காலத்தின் மணல்

மணற்கடிகாரம் ஒன்றின் மீது முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் அமர்ந்திருக்கும் ஓவியம் ஒன்றைக் கண்டேன். 1625ல் வரையப்பட்டது. புகழ்பெற்ற மொகலாய ஓவியர் பிசித்ர்(Bichitr) வரைந்தது. அவர் ஜஹாங்கீரின் அரசசபைக் கலைஞர்களில் ஒருவரான ஓவியர் அபுல் ஹசனின் சீடர்.

இந்த ஓவியத்தில் மன்னருடன் நான்கு பேரின் உருவம் காணப்படுகிறது. அதில் சூஃபி ஷேக் ஹுசைனுக்குப் புத்தகம் ஒன்றைப் பரிசளிக்கிறார் ஜஹாங்கீர்.

ஓவியத்தில் பேரரசர் ஜஹாங்கீரும். ஞானியும் இணையாக வரையப்பட்டிருக்கிறார்கள். மன்னரின் மெல்லிய உடை. அவர் அணிந்துள்ள முத்துமாலைகள், காதணி. கையிலுள்ள மோதிரங்கள், கைவிரல்கள் மிகவும் துல்லியமாக வரையப்பட்டிருக்கின்றன.

ஷேக் ஹுசைன் மன்னரிடமிருந்து புத்தகத்தைத் தனது கைகளில் பெறவில்லை. அதனைத் தனது மேலாடையில் ஏந்துகிறார். இச்செயல் புத்தகம் மதிப்புமிக்கக் காணிக்கையாக வழங்கப்படுவதைக் காட்டுகிறது.

மன்னரின் மரியாதையை ஏற்றுக் கொண்ட மகிழ்ச்சியை ஞானியின் முகம் வெளிப்படுத்துகிறது. அதே நேரம் அவரது கண்கள் வியப்படையவில்லை. அது ஏறிட்டே பார்க்கின்றன.

நோயுற்ற நிலையிலிருந்து ஜஹாங்கீர் மீண்டு வந்திருக்கிறார் என்பதன் அடையாளமாகவே அவரது முகத்தில் முழுமையான மகிழ்ச்சியில்லை. குறிப்பாக அவரது தாடை மற்றும் கண்கள் தளர்ந்திருக்கின்றன. மன்னரின் உடையைக் கவனிக்கும் போது இந்தச் சந்திப்புத் தனிப்பட்ட அவரது அறையில் நடக்கிறது என்பதை அறிய முடிகிறது.

நீண்டகாலமாகக் குழந்தை இல்லாத அக்பர் சிக்ரியில் வசித்த சூஃபி ஞானி சலீம் சிஷ்டியை வணங்கி, அரியணைக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். சிஷ்டியும் அக்பரை ஆசீர்வதித்தார். அப்படிப் பிறந்தவர் தான் சலீம்.

நூர்-உத்-தின் முஹம்மது சலீம் எனும் ஜஹாங்கீர் தந்தையைப் போலவே சூஃபி ஞானிகளை வணங்கி மரியாதை செய்து வந்தார். அதன் வெளிப்பாடாகவே இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது

துருக்கி சுல்தான் இந்த அருட்கொடையை வியந்து போற்றுவது போல வரையப்பட்டிருக்கிறார். அவருக்குக் கீழே இங்கிலாந்தின் மன்னர் ஜேம்ஸ்-I ன் உருவம் வரையப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. அவர் எதற்காக இந்த நிகழ்வின் சாட்சியமாக இடம்பெற்றிருக்கிறார். ஜேம்ஸ்-I ன் கை வாளின் மீது இடம்பெறவில்லை என்பது முக்கியமானது.

1585 ஆம் ஆண்டில், எலிசபெத் I அக்பருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவுகளை உருவாக்கும் முயற்சியில் எழுதப்பட்ட கடிதமது. அதில் இந்தியாவில் வணிகம் செய்வதற்குத் தேவையான உதவிகளைக் கேட்டிருந்தார்.

ஆங்கிலத் தூதரான சர் தாமஸ் ரோ அக்பரைச் சந்தித்துப் பரிசுகள் வழங்கியிருக்கிறார். அவரே இந்தியாவிற்கு வந்த முதல் ஆங்கிலேய வர்த்தகர் என்கிறார்கள்.

இங்கிலாந்தின் மன்னர் ஜேம்ஸ் உருவம் ஓவியர் ஜான் டி கிரிடிஸ் என்பவரால் வரையப்பட்டது. அதனை முகலாய அரசருக்குப் பரிசாக வழங்கியிருக்கிறார்கள். அதிலிருந்த ஜேம்ஸின் உருவத்தையே பிசித்ர் வரைந்திருக்கிறார்.

ஜஹாங்கீர் ஓவியத்தில் இரண்டு குதிரைகள் மற்றும் ஒரு யானையைக் காட்டும் ஒரு சிற்றோவியத்தை அவர் கையில் ஏந்தி பணிவுடன் காட்சி தருகிறார்.

இந்த ஓவியத்தில் என்னைப் பெரிதும் கவர்ந்தது அந்த மணற்கடிகாரமே. இந்தியாவில் நீர்கடிகை, சந்திரகடிகை, என்று பல்வேறு காலக்கருவிகள் இருந்தன. நீர்க் கடிகாரத்தின் மூலம் காதிஸ் எனப்படும் அலகுகளில் நேரம் அளவிடப்பட்டது. முகமது பின் துக்ளக் இந்த நீர் கடிகாரத்தையும் நேர அலகுகளையும் ஏற்றுக்கொண்டார், பாபர் முதல் பிற முகலாய ஆட்சியாளர்களும் இதனையே ஏற்றுக்கொண்டார்கள்.

இந்த நிலையில் மணற்கடிகாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தபட்ட போது அதை எப்படி ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று புரியவில்லை.

காலத்தின் அதிபதியாக மன்னரைக் கொண்டாடுவது அன்றைய மரபே. ஆனால் அதற்கு இப்படி ஒரு மணற்கடிகாரத்தைத் தேர்வு செய்தது பிசித்ரின் தனித்துவமே

பொதுவாகக் காலத்தை அடையாளப்படுத்த இயற்கைக் காட்சிகளையோ, தெய்வீகச் சின்னங்களையோ தான் வரைவார்கள். நித்யத்துவத்தின் அடையாளமாக ரோஜாவை மொகலாய ஓவியங்கள் வரைவது வழக்கம். ஆனால் இங்கே நாம் காணுவது ஐரோப்பிய மணற்கடிகாரம். அதை மரபான இந்திய காலக் கடிகைகளுக்குப் பதிலாகத் தேர்வு செய்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.

14ம் நூற்றாண்டில் கடலோடிகளால் மணற்கடிகாரம் பயன்படுத்தபட்டதாகக் குறிப்புகள் உள்ளன, மெக்கல்லன் பயணப் பட்டியலில் மணற்கடிகாரம் இருக்கிறது. இந்தியாவிற்கு எப்போது அறிமுகமானது என்று தெரியவில்லை. முதன்முதலாக மணற்கடிகாரத்தை உருவாக்கியது யார் என்பதும் தெரியவில்லை. அக்பர் காலத்தில் மணற்கடிகாரம் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கக் கூடும் என்கிறார்கள்.

இந்த ஓவியத்தில் மணற்கடிகாரம் ஜஹாங்கீர் வாழ்க்கையின் குறியீடாகவும், காலத்தின் அதிபதியாக ஜஹாங்கீரைக் குறிப்பதாகவும் வரையப்பட்டிருக்கிறது.

வழக்கமான மொகலாய ஓவியங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டு ஐரோப்பிய மற்றும் இஸ்லாமிய கலை பாணிகளை இணைத்து வரையப்பட்டிருக்கிறது

தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஜஹாங்கீர் செலவழித்து விட்டிருக்கிறார். என்பதன் அடையாளமாக மணற்கடிகையின் கீழ்பகுதியில் மணல் சேர்ந்திருக்கிறது

மணல் கடிகாரத்தில் பாரசீக மொழியில் பேரரசர் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய பாணியில் வரையப்பட்ட மன்மத உருவங்களும் அழகான பூ வேலைப்பாடுகளும் தனித்த அழகைத் தருகின்றன. கடவுளுக்கு நிகரானவர் என்பதன் அடையாளமாக ஜஹாங்கீரின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் வரையப்பட்டிருக்கிறது.

ஜஹாங்கீர் என்ன புத்தகத்தைப் பரிசாகத் தருகிறார் என்று தெரியவில்லை. அச்சு இயந்திரங்கள் வராத காலத்தில் புத்தகங்களும் கலைப்பொருளாகவே கருதப்பட்டன. இதில் அவர் தருவதும் ஒரு கலைப்பொருளே.

இந்த ஓவியத்தைக் காணும் போது ஒரு பேரரசர், ஞானிக்கு அளிப்பதற்குப் புத்தகத்தைத் தவிர வேறு என்ன பெரிய பரிசு இருந்துவிட முடியும் என்றே தோன்றுகிறது.

0Shares
0