கார்க்கியின் இளமைப்பருவம்.

எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாற்றை மூன்று பகுதியாகச் சோவியத் ரஷ்யாவில் படமாக்கியிருக்கிறார்கள். The Childhood of Maxim Gorky, Gorky 2: My Apprenticeship, Gorky 3: My Universities என 1938ல் வெளியான இந்தப் படங்களைப் பார்த்தேன். இயக்குநர் மார்க் டான்ஸ்காய் இயக்கியது.

ஹாலிவுட் படங்களும் ரஷ்ய படங்களுக்கும் தயாரிப்பிலும் கலைவெளிப்பாட்டிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை இந்தப் படங்களைக் காணும் போது அறிந்து கொள்ள முடிகிறது. ரஷ்யாவில் கறுப்பு வெள்ளை திரைப்படங்களை மிகுந்த கவித்துவமாக உருவாக்கியிருக்கிறார்கள். கார்க்கி பற்றிய இந்தப்படங்கள் வெளியான காலகட்டத்தில் ஹாலிவுட் சினிமாவில் இது போன்ற சிறந்த இசை, படத்தொகுப்பு மற்றும் வெளிப்புற படப்பிடிப்புகள் கிடையாது. வியப்பூட்டும் கோணங்களுடன் இந்த மூன்று படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

எனது குழந்தைப்பருவம். நான் பயின்ற பல்கலைக்கழகங்கள், நான் பெற்ற பயிற்சிகள் என்று கார்க்கியின் சுயசரிதை மூன்று பகுதிகளாகத் தமிழில் வெளியாகியுள்ளன. இந்தச் சுயசரிதையின் முக்கியச் சம்பவங்களை அப்படியே திரைப்படமாக்கியிருக்கிறார்கள்.

ரஷ்யா முழுவதும் நான் கால்நடையாக நடந்து திரிந்தவன் என்று கார்க்கி சொன்னது நூறு சதவீத உண்மை, தன் வாழ்நாளில் கார்க்கியைப் போல மாறுபட்ட அனுபவங்களைப் பெற்றவர் எவருமில்லை. கார்க்கியின் இளமைக்காலம் துயரமும் கண்ணீரும் நிறைந்தது.

சிறுவயதிலே தந்தையை இழந்து பாட்டியின் வீட்டிற்குத் தாய் வர்வாராவால் அழைத்து வரப்படுகிறார் கார்க்கி. தந்தை இறந்த துயரமே அவருக்குப் புரியவில்லை. கார்க்கி ஒரு நீராவிப்படகில் தாத்தா ஊருக்குப் பயணித்து வருவதில் தான் படம் துவங்குகிறது.

தன் வாழ்க்கை நிகழ்வுகளைத் திரும்ப நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. ஆனால் இப்படிதான் நடந்து முடிந்தது என்று கார்க்கியே நினைவு கொள்வது போலவே படம் ஆரம்பமாகிறது

தாத்தா பாட்டியால் வளர்க்கப்படும் பிள்ளைகளின் இயல்பு முற்றிலும் வேறானது. பெற்றோர்களால் வளர்க்கப்படுவதை விடவும் அவர்கள் மாறுபட்ட ஆளுமையாக வளருவார்கள். ஆனால் கார்க்கியின் தாத்தா வசிலியோ ஒரு மோசமான பேர்வழி. அவருக்குக் கார்க்கியைப் பிடிக்கவில்லை. சதா அடி உதை என்று கார்க்கியை ஒரு விலங்கைப் போலவே நடத்திவந்தார். இதன் மறுபக்கம் தேவதை போலப் பாட்டி அவரைக் கவனித்துக் கொண்டார்.

பாட்டி அக்குலினா காட்டிய அன்பு தான் அவரை வாழவைத்தது. பாட்டியிடமிருந்தே கதைகளை அறிந்து கொண்டார். அன்றாடம் இரவு பாட்டி அவருக்குக் கதைகள் சொல்வார்.

குறிப்பாக அடுக்களைப் பூதம் பற்றி அவர் சொன்ன கதை மறக்கமுடியாதது

ஒவ்வொரு வீட்டிலும் அடுப்படியில் ஒரு அடுக்களைப் பூதம் ஒன்றிருக்கிறது. அது தான் குடும்பத்தை மகிழ்ச்சியாக வாழ வைக்கிறது. ஒரு குடும்பம் வெளியேறி வேறு இடத்திற்குப் போகும் போது அந்த அடுக்களைப் பூதத்தைத் தங்களோடு கொண்டு செல்வார்கள். இதற்காகப் பழைய ஷு ஒன்றை அடுப்பினுள் காட்டினால் அதில் இந்தப் பூதம் ஏறி அமர்ந்து கொள்ளும். அடுக்களைப் பூதம் இல்லாமல் புதிய வீட்டிற்குக் குடி போனால் அங்கே வாழ முடியாது என்று பாட்டி சொன்ன கதையைக் கார்க்கியால் மறக்க முடியவில்லை.

வீடு மாறிச் செல்லும் ஒரு தருணத்தில் பாட்டியும் அந்த அடுக்களை பூதத்தைத் தன்னோடு கொண்டு செல்லும் ஒரு காட்சி படத்தில் இடம்பெற்றிருக்கிறது

கார்க்கியின் தாத்தா ஒரு சாயப்பட்டறை வைத்திருந்தார். அவரது மாமாக்கள் மைக்கேல் மற்றும் யாக்கோவ் இருவரும் அதே பட்டறையில் வேலை செய்தார்கள். அவர்களின் பிள்ளைகளான ஷாஷா மற்றும் கத்ரீயானவும் அங்கேயிருந்தார்கள். தாத்தாவின் சொத்தை பிரித்துப் பங்கு தரவேண்டும் என்று மாமா இருவரும் தாத்தாவோடு சண்டையிட்டார்கள். இதனால் வீட்டில் பெரிய அடிதடி நடந்தது. தாத்தா பிடிவாதமாகப் பிரித்துத் தரமுடியாது என்றார். ஆனால் பாட்டியோ பிரித்துக் கொடுத்துச் சமாதானமாகப் போய்விடலாம் என்றாள். இந்த ஆலோசனை சொன்னதற்காகப் பாட்டிக்கு அடி கிடைத்தது தான் மிச்சம்.

தாத்தாவை விடவும் பலசாலியாக இருக்கும் நீ ஏன் பாட்டி அவரிடம் அடிவாங்குகிறாய் என்று கார்க்கி கேட்டதற்கு நான் ஒரு பெண். அதுவும் அவரது மனைவி ஆகவே அவர் அடிக்கத்தான் செய்வார் என்கிறாள் பாட்டி. அதைக் கார்க்கியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாட்டியை இன்னொரு முறை தாத்தா அடித்தால் அவரைத் தான் பதிலுக்கு அடிப்பேன் என்கிறார் கார்க்கி.

சிறுவனாக இருந்த கார்க்கி ஒரு நாள் முடக்குவாதம் காரணமாக வீட்டிலே முடங்கிப் போன ஒரு சிறுவனைக் காணுகிறார். அவன் விதவிதமான பூச்சிகளைப் பிடித்துக் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைத்திருக்கிறான். அவனுக்கு வெட்டவெளிக்குப் போய்ப் பட்டாம்பூச்சிகளைப் பிடித்து வர வேண்டும் என்று ஆசை. இன்னொரு காட்சியில் அவனை நண்பர்களுடன் சேர்ந்து தள்ளுவண்டியில் உட்கார வைத்து கார்க்கி வெட்டவெளிக்கு அழைத்துக் கொண்டு போகிறார். மறக்கமுடியாத காட்சியது

தன்னைப் போலவே கைவிடப்பட்ட சிறுவர்கள் பலரை அந்த ஊரில் கார்க்கி சந்திக்கிறார். அவர்களுடன் ஒன்றாக ஊர் சுற்றுகிறார். மீன்பிடிக்கிறார். வேடிக்கைகள் செய்கிறார். அதில் ஒரு சிறுவனுக்குத் தனது ஊரின் பெயர் மட்டும் தான் தெரியும். அது எங்கேயிருக்கிறது என்று தெரியாது. அவனை மற்றவர்கள் கேலி செய்து பாட்டுப்பாடுகிறார்கள். அந்தப் பாடலை தன் வாழ்நாள் முழுவதும் கார்க்கி நினைவு வைத்துக்கொண்டேயிருந்தார்.

தாத்தாவிடம் வான்யா என்ற ஜிப்சி வேலை செய்தான். அவனது நட்பின் மூலம் கார்க்கி நடனமாடவும் பாடவும் கற்றுக் கொண்டார். ஒரு நாள் பெரிய சிலுவை ஒன்றைச் சுமந்து கொண்டு போய்ச் சேர்க்கும் வேலையில் வான்யா முதுகு எலும்பு முறிந்து இறந்து போய்விடுகிறான். அந்த மரணத்தைக் கார்க்கியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இன்னொரு நாள் சாயப்பட்டறையில் தீவிபத்து ஏற்படுகிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே பணியாற்றிய கிரிகோரி என்பவருக்குக் கண்பார்வை போய்விடுகிறது. அவருக்கு எந்த உதவியும் செய்ய முடியாது என்று தாத்தா மறுத்துவிடுகிறார். அத்தோடு தாத்தா வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு இடமும் மாறுகிறார்

அதைக் கார்க்கியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தாத்தா அவருக்குப் படிக்கக் கற்றுக்கொடுக்கிறார், தாத்தாவிடமிருந்து ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும் வேதியியல் ஆராய்ச்சியாளருடன் கார்க்கி நட்பு கொள்கிறார். அவர் ஒரு தீவிர வாசகர், அவர் கார்க்கியை எழுதக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறார். அப்படித்தான் கார்க்கி எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்கிறார். ஜார் அரசிற்கு எதிராகப் புரட்சிகர வேலையில் ஈடுபட்டதாக வேதியியல் ஆராய்ச்சியாளரை போலீஸ் கைது செய்துநாடு கடத்துகிறது.

தாத்தாவின் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கிப்போகிறது. வீட்டின் வறுமையான சூழ்நிலையைப் போக்குவதற்காகக் குப்பை பொறுக்கி அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு ரொட்டி வாங்க உதவி செய்கிறார் கார்க்கி. அவர் தரும் சில்லறைக் காசுகளைப் பாட்டி வாங்கிக் கொள்ளும் காட்சியும் மிகச்சிறப்பானது.

தாத்தா ஒரு நாள் வழியில்லாமல் பிச்சை எடுக்க ஆரம்பிக்கிறார். அங்கே அவர் துரத்திவிட்ட கண்தெரியாத கிரிகோர் சந்தையில் பிச்சை எடுப்பதைக் காணுகிறார். கிரிகோர் தாத்தாவின் மீது இரக்கப்பட்டு அவருக்கு ரொட்டியைத் தானமாகத் தருகிறார். அதைத் தாத்தா ஏற்கவில்லை. புழுதியில் வீசி எறிகிறார். வீட்டின் நெருக்கடி காரணமாக வேலை தேடி வெளியே கிளம்ப வேண்டிய சூழல் உருவாகிறது. கார்க்கி ஏதாவது தொழில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்.

இதற்காக நீராவிப்படகு ஒன்றில் பாத்திரங்களைக் கழுவும் வேலைக்கு ஒத்துக் கொள்கிறார். அந்தப்படகு வோல்கா நதியில் நீண்ட தூரம் செல்கிறது. படகிலும் அவரைப் பல்வேறு விதங்களில் கஷ்டப்படுத்துகிறார்கள். ஆனால் சமையற்காரனின் அன்பும் நட்பும் அவரைப் பாதுகாக்கிறது.

புனித உருவங்களை வரைந்து விற்பனை செய்யும் கடை ஒன்றில் சில காலம் கார்க்கி பணியாற்றுகிறார். அங்கேயும் பிரச்சனை தொடரவே செய்கிறது. செருப்புக்கடை பாத்திரக்கடை என்று முப்பதுக்கும் மேற்பட்ட வேலைகளைக் கார்க்கி செய்திருக்கிறார். எப்படியாவது படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. ஆனால் அது கடைசிவரை சாத்தியமாகவேயில்லை.

இதற்கிடையில் கார்க்கியின் அம்மா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முனைகிறார். அந்தப் புதிய அப்பாவை கார்க்கிக்குப் பிடிக்கவில்லை. கார்க்கி அம்மாவின் திருமணத்தை ஏற்க மறுக்கிறார். இதனால் அம்மா அழுகிறாள். தான் செத்துப்போய்விடுவேன் என்று மிரட்டுகிறாள். வேறுவழியின்றி அம்மாவின் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார்

புதிய அப்பாவின் வீட்டிற்கு அவரும் அம்மாவோடு சேர்ந்து செல்கிறார். புதிய அப்பாவும் அம்மாவும் அவரை விட்டுவிட்டு மாஸ்கோ போய்விடுகிறார்கள்.அந்த வீட்டில் வேலைக்காரனைப் போலக் கார்க்கி நடத்தப்படுகிறார். குறிப்பாகப் புதிய அப்பாவின் தாய் அவரை மிக மோசமாக நடத்துகிறாள். புதிய அப்பாவின் சகோதரியும் சேர்ந்து கொண்டு கொடுமைப்படுத்துகிறாள்.

ஒரு நாள் தற்செயலாகக் கார்க்கி ஒரு  சிறுமிக்கு உதவி செய்கிறார். அந்தச் சிறுமியின் தாய் அவரை வீட்டிற்கு அழைத்து இனிப்புகள் தருகிறாள். தனக்கு இனிப்பு வேண்டாம். படிக்கப் புத்தகம் தாருங்கள் என்று கேட்கிறார் கார்க்கி. அவள் டுமாஸின் புத்தகம் ஒன்றைத் தருகிறாள். இரவில் உறங்காமல் அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார். இதை அறிந்த புதிய அப்பாவின் தாய் மெழுகுவர்த்தியைப் பிடுங்கிக் கொண்டுவிடுகிறாள். புத்தகத்தை அடுப்பில் போட்டு எரிக்க முயற்சிக்கிறாள்.

தனது கஷ்டங்களிலிருந்து தன்னை விடுவித்துச் சந்தோஷமான மனநிலையைப் புத்தகங்கள் தருகின்றன என்பதைக் கார்க்கி உணர்ந்து கொண்டுவிட்டார். அதனால் மறுபடியும் புதிய புத்தகம் வேண்டி அதே சிறுமியின் வீட்டிற்குப் போகிறாள். இந்த முறை புஷ்கின் கவிதைகள் கிடைக்கிறது. அந்தக் கவிதைகளை நிலவு வெளிச்சத்தில் படிக்கிறார். மனதிற்குள் ஆழமாகப் பதிந்து கொள்கிறார். படத்தில் அந்தக் காட்சி அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

ஒரு நாள் கார்க்கியைத் தேடி அந்த வீட்டிற்குப் பாட்டி வருகிறாள். அவரை மீட்டு தன்னோடு அழைத்துக் கொண்டு போகிறாள். மீண்டும் தாத்தாவிற்கு உதவி செய்ய அவர்களுடன் வசிக்கிறார்.

இந்த முறை அவர் பேக்கரி நடத்தும் ஒருவனிடம் வேலைக்குச் சேருகிறார். நாற்பது பேர்கள் ஒன்று சேர்ந்து ரொட்டி தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள். அங்கே புதியதொரு தோழமை கார்க்கிக்கு உருவாகிறது. அந்த அனுபவத்தைத் தான் Twenty-six Men and a Girl என்ற கதையாக எழுதினார். கார்க்கியின் மிகச்சிறந்த கதையிது. பேக்கரி ஒன்றில் வேலை செய்யும் பணியாளர்கள் சாலையில் ஒரு குறிப்பிட்ட நேரம் செல்லும் இளம்பெண்ணை ஜன்னல் வழியாகப் பார்த்துக் காதலிப்பது பற்றிய கதையது. மிகச்சிறப்பாக எழுதியிருப்பார்

கார்க்கியின் கதைகளில் பெரும்பான்மை அவரது சுய அனுபவத்திலிருந்து உருவானவை என்பதை இந்தப்படம் பார்த்தபோது புரிகிறது. அவரது பாட்டியின் ஆளுமையைத் தான் தாய் நாவலில் அன்னையாக உருவாகியிருக்கிறது.

வேலை கிடைக்காமல் வறுமையான வாழ்க்கையில் வெறுப்புற்று. தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் கார்க்கி. 1887-ஆம் ஆண்டுச் செப்டம்பர் 12ஆம் நாள் இரவு எட்டு மணிக்கு அந்தச் சம்பவம் நடந்தது. ஆனால் உயிர்பிழைத்துக் கொண்டார்.

மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் பேக்கரியில் அவருடன் பணியாற்றிய நண்பர்கள் ஒன்று திரண்டு வந்து உதவிகள் செய்ததுடன் அவரைப் பாசத்துடன் கவனித்துக் கொண்டார். அந்தத் தோழமை உணர்வு அவரைப் புத்துயிர்ப்புக் கொள்ள வைத்தது.

ஜார் மன்னருக்கு எதிராக மாணவர்கள் ஒன்று திரண்டு போராடுவதை அறிந்து அதில் தானும் கலந்து கொள்கிறார் கார்க்கி. அவரையும் கைது செய்யும்படி காவல்துறை ஆணையிடுகிறது. மாணவர்கள் போராட்டம் ஒடுக்கப்படுகிறது. தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். கார்க்கி தலைமறைவாக ரஷ்யா முழுவதும் சுற்றி அலைந்தார்.

கார்க்கியின் வாழ்க்கை வரலாற்றில் மறக்கமுடியாத நபர் அவரது பாட்டி. அப்படி ஒரு அன்பின் உருவத்தை நாம் எங்கும் காணமுடியாது. அது போலவே கார்க்கியின் மீது அன்பு காட்டும் நண்பர்கள். தன் வாழ்நாளில் நிறைய நண்பர்களைச் சம்பாதித்திருக்கிறேன். அது தான் எனது சொத்து என்கிறார் கார்க்கி. அது உண்மையே. அது போலவே ஒரு காட்சியில் உன்னால் எல்லோருடன் இனிமையாகப் பழகவும் நேசிக்கவும் முடிகிறது என்கிறார் ஒருவர். அதன் சாட்சியம் போலவே படத்தில் காட்சிகள் விரிகின்றன

ஒரு தாயிற்குப் பிரசவம் பார்க்க உதவி செய்கிறார் கார்க்கி. பிறந்த குழந்தையைக் கையில் ஏந்தியபடியே அவர் புதிய மனிதன் பிறந்துவிட்டதாகச் சொல்வது உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது.

எழுத்தாளர் கொரலென்கோ  மற்றும் ஆன்டன் செகாவோடு மிக நெருக்கமான நட்பு கொண்டிருந்தார் கார்க்கி. இது போலவே லியோ டால்ஸ்டாயின் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். நெருக்கமாகப் பழகி ஆராதனை செய்தார். டால்ஸ்டாய் பற்றிச் சிறப்பாக ஒரு நினைவுக்குறிப்பும் எழுதியிருக்கிறார்.

கார்க்கி சிறுவயதிலே பெரியவர்களின் சகல துயரங்களையும் அடைந்துவிடுகிறார். அந்தக் கஷ்டங்களும் அனுபவங்களும் அவருக்கு ஏழை எளிய மக்கள் மீது பேரன்பை உருவாக்குகிறது. தன் எழுத்திலும் செயல்களிலும் எளியோர் பக்கமே கார்க்கி நின்றார். மிகப்பெரிய விருதுகள், இலக்கிய அந்தஸ்து பெறுவதை விடவும் எளிய மக்களின் வாழ்க்கையை எழுதி அவர்கள் துயரங்களுக்குத் தீர்வு காணச் செய்வதே தனது பணி என்று கார்க்கி நம்பினார். அதை எழுத்தில் முழுமையாக வெளிப்படுத்தினார்.

கார்க்கியின் முக்கியக் கதைகள். நாவல்கள் யாவும் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கின்றன. தான் வாழும் காலத்திலே கார்க்கி சிறப்பாகக் கௌரவிக்கப்பட்டார். கொண்டாடப்பட்டார்.

இந்த மூன்று படங்களின் வழியாகக் கார்க்கியின் ஆளுமையையும் அவரது படைப்புகளையும் நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

“Happiness always looks small while you hold it in your hands, but let it go, and you learn at once how big and precious it is. என்று கார்க்கி எழுதியிருக்கிறார். அது தான் இந்தப் படத்திலும் பிரதிபலிக்கிறது

••

0Shares
0