காதலின் நிழல்கள்

நான் குருதத்தின் ரசிகன், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது படங்களைத் திரும்பப் பார்க்க பிடிக்கும், Kaagaz Ke Phool எனக்கு மிகவும் விருப்பமான படம், பாக்ஸ் ஆபீஸில் தோல்வியுற்ற இந்தப் படம், இந்திய சினிமாவின் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக பலராலும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது, குருதத்தின் மாஸ்டர் பீஸ் இதுவே.

குருதத் படங்களின் அடிநாதம் காதலின் துயரம், உணர்ச்சிகளின் கொந்தளிப்பை குருதத் காட்சிப்படுத்தும் விதம் மிகவும் கவித்துவமானது, வி.கே.மூர்த்தி என்ற அற்புதமான ஒளிப்பதிவாளர் குருதத் படங்களுக்கு எனத் தனித்துவமான அழகியலை உருவாக்கியிருக்கிறார், தோல்வியுற்ற காதலன் என்ற பிம்பத்திற்கு குருதத் போல கச்சிதமாகப் பொருந்திப் போகிறவர்கள் வேறு எவருமில்லை,  சொந்த வாழ்வின் சோகம் அவரது திரைப்படங்களின் ஊடாக எதிரொலிப்பதை அவரை ஆழ்ந்து ரசிப்பவர்களால் எளிதில் கண்டுகொள்ள முடியும்,

குருதத்தை இயக்கியது காதல், அவர் காதலித்த பெண்களும், அவர்களைப் பிரிந்த வலியுமே குருதத்தின் கலைவெளிப்பாட்டிற்கான  உந்துதல்கள்,

குருதத் தயாரிப்பில் அப்ரார் ஆல்வி இயக்கத்தில் வெளியான Sahib Bibi Aur Ghulam இந்திய சினிமாவில் மறக்கமுடியாத ஒரு காவியம், வங்காள எழுத்தாளரான பிமல்மித்ராவின் கதையைப் படமாக்கியிருக்கிறார்கள்,

இதில் குருதத்தின் கதாபாத்திரம் வழக்கமான காதலனில்லை, மாறாக வேலை தேடி வரும் கிராமத்து இளைஞன், அவனுக்கும் ஜமீன்தாரின் மனைவி சோட்டி பெகுவிற்குமான நட்பும் அன்புமே படத்தின் மையம்,

பூத்நாத் வேலை தேடி கல்கத்தா வந்து சேர்கிறான், அங்கே சௌத்ரி எனும் ஜமீன்தாரின் பழைய பங்களா ஒன்றில் தங்கிக் கொள்ளவும், வேலை செய்யவும் நேர்கிறது, அந்த பங்களா அருகில் மோகினி சிந்தூர் பேக்டரி என்ற சிறிய தொழிலகம் உள்ளது, அதை நடத்துகிறவர் சுபுனய் பாபு, அவரது மகள் ஜபா,

பூத்நாத் நாகரீகம் தெரியாத கிராமத்து மனிதன் என்று கேலி  செய்கிறாள் ஜபா, அவளுடன் வேடிக்கையாக பழகத் துவங்குகிறான் பூத்நாத்

ஒருநாள்  பங்களாவின் வேலையாள் பன்சி  அந்த வீட்டின் எஜமானி சோட்டி பெகு அழைப்பதாக பூத்நாத்தை கூட்டிக் கொண்டு போகிறான், பேரழகியான வீட்டு எஜமானியை முதன்முறையாகப் பார்க்கிறான் பூத்நாத், அவள் வெளியுலகில் நடமாட அனுமதி மறுக்கபட்ட ஒரு கூண்டுகிளி,  ஜமீன்தார்  அவளை ஒதுக்கிவைத்துவிட்டு சதா நடனக்காரிகளுடன் குடித்து கும்மாளம் அடிக்கிறார், அவளோ கணவனின் அன்பை பெறுவதற்காக துடித்துக் கொண்டிருக்கிறாள்

குடிகாரக் கணவனைத் திருத்துவதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவனுக்குத் துணையாக தானும் குடிக்கத் துவங்குகிறாள்,  திருமணமான பெண் கணவனுக்காக குடிக்கிறாள் என்ற அந்த பிம்பம் இந்திய சினிமாவில் பேரதிர்ச்சியை உண்டு பண்ணியது, மீனாகுமாரியின் ஆகச்சிறந்த நடிப்பு, புறக்கணிக்கபட்ட ஒரு பெண் எப்படி தன்னை அழித்துக் கொள்ளத் துவங்குகிறாள் என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது,

கணவன் அவள் குடிக்க துவங்கியதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறான், அதன் பிறகு அவன் வேசைகளைத் தேடி வெளியே செல்வதில்லை, குடிக்குப் பழகிய எஜமானியின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் மாறிப்போய்விடுகிறது, அவளை வீட்டில் உள்ள உறவினர்கள் யாவரும் வெறுக்கிறார்கள்,  கணவன் தன்னை நேசிக்க வைக்க, குடிப்பது மட்டுமே வழி என்று அவள்கூறுகிறாள்,

குடியில் வீழ்ந்த எஜமானியின் அந்தரங்க வேலைக்காரனாக மாறும் பூத்நாத் அவளின் தனிமையை, துயரைப் புரிந்து கொள்கிறான், காதலின் தோல்வியில் தேவதாஸ குடிப்பதற்கும், காதலின் புறக்கணிப்பில் சோட்டி பெகு குடிப்பதற்கும் ஒரே காரணம் தானிருக்கிறது, இருவரும் ஒரே பிம்பத்தின் இரண்டு மாதிரிகளே, ஆனால் தேவதாஸ் காதலின் காவிய நாயகன் போலவும் சோட்டி பெகு வீழ்ச்சியுற்ற பெண்ணாகவும் உருமாறுவது சமூக மதிப்பீடுகளின் வழியே மட்டுமே,

பூத்நாத் கட்டுமானப் பணிக்கான வேலைகிடைத்து அங்கிருந்து வெளியேறிச் செல்கிறான், சில ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்து பார்க்கையில் அந்த மாளிகை கைவிடப்பட்ட நிலையில் சிதிலமடைந்து கிடக்கிறது, வறுமை, மிதமிஞ்சிய குடி, நோய்மை என்று அந்த வீட்டினைப்பற்றி அவன் கேள்விபடுவது எல்லாமே கசப்பான உண்மைகள்,

ஜமீன்தார் நோயாளியாகப் படுக்கையில் இருக்கிறார், அவரது மனைவி குடிப்பதற்காக வீட்டு பொருட்களை விற்கிறவளாக மாறியிருக்கிறாள், அவளால் குடியில் இருந்து மீளமுடியவில்லை,

அவளை மறுபடி சந்திக்கும் பூத்நாத்திடம் தான் கணவனின் பொருட்டு கோவிலில் போய் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறுகிறாள் சோட்டிபெகு, யாரும் அறியாமல் அவளை ஒரு வண்டியில் அழைத்துக் கொண்டு போகிறான் பூத்நாத், அந்நிய ஆடவன் ஒருவனுடன் வீட்டுப் பெண் வெளியேறிப் போய்விட்டாள் என்று முடிவு செய்த ஜமீன்தாரின் குடும்பம் வழியில் பூத்நாத்தை ஆள் வைத்து தாக்குகிறது, அவன் அடிபட்டு வீழ்கிறான், சோட்டி பெகு காணாமல் போய்விடுகிறாள், அவளுக்கு என்ன நடந்த்து என்று பூத்நாத்திற்குத் தெரியவில்லை

நீண்ட காலத்தின் பின்பு ஜமீன்தாரின் மாளிகை இடிக்கபட்டு பூமி தோண்டப்படுகிறது, அங்கே புதைக்கபட்ட எலும்புக்கூடாக இருக்கிறாள் சோட்டிபெகு, அவள் அணிந்திருந்த நகை அவளை அடையாளம் காட்டித் தருகிறது,  குடும்ப கௌரவத்திற்காக அவள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்ற உண்மை வெளிப்படுகிறது,

படத்தில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருப்பது எஜமானியின் பிரிவுத்துயரும் குடியில் முழ்கி அவள் அடையும் வேதனைகளுமே, இந்திய சினிமாவில் மறக்கமுடியாத பெண் கதாபாத்திரமிது,

படத்தை பார்க்கையில் குடியில் முழ்கி தன்னை அழித்துக் கொண்ட நடிகை சாவித்திரியின் வாழ்க்கை நினைவில் வந்து கொண்டேயிருக்கிறது, படத்தில் வரும் வீட்டு வேலைக்காரன் ஒரு முக்கியமான கதாபாத்திரம்,  அவன் உண்மைகள் யாவும் அறிந்தவன், ஒரு மௌன சாட்சி, அவனைப் போல எத்தனையோ எளிய மனிதர்கள் அரண்மனைக்குள்ளாகவே வாழ்ந்து ரகசியங்களுடன் மடிந்து போயிருக்கிறார்கள்

இப்படம் துவஙகும் விதம் அற்புதமானது, ஹவேலி எனப்படும் பிரம்மாண்டமான ஜமீன்தார் மாளிகை ஒன்று இடிக்கபட்டுக் கொண்டிருக்கிறது, தூண்கள் உடைந்து விழுகின்றன, தரையைக் குத்தி தோண்டுகிறார்கள், பிரம்மாண்டமான அந்த வீடு  கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கி விழுகிறது, அந்த இடிபடும் கட்டிடத்தில் கட்டுமானக் கலைஞராக உள்ள வயதான குருதத் பணிகளை மேற்பார்வையிடுகிறார், டாப் ஆங்கிள் காட்சியாக இடிந்து கிடந்த வீட்டினுள் குருதத் பழைய நினைவுகளுடன் நடந்து செல்லும் அற்புதமான காட்சி ஒன்று படத்தில் வருகிறது, மறக்கமுடியாத பிம்பமது, வீடு என்பது வெறும் குடியிருப்பு மட்டுமில்லை, அது காலத்தின் ஒரு வடிவம், நினைவுகளின் கூடாரம்.

குருதத் அந்த வீட்டின் தூசி படிந்த படிகளில் ஏறுகிறார், எங்கிருந்தோ கடந்தகாலத்தின் குரல் அவருக்குக் கேட்கத் துவங்குகிறது, ஒரு பெண்ணின் பாடும் குரலது, தனிமையும் வேதனையும் கொண்ட அந்தப் பாடலை அவர் பலமுறை கேட்டிருக்கிறார்,  நினைவின் பாதையில் அவர் மெதுவாக நடக்கிறார், சிலந்தி வலை பிடித்துப் போன அந்த வீட்டின் கடந்த காலம் அவர் மனதிற்குள் பசுமையாக இருக்கிறது, அந்தக் காட்சிகள் மெல்ல விரிய ஆரம்பிக்கின்றன, கடந்த கால கதைக்குள் அவர் பயணிக்கத் துவங்குகிறார்,

குருதத் பூத்நாத்தாக நடித்திருக்கிறார்,  வழக்கமான காதல் கதையை போல துவங்கி மெல்ல தீவிரம் அடைகிறது படம்,  சோட்டிபெகு போல தோல்வியுற்ற காதலின் பொருட்டு குடித்து தன்னை அழித்துக் கொண்ட நாடக நடிகைகளை பற்றி வாசித்திருக்கிறேன், ஆனால் இக்கதையில் வருபவளோ திருமணமான பெண், தனிமைத்துயரமே அவள் குடிப்பதற்கான முக்கியக் காரணம், அவள் குடியில் ஒரு போதும் சந்தோஷத்தை அடைவதில்லை, ஆனால் தான் குடிப்பதன் வழியே கணவன் சந்தோஷப்படுகிறான் என்பதற்காக அவள் குடிக்கிறாள்,

பின்பு கணவன் தன்னை ஒருபோதும் உண்மையாக அன்பு செலுத்தியதில்லை என்பதை உணர்ந்து கொண்டவளாக தன்னை அழித்துக் கொள்ளக் குடிக்கிறாள், குடியில் வீழ்ந்த எத்தனையோ ஆண்களைப் பற்றி படித்திருக்கிறோம், ஆனால் இது ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது.

சோட்டி பெகு முதன்முறையாக குடிக்கும் காட்சி மறக்கமுடியாதது, அவள் குடிப்பது என்று மனதிற்குள் முடிவு எடுத்துவிட்டாள், பூஜை செய்துவிட்டு பணிவான பெண்ணாக கணவனின் அறைக்கு அவன் குடிப்பதற்கு தேவையான உலர்ந்த பழங்களைத் தட்டில் எடுத்துக் கொண்டு போகிறாள், கையில் மதுக்கோப்பையுடன் உள்ள கணவன், தட்டில் உள்ள உலர்ந்த பழத்தை காட்டி இதை விடவும் அதிகம் உலர்ந்து போனவள் நீ, உனக்குத் தான் தண்ணீர் தேவை என அவளைக் குடிக்கச் சொல்கிறான்,

தான் குடிப்பதாக இருந்தால் அவன் முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டும் என்கிறாள், அவனோ தன் கண்முன்னே அவள் குடிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறான், மதுவின் பரிச்சயமற்ற மணத்தால் அவளால் குடிக்க முடியவில்லை, கணவன் அவள் வாயில் மதுவைப் புகட்டிவிடுகிறான், அவள் கலக்கமான முகத்துடன் சிரிக்கிறாள், கூடவே கணவனின் சிரிப்பும் பீறிடுகிறது, அன்று அந்த வீட்டில் கேட்கும் விசித்திரமான சிரிப்புச் சப்தம் பார்வையாளரை அச்ச்ம் கொள்ளச் செய்கிறது

குடிகாரப்பெண்ணாக மாறிய அவளை, ஏன் வீட்டின் மற்ற மருமகள் போல அவள் அடங்கி ஒடுங்கிய பெண்ணாக இருக்க மறுக்கிறாள் என்று பின்னொரு காட்சியில் கணவன் திட்டுகிறான், அதற்கு அவள் நானும் மற்ற பெண்களும் ஒன்றா, என்னை போல குடிக்கும் பெண் யார் இருக்கிறார்கள் என்று கேட்டு சிரிக்கிறாள், அவளது சிரிப்பின் காரணமாக குற்றவுணர்ச்சி கொண்ட கணவன் நானும் குடிப்பவன் தான் ஆனால் குடித்துவிட்டு உன்னைப் போல பைத்தியமாக நடந்து கொள்வதில்லை, இந்த வீட்டின் கௌரவத்தை நீ கெடுக்கிறாய் என்று கத்துகிறான், இந்த வீட்டின் கௌரவத்தை கெடுப்பது நானா என்று அவள் மறுபடி சிரிக்கையில் தன் குற்றத்தை உணர்ந்து ஜமீன்தார் விடுவிடுவென வெளியேறிப் போகிறார்,

எந்தக் கணவனின விருப்பதிற்காக குடிக்கத் துவங்கினாளோ, அவனால் புறக்கணிக்கபடும் அற்புதமான காட்சியது,

இப்படத்தினை காணும்போது இடைவெட்டாக நினைவில் வந்து போகும் படம் சத்யஜித்ரேயின் ஜல்சாகர், ரேயின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று, அதில் வரும் ஜமீன்தார் அரண்மனையில் ஒரு ஆள் உயரக் கண்ணாடி வைத்திருப்பார், அது அவரது மனசாட்சியை போலவே செயல்படும், அந்த ஜமீன்தார் தேர்ந்த ரசிகர், தனது ஒட்டு மொத்த வீழ்ச்சியின் போதும் கலையின் மீதான ஈடுபாட்டினைக் கைவிடாதவர்,  வங்காளத்தின் வீழ்ச்சியுற்ற ஜமீன்தார்களின் ஒரு முகத்தை ரேயும், ஜமீன்தார்களின் வீடுகளில் வாழும் பெண்ணின் முகத்தை குருதத்தும் காட்டியிருக்கிறார்கள்,

Piya Aiso Jiya Main பாடல் மறக்க முடியாத்து, கணவனை தன்வசம் ஈர்க்க மீனாகுமாரி மேற்கொள்ளும் அலங்காரமும், வலி நிரம்பிய அந்தக் கண்களும் மனதை உறுத்துகின்றன, இப்பாடலை குருதத்தின் மனைவி கீதாதத் சிறப்பாக பாடியிருக்கிறார், ஹேமந்த் குமாரின் இசை படத்தின் தனிப்பலம்

இப்படத்தினை அப்ரார் ஆல்வி இயக்கவில்லை, தயாரிப்பு இயக்கம், நடிப்பு ஆகிய மூன்றையும்  குருதத்தே மேற்கொண்டார் என்று  சொல்கிறார்கள், ஆனால் ஆல்வி படத்தின் பாடல்களை மட்டுமே குருத்த் இயக்கினார் என்று கூறியிருக்கிறார்

இப்படத்தில் மீனாகுமாரி நடித்துள்ள குடிகாரப் பெண் கதாபாத்திரம் போலவே அவரது சொந்த வாழ்க்கையும் அப்போது இருந்தது, குடிப்பழக்கம் காரணமாக அவர் மனச்சோர்வு கொண்டிருந்த நாட்கள் அவை, ஆகவே சோட்டி பெகு கதாபாத்திரத்தின் மனவோட்டத்தினுள் மீனாகுமாரியின் சொந்த உணர்ச்சிகள் அதிகம் கலந்துவிட்டிருக்கின்றன, என் இனிமையற்ற வாழ்க்கையின் நிறமற்ற காதல் கதையை இப்படம் நினைவுபடுத்துகிறது எனும் மீனாகுமாரி இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது பெற்றிருக்கிறார்

பிரம்மசமாஜத்தை சேர்ந்த சுபுனய் பாபு, கல்கத்தா வீதிகளில் நடக்கும் வெள்ளைகாரர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம், பிரிட்டீஷ் அடக்குமுறை, ஜமீன்தார்களின் பகட்டுவாழ்க்கை,  நடன அரங்குகள், இசைக்கச்சேரிகள்,  அரண்மனைகளின் பரிதாப வீழ்ச்சி என  பத்தொன்பதாம் நூற்றாண்டு சமூக வாழ்வினை ஊடாடி செல்கிறது திரைப்படம்,

சோட்டிபெகு போன்ற பெண்கள் தாகூரின் கதைகளிலும் இடம் பெறுகிறார்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டு வங்காள இலக்கியத்தில் அதுவரை அடையாளம் காணப்படாமல் ஒடுக்கபட்டிருந்த பெண்களின் உரிமைக்குரல்கள் எழும்பத் துவங்கின, அதன் வெளிப்பாடே இந்த நாவல்கள்,

கரைந்த நிழல்கள் என்று அசோகமித்ரன் சினிமா உலகம் பற்றிய தனது நாவலுக்கு தலைப்பிட்டிருப்பார், உண்மையில் இந்தப் படத்திற்கு அந்தத் தலைப்பு மிகவும் பொருத்தமானது.

•••

இணையத்தில் காண்பதற்கு

Sahib Bibi Aur Ghulam

https://youtu.be/v-YH5QArOCE

0Shares
0