல் போய்விட்டார். இக் கொலைவழக்கினை விசாரிக்க நியமிக்கபட்ட போலீஸ் சூப்ரண்டெண்ட் ஜே.ஆர்.எட்வர்ட் விசாரணையின் போது காணாமல் போயிருக்கிறார்.
இது போலவே பில்வமங்கனின் பணிப்பெண். பத்திரிக்கையாளர் இந்திரநாத். படகோட்டி நாதிம், இப்படி வழக்கோடு தொடர்புடைய ஏழு பேர் காணாமல் போயிருக்கிறார்கள். எவரையும் பற்றி இன்றுவரை ஒரு தகவலையும் தெரிந்து கொள்ள முடியவில்லை.
வேறுவேறு காலங்களில் காணாமல் போன இவர்களுககுள் அதிசயத்தக்க சில ஒற்றுமைகளைக் காண முடிகிறது. அதிலும் மிருணாவிற்கும் யதோத்தகாரியின் மனைவி ஸ்ரீமதிக்கும் ஒன்று போலவே இடது புருவத்தின் மீது மச்சம் இருந்தது என்பதோ, அவர்கள் ஒரே கனவைப் பிறர் அறியாமல் கண்டுவந்தார்கள் என்பதோ புரிந்து கொள்ள முடியாதது
இந்த வழக்கினை விசாரிக்கச் சென்ற யதோத்தகாரி சுழலுக்குள் சிக்கி கரைந்து போனவன் போல முடிவற்ற தேடலில் தொலைந்து போனான். வீடு திரும்பாத அவனுக்காகக் காத்திருந்த ஸ்ரீமதி ஒரு பிற்பகலில் கோச் வண்டியில் எங்கோ புறப்பட்டுச் சென்றாள். எங்க சென்றாள் என்று தெரியவில்லை. அவளும் உலகின் கண்ணிலிருந்து மறைந்து போனாள்.
மகளையும் மருமகனையும் பற்றி ஒரு தகவலும் இல்லை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீமதியின் தந்தை சடகோபன் வங்காளத்திற்குப் பயணம் செய்து மோகன்பூருக்குச் சென்ற போது அவருக்குக் கிடைத்தவை நம்பமுடியாத கதைகள் மட்டுமே.
யதோத்தகாரி வீட்டில் கிடைத்த டயரிகள். புத்தகங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை மாட்டுவண்டியில் ஏற்றி காஞ்சிபுரம் கொண்டுவந்தார் சடகோபன்.
தொடர்பே இல்லாத அவருக்குள்ளும் பில்வமங்கன் கொலை வழக்கின் ஒரு துளி உறைந்து போனது. தன் வாழ்நாள் முழுவதும் அவரும் அந்தக் கொலைவழக்கின் மர்மத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டேயிருந்தார்.
தன் அறியாப்பெண் ஏன் இந்த மாயவலையினுள் மாட்டிக் கொண்டாள் என்று அவர் வருந்தினார்.
ஒரு கொலைக்குப் பின்பு எளிய பொருட்கள் கூட மர்மம் கொண்டுவிடுகின்றன. மனிதர்கள் சந்தேகத்தின் நிழலாக மாறிவிடுகிறார்கள். எல்லா நிகழ்வுகளுக்குப் பின்னும் ரகசியம் ஒளிந்திருப்பதாகச் சந்தேகம் உருவாகிறது. வீசி எறிந்த பொருட்கள். மறைத்துவைக்கபட்ட கடிதங்கள் என எல்லாமும் விசித்திர தோற்றம் கொள்ள ஆரம்பித்துவிடுகின்றன. ஒரு கொலை அந்த வீட்டின் இயல்பை முற்றிலும் நிறம் மாற்றிவிடுகிறது.
செய்திகளின் வழியே கொலை பிறரது பொது நினைவாக மாறிவிடுகிறது. உலகம் பில்வமங்கனை மறந்த போதும் யாரோ சிலர் அந்தக் கொலையை நினைவு கொண்டபடியே தான் இருப்பார்கள்.

தீர்க்கப்படாத வழக்குகளில் ஒன்றாக மோகன்பூர் வழக்கு இன்றைக்கும் சுட்டிக்காட்டப்படுகிறது. யார் கொன்றார்கள் என்ற உண்மை கடலில் விழுந்த மழைத்துளியையைப் போல அடையாளமற்றுப் போய்விட்டது. இனி தனித் துளியை கடலில் இருந்து கண்டுபிடித்துவிடவே முடியாது
பில்வமங்கன் கொலை வழக்குக் குறித்த தேடுதலில் ஈடுபட்டவர்கள் ஏன் காணாமல் போகிறர்கள் என்பது தீர்க்கமுடியாத புதிரே. பெர்முடா முக்கோணத்தில் கப்பல்கள் மர்மமாகக் காணாமல் போய்விடுவது போல இந்தக் கொலைவழக்கும் ஒரு பெர்முடா முக்கோணம் தானோ என்னவோ.
•••
யதோத்தகாரியின் குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் மிருதுளா தனது பெரிய தாத்தாவின் டயரியை கண்டறிந்து அதை வெளியிடுவதற்காக முயற்சி செய்தாள். அப்படிதான் இந்த டயரிகள் பதிப்பகத்திற்கு அனுப்பி வைக்கபட்டன
நவயுகம் பதிப்பகத்தின் ஆசிரியர் பிரதாபன் எனது நண்பர் என்பதாலும் நான் ஒரு வழக்கறிஞர் என்பதாலும் இந்தக் கையெழுத்துபிரதிகளை வாசித்து முடிவு செய்யும் படி கேட்டுக் கொண்டிருந்தார்.
தீர்க்கப்படாத கிரிமினல் வழக்கு என்பதால் சுவாரஸ்யமாக இருக்கக் கூடும் என்பதாலே நான் இதை வாசித்து அபிப்ராயம் சொல்ல ஒத்துக் கொண்டேன்.
பனிரெண்டு சிறிய டயரிகளில் எழுதப்பட்ட குறிப்புகள். அநேகமாக இது கணவன் மனைவி இருவர் எழுதிய டயரிகளுடன் வருணா அல்லது பில்வமங்கன் எழுதிய டயரியாகவும் இருக்கக் கூடும்.
எல்லா டயரிகளும ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. ஒரு டயரில் இடையிடையில் எழுதப்பட்ட கவிதைகளை வைத்து அது ஸ்ரீமதியின் டயரி என்று எண்ணத்தோன்றுகிறது. காரணம் அவள் கவிதைகளின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தவள். ஒருவேளை அவளே கவிதைகள் எழுதினாளோ என்னவோ. கணவனுக்குத் தெரியாமல் கவிதை எழுவது ஒரு குற்றமாக அன்று நினைக்கபட்டது. தெரிந்து கவிதை எழுதினால் மன்னிக்கபட முடியாத குற்றமாகக் கருதப்பட்டது. இந்த இரட்டை சிக்கலுக்குப் பயந்து ஸ்ரீமதி வேறு பெயர்களில் தன் கவிதைகளே எழுதியிருக்கக் கூடும். இந்த வழக்கிற்குத் தொடர்பில்லாத போதும் இந்தக் கவிதைகள் மிக வசீகரமாகவும் புதிராகவும் எழுத்ப்பட்டிருக்கின்றன.
பில்வம்ங்கன் கொல்லப்படுவதற்கான காரணங்கள் எதையும் இந்த டயரிகளில் இருந்து அறிந்து கொள்ள முடியவில்லை.. ஆனால் பிரிட்டிஷ் காவல்துறையில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த இளம் அதிகாரி யதோத்தகாரியை பற்றியும் அவனது மனைவி ஸ்ரீமதி பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது. தொடர்பேயில்லாத சில விசித்திர நிகழ்வுகளையும் மனிதர்களையும் பற்றித் தெரிந்து கொண்ட பிறகு என்னால் அதிலிருந்து விடுபட முடியாமல் மோகன்பூருக்கு ஒருமுறை போய்வரலாம் என்று பயணம் புறப்பட்டு விட்டேன்.
இந்தப் பயணத்தின் ஊடாக இந்த டயரியில் எழுதப்பட்ட சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
•••
நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த போதும் ஒரு கொலை என்பது முடிந்து போன விஷயமில்லை. அதன் அதிர்வு இன்னமும் நீடித்துக் கொண்டேயிருக்கிறது. கொலையாளியை கண்டறிந்து தண்டிக்கபட்டவுடன் உலகம் கொலையை மறந்துவிடுகிறது. ஆனால் கொலையுண்டவனின் குடும்பம் அந்த நிகழ்வை மறப்பதில்லை. வீட்டு மனிதர்களின் மனதில் சிறுவிதையைப் போல அந்த நிகழ்வு வளர்ந்து தானே சிறுசெடியாக வளர ஆரம்பிக்கிறது. வாழ்நாள் முழுவதும் அந்தச் செடியின் இலைகள் சலசலப்பதை அவர்கள் கேட்டுக் கொண்டேதானிருப்பார்கள்.
1850களில் பில்வமங்கன் லண்டனில் சென்று படித்திருக்கிறான். உண்மையில் அவனைச் சட்டம் படிப்பதற்காகத் தான் லண்டனுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது பதினாறு வயது தான் நடந்து கொண்டிருந்தது. பில்வமங்கன் தந்தையின் ஆசையை நிறைவேற்றவில்லை என்பதுடன் இரவு பகலாகக் குடி பெண்கள் எனச் சுதந்திரமான வாழ்க்கை அனுபவித்தான். அந்த நாட்களில் அவனது சுருள்கேசத்தையும் அழகான தோற்றத்தையும் கண்ட பெண்கள் அவனைக் காதலிப்பதில் போட்டியிட்டார்கள். பெண்களைக் கவருவதற்காகவே அவன் நாடகங்களில் நடித்தான். பில்வமங்கன் ஏன் ஊர் திரும்பினான் என்பதற்கு ஒரு விசித்திரமான கதையைச் சொல்கிறார்கள்
•••
பூக்களை மறந்து போனவள்
பில்வமங்கன் நடித்த நாடகத்தின் பெயர் கெய்ரோ நகரத்தின் அழகி. அந்த நாடகத்தை எழுதியதும் அவனே. அந்த நாடகத்தில் கதாநாயகியாக நடித்த இசபெல் அவனைக் காதலித்தாள். இசபெல் ஆறு வயதிலே தந்தையை இழந்தவள். அவளது தாய் ஒரு நாடக நடிகை. மிகவும் வறுமையா சூழலில் வளர்ந்தவள். ஆகவே பில்வமங்கனின் பணவசதியை கண்டதும் அவனுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தாள். ஒவ்வொரு நாளும் நாடகம் முடிந்த பிறகு அவளுடன் தான் பில்வமங்கன் தங்குவான். அவள் தனது வீட்டில் பெரிய மரக்கட்டில் கொண்டிருந்தாள். அந்தக் கட்டிலின் அடியில் ஒரு பூட்டு தொங்கவிட்டிருப்பாள். அந்தப் பூட்டினை திறந்துவிட்டால் கனவுகள் வந்துவிடும் என்று அவள் நம்பினாள்.

இது என்ன முட்டாள்தனமான நம்பிக்கை. கனவு வராமல் தடுக்கப் படுக்கையை எப்படிப் பூட்டமுடியும் என்று கேட்டான் பில்வமங்கன்.
இந்தப் படுக்கை என் பாட்டியுடையது. அவள் கனவுகளால் அலைக்கழிக்கபட்டவள். ஆகவே அதிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு பூட்டினை மாட்டியிருக்கிறாள். இதை என் அக்கா ஒருமுறை கழட்டிவிட்டாள். அடுத்தச் சில நாட்களில் அவள் துர்கனவால் நோயுற்று இறந்த போனாள். உடனே என் அம்மா பழையபடி இந்தப் பூட்டினை மாட்டிவிட்டார். இதன் சாவி எங்கேயிருக்கிறது என்று கூட இப்போது எனக்குத் தெரியாது என்றாள் இசபெல்.
இன்றிரவு அந்தப் பூட்டினை திறந்து அதே கட்டிலில் நாம் துயிலுவோம். துர்கனவுகள் நம்மைப் பீடித்துக் கொள்ளட்டும் என்றான் பில்வமங்கன். அவள் எவ்வளவோ மன்றாடியும் அவன் கேட்கவில்லை.
வீட்டின் பழைய மேஜை ஒன்றின் இழப்பறையில் இருந்து அதன் சாவியைக் கண்டறிந்து அந்தப் பூட்டினை திறந்தார்கள். அன்றிரவு இசபெல்லுடன் உறவு கொள்ளும் போது கடற்நுரையைப் போர்த்திக் கொண்டது போலிருந்தது. அவளது ஒவ்வொரு முத்தமும் ஒரு சுவை கொண்டிருந்தது. அவளை இறுக்கி அணைத்துக் கொண்டபோது அலையை அணைத்துக் கொள்வது போலவே இருந்தது. விடிந்து எழுந்து கொண்டபோது பில்வமங்கன் கேட்டான். உனக்குத் துர்கனவுகள் எதுவும் ஏற்பட்டதா. அவள் இல்லை எனத் தலையாட்டினாள்.
இது நடந்த மறுநாள் இரவில் அவர்கள் நாடகம் போடும் போது பூக்குவளை ஒன்றில் மலர்களை அடுக்கி வைக்கும் காட்சியில் நடிக்க வேண்டிய இசபெல் மலர்களை மறந்துவைத்துவிட்டதாகச் சொல்லி மேடையின் பின்பக்க படிகள் வெளியே அவசரமாக மலர்கள் வாங்கச் சென்றாள். நாடகத்தில் அவளது காட்சி வரும்வரை அவள் திரும்பி வரவில்லை. எங்கே போனாள் என்று தெரியாத பில்வமங்கன் அவள் இல்லாத காரணத்தால் மேரி ஆலிவரை நடிக்க வைத்து நாடகத்தை ஒருவராக முடித்து வெளியேறினான்.
அவளது வீட்டிற்குச் சென்று இசபெல் இருக்கிறாளா எனத் தேடிய போது அவள் வீட்டிற்கு வரவில்லை என்று பணிப்பெண் சொன்னாள். அப்போது படுக்கையின் அடியில் அந்தப் பூட்டுப் பூட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. யார் இதைப் பூட்டினார்கள் என்று பில்வமங்கன் கேட்டான். அவள் தனக்குத் தெரியாது என்றாள். இசபெல் எங்கே போனாள் என்று கண்டறிய முடியவில்லை.
பூக்களை வாங்குவதற்காகச் சென்ற பெண் எங்கே போயிருப்பாள். நாடக அரங்கினை சுற்றிய மலர் விற்பனையகங்களில் விசாரித்தபோது அவள் வரவில்லை என்றே தகவல் கிடைத்தது. ஒருவேளை அவளுக்கு ஏதாவது விபத்து நடந்திருக்குமா என்று விசாரித்தான். அப்படியும் கண்டறிய முடியவில்லை. மூன்று மாத காலம் எவ்வளவோ முயன்றும் அவளைப் பற்றிய தகவலை அறிய முடியவில்லை.
ஆனால் அதன்பிறகு ஒவ்வொரு நாளும் அவனது கனவில் அவள் தோன்ற ஆரம்பித்தாள். நாடகத்தில் வரும் அதே காட்சி போல மலர்களை மறந்துவிட்டதாகச் சொல்லி வெளியேறி செல்வாள். கனவிலும் அவளைப் பின்தொடர முடியவில்லை. இந்த ஏமாற்றம் அவனை ஆழமாகப் பாதித்தது. தான் காதலித்த பெண் ஏன் தன்னை விட்டு மறைந்து போனாள் எனப் புரியாமல் தான் அவன் லண்டனை விட்டு இந்தியா திரும்பி வந்தான் என்கிறார்கள்.
இந்த நிகழ்வினை பற்றிப் பில்வமங்கன் இரண்டு மூன்று முறை தனது டயரியில் பதிவு செய்திருக்கிறான்.
••
யதோத்தகாரியின் ஒரு குறிப்பு

காணாமல் போனவர்கள் எல்லோரும் ஒரு இடத்தில் ரகசியமாக வசித்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். இந்த உலகில் காணாமல் போனவர்களுக்கான வசிப்பிடம் என்றே தனிவெளி இருக்கிறது. அதைக் காணாமல் போகாதவர்களால் கண்டறிய முடியாது. உண்மையில் அது ஒரு உலகம். எந்த நூற்றாண்டில் காணாமல் போயிருந்தாலும் அவர்கள் ஒரே இடத்திற்குத் தான் சென்று சேர்ந்திருப்பார்கள். காணாமல் போனவர்களின் வசிப்பிடம் என்பது கடலில் உள்ள தீவினைப் போலப் பூமியில் உள்ள தனிநிலம். அங்கே யாரும் யாருக்கும் தெரிந்தவர்கள் இல்லை. காணாமல் போனவர்களுக்குள் உறவு கிடையாது. அவர்கள் ஒரே பூமியில் முளைத்து அருகருகே நிற்கும் மரங்களைப் போலத் தனது சுதந்திரத்தில் தனியே வளருகிறார்கள். கண்டுபிடிக்கப்படும் வரை தான் அவர்களின் இந்த வாழ்க்கை. கண்டுபிடிக்க முடியாதபடி அவர்கள் நிறையக் கதைகளை உருவாக்கி விடுகிறார்கள். அல்லது கதைகள் காணாமல் போனவர்களின் பாதையை அழித்துவிடுகின்றன.
இந்தக் கொலை வழக்கினை விசாரிக்கத் துவங்கிய போது கொலைக்கான காரணங்களை விடவும் விசித்திரமான நிகழ்வுகள் அதிகம் இருப்பதை உணர முடிகிறது.
உண்மையில் பில்வமங்கன் சொல்வதைப் போலவே ஸ்ரீமதியும் படுக்கை அறையில் ஒரு பூட்டை வைத்திருக்கிறாள். அந்தப் பூட்டு உண்மையில் ஒரு தலையணை உறை. அந்த உறையில் இரண்டு அன்னங்கள் நீந்துகின்றன. அந்த இரண்டு அன்னங்களும் ஒன்றையொன்று பார்த்தபடியே நீந்துகின்றன. இந்த உறையைக் கொண்ட தலையணை இருக்கும்வரை துர்கனவுகள் வராது என்று அவள் நம்புகிறாள்.
ஒரு நாள் விளையாட்டாக அந்தத் தலையணை உறையை மாற்றி இரண்டு கிளிகள் கொண்ட தலையணை உறையை மாட்டிவிட்டேன். அன்றிரவு அதிசயமாக ஸ்ரீமதி படுக்கையில் உக்கிரமாக இருந்தாள். கலவியின் பின்பு உற்சாகமாகப் பாட்டுபாடினாள். காலையில் எழுந்து கொண்ட போது அவளது முகம் வெளிறிப்போயிருந்தது. அவள் எதையோ சொல்ல முயன்று சொல்லாமல் மறைத்துக் கொண்டபடியே குளிக்கச் சென்றாள்.
வீட்டின் பின்புறம் சிறிய குளம் இருந்தது. அதில் தான் அவள் குளிப்பாள். அவளுக்கு நன்றாக நீந்த தெரியும். அன்று அவள் குளக்கரையில் குளிப்பதற்காகக் கொண்டு போன உடைகளை வைத்தபடியே ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தாள். பகல் நீண்டு சூரியன் உச்சிக்கு வரும்வரை அப்படியே இருந்திருக்கிறாள். பணிப்பெண் பயந்து போய்ப் பக்கத்து வீட்டு மொய்னாவை அழைத்துக் கொண்டு வந்த போது காரணமே இல்லாமல் அழுதிருக்கிறாள். அன்றிரவு என்னிடம் பில்வமங்கன் மனைவி அவனைக் கொல்லவில்லை. அவனைக் கொன்றது பணிப்பெண் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள்
இதைப்பற்றி எல்லாம் நீ யோசிக்க வேண்டியதில்லை. மனசு சரியில்லை என்றால் கோவிலுக்குப் போய் வரச்சொன்னேன்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் தனியே பில்வமங்கன் மாளிகைக்குப் போய் வந்தாள் என்று கேள்விபட்ட போது அவள் மீது கோபம் தான் வந்தது. எதற்காக அங்கே போனாள் என்று கேட்டதற்கு அவள் பதில் சொல்லவேயில்லை
ஸ்ரீமதி அதன்பிறகு பகலில் வீட்டில் தனியே நடிகை போல அலங்காரம் செய்து கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறாள் என்று மொய்னா சொன்னாள். ஒரு நாள் அவளிடம் இது பற்றிக் கேட்டதற்குச் சொன்னாள்
நீங்கள் ஒயின் குடிப்பது போல எனக்கும் கொஞ்சம் மயக்கம் தேவைப்படுகிறது. அதற்குத் தான் அந்த நடிப்பு
அவளை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நீண்ட தனிமை ஒரு பெண்ணை இப்படி ஆக்கிவிடுமா என்ன.
••
பத்திரிக்கையாளர் இந்திரநாத் சொன்னவை
பில்வமங்கன் கொல்லப்படுவதற்கு முந்திய நாள் அவனது வீட்டில் ஒரு கச்சேரி நடந்திருக்கிறது. பனராசில் இருந்து வரவழைக்கபட்ட இந்துஸ்தானி பாடகர் குலாம் காதர் மற்றும் குழுவினர்கள் பாடியிருக்கிறார்கள். அந்தக் கச்சேரி இரவு ஏழு மணிக்கு துவங்கி விடிகாலை நாலு மணி வரை நடந்திருக்கிறது கடந்த சில மாதங்களாகவே பில்வமங்கன் இப்படி இரவெல்லாம் கச்சேரி கேட்டுக் கொண்டேயிருந்தான். இதற்காக நிறையப் பணம் செலவு செய்திருக்கிறான். புகழ்பெற்ற இசைக்கலைஞர்களை வரவழைத்து பரிசுகளை வாறி வழங்கினான்
அந்தக் கச்சேரியை கேட்பதற்கு வெளியாட்கள் எவருக்கும் அனுமதியில்லை. அவன் மனைவி வருணா சில நேரங்களில் அந்த இசைககூடத்திற்கு வருவதுண்டு. இல்லாவிட்டால் அவன் ஒருவன் மட்டுமே இசையைக் கேட்டுக் கொண்டிருப்பான். நூறு தூண்கள் கொண்ட பெரிய இசைக்கூடமது. அதன் நடுவே பெரிய சிம்மாசனம் போன்ற நாற்காலி. அவன் முன்னால் பாடகர்கள் அமர்ந்து பாட சிறிய கூடம். இரவெல்லாம் ஒளிரும் எண்ணெய் விளக்குகள். கதவுகள் மூடப்பட்ட அந்த இசைக்கூடத்தில் பாடகர்கள் தன்னை மறந்து பாடுவதும் கண்களை மூடியபடி பில்வமங்கன் கேட்டுக் கொண்டிருப்பதும் விநோதமாக இருக்கும். விடிகாலை வெளிச்சம் கதவில் பட்டு கசியும் போது அவன் போதும் எனக் கைகளால் சைகை செய்து நிறுத்துவான். பிறகு பட்டாடைகள் சன்மானங்களைத் தன் கையால் கொடுத்துவிட்டு வெறித்த கண்களுடன் தள்ளாடியபடியே நடந்து செல்வான்
ஒருமுறை அவனிடம் குலாம் காதர் கேட்டார்.
“இசையில் நீங்கள் எதையோ தேடுகிறீர்கள் சாகேப்.“
“காணாமல் போனவர்களைத் தேடுகிறேன். உன்னதமான இசையின் வழியே மறைந்து போனவர்களைத் தேடிச் செல்லும் பாதை உருவாகிறது. அதன் வழியே நான் இசபெல்லை தேடிக் கொண்டிருக்கிறேன். அவள் வாங்க மறந்த மலர்களை என்னால் காண முடிகிறது. ஆனால் அவளைத் தான் காண முடியவில்லை“
அதைக் கேட்டுக் குலாம் காதர் சொன்னார்
“பாடி முடித்தபிறகு பாடல்கள் எங்கே போகிறதோ. அங்கே தான் காணாமல் போனவர்களும் போயிருப்பார்கள்“
அவர் அப்படிச் சொன்னது பில்வமங்கனுக்குப் பிடித்திருந்தது. அவன் தன் கழுத்தில் அணிந்திருந்த இரட்டை வட சங்கிலியை அவருக்குப் பரிசாக அளித்தான். பில்வமங்கனின் கடந்த காலம் அவனை ஆட்டுவித்திருக்கிறது. உண்மையில் வருணா அவனது பணத்திற்காகவே அவனுடன் வாழ்ந்திருக்கிறாள். அவளுககு ரகசிய காதலன் இருந்திருக்கிறான். படகு துறையில் அவர்கள் ரகசியமாகச் சந்தித்திருக்கிறார்கள்.
அவள் ஒரு நாள் காணாமல் போகக் கூடும் என்று பில்வமங்கன் நம்பிக் கொண்டிருந்தான். அதைத் தடுக்கவே அவளுக்குப் புதுப்புது ஆசைகளை உருவாக்கிக் கொண்டிருந்தான். ஆசைகளைக் கொண்டு எவரையும் எங்கேயும் தங்க வைத்துவிட முடியும். மிருணாவை தன்னிடமிருந்து பறித்துக் கொள்ள முயலும் அவளது காதலனை பில்வமங்கன் தான் கொலை செய்திருக்கக் கூடும். காதலனின் பிரேதத்தை ஆற்றில் கண்ட போது வருணா அதைத் தான் நினைத்திருக்கிறாள். ஒருவேளை இந்தக் கொலை அதற்கான பழிவாங்குதல் தானோ என்னவோ.
பில்வமங்கனின் மாளிகையைப் பரிசோதனை செய்வதற்காகச் சென்ற நாட்களில் தலைகீழாக உருவம் தெரியும் ஒரு நிலைக்கண்ணாடி அந்த வீட்டில் இருப்பதைக் கண்டேன். இப்படி ஒரு அதிசய கண்ணாடியை எதற்காகப் பில்வமங்கன் வாங்கி வைத்திருக்கிறான். அது தன் முன்னே நிற்பவர்களைத் தலைகீழாகத் தான் காட்டுகிறது. அப்படி ஒரு அனுபவத்தை ஒருவர் அடைவது திகைப்பானது. என்னை நானே அப்படிப் பார்த்துக் கொண்ட போது வியப்பாக இருந்தது. ஒருவேளை வருணாவை கொலை செய்ய முயன்று தான் கொலையாகிப் போய்விட்டானோ. தலைகீழ் கண்ணாடி இதைத் தான் சொல்கிறதோ. தெரியவில்லை. ஒரே குழப்பமாக உள்ளது.

வங்காளத்தின் பகல்பொழுது காஞ்சிபுரத்தின் பகல்பொழுதை விடவும் பெரியது. ஏன் ஒரு நாள் இவ்வளவு நீண்டதாக இருக்கிறது. இந்தக் குடியிருப்பில் எத்தனை நேரம் தனியே தூரத்து மேகங்களை வெறித்துப் பார்த்தபடியே இருப்பது.
யதோ ஏதோ ஒரு கொலை வழக்கினை விசாரிப்பதற்காகக் குதிரையில் சென்றுவிட்டான். அவனுக்குப் பில்வமங்கனை கொலை செய்தது யார் என்பது தான் உலகின் மிக முக்கியமான விஷயம். என் ஆசையை அவன் கண்டுகொள்ளவேயில்லை. இந்தப் பில்வமங்கன் ஏன் கொல்லப்பட்டான். அவன் சாகாமல் இருந்திருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டியது இருக்காது. பேசாமல் கல்கத்தாவில் இருந்திருக்கலாம். ஆங்கில நாடகங்கள். கச்சேரிகளைப் பார்த்துக் கொண்டு சந்தோஷமாக இருந்திருக்கலாம். ஆனால் இந்தக் கொலை என் ஆசைகளை நாசம் செய்துவிட்டது. பேசாமல் யதோவை இங்கே விட்டுவிட்டு அம்மா வீட்டுக்குப் போய்விடலாமோ என்று கூட நினைத்தாள்.
யதோத்தகாரி சாப்பாட்டு பிரியன். சாம்பாரும் புளியோதரையும், வத்தல்குழம்பும் அப்பளமும் என ருசியாகச் சமைக்க வேண்டும். அவள் போய்விட்டால் அது எப்படிக் கிடைக்கும். ஒரு வேளை அவள் ஊருக்குப் போய்விட்டால் இந்தக் கேஸ் வேண்டாம் என்று அவனே ஊருக்கு வந்துவிடவும் கூடும். இப்படி மாறி மாறி யோசனைகள் வந்து கொண்டேயிருந்தன
இந்தப் பில்வமங்கன் நல்லவன் தானா. நல்லவனான இருந்தால் ஏன் அவன் மனைவி அவனைக் கொலை செய்தாள். வருணாவை தேடி நிசிதாபூர் வரை யதோ போய்வந்துவிட்டான். ஒருவருக்கும் தகவல் தெரியவில்லை. எங்கே மறைந்து கொண்டுவிட்டாள் அந்தப் பேதை. பெண்கள் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் பின்பு யாராலும் கண்டறிய முடியவே முடியாது. அந்தப் பெண் மீது ஏனோ வருத்தமாக இருக்கிறது.
உடைந்த துண்டுகளை ஒட்டவைத்து ஒரு பானையை உருவாக்கி விட முனைவது போலத் தான் யதோ ஒடிக் கொண்டிருக்கிறான். நடந்து முடிந்த நிகழ்வுகளுக்குச் சொல்லப்படும் காரணங்கள் உண்மை தான் என எப்படித் தெரியும். சாட்சிகளைக் கொண்டு உண்மையை ஒரு போதும் முற்றிலும் அடையாளம் கண்டுவிட முடியாது.
பில்வமங்கன் இசையின் வழியே தொலைத்து போன தனது காதலியை தேடிக் கொண்டிருந்தான் என்று யதோ சொன்னதைக் கேட்டபோது அது சரியான வழி தானே என்றே தோன்றியது.
கவிதைகளின் வழியாகவும் இசையின் வழியாகவும் தான் உலகில் இருந்து காணாமல் போனவற்றை நாம் மீட்க முடியும். இவ்வளவு ரசனையான ஒரு மனிதன் ஏன் கொல்லப்பட்டான்.
யதோ சொன்னான். பில்வமங்கன் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணுக்கு எண்பது வயது இருக்கும். அவள் பில்வமங்கன் பிறந்த போதிலிருந்து அந்த வீட்டில் தான் வேலை செய்கிறாள். நீண்ட காலம் வேலை செய்கிறவர்கள் தாங்கள் அந்த வீட்டின் உறுப்பினர் என்றே நினைப்பார்கள். அவர்களுக்கு வயது மறந்து போய்விடும். அந்தப் பணிப்பெண் பில்வமங்கன் நிச்சயம் ஒரு நாள் காணாமல் போய்விடுவான் என்று நம்பிக் கொண்டிருந்தாள். அவளைப் பொறுத்தவரை இந்தக் கொலை அவனைக் காணாமல் ஆக்கியது தான். வீட்டு உரிமையாளர்கள் இறந்த பிறகு பணியாளர்களுக்குத் தனியே வாழ்வது கடினமாக இருக்கும் அந்தப் பணிப்பெண்ணும் காணாமல் போய்விட்டான் என்றான் யதோ.
ஒருவேளை வருணாவும் அந்தப் பணிப்பெண்ணும் ஒன்று சேர்ந்து கொலையைச் செய்துவிட்டு தப்பியோடி விட்டார்களா. இப்படித் துப்பறிந்து பார்த்தால் என்ன. இதைச் சொன்னால் யதோ கோவித்துக் கொள்வான்.
மனிதர்கள் காணாமல் போவது மட்டும் ஏன் இவ்வளவு முக்கியமாக இருக்கிறது. இந்த உலகிலிருந்து எத்தனையே பொருட்கள். நினைவுகள் நிகழ்வுகள் காணாமல் போயிருக்கிறதே.
என்னிடமிருந்து எனது பால்யவயது காணாமல் போய்விட்டது. அதை ரகசியமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். யாரும் இல்லாத தனிமையில் அதன் படிக்கட்டுகள் தோன்றுகின்றன. இறங்கி நடக்கத் துவங்கினால் பால்யம் வெகுதொலைவிற்குப் போய்விடுகிறதே
பருவ வயதின் கனவுகளும அதில் உலவிய அழகனும் காணாமல் போய்விட்டார்கள். மனதில் இப்போது யதோத்தகாரியின் மனைவி என்ற அடையாளம் மட்டுமே மீதமிருக்கிறது. ஒருவேளை யதோ ஒருநாள் காணாமல் போய்விட்டால் நான் அவனைத் தேட மாட்டேன். நான் காணாமல் போய்விட்டால் அவன் பதற்றமடைவான். தேடுவான். ஆனால் சில நாட்களில் அதை மறந்துவிட்டு தனது வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிடுவான்.
காணாமல் போவது உலகில் முடிவில்லாமல் நடந்து கொண்டேயிருக்கும் தொடர் நிகழ்வு. பிறப்பு இறப்பு போல அதுவும் தவிர்க்க முடியாதது தானோ. காணாமல் போகிறவர்கள் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிடுகிறார்கள். சுவரில் விரிசல் உருவாவது போல அந்த விரிசலை எளிதில் சரிசெய்துவிட முடியாது. ஒரு இடத்தில் காணாமல் போகிறவர்கள் இன்னொரு இடத்தில் தோன்றியிருப்பார்கள். தெரியாத மனிதர்கள் முன்பு நாம் காணாமல் போனவர்கள் தானே.
••
டயரிக்குறிப்பில் இருந்த செய்திகளையும் நிகழ்வுகளையும் வாசிக்கும் போது ஒரு நாவலில் அத்தியாயங்களை வாசிப்பது போலவே இருந்தது. என் பயணம் முழுவதும் அதைப்பற்றி நினைத்தபடியே வந்தேன்.
டயரியில் எழுதப்பட்டது என்பதால் அதை உண்மை என்று எப்படி நம்புவது. பெரும்பான்மையினர் டயரியில் உண்மையை எழுதுவதில்லை. இந்த டயரிக்குறிப்புகளை வைத்து எதையும் முற்றாக அறிந்துவிட முடியாது.
மோகன்பூருக்குச் சென்றபோது அவர்களில் ஒருவருக்கும் பில்வமங்கன் கொலையைப் பற்றித் தெரியவில்லை. அப்படி ஒரு மாளிகை இருந்த அடையாளமும் இல்லை. நூறு வருஷங்களுக்கு முன்பு நடந்தவற்றைக் கண்டவர் எவர் இருக்க முடியும். ஆனால் நினைவில் கூட அப்படியான நிகழ்வின் தடமில்லை.
கல்கத்தாவிற்கு வருகை தந்து புகழ்பெற்ற வழக்கறிஞர் நிரஞ்சன் சென்னிடம் பேசிக் கொண்டிருந்த போது அது ஒரு புகழ்பெற்ற கொலை வழக்கு. சினிமாவாகக் கூட வந்திருக்கிறது. ஆனால் யார் கொலை செய்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்
இதைப்பற்றிய டயரி குறிப்பை அவரிடம் காட்டிய போது சொன்னார்
“இறந்து போனது பில்வமங்கன் தானா என்றே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. கடந்த காலத்தின் நிகழ்வுகளைக் கதைகள் விழுங்கிவிடுகின்றன. அதன்பிறகு நாம் காண்பது கதையின் வேறுவேறு வடிவங்களையே“
“அப்படியானால் யதோத்தகாரி காணாமல் போனது. அவன் மனைவி காணாமல் போனது இப்படி ஏழு பேர் புதிராக மறைந்திருக்கிறார்களே“ என்றேன்
“இதுவும் கதையாக இருக்கலாம். ஒரு கொலையைக் கண்டுபிடிக்கவிடாமல் தடுக்க வேண்டும் என்றால் அதைப் பற்றிய கதைகளை அதிகம் உண்டாக்கிவிட வேண்டும். அதைத் தான் பில்வமங்கன் செய்திருக்கிறான். அல்லது யாரோ ஒரு புத்திசாலி இதை உருவாக்கியிருக்கிறான்“.
“விடைதெரியாத புதிராக இது முடிந்துவிட வேண்டியது தானா“
“என் வீட்டுக் கிணற்றில் இருந்த தண்ணீர் கோடைகாலத்தில் எங்கே காணாமல் போனது என்றே எனக்கு விடை தெரியவில்லை. இது போலக் கடந்தகாலக் கொலைகளுக்கு விடை தெரியாமல் போனால் என்ன“ என்று சொல்லி சிரித்தார் நிரஞ்சன் சென்.
அவர் சொன்னது உண்மை.. நூற்றுமுப்பது வருஷங்களுககு முன்பு நடந்த ஒரு கொலையின் முடிவால் இப்போது என்ன மாற்றத்தை உண்டாக்கிவிட முடியும்.
ஒருவேளை இந்த நிகழ்வில் காணாமல் போனவர்கள் ஏதோ காரணங்களால் பெயர்களை மாற்றிக் கொண்டு மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கலாம். அல்லது இது மொத்தமும் ஒரு நாடகத்தின் காட்சிகள் தானோ என்னவோ.
அப்படியில்லாமல் இந்தக் கொலைவழக்கும். டயரிகளும் வங்காளத்திற்கு வேலைக்குப் போன யதோத்தகாரியின் மனைவி ஸ்ரீமதி எழுதிய கற்பனைக்கதையாகவும் இருக்கலாம் தானே
••