கானகத்தின் குரல்

ஜாக் லண்டனின் The Call of the Wild நாவல் 1958லே பெ.தூரன் மொழியாக்கத்தில் கானகத்தின் குரல் என்ற பெயரில் வெளியாகியுள்ளது..

பக் என்ற நாயின் வரலாற்றை விவரிக்கும் கானகத்தின் குரல் சுவாரஸ்யமான புத்தகம். அலாஸ்காவில் தங்க வேட்டைக்குப் போனவர்களின் கதையைச் சொல்வதுடன் பனிச்சறுக்கு வண்டி இழுத்துச் செல்லும் நாயின் கதையினை அழகாக விவரித்திருக்கிறார் ஜாக் லண்டன்

இந்த நாவல் நான்கு முறை ஹாலிவுட்டில் படமாக்கபட்டிருக்கிறது. Clark Gable நடித்து 1935ல் வெளியான படத்தையும் Charlton Heston நடித்து 1972ல் வெளியான The Call of the Wild படத்தையும் பார்த்திருக்கிறேன். தற்போது இந்த நாவல் ஹாரிசன் போர்ட் நடிப்பில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நேற்றிரவு அப்படத்தைப் பார்த்தேன்.

சமீபத்தில் வெளியான Togo படத்தில் நாய்கள் இழுத்துச் செல்லும் வண்டியில் பயணிக்கும் காட்சி மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. அந்தப்படம் தந்த அனுபவத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இதில் காணப்படவில்லை. ஆனால் படத்தில் ஒன்றிரண்டு அழகாகத் தருணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன..

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடக்கும் கதை.

குறிப்பாகப் பக் நீதிபதியின் வீட்டில் வசித்த நாட்களில் அது மாடிப்படிகளில் தாவி வரும் காட்சியும் பிறந்தநாள் விருந்தினை சூறையாடும் காட்சியும் அழகாக உருவாக்கப்பட்டிருந்தது. நீதிபதி வீட்டிலிருந்த பக் கடத்தப்பட்டு ஒரு சரக்குக் கப்பலில் அலாஸ்காவின் யூகோனுக்கு அனுப்பப்படுகிறது, முதன்முறையாக அது கப்பலில் நின்று துறைமுகத்தைக் காணும் காட்சியும் அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது.

அது போலவே பக் முதன்முறையாகப் பனியில் காலை வைக்கிறது. புதிய அனுபவம். அது காலை ஊன்றாமல் பனியை வெறித்துப் பார்த்தபடியே இருக்கிறது. பனியில் நடக்க அனுபவமில்லாத பக் எப்படிப் பின்னாளில் பனிச்சறுக்கு வண்டியினைத் தலைமையேற்று இழுத்துப் போகப்போகிறது என்பது கதையின் மையப்புள்ளியாகும்

பனிப்பிரதேசத்திற்குள் தபால் கொண்டு செல்லும் வண்டியில் செல்லும் பக் இரவில் தாங்கமுடியாத குளிரில் கூடாரத்திற்குள் நுழைய முயல்கிறது. ஆனால் அதைத் துரத்திவிடுகிறார்கள். இரவில் அது பனியில் குழி தோண்டி படுத்துறங்கும் அனுபவமும், தனக்கு உரியத் தலைமை இடத்தைக் கைப்பற்ற பக் முயற்சிப்பதும் அந்த இடம் கிடைத்தவுடன் அதன் முகத்தில் தெரியும் உற்சாகமும் அழகான தருணங்கள்

ஒரு கறுப்பு ஓநாய் அவர்களின் பயணங்கள் முழுவதும் அவரது வழிகாட்டியாகச் செயல்படுகிறது. தபால் சேவை நிறுத்தப்பட்டதால் பக் விற்கப்படுகிறது. அதை வாங்கிய புது எஜமானன் மிக மோசமாக நடத்துகிறான். அடித்து நொறுக்குகிறான். இதைக் கண்ட தார்ன்டன் அதை மீட்டு தன்னோடு வைத்துக் கொள்கிறார். தங்கம் தேடி அவர்கள் ஆற்றில் பயணிக்கிறார்கள். பள்ளத்தாக்கில் ஒரு மரவீட்டில் தங்குகிறார்கள். மகிழ்ச்சியாக வாழுகிறார்கள். எதிர்பாராமல் ஒரு இடத்தில் தங்கம் கிடைக்கிறது. அந்த மரவீட்டில் தாண்டர்னும் பக்கும் மிகச் சந்தோஷமாக இருக்கிறார்கள். அந்தப் பகுதி படத்தில் நன்றாகவுள்ளது.

பக் செய்தித்தாளைப் படித்ததில்லை. ஒருவேளை படித்திருந்தால் தன்னைப் போன்ற நாய்களுக்குத் தொல்லை உருவாகிவருகிறது என்பதைத் தெரிந்து கொண்டிருக்கும் என்று தான் கானகத்தின் குரல் நாவல் துவங்குகிறது. சாண்டா கிளரா பள்ளத்தாக்கில் ஒரு நீதிபதி வீட்டில் செல்லப்பிராணியாக வாழுகிறது பக். அந்தக் காட்சிகளை ஜாக் லண்டன் சிறப்பாக எழுதியிருப்பார்.

ஜாக் லண்டனே கூடத் தங்க வேட்டைக்காகப் போனவர் தான். Klondike Gold Rush பற்றி வெப்சீரியஸ் கூட வந்துள்ளது. சாப்ளின் இயக்கிய Gold Rush படத்தில் தங்க வேட்டைக்குச் செல்பவர்கள் பசியால் எப்படி அவதிப்படுகிறார்கள் என்பதை அழகான காட்சி மூலம் காட்டியிருப்பார். அதில் பசித்த மனிதனுக்குச் சாப்ளின் ஒரு கோழி போலக் கண்ணில் தெரிவார். மறக்கமுடியாத காட்சியது

ஜாக் லண்டன் தனது The Call of the Wild நாவல் மூலம் பக் என்ற நாயை மறக்கமுடியாத கதாபாத்திரமாக உருவாக்கிவிட்டார். இந்த நாயிற்குச் சிலை கூடச் செய்து வைத்திருக்கிறார். உண்மையில் பக்கின் கதை கிளாடியேட்டரில் வரும் வீரனின் கதையைப் போன்றதே. சூழ்நிலை தான் ஒருவனைத் தலைமை ஏற்க வைக்கிறது.வெற்றியாளனாக மாற்றுகிறது. தங்கம் தேடிப்போன காலத்தில் இது போன்ற நிகழ்வுகளை நேரடியாக ஜாக் லண்டன் கண்டிருக்கிறார். அப்படியொரு நாயின் நினைவாகவே இந்த நாவலை எழுதியிருக்கிறார்

வழக்கமான ஹாலிவுட் பொழுதுபோக்குப் படங்களுக்கான வரம்புகளுக்குள் தான் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தான்டர்ன் மதுவிடுதியில் சண்டையிடும் போது பக் அவரைக் காப்பாற்றும் காட்சியிலும். அடிபட்ட நாயைத் தனது படுக்கையில் படுக்கவைத்து அவர் சாய்வு நாற்காலியில் உறங்குவதும் நாயும் அவரும் தங்கம் தேடுவதும் அழகான காட்சிகள்.

ஜாக் லண்டனின் உயிராசை என்ற கதையைப் புதுமைப்பித்தன் மொழிபெயர்த்திருக்கிறார். இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. அது தான் அவரது மாஸ்டர் பீஸ்.

ஜாக் லண்டனுக்காகவே The Call of the Wild படத்தைப் பார்த்தேன் என்பதே நிஜம்.

**

0Shares
0