காந்தியின் நினைவில். 


 


 


 


 


 


தமிழகத்தின் பல இடங்களில் காந்தி வந்த இடம், காந்தி பேசிய மைதானம் என்று  உள்ளன. சில ரயில் நிலையங்களில்அப்படிபெயர்பலகைகளைக் கண்டிருக் கிறேன். விருதுநகர் ரயில் நிலையத்தின் வெளியே காந்தி விருதுநகருக்கு வந்த நாளின் நினைவாக ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. காந்தியை பார்த்தவர்கள், காந்திக்காக தன் அணிந்திருந்த நகைகளை கழட்டி தந்தவர்கள் என்று பலரது நினைவுகளை என் சிறுவயதில் கேட்டிருக்கிறேன்.


காந்தியின் கையைத் தொட்டவர்கள் கடவுளின் கையைத் தொட்டது போன்ற சிலிர்ப்பு அடைந்திருக் கிறார்கள். இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும், அதன் குக்கிராமங்கள் வரை பயணம் செய்த முதல் அரசியல் தலைவர் காந்தியே. அதை அரசியல் பயணம் என்று சொல்லமுடியாது. மக்களின் வாழ்வை அறிந்து கொள்ள,அவர்களோடு சேர்ந்து சுகதுக்கங்களைப் புரிந்து கொள்ள விரும்பிய மனிதன் மேற்கொண்ட பயணங்கள்.


 
பலமுறை காந்தியின் எழுத்துக்களை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வாசித்திருக்கிறேன்.காந்தி மிக சிக்கனமாக சொற்களைப் பயன்படுத்தி மிக ஆழமாக எதையும் தெரிவிக்க முற்படுகின்றவர். சமீபத்தில் ஒரு பழைய ஆவணப்பிரதியொன்றில் காந்தியின் பாஸ்போர்டின்  நகல்பிரதியைக் காண நேர்ந்தது. வட்டமேஜை மாநாட்டிற்காக லண்டன் பயணம் செல்வதற்கு முயன்ற காந்தி அனுப்பி படிவமது.


 
அதில் அவர் பாராட்லா படித்திருக்கிறார் என்பதும் தற்போதுதொழில்புரியவில்லைஎன்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அத்தோடு அவர் உயரம் 5 அடி 4 அங்குலம் என்றும் உள்ளது


நான் அறிந்தவரை அரசியல் தலைவர்களில் காந்தி ஒருவர் தான் தன் வாழ்நாளில் ஒரு முறை கூட விமானத்தில் பயணம் செய்ததில்லை. அவர் அதை விரும்பவில்லை. மிக அவசரமான காலங்களில் கூட அவர் ரயிலிலோ கப்பலிலோ தான் பயணம் செய்திருக்கிறார். அதுவும் சாதாரண மூன்றாம் வகுப்பு மக்களோடு தான் அவர் பயணம் செய்திருக்கிறார். கடற்பயணமாக லண்டனுக்கு செல்வதில் உள்ள அலுப்பும் சலிப்பும் அறிந்த போதும் அவர் கடற்பயணங்களே விரும்பினார்.


காந்தியை பற்றிய புத்தகங்களில் எனக்கு விருப்பமானது லூயி பிஷர் எழுதிய The life of mahatma Gandhi லூயி பிஷர் ஒரு பத்திரிக்கையாளர். ஆகவே அவர் பலமுறை காந்தியை நேரில் சந்தித்து ஒன்றாக தங்கி காந்தியை நன்றாக அறிந்திருக்கிறார். அட்டன்பரோவின் காந்தி திரைப்படம் லூயி பிஷரின் புத்தகத்தையே முதன்மையாக கொண்டது. காந்தியே குறிப்பிடமறந்த பல நுட்பமான விஷயங்களை பிஷர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.அத்தோடு காந்தியின் இறுதி யாத்திரை பற்றி மிக விரிவான பதிவு இந்த நூலில் உள்ளது.காந்தியை இன்று நினைவு கூறுவதற்கான காரணம் ஒன்றிருக்கிறது. அது இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கியப் போராளியாக கருதப்படும் நீலகண்ட பிரம்மசாரி எனப்படும் சுவாமி ஒம்காரை பற்றி வாசித்துக் கொண்டிருந்தேன்.


அதில் ஆஷ் கொலைவழக்கில் அப்ரூவர் ஆகி சிறைப்பட்டு சிறை வாழ்வில் ஆன்மீக நாட்டம் கொண்டு சுவாமி ஒம்கார் ஆன விபரங்கள் காணப்படுகின்றன.


அதில் ஒரு சம்பவம் உள்ளது. அது மைசூர் சாமுண்டி மலையின் மீது துறவியான தனியே வாழ்ந்து வந்த சுவாமி ஒம்கார் தினமும் இரவில் தான் நலமாக உள்ளதாக அறிவிப்பதற்கு மலைமேல் இருந்து தீப்பந்தம் ஒன்றை கொளுத்தி காட்டுவார். அதை கண்டு அருகாமையில் உள்ள கிராம மக்கள் சுவாமி நலமாக இருக்கிறார் என்று தெரிந்து கொள்வார்கள்.


காந்தி மைசூருக்கு வந்த நாளில் மலையின் அருகாமையில் உள்ள பயணியர் விடுதியில் தங்கியிருக்கிறார். இரவில் மலையின் மீது ஏதோ பந்தம் எரிவதை கண்டு என்ன அது என்று கேட்டிருக்கிறார்.விசாரித்து வருவதாக சொன்ன உதவியாளர்உள்ளுர்காரர்களை அழைத்து கேட்டபோது அவர்கள்ஒம்கார் சுவாமியைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். அவரும் காந்தியிடம் யாரோ துறவி மலையின் மீது தங்கியிருக்கிறார் என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்கள்.


இங்கிலாந்தை  நடுநடுங்க செய்த ஆஷ் கொலைக்கு மூலகாரணமாக இருந்தவர் நீலகண்ட பிரம்மசாரி என்பதோ, சிறையிலிருந்து தப்புவதில் கில்லாடியும், ஆயுதபயிற்சியில் விற்பன்னரும் ஆன சாகசக்கார நீலகண்டன் தான் பிடிபட்டு சிறைப்பட்டு அரசியலை விட்டு விலகி துறவியாக வாழ்ந்து வருகிறார் என்பதை காந்தி அறிந்திருக்கவில்லை.


 
யாரோ ஒரு துறவி என்று நினைத்துக் கொண்டு முடிந்தால் அவரை தான் சந்திக்க விரும்புவதாக தெரிவிக்கிறார். மறுநாள் உள்ளுர்வாசிகளில் ஒருவன் மலையின் மீதேறி சென்று சுவாமியைச் சந்தித்து அவரைக் காந்தி சந்திக்க விரும்புவதாக சொல்கிறான். சுவாமி ஒம்காரின் முகத்தில் மலர்ச்சி ஏற்படுகிறது. தான் காந்தியைச் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் இப்போது அவர் புரட்சியாளர் இல்லை. வெறும் துறவி. ஆகவே நேரில் சந்தித்து என்ன பேசுவது என்ற குழப்பத்துடன் ஒரு கடிதம் மட்டுமே தந்து அனுப்புகிறார்.


அது காந்தியை வாழ்த்திய கடிதம். அது காந்தியின் உதவியாளர்கள் வழியாக காந்திக்கு கிடைக்கிறது. காந்தி படித்து சந்தோஷம் அடைகிறார். ஆனால் யாரும் நீலகண்ட பிரம்மசாரி தான் இன்று துறவியாக இருக்கிறார் என்று காந்தியிடம் சொல்லவேயில்லை.


இந்தியாவை ஆட்டுவித்த ஒரு புரட்சியாளன் துறவியாவதும், துறவி போல வாழ்ந்த ஒருவர் அரசியல்வாதியானதும் இந்திய சமூகத்தில் மட்டுமே சாத்தியமானது. இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தால் காந்தி தனக்கு முன்னால் நடந்த ஆயுதப்போராட்ட விஷயங்களே நேரில் கேட்டு அறிந்திருக்க முடியும். ஒருவேளை காந்தியின் பால் ஒம்காருக்கு விருப்பம் வந்திருக்கவும் கூடும்.


இதுபோன்று சிறிய காரணம் ஒன்றினால் நடைபெறாமல் போன சந்திப்புகள் எல்லாப் புனைவு எழுத்தையும் விட வசீகரமாகவும் யோசிக்கவும் வைக்கின்றன.


லெர்மென்தேவ் என்ற  ருஷ்ய நாவலாசிரியரின் கதையில் ராணுவ அதிகாரியை பார்க்க அவரது மாமா ஊரிலிருந்து பல மைல் பயணம் செய்து வந்திருப்பார். அவரை தனது முகாம் அலுலவகத்தில் பார்த்து சிரித்துவிட்டு காத்திருங்கள் வருகிறேன் என்று சொன்ன ராணுவ அதிகாரி, மாமா காத்திருப்பதை மறந்து யுத்தகளத்தின் அவசர வேலையில் கிளம்பி போய்விடுவார்.


மறுநாள் தான் மாமாவை காத்திருக்க சொன்னது நினைவிற்கு வரும். திரும்பி வந்து பார்த்தால் மாமா ஊருக்குப் போய்விடுவார். அடுத்த சில மாதங்களில் மாமா இறந்து போய்விட்டதாக தகவல் வரும்.


மாமாவின் இறப்பை விட  அவர் என்ன பேசுவதற்காக தன்னைத் தேடி வந்தார் என்ற துக்கம் அதிகாரியின் மனதில் பெரிய வலியை உருவாக்கிவிடும். அவர் ராணுவத்தை விட்டே விலகி வந்துவிடுவார்.


இதுபோன்ற பேசாத பேச்சுகள்.நடைபெறாத சந்திப்புகள் இவையே மனிதவாழ்வின் நிஜமான மர்மங்களாக உள்ளன.**0Shares
0