கனஸ்யாமதாஸ் பிர்லா எழுதிய காந்தி குறித்த நூல் பாபூ அல்லது நான் அறிந்த காந்தி என்ற பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது. அதன் முன்னுரையில் காந்தியை நான் அறிந்து கொள்ளத்துவங்கிய போது திலகருக்கு நிகராக அவருக்கும் பெயரும் புகழும் வருகிறதே என அவரைச் சந்தேகித்துக் குறைகளை அறிந்து கொள்வதற்காகவே பழகத் துவங்கினேன். ஆனால் அந்த நட்பு மிக ஆழமானதாக உருவெடுத்துவிட்டது என்கிறார்
காந்தியைச் சந்தேகிப்பவர்கள், குறைகளைக் கண்டுபிடித்து அவரை விமர்சனம் செய்ய விரும்புகிறவர்கள் எப்போதுமிருக்கிறார்கள். அவர்கள் காந்தியை அறியும் முன்பாகவே காந்தி குறித்த எதிர்மறை எண்ணங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கவே காந்தியை அறிந்து கொள்கிறார்கள். ஆனால் தனது குறைகளைக் காந்தி மறைத்துக் கொள்வதில்லை. ஆகவே காந்தியை நெருங்கி வந்தவர்கள் அவரது ஒளிவுமறைவற்ற வாழ்க்கையால் தானே மாற ஆரம்பித்துவிடுகிறார்கள். அல்லது பொய்யாக எதையாவது பேசி கடந்து போய்விடுகிறார்கள்.
காந்தியை ஏன் சந்தேகிக்கிறார்கள் என்ற கேள்விக்கு எளிய விடை. இப்படி ஒரு மனிதனால் எப்படி நடந்து கொள்ள முடியும் என்பதே. பாபு ராஜேந்திர பிரசாத் நூலில் காந்தி நீதிமன்றத்தை எவ்வாறு எதிர்கொண்டார் என்ற ஒரு பகுதியிருக்கிறது. அவுரி விவசாயிகள் சார்பாகப் போராட்டம் நடத்த வந்த காந்தியைத் தடுத்து அவர் மீது வழக்குத் தொடுத்தது பிரிட்டிஷ் அரசு. காந்தி நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைக்கப்படுகிறார்.
காந்தி சார்பில் பெரிய வழக்கறிஞர்கள் வருவார்கள் என்று பேசிக் கொள்கிறார்கள். எதிர்தரப்பு காந்தியை எப்படியாவது சிறையில் அடைத்துவிட முயல்கிறது. காந்தியே ஒரு வழக்கறிஞர் என்பதால் நிறையச் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து வைத்திருப்பார். நாளை அவற்றை நீதிமன்றத்தில் வெளிப்படுத்துவார் என நினைக்கிறார்கள்.
நீதிமன்ற வளாகத்தில் பெருங்கூட்டம். அவ்வளவும் கிராமப்புற விவசாயிகள். நீதிமன்றம் கூடுகிறது. எதிர்தரப்பு வழக்கறிஞர் அவர் மீது குற்றத்தைச் சாட்டுகிறார். இதைக் காந்தி மறுப்பதற்குப் பதிலாகத் தனது தரப்பை ஒரு அறிக்கையாக வாசிக்கிறார்., அதில் தான் சட்டத்தை மீறியது உண்மை. அதற்குக் காரணம் எவை என்று விரிவாகச் சுட்டிக்காட்டி தனக்குச் சிறைத் தண்டனை விதிக்கும்படி பரிந்துரை செய்கிறார்
நீதி மன்ற வரலாற்றில் ஒருவர் இப்படித் தனக்குத் தண்டனை தரும்படி நீதிபதியிடம் கேட்டதில்லை. எப்படி விடுதலை ஆவது என்று தான் யோசிப்பார்கள். ஆனால் காந்தி தனது தவற்றை ஒப்புக் கொண்டு அதிகபட்ட சிறைத்தண்டனை தர வேண்டும் என்று கேட்டது வியப்பளிக்க வைக்கிறது. நீதிபதியே ஆடிப்போய்விடுகிறார். தீர்ப்பு அளிக்கப்படும் வரை வேறு ஊர்களுக்குப் பயணம் செய்யக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கிறார்.
வலிந்து சிறை புகுவது என்பது காந்தி காட்டிய வழி. காரணம் அவர் சட்டத்தை மதிக்கக்கூடியவர். அதே நேரம் அந்தச் சட்டம் ஏ9ழைகளுக்குத் துணையாக இல்லை என்பதால் அதை எதிர்க்க வேண்டிய சூழலில் இருப்பதாகக் கூறுகிறார்.
காந்தியின் மீது தொடுத்த வழக்குகளில் அவர் நீதிமன்றத்தைச் சந்தித்த விதம் சுவாரஸ்யமானது.. சிறையைக் கண்டு காந்தி பயப்படவில்லை. மாறாகத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவதே முக்கியம் என நினைக்கிறார். அத்தோடு போராட்ட களத்தில் தனக்குப் பதிலாக வேறு நபரை வழி நடத்த நியமிக்கிறார். இது தான் காந்தியின் வழிகாட்டுதல்.
இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் இப்படி ஒருவர் நடந்து கொள்வரா என்பதை யோசியுங்கள். அதனால் தான் காந்தியைச் சந்தேகம் கொள்கிறார்கள். குறை கண்டுபிடிக்கப் போராடுகிறார்கள். சூரியனின் நிழல் கண்ணாடியில் தெரியுமேயன்றி கல்லில் தெரியாது என்று பிர்லா குறிப்பிடுகிறார். காந்தியை சந்தேகிப்பவர்களுக்கு அது சரியான பதில்.
தனது சுற்றுப்பயணத்தின் போது காந்தியைக் கல்கத்தாவில் வரவேற்றார் பிர்லா.. எளிய உடை. எளிய தோற்றம் என்றிருந்த காந்தியை வரவேற்று அழைத்துச் செல்லும் போது அவபரை வாழ்த்தி உற்சாகமாகக் குரல் ஒலி எழுப்பினார். அதைக் காந்தி ரசிக்கவில்லை. தனது புகழ்பாடுவதை அவர் விரும்பவில்லை என்பது முதற்சந்திப்பிலே அவருக்குத் தெரிந்து போனது. அத்தோடு காந்தியின் உரை எளிய ஹிந்தியில் இருந்தது. ஆர்ப்பாட்டமாக எதையும் அவர் பேசவில்லை. ஆத்மார்த்தமாகப் பேசினார். கோகலேயைப் புகழ்ந்து அவரது செயல்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
காந்திக்குக் கடிதம் எழுதலாமா என அவரிடம் கேட்டதற்கு நிச்சயம் எழுதுங்கள் என்று அனுமதித்த தந்தார். எழுதிய கடிதத்திற்கு உடனடியாக ஒரு தபால் அட்டையில் பதில் வந்தது. தனக்கு எழுதப்பட்ட கடிதங்களுக்குக் காந்தி உடனே பதில் எழுதும் வழக்கம் கொண்டிருந்தார் என்பதும் செலவு குறைவாகத் தபால் அட்டைகளைப் பயன்படுத்தினார் என்பதும் அவர் மீது பற்றை உருவாக்கியது என்கிறார் பிர்லா.
உண்ணாவிரதம் இருப்பதைச் சமயம் சார்ந்த செயலாக மட்டுமே பலரும் கருதுகிறார்கள். ஆனால் உண்ணா நோன்பு என்பது ஒரு வகைப் பிரார்த்தனை. தனது அகத்தை வலுப்படுத்தும் முறை எனக் காந்தி அறிந்திருந்தார். பொது விஷயங்களுக்காக உண்ணாவிரதம் இருப்பதை அவர் மேற்கொண்டார். அதை ஒரு போராட்ட வடிவமாக மாற்றினார். காந்தியின் உண்ணாவிரதம் இந்திய மக்களின் மனசாட்சியைத் தொடுவதற்காகவே நடத்தப்பட்டது.
காந்தியின் முதல் உண்ணாவிரதம் ஆப்பிரிக்காவிலிருந்த போது துவங்கியது. தனது ஆசிரம வாசிகள் செய்த தவற்றுக்காகத் தன்னைத் தண்டித்துக் கொள்வது என முடிவு செய்து ஏழு நாட்கள் காந்தி உபவாசமிருந்தார். அது தான் அவரது முதல் உண்ணா நோன்பு. மற்றவர் தவற்றுக்குத் தண்டனையாக அவர் ஏன் உண்ணாவிரதமிருக்கிறார். அவர் போதிக்க விரும்பும் அறத்தை அவரே நிகழ்த்திக் காட்டுகிறார். உண்ணா நோன்பு என்பது தன்னை வருத்திக் கொள்வது. அது குற்றம் இழைத்தவரின் மனசாட்சியை நிச்சயம் தொடும் எனக் காந்தி நம்பினார். அந்த நம்பிக்கை உண்மையானது.
எழுதி எழுதிக் கைவலித்துப் போனால் காந்தி வலது கைக்கு மாறாக இடது கையைப் பயன்படுத்தி எழுதத் துவங்கிவிடுவார் என்கிறார் பிர்லா. இரண்டு கைகளிலும் எழுதும் பழக்கம் கொண்டவர்கள் குறைவே. நாலைந்து உதவியாளர்களை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன ஆலோசனையை அவர் ஒரு போதும் ஏற்கவேயில்லை.
கடிதங்களில் குண்டூசி குத்தப்பட்டிருந்தால் அதைக் கவனமாகச் சேகரித்து வைத்துக் கொள்வார் காந்தி. எதையும் வீணடிக்கக் கூடாது என்பதில் அதிக கவனம் காட்டினார். அது போலக் கடிதங்களில் எழுதப்பட்ட வெள்ளப்பகுதியைத் துண்டித்து தனியே வைத்துக் கொள்வார். அதையும் பயன்படுத்துவதுண்டு. கிழிந்த ஆடைகளை ஒட்டு போட்டு வைத்துக் கொள்வார். தண்ணீரை மிகக் குறைவாகச் செலவு செய்வார். குடிப்பதற்குக் காய்ச்சிய தண்ணீரை ஒரு புட்டியில் வைத்துக் கொள்வார். அதைத் தேவையான போது எடுத்துக் குடித்துக் கொள்வார்
நோயின் பிடியில் சிக்கி மரணத்தருவாயிலிருந்த ஒரு பெண் காந்தியைச் சந்திக்க வேண்டும் என்ற கடைசி ஆசையை பிர்லாவிடம் தெரிவித்தாள். அவசர வேலையாக டெல்லி வந்த காந்தி இதை அறிந்து அந்தப் பெண்ணின் வீடு தேடி சென்று அவளைச் சந்தித்து நலம் விசாரித்தார் . நோயாளியான அந்தப் பெண்ணால் அதை நம்பவே முடியவில்லை. தன் பிறவிப்பயன் அடைந்து விட்டதாக கண்ணீர் வடித்தாள். எளியோர் பொருட்டுக் காந்தி எதையும் செய்யக்கூடியவர் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்கிறார் பிர்லா
தன் காலத்தில் இந்தியா சுதந்தரம் அடைவதைக் காண வேண்டும். கடவுள் தன் பிரார்த்தனையை நிச்சயம் நிறைவேற்றுவார் என்று காந்தி உறுதியாக நம்பினார். அப்படியே நடந்தது.
ஆனால் சுதந்திர இந்தியா தான் காந்தியைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளவில்லை.