காந்தியின் பாடல்

காந்தியடிகளால் விரும்பி பாடப்பட்ட வைஷ்ணவ ஜன தோ பாடலைப் பற்றி Gandhi’s Song என்ற புதிய ஆவணப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இரவில் அந்த ஆவணப்படத்தைப் பார்த்தேன். மாயங்க் சாயா எழுதி இயக்கியிருக்கிறார். நேர்த்தியான ஆவணப்படம். துஷார் காந்தியின் நேர்காணல் படத்தின் தனிச்சிறப்பு.

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசிங் மேத்தாவால் எழுதப்பட்ட இந்த குஜராத்தி மொழிப்பாடல் “பிறர் படும் துயரைத் தனதெனக் கருதுபவன் எவனோ, அவனே உண்மையான வைஷ்ணவன்” என்பதை விளக்குகிறது.

இந்த ஆவணப்படம் நர்சிங் மேத்தாவின் வாழ்க்கை மற்றும் இப் பாடலின் பொருளை விளக்குவதுடன்  அதன் வரலாற்றுச் சிறப்பினையும் ஆவணப்படுத்தியிருக்கிறது.  இந்தியாவை ஒன்றிணைத்த இந்த பாடல் எவ்வாறு மதச்சார்பின்மையின் அடையாளமாக விளங்குகிறது என்பதை விவரிக்கிறார்கள்.

1907 ஆம் ஆண்டில் காந்தி தனது பிரார்த்தனையில் இந்த பாடலை இணைத்துக்கொண்டார். அதன் பிறகு இப்பாடல் இந்தியா எங்கும் புகழ்பெறத்துவங்கியதுடன் காந்தியின் அடையாளப் பாடலாகவும் மாறியது.

இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் பலரும் இப்பாடலைப் பாடியுள்ளனர். எம்.எஸ் பாடிய பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது.

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே பாடலின் தமிழ் வடிவத்தை நாமக்கல் கவிஞர் மொழியாக்கம் செய்திருக்கிறார். அது இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.

வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்

வகுப்பேன் அதனைக் கேளுங்கள்…

பிறருடையத் துன்பம் தனதென எண்ணும்

பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்;

உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான்

உண்மை வைஷ்ணவன் அவனாகும்;

உறவென மனிதர்கள் உலகுள யாரையும்

வணங்குபவன் உடல்மனம் சொல்இவற்றில்

அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்;

அவனை பெற்றவள் அருந்தவத்தாள்.

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை

விளங்கி ஆசைகள் விட்டவனாய்

ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென

உணர்வான் வைஷ்ணவன்; தன் நாவால்

உரைப்பதிற் பொய்யிலன்; ஒருபோ தும்அவன்

ஊரார் உடைமையைத் தொடமாட்டான்;

வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ

அவனே உண்மை வைஷ்ணவனாம்.

மாயையும் மோகமும் அணுகா தவனாய்

மனத்தினில் திடமுள வைராக்கியன்;

நாயக னாகிய ஸ்ரீரா மன்திரு

நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து

போய், அதில் பரவசம் அடைகின்ற அவனுடைப்

பொன்னுடல், புண்ணிய தீர்த்தங்கள்

ஆயன யாவையும் அடங்கிய க்ஷேத்திரம்

ஆகும்; அவனே வைஷ்ணவனாம்.

கபடமும் லோபமும் இல்லா தவனாய்க்

காம க்ரோதம் களைந்தவனாய்,

தபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத்

தரிசிப் பவரின் சந்ததிகள்

சுபமடைவார்கள்; எழுபத் தோராம்

தலைமுறை வரையில் சுகமுறுவர்;

அபமறப் புனிதம் அடைகுவர்; பிறப்பெனும்

அலைகடல் நீந்திக் கரைசேர்வார்.

ஆவணப்படத்தின் இணைப்பு :

https://youtu.be/-UiYwp1ZT4g

0Shares
0