நோபல் பரிசு பெற்ற கவிஞரான ஆக்டோவியா பாஸ் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். The Labyrinth of Octavio Paz”என்ற இந்த ஆவணப்படத்தில் அவரது ஆளுமையின் பன்மைத்தன்மை மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஸ் இந்தியாவில் மெக்சிகத் தூதுவராகப் பணியாற்றியவர். டெல்லியில் வசித்த நாட்களில் பிரெஞ்சு தூதரகத்தில் பணியாற்றிய அரசியல் ஆலோசகரின் மனைவியான மேரி ஜோஸ் உடன் நெருக்கமான காதல் உருவானது. அந்த ரகசியக்காதல் தான் இந்தியாவை அவர் நேசிக்க ஒரு காரணம் என்கிறார்கள். பாஸ் ஏற்கனவே திருமணமானவர். பாஸின் மனைவி எலெனா கரோ. மிகச்சிறந்த மெக்சிக எழுத்தாளர்களில் ஒருவர்.
பாஸ் 1962 செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியா வந்தார். அதே ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் டெல்லியின் சுந்தர் நகரில் உள்ள ஒரு வீட்டில் இராஜதந்திர பானங்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவர் மேரி ஜோஸ் டிராமினியை சந்தித்தார். முதல் சந்திப்பிலே அவர்களுக்குள் ஈர்ப்பு உருவானது.
மெக்சிகத் தூதுவராகப் பணியாற்றுகிறார் என்பதால் டெல்லியில் அவருக்கு அழகான பங்களா ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். அந்த வீடு தான் அவரது ரகசியக் காதலின் இருப்பிடமாகியது. வெளியுலகம் அறியாமல் அவர் காதலியோடு பயணம் செய்தார். இரண்டு ஆண்டுகள் அந்தக் காதல் தொடர்ந்தது. முடிவில் காதல் நெருக்கம் அதிகமான போது மேரி ஜோஸை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். பாஸை விடவும் இருபது வயது இளையவர் மேரி ஜோஸ். அத்தோடு அவர் தன் கணவரை விட்டு விலகத் தயாராகவுமில்லை. ஆகவே அவர்கள் தற்காலிகமாகப் பிரிந்தார்கள்.

தனது அலுவலக வேலை காரணமாகப் பாரீஸிற்குச் சென்றபோது தற்செயலாக அவர் தங்கியிருந்த அதே விடுதியில் மேரி ஜோஸ் தங்கியிருப்பதை அறிந்தார். மீண்டும் அவர்களுக்குள் காதல் துளிர்த்த்து. இந்த முறை மேரி ஜோஸ் அவரைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் தெரிவித்தார். 20 ஜனவரி 1966 அன்று டெல்லியில் உள்ள மெக்சிக தூதரகத்தின் மரத்தடியில் அவர்கள் மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்டார்கள்.. பாஸ் மறையும் வரை மேரி ஜோஸ் அவரது உற்ற துணைவியாக இருந்தார்.
இந்தியாவில் பணியாற்றிய காலத்தில் பாஸ் நிறையப் பயணம் செய்திருக்கிறார். சமஸ்கிருத. பௌத்த, சமண நூல்களை வாசித்திருக்கிறார். இந்திய தொன்மங்கள். புராணங்கள் குறித்து ஆய்வு செய்திருக்கிறார். கன்யாகுமரி என்ற அவரது நீள் கவிதை பிரபலமானது. அனுமானை முன்வைத்து The Monkey Grammarian என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.
அக்டோபர் 2, 1968 அன்று, மெக்ஸிகோவில் நடந்த மாணவர் போராட்டத்தினை ஒடுக்க அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் முந்நூறு பேர் இறந்து போனார்கள். இதைக் கண்டித்துத் தனது தூதுவர் பதவியைப் பாஸ் ராஜினாமா செய்தார். அதன் பிந்தைய காலங்களில் அவர் கேம்பிரிட்ஜில் லத்தீன் அமெரிக்க ஆய்வுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன்பின்பு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் வருகை தரு பேராசிரியராக வேலை செய்திருக்கிறார்..
1970களில் பாஸ் மற்றும் மேரி-ஜோஸ் மெக்ஸிகோவில் வசிக்கச் சென்றனர், அங்கு அவர்கள் இறக்கும் வரை அங்கே வசித்தார்கள்.
ஆக்டோவியா பாஸின் குடும்பம் மெக்சிகோவில் ஒரு முக்கிய அரசியல் குடும்பமாக இருந்தது, அவரது தந்தை மெக்ஸிகப் புரட்சியாளர் எமிலியானோ சபாடாவின் உதவியாளராக இருந்தார். அரசியல் மாற்றம் காரணமாக அவரது குடும்பம் நாடு கடத்தப்பட்டது. பாஸின் குடும்பம் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தது. பாஸ் சில ஆண்டுகள் அமெரிக்காவில் கல்வி பயின்றார் பின்பு மெக்ஸிகோ தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் இலக்கியம் பயின்றார். 1931 இல் ஒரு இளைஞனாக, பாஸ் தனது முதல் கவிதைகளை வெளியிட்டார், இடது சாரி இயக்கங்களுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த பாஸ் அரசியல் இயக்கங்களில் நேரடியாகப் பங்குபெற்றார்.

இந்த ஆவணப்படத்தில் பிரபல இயக்குநர் லூயி புனுவலுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு மற்றும் அவர்களின் நீண்டகாலத் தோழமை பற்றி விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
பாஸின் மிக நெருக்கமான நண்பராக இருந்தவர் எழுத்தாளர் கார்லோஸ் புயந்தஸ். ஆனால் பாஸின் நேர்காணல் ஒன்றினை மெக்சிக ஊடகங்கள் திரித்து அவர் மீது கண்டனம் சுமத்திய போது கார்லோஸ் புயந்தஸ் வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருந்துவிட்டார் என்று கோபம் கொண்ட பாஸ் அவரது நட்பினை துண்டித்துக் கொண்டார்.
எழுத்தாளர். கலைவிமர்சகர். மானுடவியல் ஆய்வாளர். பத்திரிக்கையாளர். திரைப்பட விமர்சகர். மொழிபெயர்ப்பாளர் என்று பாஸின் பல்வேறு முகங்களை இந்த ஆவணப்படம் விவரிக்கிறது.

The Labyrinth of Octavio Paz”துவக்கத்தில் ஆக்டோவியா பாஸ் யார் என்ற கேள்வியைப் பலரிடமும் கேட்கிறார்கள். அவர் ஒரு சிறந்த கவிஞர். சிறந்த விமர்சகர். சிறந்த சிந்தனையாளர். அறிவாளி எனப் பலரும் பலவிதமாகச் சொல்கிறார்கள். ஒருவர் மட்டும் அவர் ஒரு நிசப்தம் என்று சொல்கிறார். அந்தப் பதில் எனக்குப் பிடித்திருந்தது.
சர்ரியலிச இயக்கத்துடன் அவருக்கு இருந்த நெருக்கமும் ஈடுபாடும் தான் அவரை முக்கியக் கவிஞராக்கியது. இந்தப் படத்திலும் ஆந்த்ரே பிரடனுடன் அவர் நெருக்கமாக உள்ள விஷயமும் பிரெஞ்சில் பாஸின் கவிதைகள் வெளியாகப் பிரடன் காரணமாக இருந்த செய்தியும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிப்படுத்தபடுகிறது.
இளைஞரான ஆக்டோவியோ பாஸ் ஒரு திரைநட்சத்திரம் வெகு அழகாக இருக்கிறார். பாஸின் குரலில் அவரது கவிதைகளைக் கேட்க இனிமையாக இருக்கிறது
••
ஆக்டோவியா பாஸ் கவிதை
காற்றும் நீரும் பாறையும்
தமிழில் ஷங்கர் ராம சுப்ரமணியன்
நீர் பாறையை உள்ளீடற்றதாக்கியது
காற்று நீரைத் தூவியது
பாறை, காற்றை நிறுத்தியது.
நீரும் காற்றும் பாறையும்
காற்று, பாறையைச் செதுக்கியது
ஒரு குவளை நீர், பாறை
நீர் வழிந்து செல்கிறது, காற்றும்
பாறையும் காற்றும் நீரும்.
காற்று தனது திருப்பங்களில் பாடுகிறது
நீர் ஓடிச் செல்லும்போது முணுமுணுக்கிறது
நகராத கல் அமைதிகாக்கிறது
காற்றும் நீரும் பாறையும்.
ஒன்று, மற்றதுதான்
என்பதோடு
இரண்டுமே இல்லாதது:
அவற்றின் காலிப் பெயர்களினூடாக
அவை கடந்து மறைகின்றன,
நீரும் பாறையும் காற்றும்.