காந்தியின் நெருக்கமான நண்பராக இருந்தவர் ஹென்றி போலக். காந்தியோடு சிறை சென்றவர். அவரது மனைவியான மிலி கிரகாம் போலக் லண்டனில் பிறந்து வளர்ந்தவர். ஹென்றி போலக்கை திருமணம் செய்து கொண்டபின்பு தென்னாப்பிரிக்கா வந்தார்.
1931ல் மிலி கிரகாம் போலக் காந்தி எனும் மனிதர் என்ற நூலை எழுதியிருக்கிறார். இது காந்தியோடு பழகிய நட்பினையும் பீனிக்ஸ் பண்ணையில் வாழ்ந்த நாட்களையும் விவரிக்கும் நூல். கார்த்திகேயன் தமிழாக்கம் செய்திருக்கிறார்.மதுரை சர்வோதயா இலக்கியப்பண்ணை வெளியிட்டிருக்கிறது.
ஆசிரம வாழ்க்கைக்குப் புதியவரான மிலிக்கு வாழ்வின் அடிப்படைகள் எவையெனக் காந்தி புரிய வைக்கிறார். காந்தியிடம் மிலி குஜராத்தி மொழியைக் கற்றுக் கொண்டிருக்கிறார். மதம், கல்வி. தாய்மை. பெண்களின் நிலை என்று பல்வேறு விஷயங்கள் பற்றிக் காந்தியோடு மிலி கிரகாம் விவாதம் செய்திருக்கிறார்.
காந்தி மீது மிலி வைக்கும் குற்றச்சாட்டு அவர் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்து மிக அதிகமாக எதிர்பார்க்கிறார் என்பதே. இதன் காரணமாகவே அவர் ஏமாற்றமடைகிறார். பலரும் அவரை ஏமாற்ற முற்படுகிறார்கள் என்று மிலி கூறுகிறார்.
காந்தி ஏன் மற்றவரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறார். எந்த ஒரு செயலையும் முழுமையான ஈடுபாட்டுடன் கவனத்துடன் செய்ய வேண்டும் என்பதில் காந்தி உறுதியான நிலைப்பாடு கொண்டிருந்தார். நம்மில் பலரும் எந்தச் செயலை செய்யச் சொன்னாலும் ஈடுபாட்டுடன் செய்யமாட்டோம். அது மட்டுமின்றி இயல்பாகவே ஒரு செயலைச் செய்யும் போது அறைகுறையாகச் செய்வதே வழக்கம். நூறு சதவீத ஈடுபாடு என்பது அபூர்வமே.
குறித்த நேரத்திற்குள்ளோ, முழுமையாகவோ செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், சரி தவறுகள் என்பதில் அக்கறை கொள்வதில்லை. காந்தியால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர் தானே ஒரு முன்னுதாரணமாக இருப்பதால் மற்றவர்கள் தவறு செய்யும் போது அதைச் சுட்டிக்காட்டத் தயங்குவதில்லை.
காந்தி ஆசிரமவாசிகளுக்கென அன்றாடப்பணிகளைக் கொடுத்திருந்தார். அவை குறித்த நேரத்தில் நடைபெற வேண்டும் என்பதில் கவனம் கொண்டிருந்தார். இது போலவே தான் பொதுவாழ்க்கையில் ஈடுபடுகிறவர்களிடமும் பொதுமக்களிடமும் அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்த கவனமின்மையை அவர் சுட்டிக்காட்டுகிறார். சகிப்புத்தன்மையற்று நடந்து கொள்வதைக் கண்டிக்கிறார்.
அதிகம் எதிர்பார்ப்பது என்பது பெற்றோரின் மனநிலை. தந்தையோ தாயோ தன் பிள்ளைகளிடம் அதிகம் எதிர்பார்ப்பு கொள்கிறார்கள். காரணம் அவ்வளவு திறமையும் அறிவும் பிள்ளைகளுக்கு உண்டு என்று நம்புகிறார்கள். அதற்கேற்ப உழைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். காந்தியின் எதிர்பார்ப்பும் அத்தகைய ஒன்றே.
அவர் அன்றாடப் பணிகள் துவங்கி தேசத்தின் எதிர்காலம் குறித்த திட்டங்கள் வரை அத்தனையும் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும் என்று நினைத்தார். ஒரு பணி செய்யப்படும் போது என்ன வகையான இடையூறு உருவாகும். அதை எப்படி எதிர்கொள்வது. மாற்றுவழி என்ன என்பது குறித்து விரிவாகத் திட்டமிட்டவர் காந்தி. ஆகவே தான் அவரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் தடைப்படவில்லை. ஒருவரைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டாலும் மற்றவர் தலைமை ஏற்றுப் போராட்டம் நடத்துவார். சத்தியாகிரகம் மேற்கொள்வார்.
அதிக எதிர்பார்ப்பினை ஏன் மற்றவர்கள் பூர்த்திசெய்யவில்லை. முக்கியக் காரணம் தண்டனைகள் எதுவும் கிடையாது. மேலும் அதிக எதிர்பார்ப்புக்களைச் செய்து முடித்துவிட்டதற்கு வெகுமதிகளும் கிடையாது. இரண்டும் ஒருவனின் காரியங்களைக் கெடுத்துவிடும் என்று காந்தி நினைத்தார். உங்கள் கடமையை நீங்கள் செய்கிறீர்கள். அதைப் பூரண உணர்வோடு செய்கிறீர்கள். பிறருக்காகச் செய்கிறீர்கள் என்பது தான் அதன் அடிப்படை. அதைப் புரிந்த கொள்ளாதவர்கள் காந்தியை அராஜகவாதி என்று குற்றம்சாட்டினார்கள்.
காந்தி வழக்கறிஞராக இருந்த போதும் குற்றவாளி என அறிந்த ஒருவருக்காக ஒருபோதும் வாதிட்டதில்லை. திருடனுக்காகப் பரிந்துபேசியதில்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக நியாயத்திற்கு மாறாக ஒரு போதும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டதில்லை
ஒரு முறை ஒரு திருடன் அவரிடம் தனக்காக வாதிட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது திருட்டுத் தவறு என்று தெரிந்தும் ஏன் திருடுகிறாய் என்று காந்தி கேட்டார். அதற்கு அவன் நான் வாழ வேண்டும் என்று தீர்மானமான குரலில் பதில் சொன்னான். அதைக் கேட்ட காந்தி ஏன் என்று பதில் கேள்விகேட்டார்.
இந்த ஏன் என்ற கேள்வி எளிதானதில்லை.
நீங்கள் ஏன் உயிர்வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் சுயமாகக் கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வியது. அதன் பொருள் உங்கள் வாழ்க்கைக்கு என்ன பயன் இருக்கிறது. யாருக்காக, எதற்காக நீங்கள் உயிர் வாழுகிறீர்கள். வெறும் சுகபோகங்களை அனுபவிப்பது மட்டும் தான் வாழ்க்கையா என்பது அதற்குள் அடங்கியிருக்கிறது.
இந்த ஏன் என்ற கேள்விக்குத் திருடனிடம் பதில் இருக்காது. ஆனால் அந்தக் கேள்வியை எழுப்புவதன் மூலம் காந்தி அவன் மனசாட்சியைத் தொட முயல்கிறார்.
இதே கேள்வியைத் தான் தன்னைப் பின்தொடருகிறவர்களிடம் காந்தி கேட்டார். உங்கள் வாழ்க்கையின் பயனாக எதை நினைக்கிறீர்கள் என்பதே அவரது வினா.. அதற்கான பதிலாகவே அவரது பொதுவாழ்க்கை அமைந்திருந்தது. அதிகாரத்தாலும் மிரட்டலாலும் ஒரு மனிதனை நேர்மையானவனாக மாற்றிவிட முடியாது. அவன் மனசாட்சியோடு பேசி அவனை உணரச்செய்வதே வழி என்று நினைத்தார் காந்தி. அது அதிகமான எதிர்பார்ப்பு தான்.
மந்தை மனநிலை கொண்ட மக்களிடம் மனசாட்சியின் படி நடந்து கொள்ளச் சொன்னது விந்தையானது. பெரும்பான்மை மனிதர்களுக்கு தாங்கள் தவறு செய்கிறோம் என்ற சுய உணர்வு கூட இருப்பதில்லை. அதைவிடவும் ஏதாவது காரணம் சொல்லி பெருந்தவறுகளை கூட நியாப்படுத்தவே முயற்சிக்கிறார்கள். குற்றம் சொல்லும் மனநிலை பெருகி இருக்கிறதேயன்றி மாற்று செயல்பாடுகள் குறைவே
இந்திய மக்களிடம் காந்தி உண்மையில் மிக அதிகமான எதிர்பார்ப்பு கொண்டிருந்தார். அவர்கள் மதச்சண்டை. இனச்சண்டை என மோதிக் கொள்ளும் போது அதற்குத் தண்டனையாகக் காந்தி தன்னை வருத்திக் கொண்டார். அவரது உண்ணாவிரதங்கள் யாவும் இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நடந்தவையே.
தன் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும் போது காந்தி மனம் வருந்தினார். எங்கே தவறு நடக்கிறது என்று சுயபரிசோதனை செய்து கொண்டார். தன் பக்கம் தவறு இருந்தால் அதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டார்
அவர் இந்தியர்களை ஏமாற்றவிரும்பவில்லை. பொய் வாக்குறுதிகள் தரவில்லை. அவர்களின் பலத்தை, வலிமையை அவர்களுக்கே அடையாளம் காட்டினார்.
காந்தி தனது முடிவுகளின் மீது பிடிவாதமான பற்றுக் கொண்டிருந்தார். அதே நேரம் விவாதத்திற்கான வாசலை எப்போதும் திறந்தே வைத்திருந்தார். தான் மேற்கொள்ளும் முயற்சி பிழை என்று உணர்ந்தால் உடனே கைவிட அவர் தயங்கியதேயில்லை.
மிலியோடு நடந்த விவாதம் ஒன்றில் காந்தி புறத்தோற்றத்தை யதார்த்தம் என்று தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள் என்று குறிப்பிடுகிறார்.
எத்தனை உண்மையான வார்த்தை.
ஐரோப்பியர்கள் பலரும் அன்று புறத்தோற்றத்தை வைத்து இது தான் இந்தியா என்றே புரிந்திருந்தார்கள். ஆனால் காந்தி புறத்தோற்றத்தைக் கடந்து இந்தியாவினை ஆழமாகப் புரிந்து கொண்டிருந்தார்.
இந்தியப் பண்பாட்டினை புறத்தோற்றத்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியாது. இதயத்தின் வழியே தான் அதை உணர முடியும். சில நம்பிக்கைகள் ஆழமாக மனதில் வேர்விட்டிருப்பவை. அவற்றை வெளியாட்கள் காணும் போது கேலிப்பொருள் போலவே தான் தோன்றக்கூடும். கண்ணால் பார்த்து கடலின் உப்புத்தன்மையை அறிந்து கொள்ள முடியுமா என்ன.
நம் வாழ்க்கையைப் பொருட்களால் நிறைத்துக் கொண்டால் அதன்பின்பு நம்மால் எப்போதும் மகிழ்ச்சி அடைய முடியாது மகிழ்ச்சி என்பது உங்களால் எவ்வளவு கொடுக்க முடிகிறது என்பதில் தானிருக்கிறது. எவ்வளவுபெற்றுக் கொள்ள முடிகிறது என்பதில் இல்லை . உங்களுக்கு எதுவெல்லாம் முக்கியம் என்று உங்கள் மதிப்பீடுகளை மாற்றிக் கொள்ளாதவரை உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது, பிறருக்கு மகிழ்ச்சி அளிக்கவும் முடியாது என்று காந்தி மிலியிடம் ஒரு விவாதத்தின் போது கூறுகிறார்.
இது வெறும் அறிவுரையில்லை. காந்தி தனக்கு எதுவெல்லாம் முக்கியம் என்பதை அறிந்திருந்தார். ஆகவே தான் பொருள்சேர்ப்பதில் விருப்பம் கொள்ளாத மனிதராக வாழ்ந்தார்.
ஒருமுறை மனச்சோர்வு கொண்டிருந்த மிலியிடம் காந்தி சொன்னார்
“உன்னுடைய கற்பனை உன்னைக் கோழையாக்குவதை நீ அனுமதிக்கிறாய். எங்கே உனது நம்பிக்கை ?. உனக்கே நீயே உண்மையாக இல்லையென்றால் எப்படி வாழுவாய்:?“
உனக்கே நீ உண்மையாக இருக்கிறாயா ? என்பது மிலிக்கு மட்டுமில்லை. இந்தியர்கள் அனைவரும் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியே.
•••