காதலின் நிழல்.

காஸபிளங்கா படத்தை இருபது முறைகளுக்கும் மேலாகப் பார்த்திருக்கிறேன். மைக்கேல் கர்டிஸ் இயக்கி 1942 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில், ஹம்ப்ரி போகார்ட், இங்க்ரிட் பெர்க்மேன் மற்றும் பால் ஹென்ரிட் ஆகியோர் நடித்துள்ளனர்.நேற்றிரவு திரும்பும் காஸபிளாங்கா பார்த்தேன்.

பழைய போட்டோ ஆல்பங்களைத் திரும்பப் பார்க்கும் போது ஏற்படும் கிளர்ச்சியும் சந்தோஷமும் தரும் அனுபவமது. பிரிந்த தனது காதலியை மறுபடியும் சந்திக்கும் ஒருவனின் கதை சினிமாவில் என்றும் அழியாதது. அதுவும் காதலி உதவி கேட்டு நிற்கும் சூழலும் அவளுக்காகக் காதலன் உயிரையே விடுவதை நெஞ்சில் ஒர் ஆலயம் துவங்கி நிறையப் படங்களில் பார்த்திருக்கிறோம். அந்த வகைப் படம் தான் காஸபிளாங்கா. ஆனால் மெலோடிராமா இல்லை. கவித்துவமாக, காதலின் நிகரற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ப்யானோ இசை தான் படத்தின் மையச்சரடு.

Play it, Sam. Play ‘As Time Goes By.’ என்று பியானோ இசைக்கலைஞர் சாமிடம் இல்சா கேட்கும் போது அது வெறும் இசையில்லை. அவர்களின் அழியாக் காதலின் அடையாளம் என்றே தோன்றுகிறது

1940 ஆம் ஆண்டு நாஜிப்படைகள் பாரீஸில் நுழையும் உலகம் போரின் நெருக்கடியான காலகட்டத்தில் பாரீஸ் நகரத்தில் ரிக்  இல்சாவைக் காதலிக்கிறான். அவளது கடந்த காலம் பற்றி அவனுக்குத் தெரியாது.

அவன் போலீஸ் தேடும் பட்டியலில் இடம் பெற்றவன். இல்சாவும் கணவனைப் பிரிந்து காத்திருக்கிறாள். அந்த உண்மை ரிக்கிற்குத் தெரியாது. அவளும் தெரியப்படுத்துவதில்லை. பாரீஸ் நகரை விட்டு வெளியேறிப் போய்விட நினைக்கும் ரிக் நாம் ஏன் உடனே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று இல்சாவிடம் கேட்கிறான். அவள் திருமணத்தை ஏற்கவில்லை. ஆனால் அவனுடன் பயணம் செய்யச் சம்மதிக்கிறாள். மறுநாள் மாலை அவளுக்காக ரயில் நிலையத்தில் காத்திருப்பதாகச் சொல்கிறான் ரிக். அவளும் ஏற்றுக் கொள்கிறான்

காஸபிளாங்கா படத்தின் மறக்கமுடியாத காட்சி மழையோடு ரயில் நிலையத்தில் ரிக் காத்துக் கொண்டிருப்பது. அதுவும் இல்சா கடைசி நிமிஷம் வரை வராமல் போகவே அவன் குழப்பத்துடன் காத்துக் கொண்டிருக்கிறான். அவளது கடிதம் அவனது கைக்கு வருகிறது. அந்தக் கடிதத்தை மழைக்குள்ளாக விரித்துப் படிக்கிறான். கடித வரிகளை மழை கரைத்துப் போகிறது. இல்சா வரவில்லை. ரயில் கிளம்பப் போகிறது. ரிக்கை சாம் இழுத்துக் கொண்டு போகிறான். அத்தோடு ரிக்கின் காதல் வாழ்க்கை முடிந்து போகிறது.

அந்த முடிவின் அடையாளமாக “As Time Goes By பாடலை அவன் திரும்பக் கேட்பதேயில்லை. ஆனால் அந்தப் பாடலை மறுபடி ரிக் கேட்க துவங்கும் போது தான் காஸபிளாங்காவிற்கு இல்சா வந்திருப்பதை அறிந்து கொள்கிறான். அந்தப் பாடல் காதலின் அடையாளம். அதைச் சாம் வாசிக்கும்போது அவர் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம். சாம் கதாபாத்திரம் மிகவும் தனித்துவமானது. அவன் ஒருவனே ரிக்கை புரிந்து கொண்டிருக்கிறான். ரிக்கின் காதலுக்குச் சாம் தான் சாட்சி,

ரிக் கஃபே அமெரிக்கன்’ என்பது இரவு விடுதி மட்டுமில்லை. அது ஒரு பண்பாட்டு அடையாளம்.

ரிக்கை அதை நிர்வகிக்கும் விதம் மிகச்சிறிய காட்சிகளில் அழகாகக் காட்டப்பட்டுவிடுகிறது. அந்த இரவுவிடுதிக்கு வரும் ஜெர்மானிய அதிகாரி அதன் பிரம்மாண்டத்தையும் அழகினையும் கண்டு வியக்கிறான். இரவு விடுதியில் துப்பாக்கி சூடு நடக்கும் போதும் கூட ரிக் பயப்படுவதில்லை. சாதாரண விஷயமாகவே எடுத்துக் கொள்கிறான்.

காஸபிளாங்கா மொராக்கோ நாட்டின் துறைமுக நகரம். யுத்தகாலத்தில் அங்கிருந்து அமெரிக்காவிற்குத் தப்பிப் போக விசாவிற்காகப் பலரும் காத்திருக்கிறார்கள். ஜெர்மானிய ராணுவம் காஸபிளாங்காவை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள நினைக்கிறது. ஆட்சியாளர்களோ பிரெஞ்சு அதிகாரிகள்.

கள்ளத்தனமான விசாவை பெற்று தரும் ஆட்கள் காஸபிளாங்காவில் இருந்தார்கள். காசாபிளாங்காவில் சிக்கித் தவிக்கும் அகதிகளுக்கு விசா பெறுவது பெரிய சவால். அவர்களுக்கு உதவி செய்யும் பெராரேயின் இரவு விடுதி ஒன்றும் அங்கிருக்கிறது. ஒரு நாள் கள்ளவிசா ஏற்பாடு செய்யும் ஒருவன் கொல்லப்பட, அவன் வைத்திருந்த பெயரிடப்படாத இரண்டு விசாக்கள் ரிக்கிற்குக் கிடைக்கின்றன.

ரிக் காஸபிளாங்காவில் நடைபெறும் அரசியல் பிரச்சனை எதிலும் தலையிடுவதில்லை. அவன் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறான். அதிகாரத்திலிருப்பவர்களுக்கு லஞ்சம் கொடுத்து தனது காரியங்களை முடித்துக் கொள்கிறான்.

இந்தச் சூழலில் அமெரிக்கா போவதற்காக இல்சா தன் கணவன் விக்டர் லாஸ்லோவுடன் காஸாபிளாங்கா வந்து சேருகிறாள். அவள் ரிக்கை அடையாளம் கண்டு கொள்ளும் போது ரிக் தனது சந்தோஷத்தைக் காட்டிக் கொள்வதில்லை. தன்னை அவள் ஏமாற்றிவிட்டாள் என்ற கோபத்திலே இருக்கிறான். ஆனால் இல்சா நடந்த உண்மைகளை அவனிடம் சொல்வதில்லை. தாமதமாகவே ரிக் உண்மைகளை அறிந்து கொள்கிறான்

ரிக்கையும் இல்சாவையும் இணைக்கும் புள்ளி “அஸ் டைம் கோஸ் பை’ பாடல். சாம் அதைத் திரும்ப வாசிக்கும் போது ரிக்கின் மனம் வேதனை கொள்கிறது. பிரிந்த காதலுக்காக ஏங்குகிறது. அவன் கோபம் கொள்கிறான். இரவில் தனியே ரிக் குடித்துக் கொண்டிருப்பதும் சாமோடு பேசுவதும் அரியதொரு காட்சி.

நாஜி முகாமில் சிக்கி சித்ரவதைகள் அனுபவித்த இல்சாவின் கணவன் விக்டர் லாஸ்லோ அமெரிக்கா போவதற்கு தனக்கு விசா தேவை என்று ரிக்கிடம் உதவி கேட்கிறான். உன் மனைவியிடம் கேள். அவளால் ஏற்பாடு செய்து தர முடியும் என்கிறான் ரிக். இல்சாவிற்கு இதன் பொருள் என்னவென்று புரிகிறது. இரவில் இல்சா ரிக்கைத் தேடி வருகிறாள். உண்மையைச் சொல்கிறாள். அப்போது தான் தன்னைக் காதலிப்பதற்கு முன்பே அவள் விக்டரை திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் என்பதை ரிக் அறிந்து கொள்கிறான்.

இல்சாவிற்கு உதவி செய்ய முன்வருகிறான். அவர்களுக்குத் தேவையான விசாவை தந்து  காஸபிளாங்காவை விட்டு அனுப்ப என்னவெல்லாம் ரிக் செய்கிறான். அது எப்படி முடிகிறது என்பதே படத்தின் மீதக்கதை

ரிக்கின் விடுதிக்கு வரும் ஜெர்மானிய ராணுவ அதிகாரி மேஜர் ஹென்ரிச் ஸ்ட்ராஸர் அவனிடம் நீ எந்த நாட்டின் பிரஜை என்று கேட்கிறார். அதற்கு ரிக் நான் ஒரு குடிகாரன் என்று பதில் சொல்கிறான். இதைக் கேட்டதும் கேப்டன் லூயிஸ் அப்படியானால் நீ ஒரு உலககுடிமகன் என்று கேலியாகச் சொல்கிறார். படம் முழுவதும் அழகான, கவித்துவமான உரையாடல்கள் உள்ளன.

இன்னொரு காட்சியில்

Yvonne: Where were you last night?

Rick Blaine: That’s so long ago, I don’t remember.

Yvonne: Will I see you tonight?

Rick Blaine: I never make plans that far ahead

என்று பதில் தருகிறான் ரிக். இது தான் ரிக்கின் இயல்பு. கடைசி காட்சி வரை ரிக் இப்படித்தானிருக்கிறான்.

கேப்டன் லூயிஸ் ஒரு இளம் தம்பதிகளுக்கு விசா தருவதற்காக அந்தப் பெண்ணை ரகசியமாக அடைய முயற்சிப்பதும் அந்தப் பெண்ணின் கணவன் சூதாடி பணம் பெற்று விசா வாங்க எத்தனிப்பதும், இதை அறிந்த ரிக் அந்தப் பெண்ணின் கணவனைச் சூதாட்டத்தில் ஜெயிக்க வைப்பதும் உணர்ச்சிப்பூர்வமான காட்சி. ரிக் இல்சாவிற்கு உதவி செய்வான் என்பதற்கு முன்னோட்டம் போலவே அந்தக் காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது

பாரீஸ் நகரில் அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். காதலிக்கிறார்கள். பாரீஸை விட்டு நீங்கியதும் அவனது காதல் பிரிந்துவிடுகிறது. இல்சாவை பார்த்தவுடன் அவன் மீண்டும் பாரீஸ் நகரை நினைவு கொள்கிறான். இல்சா இருக்குமிடமெல்லாம் பாரீஸ் தான்.

இல்சா காஸபிளாங்காவிற்குக் கணவனுடன் வரும் போது அவள் ரிக்கை மறந்திருந்திருந்தாள். அது அவளது வாழ்க்கையின் கடந்து போன விஷயம். அவள் கணவன் அறியாத ரகசியம். ஒரு பக்கம் லாஸ்லோவைக் கைது செய்ய வேண்டும் என ஹென்ரிச் காத்துக் கொண்டிருக்கிறார். அவனிடம் ரகசிய அமைப்புகளை நடத்தும் போராளிகளின் பெயர்களைக் கேட்டு மிரட்டுகிறார். விக்டர் தைரியமாக அவரை எதிர்கொள்கிறான்.

ரிக்கிற்கும் இல்சாவிற்குமான காதலை விக்டர் லாஸ்லோ அறிந்து கொண்டபோதும் அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. ரிக்கின் காதலைப் பற்றி அவன் ஒரு போதும் இல்சாவிடம் விசாரிப்பதில்லை. இல்சா ரிக்கோடு அமெரிக்கா போவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தபோதும் அவள் ஏற்பதில்லை. அவள் தன் கணவனைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கவே முயல்கிறாள். ரிக் அதை நன்றாக உணர்ந்து கொள்கிறான்.

Will you ask Rick if he will have a drink with us?

Carl Headwaiter: Madame he never drinks with customers. Never. I have never seen it.

என்று இன்னொரு காட்சியில் வெயிட்டர் சொல்கிறான். இல்சாவை சந்தித்த பிறகு ரிக் மாறிவிட்டான் என்பதன் அடையாளமாக அவன் வாடிக்கையாளர்களுடன் அமர்ந்து குடிக்கிறான். அவனது இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கிறது. ஜெர்மானிய அதிகாரி இரவுவிடுதியை மூடஉத்தரவு போட்டதும் அந்த இரவில் ரிக் இன்னும எவ்வளவு நாட்கள்  நாம் தாக்குப்பிடிக்கும் என்பதை பற்றியே கவலைப்படுகிறான். கஸாபிளாங்காவை விட்டு ஒட அவன் முயற்சிப்பதேயில்லை

ஒரு காட்சியில் லாஸ்லோ ஜெர்மானிய ராணுவ அதிகாரிக்கு எதிராக இரவுவிடுதியில் இருந்தவர்களை ஒன்று திரட்டி தேசிய கீதம் பாடுவது அவன் எப்படிப்பட்டவன் என்பதன் அடையாளம்.

ரிக்கை காதலிக்கும் போது இல்சா தன் கணவன் இறந்து போய்விட்டதாகவே நினைக்கிறாள். அவள் உண்மையில் ரிக்கை ஏமாற்றவில்லை. அவனுடன் பாரீஸை விட்டு வெளியேற நினைக்கும் நாளில் தான் கணவன் உயிரோடு இருக்கும் விஷயம் அவளுக்குத் தெரியவருகிறது. அவளுக்கு வேறுவழியில்லை. போராட்ட களத்தில் இருக்கும் கணவனுக்காக அவள் ரிக்கை விட்டு விலகுகிறாள்.

ஒரு காட்சியில் கோபத்தில் அவள் துப்பாக்கி எடுத்து ரிக்கை சுட முயல்கிறாள். ரிக் அது தனக்கு அவள் தரும் பரிசு என்று சுடச்சொல்கிறாள். அவளால் சுட முடியவில்லை. அவள் லாஸ்லோவையும் நேசிக்கிறாள். ரிக்கையும் காதலிக்கிறாள். ரிக் தான் கடைசி முடிவை எடுக்கிறான்.

ஒரு காதல்கதையை இத்தனை பரபரப்பான திருப்பங்கள் கொண்ட சூழலுக்குள் பொருத்தியது தான் இந்தப்படத்தின் தனித்துவம். காதலுள்ள ரிக்கும் இல்சாவும் நடந்து கொள்ளும் விதமும் அவர்களின் நெருக்கமும் உண்மையான காதலர்களை திரையில் காண்பது போலவேயிருக்கிறது.

ஆர்தர் எடிசனின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பானது. கவித்துவமான காட்சிப் பிம்பங்களை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக இரவு விடுதிக்காட்சிகள். இல்சா தனிமையில் ரிக்கைச் சந்திக்கும் காட்சி. விமான நிலையக்காட்சிகள் என்று அற்புதமான ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ரிக்காக நடித்துள்ள ஹம்பரி போகார்ட் மற்றும் இல்சாவாக நடித்துள்ள இஙகிரிட் பெர்க்மன் இருவரது திரை வாழ்விலும் இப்படம் அரிய சாதனைப் படமாகும்.

மற்ற காதல் படங்களுக்கும் காஸபிளாங்காவிற்குமான வித்தியாசம் இந்தப் படம் எந்த இடத்திலும் காதலர்களின் பிரிவுத்துயரை வைத்து மெலோடிராமா செய்யவில்லை. ஒரேயொரு காட்சியில் தான் ரிக் இழந்த காதலை நினைத்து வேதனைப்படுகிறார். அது போலவே நீண்ட பிளாஷ்பேக் காட்சிகள் கிடையாது. விக்டர் லாஸ்லோ பற்றிய அத்தனை விஷயங்களும் உரையாடல் மூலமே சொல்லப்படுகிறது. இல்சாவும் தனது பழைய காதலனைக் கண்டவுடன் விலகிப்போவதில்லை. அதிக உணர்ச்சிவசப்படுவதில்லை அவள் குழப்பமடைகிறாள். ஆனாலும் அவள் மனது பழைய காதலையே நாடுகிறது. அது தான் சாமை மறுபடியும் அதே பாடலை வாசிக்கத் தூண்டுகிறாள்.

கண்ணீர் காவியமாக்கும் எந்த முயற்சியும் இந்தப் படத்தில் கிடையாது. ஆனால் படத்தின் கடைசிக் காட்சியில் விமானம் பறப்பதை ரிக் பார்க்கும்போது நாமும் அவனைப் போலவே காதலின் பிரிவை முழுமையாக உணருகிறோம். காதலின் சங்கீதம் நமக்குள்ளும் ஒலிக்க ஆரம்பிக்கிறது. இல்சா போலவே நாமும் சொல்கிறோம்

Play it, Sam. Play ‘As Time Goes By.’

•••

0Shares
0