டச்சு ஓவியர் வான் ப்ரோன்க்ஹார்ஸ்ட் (Jan Gerritsz. van Bronchorst ) கிரேக்கத் தெய்வமான ஜீயஸ் தனது காதலியைப் பசுவாக உருமாற்றிய காட்சியை ஓவியமாக வரைந்திருக்கிறார்.

ஜீயஸ் இடி மின்னல், மழை மற்றும் காற்றின் தேவன். , நிரந்தரக் காதலனான ஜீயஸ் அழகான பெண்கள் தனிமையில் இருப்பதைக் கண்டால் உடனே மேகவடிவில் அவர் முன்பு தோன்றி மயக்கிவிடுவார். அதிலும் கருமேக வடிவம் கொண்டு வட்டமிடுவது வழக்கம்
இதனை அறிந்து வைத்திருந்த ஜீயஸின் மனைவி ஹீரா அவரைக் கண்காணிக்க எப்போதும் ஆள் அனுப்பி வைத்திருப்பார்.
ஐயோ நதிக் கடவுள்களில் ஒருவரான இனாச்சஸின் மகள். அழகான இளம்பெண். ஜீயஸ் மேக வடிவத்தை எடுத்து அவளைச் சூழ்ந்து தன்னைக் காதலிக்கும் படி மன்றாடினார். அவளும் காதலை ஏற்றுக் கொண்டாள். இதை அறிந்த ஹீரா கோபத்துடன் அங்கே வரவே அயோவை ஒரு பசுவாக உருமாற்றிவிடுகிறார் ஜீயஸ்.
அந்தப் பசுவை மந்தையோடு சேர்த்துவிடுவதன் மூலம் தனது கள்ளக்காதலை மறைத்துக் கொள்ள நினைக்கிறார் ஜீயஸ். அயோவை பசுவாக்கிவிட்டதை அறிந்த ஹீரா அதைத் தனக்குப் பரிசாக அளிக்கும்படி கேட்கிறாள்
தனது மனைவியின் பொறாமையை அறிந்த போதும் ஜீயஸால் அவளது கோரிக்கையை மறுக்க முடியவில்லை, தயக்கத்துடன் பசுவை அவளிடம் ஒப்படைக்கிறார்
தனது மந்தையில் பசுவை அடைத்து அதைக் காவல்காக்க நூறு கண்கள் கொண்ட நாயான ஆர்கஸ் பனோப்டெஸை நியமிக்கிறாள் ஹீரா. அந்தக் கண்காணிப்பிலிருந்து தனது காதலியை மீட்க மகன் ஹெர்மஸின் உதவியை நாடுகிறான் ஜீயஸ்.
அவன் தனது புல்லாங்குழலினை இசைத்துக் கதை சொல்லவே அதில் ஆர்கஸ் மயங்கி உறங்கிவிடுகிறது. அந்தத் தருணத்தில் ஆர்கஸை கொன்றுவிடுகிறார்கள். தனது விசுவாசியான ஆர்கஸின் மரணத்தைத் தாங்க முடியாத ஹீரா அதன் நூறு கண்களைத் தனக்குப் பிடித்த பறவையான மயிலின் வால் பகுதிக்கு மாற்றிவிட்டார். அப்படித் தான் மயில்தோகையில் கண்கள் தோன்றின என்கிறார்கள்.
அங்கிருந்து தப்பிய ஐயோ பசு வடிவிலே நாடு விட்டு நாடு அலைந்து கொண்டிருந்தார். தனது பயணத்தில் அவள் ஜீயஸால் சங்கிலியால் பிணைக்கப்பட்ட பிரோமிதியஸை சந்திக்கிறாள். . மனிதக்குலத்திற்கு நெருப்பைத் திருடிக் கொடுத்ததற்காகப் பிரோமிதியஸ் தண்டிக்கப்பட்டிருந்தான்.
அதுவும் ஒரு பாறைகளில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தான். அவனது ஈரலைக் கொத்தித் தின்பதற்குத் தினமும் ஒரு கழுகு வரும். இதனால் தினம் தினம் நரக வேதனையை அடைந்து கொண்டிருந்தான்.பிரோமிதியஸை சந்தித்த அயோ தனது மீட்சியைப் பற்றிக் கேட்கிறாள். ஒரு நாள் அவள் தனது மனித உருவைத் திரும்பப் பெறுவார், அவளது சந்ததிகளில் ஒருவர் தன்னை விடுவிப்பார் என்று பிரோமிதியஸ் முன்னறிவிப்பு செய்கிறார்
பல வருடங்கள் அலைந்து திரிந்த அயோ இறுதியில் எகிப்தை அடைந்தாள். அங்கே ஜீயஸ் அவளுக்கு மீண்டும் மனித உருவத்தைக் கொடுத்தார். அவருடன் வாழ்ந்து மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள் அயோ.
கிரேக்கத் தொன்மத்திலுள்ள ஜீயஸ் அயோ காதலை வான் ப்ரோன்க்ஹார்ஸ்ட் மிகச்சிறப்பான ஓவியமாக வரைந்திருக்கிறார்.

பசுவின் தோற்றம் எவ்வளவு அழகாக வரையப்பட்டிருக்கிறது பாருங்கள். குறிப்பாகப் பசுவின் நிறம். அதன் முக அமைப்பு , வளைந்த கொம்பு. காது ரோமங்கள், குறிப்பாகக் கண்கள் அபாரமான அழகுடன் வரையப்பட்டிருக்கின்றன. பசுவின் கண்களில் வெளிப்படுவது அயோவின் காதலே.
அது போலவே ஜீயஸ் சாய்ந்து அமர்ந்துள்ள கோலம். கால் பாதங்களின் அழகு, வயிற்றுத்தசை மடிப்புகள். ஹீராவின் விரல்களுக்கான இடைவெளி. ஆடையின் வனப்பு, திறந்த மார்பகம். வானத்து மேகங்கள். என ஓவியம் பேரழகுடன் வரையப்பட்டிருக்கிறது.
இதில் இரண்டு மயில்களை வான் ப்ரோன்க்ஹார்ஸ்ட் வரைந்திருக்கிறார். ஆசையின் அடையாளமாகவே மயில் எப்போதும் வரையப்படுகிறது. சில நேரம் அது ரகசிய ஆசை என்றும் அர்த்தப்படுத்தப்படுகிறது. ஜீயஸ் பார்வையும் ஹீராவின் பார்வையும் சந்தித்துக் கொள்ளவில்லை. ஆனால் அவனது காதலை தடுக்க முடியவில்லை என்பது போல ஹீராவின் பார்வை உணர்த்துகிறது.
ஹீரா திருமணத்தின் தெய்வம். திருமண உறவைக் காப்பதே அவளது முதன்மையான வேலை. ஆனால் அவளுடைய மணவாழ்க்கையே சிக்கலாக இருக்கிறது.
பசுவாக மாற்றப்பட்ட அயோவின் கதை விசித்திரமானது. அவள் ரகசியக் காதலின் காரணமாகத் தண்டிக்கபடுகிறாள்.
1656ல் வரையப்பட்ட இந்த ஓவியம் நெதர்லாந்து உட்ரெக்ட் அருங்காட்சியகத்திலுள்ளது.