காற்றோடு கைகோர்த்து

The noise of the streets was a kind of language – Virginia Woolf

ஆங்கில எழுத்தாளர் வர்ஜீனியா வூல்ஃப் எழுதிய Mrs Dalloway  நாவல் லண்டன் நகரில் ஒரு பெண்ணின் ஒரு நாள் வாழ்க்கையை விவரிக்கிறது. நடத்தலின் ஆனந்தத்தை விவரிக்கும் இந்த நாவலில் தனக்கு லண்டன் வீதிகளில் நடப்பதற்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் கிளாரிசா டாலவே

உண்மையில் கிராமப்புற சாலையில் நடப்பதைவிடவும் பரபரப்பான லண்டன் வீதிகளில் நடப்பது சுதந்திரமாக இருக்கிறது என்கிறார் வர்ஜீனியா வூல்ஃப்.

மனம் போன போக்கில் சுதந்திரமாக நடந்து திரியும் போது கண்ட காட்சிகளை மனிதர்களைத் தனது எழுத்தில் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் வர்ஜீனியா

மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கெனத் தனியே ஒரு ஈரப்பும் வசீகரமும் இருக்கிறது. அந்த இடங்களுக்குப் போகையில் நாமும் மகிழ்ச்சியின் துளியாகிவிடுகிறோம். வர்ஜீனியா வூல்ஃப் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கும் சந்தையினுள் சென்று அங்குக் கேட்கும் விநோதக் குரல்களை, விதவிதமான வண்ணங்களை, வெளிச்சத்தை ரசிக்கக்கூடியவர்.

“கண்கள் வண்ணத்துப்பூச்சியைப் போல அழகானவற்றை மட்டுமே தேடிக் காணுகிறது. மாலை வெளிச்சத்தில் வீதிகள் எத்தனை அழகாக இருக்கின்றன. பேரம் பேசி கடையில் வாங்கும் போது விற்பவரும் வாங்குபவரும் தானே ஜெயித்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் இது ஒரு நாடகம்.

கண்களால் விழுங்க முடிந்த அளவு காட்சிகளை விழுங்கிக் கொள்வதற்காகவே நடக்கிறேன். நடப்பதன் வழியே நிறைய ஆசைப்படுகிறேன். நிறையப் புதிய விஷயங்களைக் காணுகிறேன். நாம் வாங்க விரும்பும் பொருளை யாரோ ஒருவர் வாங்கிப் போகும் போது அவர் மீது நமக்குப் பொறாமை உருவாகிறது. அதையும் நான் ரசிக்கிறேன். எதையும் வாங்காமல் ஒரு கடைக்குள் நுழைந்து பொருட்களைப் பார்வையிடுவது எத்தனை சந்தோஷமானது என்பதை விளக்க முடியாது. உணரத்தான் முடியும்.

வீதியில் காணப்படும் விதவிதமான உணவு வகைகள். கலவையான மணம். சாப்பிடும் ஆசை தானே உருவாகிறது. ஏதாவது பெரிய கடைக்குள் நுழைந்து இல்லாத பொருளைக் கேட்பதில் உள்ள ஆனந்தம் அலாதியானது தானே.

இந்த இன்பங்களுக்காகவே லண்டன் வீதிகளில் சுற்றியலைகிறேன் “என்கிறார் வர்ஜீனியா.

புதிய ஆடைகளை விரும்பி வாங்கக் கூடிய வர்ஜீனியா வூல்ஃப் சில ஆடைகளை வாங்கிய பிறகு வெறுக்கத் தோன்றுவதற்கு என்ன காரணம் என்றே புரியவில்லை என்கிறார். புதிய ஆடைகளை அணிந்து கொள்ளும் அது உடலுக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்ற சந்தேகம் அவருக்குத் தீருவதேயில்லை. அதுவும் விருந்துக்குச் செல்லும் போது புதிய ஆடையைப் பற்றி மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்ற குற்றவுணர்ச்சி அதிகமாகவே இருக்கிறது என்கிறார்

வீட்டில் அடைந்துகிடப்பதை விடவும் மீண்டும் மீண்டும் லண்டன் நகரத்திற்குச் செல்லவும் சுற்றித்திரியவும் வர்ஜீனியா வூல்ஃப் அதிக ஆசை கொண்டிருந்தார். பென்சில் வாங்க வேண்டும் என்ற ஒரு அற்ப காரணத்தை உருவாக்கிக் கொண்டு ஒரு முறை அவர் லண்டன் வீதிகளில் நடந்து சென்றதை நினைவு கொண்டிருக்கிறார்.

நினைவுகளும் கடந்து செல்லும் காட்சிகளும் இசைக்கோர்வை போல இணைந்து ஒலிக்கும் இந்த நாவல் லண்டன் வீதிகளை, காற்றோடு கைகோர்த்து நடக்கும் அதன் மனிதர்களை அழகாக விவரிக்கிறது.

கிளாரிசா டாலவே கதாபாத்திரம் வர்ஜீனியா வூல்ஃப்பின் மாற்று வடிவம் போலவே எழுதப்பட்டிருக்கிறது. விருந்திற்கான மலர்களை வாங்கச் செல்லும் கிளாரிசா வழி ஒரு தளமும். செப்டிமஸ் வழியாக மறுதளமும் நினைவு கொள்ளப்படுகிறது.

காலம் தான் நாவலின் மையப்புள்ளி. நினைவுகளின் வழியே தான் கடந்து சென்ற நிகழ்வுகளை மீள் உருவாக்கம் செய்கிறாள். வூல்ஃப் சிறுகதையில் கிளாரிசா டாலவே ஒரு கதாபாத்திரமாக முன்பே எழுதப்பட்டிருக்கிறார். காலத்தினுள் ஊசாலாடும் கிளாரிசாவின் வழியே வூல்ஃப். பெண்ணின் சஞ்சலங்களை, தனித்துவ உணர்வுகளை அழகாகச் சித்தரிக்கிறார். இந்த நாவலையும் வூல்ஃப்பின் எழுத்துமுறையினையும் நோபல் பரிசு பெற்ற கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் வியந்து கொண்டாடுவதுடன் தன்னைப் பாதித்த எழுத்து அவருடையது என்றும் கூறுகிறார்.

இது 1925 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த நாவல் குறித்து அழகான அறிமுகக் காணொளி.

0Shares
0