காந்தியின் சீடர்களில் முக்கியமானவர் காகா காலேல்கர். தண்டி யாத்திரைக்குச் செல்லும் போது காந்தி ஒரு ஊன்றுகோலை ஊன்றியபடியே செல்லும் புகைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள்.
அந்த ஊன்றுகோல் காகா காலேல்கருடையது.
அவர் தான் நெடும்பயணம் செல்லும் காந்திக்குத் தனது ஊன்றுகோலைக் கொடுத்து உதவினார். காகா காலேல்கருக்கு அந்த ஊன்றுகோல் அவரது நண்பரான கோவிந்த் பாயால் பரிசாக வழங்கப்பட்டது.
நாகப் பெட்டா என்று அழைக்கப்படும் அந்த மூங்கில் கழி நெருக்கமாக முடிச்சுகள் கொண்டது. உப்பு சத்தியாகிரகத்திற்காகக் காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட போது அந்த ஊன்று கோலின் துணையோடு தான் நடந்து சென்றார்.
பள்ளி ஆசிரியராக இருந்த காகா காலேல்கரை காந்தி முதன்முறையாகச் சாந்தி நிகேதனில் தான் சந்தித்தார். அந்த நிகழ்வு பற்றிக் காந்தியே எழுதியிருக்கிறார். சாந்திநிகேதனின் வாழ்க்கை முறை காந்தியை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக அங்கிருந்த சமையலறையும் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து சமைத்து உணவு பரிமாறிக் கொள்வது பற்றியும் காந்தி சிறப்பாக எழுதியிருக்கிறார். கல்வி குறித்துக் காந்தியின் மனதில் எப்போதுமே தனியிடம் இருந்து வருகிறது. காகா காலேல்கருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கூட ஆசிரமத்திலுள்ள குழந்தைகளுக்குக் கல்வி எப்படிக் கற்பிக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றிக் காந்தி எழுதியிருக்கிறார்.
சாகித்ய அகாதமி பரிசு பெற்ற காகா கலேல்கர் குஜராத்தியிலும் மராத்தியிலும் ஹிந்தியிலும் எழுதக்கூடியவர். இந்தியாவின் முக்கிய நதிகள்,அருவிகளைப் பற்றிய ஜீவன்லீலா எனும் சிறப்பான நூலை எழுதியிருக்கிறார்.
அதில் காந்தியைப் பற்றி அரிய நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருக்கிறது
கர்நாடகாவின் புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சியைக் காண்பதற்காகக் காகா காலேல்கர் பயணம் மேற்கொண்டார். நயாகரா அருவி 164 அடி உயரத்திலிருந்து விழுகிறது. கிரஸப்பா என அழைக்கப்படும் ஜோக் நீர்வீழ்ச்சி 960 அடி உயரத்திலிருந்து விழுகிறது. அந்த வகையில் நயாகராவை விட ஜோக் ஆறுமடங்கு உயரமானது. ஆகவே நதிகளின் காதலனாக இருந்த காகா சாகேப் அதைக் காண விரும்பிச் சென்றார்.
குஜராத்தில் வெள்ளம் வந்த போது காந்திஜீ உடல்நலக்குறைவின் காரணமாகப் பெங்களூரில் ஓய்வெடுக்கும்படி தங்கியிருந்தார். ஒய்வு என்றால் முடங்கிக் கிடப்பதில்லை. குறைந்த வேலைகள் செய்வது அவ்வளவே. மைசூர் ராஜ்ஜியத்திற்குள் சுற்றுப் பயணம் செய்த காந்தி சாகர் சென்றிருந்தார். அங்கிருந்து காரில் சென்றால் ஒன்றரை மணி நேரத்தில் ஜோக் நீர்வீழ்ச்சியைக் காண முடியும்.
ஷிமோகாவில் துங்கா நதிக்கரையில் காந்தியைச் சந்தித்த காகா காலேல்கர் ஜோக் நீர்வீழ்ச்சியைக் காண்பதற்காகத் தங்களுடன் வரவேண்டும் எனக் காந்தியை அழைத்தார்.
கர்ஸன் பிரபு கிரஸப்பாவைக் பார்ப்பதற்காகவே வந்திருக்கிறார். அவ்வளவு புகழ்பெற்ற அருவியை நீங்கள் அவசியம் காண வேண்டும் எனக் காகா சாகேப் அழைத்த போது மனம் போனபடி எல்லாம் காரியங்கள் செய்ய முடியாது நீ வேண்டுமானால் சென்று பார்த்து வா. அந்த அனுபவத்திலிருந்து மாணவர்களுக்குப் பூகோள விஷயமாக ஓரிரு பாடங்களைச் சொல்லலாம் எனக் காந்திஜி மறுத்துவிட்டார்.
விடாப்பிடியாகக் காகா சாகேப் நயாகராவை விடவும் ஜோக் ஆறுமடங்கு பெரியது 960 அடி உயரத்திலிருந்து விழுகிறது என்று சொன்னதும் காந்தி மழைத்தண்ணீர் ஆகாசத்தின் எவ்வளவு உயரத்திலிருந்து விழுகிறது எனக் கேட்டார்.
இந்தப் பதிலைக் கேட்டு நான் தோற்றுவிட்டேன் எனக் காகா சாகேப் எழுதுகிறார்.
உண்மை ஆகாசத்திலிருந்து பெய்யும் மழையை விடவும் ஜோக் நீர்வீழ்ச்சி பெரியதொன்றுமில்லை.
மழையை பார்த்துள்ளதே போதும் எனக் காந்தி சொன்ன பதில் எளிய மறுப்பு மட்டுமில்லை. அதிசயங்களைத் தேடிக் காண்பதை விடவும் பேரதிசயங்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கின்றன. அவற்றை அறியாமலே நாம் அனுபவிக்கிறோம். கடந்து போகிறோம் என்ற உண்மையைப் புலப்படுத்துகிறது
காந்தி ஏன் ஜோக் நீர்வீழ்ச்சியைக் காண மறுத்தார்.
வேடிக்கை பார்ப்பது என்பதில் காந்திக்கு ஒரு போதும் நாட்டமிருந்ததில்லை. இயற்கை வேடிக்கை பார்க்க வேண்டிய விஷயமில்லை. இயற்கையோடு ஒன்று கலப்பதே முக்கியமானது. அது புகைப்படம் எடுத்துக் கொள்வதால் கிடைத்துவிடாது.
காந்தியின் அதிசயங்கள் யாவும் மனிதனே. அதிலும் சாமானிய மனிதனே. அவனது துயரங்களும் வேதனைகளும் நீர்வீழ்ச்சியை விடவும் அதிகமான கண்ணீரை வரவழைப்பவை. அதைக் காந்தி நன்றாக உணர்ந்திருந்தார். மக்கள் தொண்டு செய்கிறவர்கள் சுற்றுலாப் பயணி போல நடந்து கொள்ளக்கூடாது என்பது காந்தியின் மனதில் உறுதியாக நிலை கொண்டிருந்தது
மழை எவ்வளவு உயரத்திலிருந்து பெய்கிறது என்ற காந்தியின் கேள்வி எந்த அதிசயங்களையும் தேடிப்போய்ப் பார்க்காமல் சொந்த நிலத்தை நம்பியே வாழும் விவசாயி ஒருவனின் குரலைப் போலவே ஒலிக்கிறது.
அந்தக் கேள்விக்கு எவ்வளவு உயரம் என்ற பதில் முக்கியமானதில்லை. ஏன் உங்களால் மழையை அதிசயிக்க முடியவில்லை என்ற சுட்டிக்காட்டலே முக்கியமானது.
காந்தி இயற்கையை விரும்பவில்லை. ரசிக்கவில்லை அதனால் தான் லண்டனில் இருந்த போதும் தேம்ஸ் நதியின் அழகினைப் பற்றி எதையும் அவர் எழுதவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்படுகிறது.
காகா காலேல்கர் இதற்குப் சொல்கிறார்
காந்திஜீ சங்கீகத்தைப் போலவே இயற்கை அழகையும் பெரிதும் ரசிக்கக்கூடியவர். உலாவச் செல்லும் போது சூரியன் மறையும் காட்சியினையும் மேகங்களுக்கு நடுவிலிருந்து எட்டிப்பார்க்கும் ஒர் தனி நட்சத்திரத்தையும் கண்டு களித்து அதை எனக்குக் காட்டி மகிழ்ந்ததுண்டு என்கிறார்
அந்திவானின் சூரியனை ரசிக்கும் காந்தி ஏன் தேம்ஸ் நதிக்கரை அழகினை கண்டுகொள்ளவில்லை என்றால் இங்கிலாந்திற்கு அவர் சென்றதன் நோக்கம் கல்வி பயிலுவது. அதுவும் எளிய வாழ்க்கையை மேற்கொண்டு சைவ உணவு பழக்கத்துடன் குளிராடைகள் கூட அணிந்து கொள்ளாமல் வாழுவது என்று வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்த அவரால் எப்படித் தேம்ஸ் நதியின் அழகினை ரசித்து எழுத முடியும். தனது படிப்பு முடிந்த உடனே காந்தி லண்டனை விட்டு புறப்பட்டுவிடுகிறார் என்பது முக்கியம்.
தாகூரின் தந்தை அவரை இங்கிலாந்திற்குக் கல்வி பயில அனுப்பி வைக்கப்பட்ட போது தாகூர் இங்கிலாந்தின் அழகைத் தேடித்தேடி ரசித்தார். இசையில் நடனத்தில். நாடக அரங்குகளில் தனது நாட்களைக் கழித்தார். தந்தையின் விருப்பத்தை அவர் நிறைவேற்றவில்லை. காரணம் தாகூர் ஒரு கவி. காந்தியின் லண்டன் வாழ்க்கையும் தாகூரின் லண்டன் வாழ்க்கையும் ஒன்றில்லையே.
இங்கிலாந்து செல்வதற்காகக் காந்தி கடன் வாங்கியே அனுப்பி வைக்கப்பட்டார்.
1885 இல் காந்தியின் தந்தை இறந்துவிட்டார். அரசுப்பணி கிடைக்கும் என்பதற்காகவே அவர் இங்கிலாந்திற்குச் சென்று படிக்க முயன்றார். கடல் தாண்டி சென்றால் அவரைச் சாதிவிலக்கு செய்துவிடுவோம் என்று மிரட்டினார்கள். காந்தி அதைக் கண்டு அச்சப்படவில்லை. தனது முடிவில் உறுதியாக இருந்தார். செப்டம்பர் 4, 1888ல் சௌத்தாம்டனுக்குப் பயணம் செய்தார். அப்போது அவரது வயது 18 .
அவர் இங்கிலாந்தில் தங்கியிருந்த நாட்களில் ஆங்கிலக் கனவானின் வாழ்க்கையை வாழ முயன்று தோற்றுப் போனார். அந்த நாட்களில் காந்தி மேற்கத்திய நடனம் கூடக் கற்றுக் கொண்டார். அவருக்கு அந்த வாழ்க்கை மிகவும் அந்நியமாக இருந்தது. அவரது கவனம் ஆன்மீக நூல்களின் பக்கம் திரும்பியது. தான் மேற்கொள்ளவேண்டியது அகப்பயணமே என்று காந்தி உணர ஆரம்பித்தார். அதனால் லண்டனின் பருவகால மாற்றங்கள் வசீகரித்த போது அதைக் கொண்டாடும் மனிதராக அவர் இருக்கவில்லை
ஜோக் நீர்வீழ்ச்சியைக் காண காகா காலேல்கர் அழைப்பை காந்திஜி மறுத்தபோது காகா சாகேப் அப்படியானால் மகாதேவ் தேசாயை அழைத்துப் போகிறேன். அவர் நீங்கள் அனுமதி தந்தால் மட்டுமே வருவார் என்று சொன்னார்.
அதைக் கேட்ட காந்தி புன்னகையோடு பதில் சொன்னார்
அவனுக்கு அங்குச் செல்ல விருப்பம் இருக்குமானால் அதை நான் தடை செய்யமாட்டேன். ஆனால் அவன் வரமாட்டான். நான் தான் அவனுக்குக் கிரஸப்பா
மகாதேவ் தேசாயின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தால் அது எவ்வளவு பொருத்தமான பதில் என்று விளங்கும். காந்தியின் உதவியாளரான மகாதேவ் தேசாய் காந்தியின் நிழலைப் போலவே விளங்கினார்.
காந்தியை முழுமையாகப் புரிந்து கொண்டு அவருக்குச் சகல விதங்களிலும் உதவியாக இருந்தவர் மகாதேவ் தேசாய். உண்மையில் அவருக்குக் காந்தி தான் பேரருவி. காந்தியே இயற்கையின் பெரும் சக்தி.
ஜீவன்லீலா நூலில் சபர்மதி ஆசிரமம் அமைப்பதற்காகக் காந்தியும் காகா சாகேப் மற்றும் டாக்டர் பிராண ஜீவன் மேத்தா, நாநாபாயீ படேல் ஆகியோர் இடம் தேடிச் சென்றதையும் ஆசிரமத்திற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மண்வெட்டியில் முதலாவதாக மண்ணை வெட்டி எடுத்தவர் தானே என்றும் முதலாவது கூடாரம் தான் அமைத்தது என்றும் காகா சாகேப் கூறுகிறார். எவ்வளவு பெரிய பாக்கியம்.
புகழ்பெற்ற சபர்மதி ஆசிரமத்தின் முதல் மனிதர் காகா சாகேப். அந்த ஆசிரமம் இந்திய சுதந்திரப் போரில் எத்தனை முக்கிய முடிவுகள் எடுக்குமிடமாக இருந்தது என்பதைக் காந்தியர்கள் நன்றாக அறிவார்கள்.
ஜோக் நீர்வீழ்ச்சியைக் காணக் காந்தி மறுத்துவிட்டார். இதே போல இன்னொரு சம்பவம் தமிழ்நாட்டில் காந்தி நூலில் விவரிக்கப்படுகிறது.
1934ஆம் ஆண்டில் ஹரிஜன இயக்கத்திற்காக மகாத்மா காந்தி மேற்கொண்ட தமிழகச் சுற்றுப்பயண நிகழ்வுகளின் தொகுப்பு இந்நூல். பதினெட்டு நாட்களில் இரண்டாயிரம் மைல் பயணம். செய்திருக்கிறார்.. 112இடங்களில் காந்தியைக் காண மக்கள் குவிந்திருந்தார்கள். .
அந்தப் பயணத்தின் போது போது காந்தி குற்றாலம் வருகை தந்தார். குற்றால அருவியில் குளிப்பதற்காக அவரை அழைத்த போது அங்கே ஹரிஜன மக்கள் தீண்டாமை காரணமாகக் குளிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று அறிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர் அருவிகளில் குளிக்காமலேயே திரும்பி விட்டார் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.
இயற்கையின் அழகை விடவும் தீண்டாமையே காந்திக்கு முக்கியமாக இருக்கிறது. தன்னை ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராகவே காந்தி எப்போதும் நினைத்தார். அந்த எண்ணம் இல்லாவிட்டால் ஹரிஜன மக்கள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்களா என்ற கேள்வியே எழுந்திருக்காது.
காந்தியை தவிர வேறு தேசிய தலைவர்களில் எவரேனும் இப்படி ஹரிஜன மக்கள் அனுமதிக்கப்படாத அருவியில் தான் குளிக்கமாட்டேன் என்று மறுத்திருக்கிறார்களா.
காந்தியின் செயல்களும் சிந்தனையும் வேறுவேறில்லை. அவர் எந்த மாற்றத்தை உருவாக்க நினைத்தாரோ அதைத் தானே முதலில் செய்யவும் துவங்கினார். இந்திய அரசியல் வரலாற்றில் தனது கழிப்பறையைத் தானே சுத்தம் செய்த முதல் தலைவர் காந்தி தானே.
இந்தியாவின் வரலாறு இருக்கும் வரை காந்தியின் இடம் நிலைபெற்றிருக்கும் எனக் காகா காலேல்கர் குறிப்பிடுகிறார். அது உண்மையே.
காந்தியின் நிழலாக இருந்தவர்கள் காந்தியைப் பற்றிச் சொல்லும் ஒவ்வொரு நிகழ்வும் பேருண்மையின் அடையாளமாகவே ஒளிர்கிறது
••