காந்தியின் நிழலில் 6 இன்றைய தேவை.

காந்தி இன்றிருந்தால் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவாரா என்றொரு கேள்வியை தினேஷ் என்ற கல்லூரி மாணவர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார்.

நிச்சயம் பயன்படுத்துவார். காந்தியின் காலத்திலிருந்த தந்தி, கடிதம், தொலைபேசி எல்லாவற்றையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார் தானே. ஆனால் எப்படிப் பயன்படுத்தினார் என்பதில் தான் அவரது தனித்துவமிருக்கிறது.

நம்மில் பெரும்பான்மையினர் சமூக ஊடகங்களின் வழியே  மனதிலுள்ள வெறுப்பை, கசப்பை, எதிர்மறையான எண்ணங்களைப் பொதுவெளியில் கக்குவது போல அவர் ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டார்.

சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு தனிநபர் உறவில் பெரிய இடைவெளி உருவாகிவிட்டது. யாரும் இப்போது நண்பர்களைத் தேடிச் செல்வதில்லை. நாலைந்து நண்பர்கள் ஒன்று கூடிப் பேசுவதில்லை. குடும்பத்துடன் ஒருவர் வீட்டிற்கு மற்றவர் சென்று உணவு உண்டு பேசி சந்தோஷமாக நாளைக் கழிப்பதில்லை. பக்கத்துவீட்டுக்காரருடன் கூடப் பேஸ்புக்கில் தான் நண்பராக இருக்கிறார்கள். நேரடி உறவே கிடையாது.

ஆனால் காந்தி நேரடி உறவில் அக்கறை கொண்டவர். மனிதர்களை ஒன்று திரட்டுவது எளிதான விஷயமில்லை. அதுவும் வேறுவேறு விதமான சமூகப்பின்புலம் கொண்ட மனிதர்களை ஒரே இடத்தில் ஒரே விஷயத்தின் பொருட்டு ஒன்று சேர்ப்பது எளிய விஷயமில்லை. கஷ்டப்பட்டு முயற்சி செய்தால் ஒரு முறை ஒன்று சேர்க்கலாம். ஆனால் விரும்பிய நேரமெல்லாம் காந்தியால் ஒன்று சேர்க்க முடிந்திருக்கிறது என்றால் காந்தியின் குரலுக்குச் செயலுக்கு அத்தனை மதிப்பிருந்தது என்று தானே அர்த்தம்.

உங்களுக்குப் பேஸ்புக்கில் ஐந்தாயிரம் நண்பர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களை ஒட்டுமொத்தமான ஒருமுறை கூட நீங்கள் பார்க்கவோ, ஒன்று திரட்டவோ முடியாது. ஆனால் காந்தியால் அதைச் செய்ய முடியும். அவர் தகவல் தொடர்பு விஷயங்களை  மக்களை ஒன்று திரட்டுவதற்குத் தான் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

தனது வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களுக்காகக் காந்தி மக்களை ஒன்று திரட்டிக் கொண்டேயிருந்தார். அதற்காக நிதி திரட்டினார். பயணம் மேற்கொண்டார், கடிதம் எழுதினார். மேடையில் பேசினார். காந்தியைப் போல யாராலும் மக்களை ஒன்று சேர்க்க முடியாது என்பதே நிஜம்.

காந்தியின் அழைப்பு இல்லாமலே அவரைக்காணவும் அவரது பேச்சைக் கேட்கவும் ஆயிரக்கணக்கில் மக்கள் காத்துக்கிடந்தார்கள். சில ரயில் நிலையங்களில் இரவெல்லாம் மக்கள் உறங்காமல் காத்திருந்தது வரலாறு. எது காந்தியின் குரலுக்கு மக்களை ஒன்று திரள வைத்தது. அவரது குரலிலிருந்த சத்தியம். நேர்மை, பொதுநலனிற்கான விஷயம் என்ற நோக்கம் இவையே மக்களை அவரது அழைப்பிற்குச் செவிசாய வைத்தது..

இன்று அரசியலில் ஒருவர் தலைவர் ஆகிவிட்டால் எளிய மக்களிடமிருந்து விலகிப் போக ஆரம்பித்துவிடுவார். பின்பு அவரைச் சந்திப்பதோ, பேசுவதோ, கடிதம் எழுதுவதோ இயலாத விஷயம்.

ஆனால் காந்தி தேசத்தின் ஒப்பற்ற தலைவராக இருந்த போதும் சாமானிய மனிதர்களின் கடிதங்களுக்கு முறையாகப் பதில் எழுதினார். ஒன்றிரண்டில்லை ஆயிரக்கணக்கான கடிதங்கள். தன் கைப்பட பதில் எழுதினார்.

அதில் ஒரு கடிதம் சென்னையிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. ஒரு பெண்மணி தனது கணவன் இன்னொரு இளம் பெண்ணோடு ஓடிப்போய்விட்டார். இனி தன் எதிர்காலம் என்னாவாகும் என்று பயமாக உள்ளதாகக் கடிதம் எழுதியிருக்கிறார். இதற்குப் பதில் எழுதிய காந்தி இனி உங்கள் வாழ்க்கை பொது விஷயங்களுக்கானது. மக்களுக்கு உதவும் நற்காரியங்களில் ஈடுபடுங்கள் என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார்.

இன்னொரு கடிதம் தன் மகன் காந்தியின் வழியில் நடப்பதாகச் சொல்லி திருமணம் செய்து கொள்ள மறுக்கிறான். அவனைத் திருமணம் செய்து கொள்ளும்படி கடிதம் எழுதுங்கள் என ஆந்திராவிலிருந்து ஒரு தந்தை கடிதம் எழுதியிருக்கிறார். அந்த இளைஞனுக்குத் திருமணம் செய்து கொள்ளக் காந்தி கடிதம் எழுதுகிறார்.

இப்படி அன்றாட விஷயம் துவங்கி முக்கியமான அரசியல் பிரச்சனை வரை ஆயிரமாயிரம் கடிதங்கள் எழுதியிருக்கிறார். இதுமட்டுமின்றிப் பத்திரிக்கைகளில் வெளியான கட்டுரைகளுக்குத் தனது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தும் கடிதங்களையும் தொடர்ந்து எழுதியிருக்கிறார். எழுதுவதற்காகத் தனியே நேரம் ஒதுங்கிக் கொண்டார். ரயில் பயணத்தில் கூடக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இன்று காந்தி இருந்திருந்தால் சமூக ஊடகங்களைக் கொண்டு மக்களைப் போராட்ட களத்திற்குக் கொண்டு வருவதே அவரது வழியாக இருந்திருக்கும். அதுவும் சாத்வீகமான வழியில், அறவழிப் போராட்டத்தை நடத்தவே அவர் முயன்றிருப்பார்.

முந்தைய காலங்களில் டீக்கடைகளில் அரட்டை அடிப்பவர்கள் கூட ஆபாசமான சொல்லைப் பயன்படுத்தமாட்டார்கள். ஆனால் இன்று பேஸ்புக் போன்ற ஊடகங்களில் ஆபாச சொற்கள் கொட்டிக்கிடக்கின்றன. சரளமாக ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொள்கிறார்கள். இதைக் காந்தி ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார். அனுமதிக்கவும் மாட்டார். எதிரியைக் கூட அவர் வசைச்சொல்லால் குறிப்பிட்டதில்லை.

சமூகச் சீர்திருத்தவாதிகளில் பலரும் மக்களின் சிந்தனையைத் தான் முதன்மையாக மாற்ற முயன்றார்கள். ஆனால் காந்தி சிந்தனையில் மட்டும் மாற்றம் ஏற்பட்டால் போதாது அந்த மனிதனின் உடை, உணவு, வாழ்க்கைமுறை. அன்றாடச் செயல்பாடுகள் வரை அத்தனையிலும் மாற்றம் உருவாக வேண்டும் என்று விரும்பினார். காரணம் எளிய மனிதர்கள் சிந்தனையில் மாற்றம் உருவாவதை உடனே அனுமதிக்கமாட்டார்கள்.

ஆனால் பழக்கவழக்கங்களை மாற்றச் சொன்னால் மாற்றிக் கொள்ள ஆரம்பிப்பார்கள். ஆசிரம வாசிகளில் பலரும் காந்தி சொல்வதற்கு முன்னால் தன் கழிப்பறையைத் தான் சுத்தம் செய்தவர்களில்லை. ஆனால் ஆசிரம வாழ்க்கையின் மூலம் அதை இயல்பான செயலாகக் காந்தி மாற்றிக்காட்டினார். இது போலவே கதர் உடைகள் பற்றியும் ராட்டையின் மூலம் நூல் நூற்பதை பற்றியும் எளிய மனிதர்களை யோசிக்கவும் செயல்படவும் செய்தார்.

அம்புஜம்மாள் எழுதிய மகாத்மா காந்தி நினைவு மாலை நூலில் காந்தி தமிழ்நாட்டிற்கு வந்த போது அவருக்கு அம்புஜம்மாள் வீட்டில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதை நினைவு கூர்ந்து எழுதியிருக்கிறார்.

அந்த விருந்தில் வெந்த மணிலாக்கொட்டை, தேங்காய் வழுக்கல், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை பேரீச்சம்பழம்,பாதாம்பருப்பு நீர்மோர் இளநீர் மற்றும் பானகம் இவையே வைக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கிண்ணங்கள் கிடையாது. விதவிதமான இனிப்பு வகைகள் கிடையாது. ஆனால் இந்த எளிய உணவைத் தான் காந்தி விரும்பி சாப்பிட்டார். என்கிறார்.

ஏன் காந்தி இவ்வளவு எளிய உணவை பெரும்விருந்தாக நினைக்கிறார். உணவின் தேவை உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்று அவருக்குத் தெரியும். ஆடம்பரமான விருந்தை அவர் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவேயில்லை. லண்டனில் வசித்தபோதும் அவர் சைவ உணவைத் தான் கைக்கொண்டார். ஆனால் காந்தி தான் நிறையச் சாப்பிடக் கூடியவன் என்றே தன்னைப் பற்றிக் கூறிக் கொள்கிறார். அவரது சாப்பாட்டில் இருந்த நெய் தான் அவரது ஆடம்பரம்.

காந்தி நீண்டதூரம் ரயிலில் பயணம் செய்யும்போது அவருக்கான உணவை இன்னொரு பெட்டியில் தயாரித்துக் கொண்டுவந்து அவருக்கு வழங்கியிருக்கிறார்கள். கடையில் விற்பனை செய்யப்படும் உணவுகளை அவர் விரும்பியதில்லை. பல்செட் பொருத்திக் கொண்டிருந்த காரணத்தால் கடினமாக உணவு வகைகளை அவரால் மென்று சாப்பிடவும் இயலவில்லை. ஆகவே அவருக்கு மிருதுவான ரொட்டிகள் தயாரிக்கப்பட்டன.

வார்தா ஆசிரமத்தில் எந்தக் கதவிற்கும் தாழ்ப்பாள் கிடையாது. கழிப்பறைகள் கூடத் தாழ்ப்பாள் இல்லாமல் தானிருந்தன. ஆசிரமவாசிகளும் தங்கள் பெட்டிகளைப் பூட்டக்கூடாது.. ஒரு தட்டு, இரண்டு கிண்ணங்கள் ஒரு வாளி. ஒரு ராட்டை, சில புத்தகங்கள். ஒரு படுக்கை இவை தான் ஆசிரமவாசியின் உடைமைகள்.

ஆசிரமத்தில் சாதம், ரொட்டி, பருப்பு, அரை உப்பு போட்ட காய்கறிகள் தயிர் இவையே உணவாக வழங்கப்பட்டன. உறைப்புப் புளிப்புத் தாளிப்புக் கிடையாது. இந்த உணவு ஒத்துக் கொள்ளாதவர்களுக்குக் காந்தியின் கச்சா கானா என்ற காய்கறிகள் பழங்கள் மட்டுமே உணவாகக் கொள்ளும் முறை சிபாரிசு செய்யப்பட்டது. அம்புஜம்மாள் கச்சா கானா உணவு முறையைப் பின்பற்றியதைப் பற்றி எழுதியிருக்கிறார். இதில் சென்னையிலிருந்து வந்தவர்களுக்கு விதிவிலக்காக மதராஸ் ரசம் வைத்துக் கொள்ள அனுமதி இருந்தது என்கிறார் அம்புஜம்மாள்.

ஆசிரமத்தில் வசித்த வெள்ளைக்காரர்களுக்கு மட்டும் இந்த உணவில் சிறிது விதிவிலக்குத் தரப்பட்டிருந்தது. அவர்களுக்கு ரொட்டியும் வெண்ணெய்யும் உண்டு. ஆனால் மாமிசம் கிடையாது. எந்த மதுவகையும் அனுமதிக்கப்படாது,

இப்படி ஒரு அரசியல் தலைவர் விருந்து சாப்பிட்டிருப்பார் என்பது இன்று கற்பனையாகத் தோன்றக்கூடும். ஆனால் அது தான் நிஜம்.

தனக்கு வந்த பல்வேறு மொழிக்கடிதங்களைப் படித்துக் கேட்பதைக் காந்தி அன்றாட வழக்கமாக வைத்திருந்தார். இந்தக் கடிதங்களைப் பிரித்து அடுக்கி வைப்பது ஆசிரம ஊழியர்களின் வேலை. கடிதங்களுக்கு அவர் எழுதும் பதில்கள் மிகச்சுருக்கமாகவும் ஆற்றுப்படுத்துவது போலவும் இருக்கும். அந்தக் காலத்தில் பத்திரிக்கைகளில் ஒருவரைப் பற்றிய வெளியான செய்திகளைச் சேகரிக்க வேண்டும் என்றால் அந்தப் பத்திரிக்கை அலுவலகமே குறிப்பிட்ட பணத்தை வசூல் செய்து கொண்டு சம்பந்தப்பட்ட செய்திகளைத் துண்டுகளாக்கி அனுப்பி வைப்பார்கள். காந்தி இப்படித் தன்னைப்பற்றி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான செய்திகளைப் பணம் செலுத்திப் பெற்று முறையாக ஆவணப்படுத்தியிருக்கிறார்.

தன்னைப் பற்றி விஷயங்களை ஆவணப்படுத்துவதில் காந்தி மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். முக்கியக் காரணம் யார் வேண்டுமானாலும் எப்போதும் அதை அறிந்து கொள்ளலாம் என்ற பகிரங்கதன்மை. இன்னொன்று சான்றுகளுடன் எதையும் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை.

காந்தியின் கடிதங்கள் டெல்லியிலுள்ள காந்தி ம்யூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றைக் காணும் போது இவற்றை எப்படிப் பாதுகாத்து வைத்திருந்தார் என்று வியப்பாகவே உள்ளது. ஆரம்பக் காலங்களில் காந்தியின் கையெழுத்து அத்தனை அழகாக இருந்திருக்கிறது. ஆனால் தொடர்ந்து எழுத்துவேலைகள் அதிகமானபிறகு அவரது கையெழுத்தில் மாற்றம் உருவாகித் தெளிவற்றதாக மாறியுள்ளது.

கணக்கு வழக்குகளைப் பைசா சுத்தமாக அவர் பதிவேட்டில் எழுதி வைத்திருக்கிறார். எந்த ஒன்றுக்கும் ஒரு பைசா அதிகமாகச் செலவிட்டதில்லை. அது போலவே வரவேண்டிய பணத்தை விட்டுக் கொடுத்ததுமில்லை. அவருக்காக நாடகம் போட்டு வசூல் செய்வதாகச் சொன்னால் நாடகத்திற்கு வசூல் வந்தாலும் வராவிட்டாலும் பணத்தைத் திரட்டிக் கொடுங்கள் என்று கட்டாயப்படுத்தவே செய்திருக்கிறார். காரணம் அந்தப் பணத்தைக் கொண்டு அவர் பொதுக்காரியம் எதையாவது திட்டமிட்டிருப்பார்.

பொதுமக்களிடமிருந்து தானமாகப் பெற்ற நகைகளை அவர் ஏலம்விட்டு அதில் கிடைக்கும் தொகையைப் பொது நலக்காரியங்களுக்குச் செலவிட்டு வந்தார். அப்படியான ஏலம் நடக்கும் போது எவ்வளவு அதிகமான தொகைக்கு நகையை விற்க முடியுமோ அவ்வளவு விற்பார். அப்போது தான் அவர் ஒரு வணிகக் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பது தெரியும் என்கிறார் அம்புஜம்மாள்.

ஆசிரமத்தில் அன்றாடம் இரவு ஒவ்வொருவரும் எவ்வளவு நூல் நூற்றிருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பார்கள். அது ஒரு ரிஜிஸ்தரில் குறிக்கப்படும். எந்த வேலையில் தவறினாலும் காந்தி மன்னித்துவிடுவார். ஆனால் பிரார்த்தனை மற்றும் தினசரி நூல் நூற்பது இந்த இரண்டில் தவறினால் காந்தி மன்னிக்கவே மாட்டார் என்கிறார் அம்புஜம்மாள். காந்தியின் நடையே ஒட்டம் போலத் தானிருக்கும். அவருக்கு ஈடு கொடுத்து நடப்பது இயலாத காரியம் என்கிறார்.

காந்தியிடம் இன்றைய தலைமுறை கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது என்று ஒரு நண்பர் சொன்னார். முதல் விஷயம் சகிப்புத்தன்மை. எதிரியிடம் கூடப் பண்பாடாகப் பேசவும் எழுதவும் முடியும் மனப்பாங்கு. நற்செயல்களை நிறைவேற்ற உறுதியான பிடிவாதம் பிடிப்பது. ஆரோக்கியமான கோபம். கூட்டு வாழ்க்கையினை முன்னெடுப்பது. எளிமையைத் தனது இயல்பாகக் கொள்வது என்பதாகும்

நேர்மையின் அடையாளம் காந்தி என்கிறோம். அன்று காந்தி மட்டுமில்லை. பொதுவாழ்விலிருந்த பலரும் நேர்மையின் அடையாளமாகவே இருந்தார்கள். காந்தி நேர்மையோடு சத்தியத்தையும் அறக்கோட்பாடுகளையும் உயர்த்திப்பிடித்தார். காந்தியர்கள் இன்றும் அந்த அறவாழ்க்கையைத் தான் வாழுகிறார்கள்.

லண்டனில் காந்தி படித்துக் கொண்டிருந்த நாட்களில் அவருக்கு யாராவது வீட்டிலிருந்து கடிதம் எழுதினார்களா, அல்லது அவர் லண்டன் வாழ்க்கையின் சிரமங்கள் பற்றி வீட்டிற்கு ஏதாவது கடிதம் எழுதியிருக்கிறாரா என்று தேடிப்பார்த்தேன். என்னால் கண்டறிய முடியவில்லை. ஒருவேளை காந்திய ஆய்வாளர்கள் கண்டறிந்து சொல்லக்கூடும். இங்கிலாந்தில் அவர் பயின்ற நாட்களில் அதிக நண்பர்களில்லை. நேருவிற்கும் தாகூருக்கும் குடும்பத்திலிருந்து வந்தது போல நிறையக் கடிதங்கள் வரவில்லை. பொழுதுபோக்குகளில் அவர் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் காந்தி தன்னை ஏன் உலகம் ஒதுக்கி வைத்திருக்கிறது என்று புலம்பவில்லை. சோர்ந்து போய்விடவில்லை. அவர் தன்னை வளர்த்துக் கொண்டேயிருந்தார். தென்னாப்பிரிக்கா தான் அவரைத் தலைவராக உருவாக்கியது. இந்திய சுதந்திரப் போராட்டம் அவரை உன்னத மனிதராக்கியது.

காந்தியின் கைத்தடியைப் பற்றிக் கொண்டு ஒரு சிறுவன் கடற்கரையில் அவருடன் நடப்பது போன்ற ஒரு புகைப்படமிருக்கிறது. அந்தப் புகைப்படத்தைக் காணும் போதெல்லாம் நானும் அது போன்ற ஒரு சிறுவனே என்று தோன்றும். நீங்கள் காந்தியின் கைத்தடியைப் பற்றிக் கொண்டு அவருடன் நடக்கத் துவங்கினால் அவர் அழைத்துச் செல்லும் உலகம் வேறானது. அது உங்கள் ஆளுமையை மாற்றிவிடும் . மழையில் நனைந்தவர்கள் குளிர்ச்சியை உடல் முழுவதும் உணர்வது போல நீங்கள் காந்தியோடு பயணித்தால் காந்திய எண்ணங்களால் நிரப்பப்படுவீர்கள். காந்தியின் ஒரு துளியாகவே உங்களை உணர்வீர்கள்

••

0Shares
0