காதலின் அலைகள்

‘Little England’ (‘Mikra Anglia’) பான்டெலிஸ் வோல்காரிஸ் இயக்கி 2013ல் வெளியான கிரேக்கத் திரைப்படம்

ஆண்ட்ரோஸ் தீவைச் சேர்ந்த ஓர்சா மற்றும் மோஷா என்ற இரு சகோதரிகளின் காதல் மற்றும் திருமணத்தைப் பேசுகிறது இந்தத் திரைப்படம்.

படமாக்கப்பட்டவிதம் மிகச்சிறப்பு. சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது பெற்றிருக்கிறது. ஒளிப்பதிவாளர் சிமோஸ் சார்கெட்ஸிஸ் ஒவ்வொரு காட்சியினையும் ஓவியம் போல உருவாக்கியிருக்கிறார். அடர் வண்ணமும் பீறிடும் ஒளியும் மாறுபட்ட கோணங்களும் வசீகரமாகவுள்ளன.

நாவலை மையமாகக் கொண்ட திரைப்படம் என்பதால் படம் இருபது ஆண்டுக் கால வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கிறது கதை 1930 களின் இடைக்காலக் காலத்தில் தொடங்கி 1950களில் முடிவடைகிறது.

ஆண்ட்ரோஸில் உள்ள பெரும்பாலான ஆண்கள் கடற்படையில் வேலை செய்பவர்கள். ஆண்டில் பெரும்பகுதியைக் கடலில் கழிப்பவர்கள். அவர்களின் குடும்பம் கரையில் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தபடியே காத்திருப்பது வழக்கம். குறுகிய காலமே அவர்கள் கரைக்குத் திரும்புவார்கள். அந்த நாட்கள் கொண்டாட்டமானவை. ஆண்ட்ரோஸில் பெண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள், ஒருவருக்கொருவர் ஆதரவான வட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். கடலோடிகளின் காதல் நினைவுகளைப் பேசிக் கொள்கிறார்கள். சமூக அந்தஸ்து தான் அவர்களின் ஒரே கவலை. மினா தன் மகளின் காதல் திருமணத்தை விரும்பாததிற்கு இதுவும் ஒரு காரணம்.

கப்பல் கேப்டனை மணந்து கொண்ட மினா கணவன் கைவிட்டுப் போனதால் தன் இரண்டு மகள்களுடன் தனியே வசிக்கிறாள். கணவர் வேறு ஒரு ஊரில் இன்னொரு பெண்ணுடன் வசிப்பது அவளுக்குத் தெரியும். அந்தப் பெண்ணுடன் இரண்டு மகள்களைப் பெற்றிருக்கிறார். அவர்களுக்கும் இதே பெயர் வைத்திருக்கிறார் என்பது தான் ஆச்சரியமானது. கணவர் அனுப்பி வைக்கும் பணத்தைக் கொண்டு மினா தனியே வாழ்ந்து வருகிறாள்.

20 வயதான ஓர்சா (பெனிலோப் சிலிக்கா) இரண்டாவது நிலை துணைகேப்டனாக உள்ள ஸ்பைரோஸ் மால்டேப்ஸை (ஆண்ட்ரியாஸ் கான்ஸ்டான்டினோ) காதலிக்கிறார். அவர்களின் ரகசிய சந்திப்பு மற்றும் காதல் விளையாட்டுகள் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஓர்சாவின் அம்மாவிற்கு ஸ்பைரோஸைப் பிடிக்கவில்லை. வசதி குறைவானவன், கேப்டனாகக் கூட இல்லை என்று துரத்திவிடுகிறாள். அத்தோடு ஒர்சாவைக் கட்டாயப்படுத்தி நிகோஸ் என்ற கேப்டனுக்குத் திருமணம் செய்து கொள்ள வைத்துவிடுகிறாள். இதனால் மனமுடைந்து போன ஸ்பைரோஸ் கப்பலிலே தன்னுடைய வாழ்க்கையைக் கழிக்கிறான். கேப்டனாகப் பதவி உயர்வு பெற்றதோடு கப்பலின் பங்குதாரராகவும் வசதியான நிலைக்கு உயருகிறான். இதற்குள் ஓர்சா ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துவிடுகிறாள்.

ஓர்சா மீதான காதலை மறக்க முடியாத ஸ்பைரோஸ் அவளது தங்கை மோஷாவைத் திருமணம் செய்து கொள்ள முன் வருகிறான். இப்போது அவனது வசதி வாய்ப்புகளைக் கண்ட மினா அவனை மருமகனாக ஏற்றுக் கொள்ளச் சம்மதிக்கிறாள். அவர்கள் திருமணம் நடக்கிறது.

ஸ்பைரோஸ் ஒர்சாவின் அருகிலே இருக்க வேண்டும் என்பதற்காகவே மோஷாவைத் திருமணம் செய்து கொள்கிறான். அவர்களின் காதலைப் பற்றி மோஷா அறிந்த போதும் வசதியான கேப்டனை திருமணம் செய்து கொள்கிறோம் என்ற பெருமையில் சந்தோஷமாக இருக்கிறாள்.

ஸ்பைரோஸ் தன் தங்கையைக் கல்யாணம் செய்து கொண்டதை ஓர்சாவால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அதை விடவும் ஒரே வீட்டில் பக்கத்திலிருந்தபடியே அவர்களின் காதல் காட்சிகளைக் காணுவது தொந்தரவாக இருக்கிறது. ஆகவே அவள் கணவனிடம் வேறுவீடு பார்த்துப் போக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். ஆனால் அவளது அம்மா அதை அனுமதிக்கவில்லை.

இரட்டை வீட்டில் ஓர்சா மற்றும் நிகோஸ் ஆகியோர் தரை தளத்திலும், மோஷா மற்றும் ஸ்பைரோஸ் இரண்டாவது மாடியிலும் வசிக்கின்றனர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்பைரோஸ் அவளிடம் நெருங்கி வர முயற்சிக்கிறான். அவளோ கடந்த காலத்தை மறந்து வாழ ஆசைப்படுகிறாள்.

ஒரு காட்சியில் மோஷாவே ஸ்பைரோஸை துணைக்கு அனுப்பி வைக்கிறாள். அப்போது ஓர்சா அவனை விட்டு விலகி வேகவேகமாக ஓடுகிறாள். அந்த இடைவெளி அவளது மனதின் அடையாளம் போலவேயிருக்கிறது.

இதற்கிடையில் மோஷா கொஞ்சம் கொஞ்சமாகத் தன் கணவன் ஓர்சாவின் பொருட்டே தன்னைத் திருமணம் செய்து கொண்டதை உணருகிறாள். சகோதரிகள் இருவருக்குள்ளும் உள்ள நெருக்கமும் விலகலும் பிரிவும் சமாதானமும் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது

ஓர்சாவின் காதல் ஒரு விதம், மோஷாவின் காதல் வேறுவிதம். அவர்களுக்குள் உள்ள நெருக்கமும் பிரிவும் தனிமையும் துயரமும் மிக மிக நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இழப்பைப் பெண்கள் எதிர்கொள்ளும் விதமும் அது போன்ற நேரத்தில் சகோதரிகளுக்குள் உருவாகும் அன்பும் நிஜமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரே படுக்கையில் படுத்தபடியே மோஷாவின் தலைமயிரை ஓர்சா கோதிவிடுவதும் அவர்கள் ஒருவரையொருவர் அணைத்துக் கண்ணீர் விடுவதும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள்.

இரண்டு பெண்களின் தாயான மினா ஒரு அபூர்வமான கதாபாத்திரம். கணவன் தங்களை விட்டுப் போன பிறகு அவள் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்கிறாள். தன் இரண்டு மகள்களுக்கு நல்லவாழ்க்கையை அமைத்துத் தர முன்வருகிறாள். பேரன் பேத்திகளுடன் கடைசிகால வாழ்க்கையைக் கழிக்கிறாள். திரும்பி வரும் கணவனை அவள் ஏற்றுக் கொள்வது அவளது ஆழ்ந்த புரிதலின் சாட்சியம்.

இரண்டாம் உலகப் போர் தொடங்கும் போது மற்றும் கிரேக்கக் கப்பல்கள் மத்திய தரைக்கடல் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. அது மோஷா மற்றும் ஓர்சாவின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது.

ஒரே அலை தான் சிறியதும் பெரியதுமாக மாறி மாறி வந்து கொண்டேயிருக்கிறது. கரையை நோக்கி வரும் அலையின் வசீகரம் திரும்பிப் போகும் அலையிடம் இருப்பதில்லை. அப்படித் தான் ஓர்சாவின் வாழ்க்கையிருக்கிறது. அவள் காதலித்த நாட்களில் ஸ்பைரோஸிற்காக ஏங்குகிறாள். பக்கத்திலே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஆனால் அவளுக்குத் திருமணமான உடன் அவளது கடந்தகாலக் கனவுகள், காதல் எல்லாமும் மறந்து போய்விடுகிறது. கணவன் குழந்தை என்று அவள் வேறுபெண்ணாக மாறிவிடுகிறாள். ஆனால் திருமணமான போதும் ஸ்பைரோஸால் அப்படியிருக்க முடியவில்லை. அவன் கடந்தகாலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறான்

ஒரே குடும்பாக அவர்கள் ஒன்றாக வாழுகிறார்கள். ஆனால் சுவர்களைப் போல அவர்களுக்குள் உள்ள இடைவெளி உறுதியாக இருக்கிறது. மினாவின் கணவர் முதுமையில் தன் சொந்த குடும்பத்தைத் தேடி வரும் போது தனது ஆசைநாயகியிடம் விடைபெறுகிறார். மிக அழகான காட்சியது. அந்தப் பெண்ணிற்கும் வயதாகிவிட்டது. அவளுக்காக வீட்டின் பத்திரத்தை ஒப்படைக்கிறார். அவள் கண்கள் கலங்க ஏற்றுக் கொள்கிறாள். வீடு திரும்பும் மினாவின் கணவர் பேரன் பேத்திகள் கொண்ட தனது குடும்பத்தைக் கண்டு சந்தோசமடைகிறார். மகள் ஓர்சா மற்றும் அவரது தாய் இருவர் மட்டுமே அவருக்கானவர்கள்.

பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்துவிடலாம். ஆனால் கடந்து போன காலத்தை எப்படி மீட்க முடியும். தன் மகளின் திருமணத்தைத் தந்தையாக அவர் காணவில்லையே. சந்தோஷத்தின் போது உடனிருக்கவில்லையே.

நடனம் ஆடும் ஒரு காட்சியில் மோஷா மிகுந்த உற்சாகத்துடன் ஸ்பைரோஸை கட்டிக் கொண்டு ஆடுகிறாள். அப்போது தன் அக்காவையும் ஸ்பைரோஸோடு ஆட அழைக்கிறாள். ஓர்விற்குத் தர்மசங்கடமாக இருக்கிறது. அவள் நடனமாட மறுத்துவிடுகிறாள். காதலித்த தோற்ற பெண்கள் கடந்த கால நினைவுகளை எப்படி உருமாற்றிக் கொள்வார்கள் என்பது விந்தையானதே.

கப்பல் வாழ்க்கை, கரையில் காத்திருக்கும் குடும்பங்கள். அவர்களின் தனிமை. இளம்பெண்களின் காதல். காத்திருப்பு ,விசேச நாட்களின் கொண்டாட்டங்கள், வீடு திரும்புகிறவனின் மகிழ்ச்சி எனப் படம் கடற்கரை வாழ்க்கையினைப் பரவசத்துடன் விவரிக்கிறது. அதுவே படத்துடன் நம்மை உணர்ச்சிப்பூர்வமாக ஒன்றச் செய்கிறது.

••

5.11.20

0Shares
0