காலத்தின் முன்நிற்பது

ஒரிசா மாநிலத்திலுள்ள கொனார்க் சூரியக்கோவிலைக் காண்பதற்கு ஒருவர் குறைந்தபட்சம் ஒரு மாதம் செலவழிக்க வேண்டும், போகிறபோக்கில் பார்த்துக் கடந்து போகின்றவர்கள் அதன் புறத்தோற்றத்தைத் தாண்டி உள்ளார்ந்த அழகியலை, பேரழகான சிற்பங்களை அறிந்து கொள்ள முடியாது,

இந்த முறை கொனார்க்கில் என்னை வியப்பில் ஆழ்த்தியது அங்குள்ள ஒட்டகச்சிவிங்கியின் சிற்பம்

ஆப்ரிக்காவில் வாழும் ஒட்டகச் சிவிங்கி எப்படி கொனார்க் கோவிலின் சிற்பத்தில் இடம்  பெற்றது என்ற ஆச்சரியத்துடன் கோவிலின் தென்பகுதியின் சிற்பத்தொகுப்பில் ஒன்றாக உள்ள ஒட்டகசிவிங்கியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

கொனார்கிற்கு இரண்டு சிறப்புகள் இருக்கின்றன, ஒன்று அது சூரியனின் கோவில், மற்றது கலவிச் சிற்பங்களின் கூட்டுக்கலைக்கூடம், பாலின்பத்தின் களிநடனமும், உணர்ச்சிபெருக்கும், உன்மத்தமும் கிறங்கிய உடல்களுமாக கொனார்க் பார்வையாளனுள் அந்தரங்கமான ஒரு அதிர்வை உருவாக்ககூடியது.

காலம் குறித்து அதிகம் யோசித்தவர்கள் இந்தியர்கள் தானோ என்று தோன்றுகிறது, காலத்தை அறிவது என்பது கலை, விஞ்ஞானம் இரண்டிலும் முக்கியச் செயல்பாடாக இருந்திருக்கிறது,

கொனார்க் சூரியக்கோவிலின் முன்பு போய்நிற்கும் ஒவ்வொரு முறையும் காலதேவனின் முன்பு நிற்பது போன்ற நெகிழ்வுணர்வே ஏற்படுகிறது,

காலம் குறித்த இந்தியர்களின் பார்வை நுட்பமானது, காலத்தை துல்லியமாக வரையறை செய்து அறிவியல் பூர்வமாக அணுகுவது ஒரு புறம் என்றால் அது குறித்த தொன்மங்களும் பழங்கதைகளும், சிற்பங்களும், கோவில்களுமாக கற்பனைவளம் மறுபக்கமிருக்கிறது,

நம்காலம் இரண்டிற்குமான ஊசலாட்டத்தில் உள்ளது,

ஐதீகத்தின் படி கிருஷ்ணரின் மகனான சாம்பன் தன்னை விட அழகாக இருக்கிறான் என்று அவனைத் தொழுநோயாகிப் போகும்படி கிருஷ்ணன் சாபம் கொடுத்தார் எனவும், சூரியனை வணங்கிவந்தால் மட்டுமே அந்த சாபம் மீட்சி பெறும் என்பதால் கொனார்க் கோவில் கட்டப்பட்டது என்கிறார்கள்,

ஆனால் பழங்குடி மரபில் சூரியனை வணங்குவது ஆதாரமான ஒன்று, ஒரிசா அதிகம் பழங்குடிகள் வாழும் மாநிலம், ஆகவே அங்கே சூரியனை வணங்கி வருவது தொன்று தொட்டு வந்திருக்க கூடும், அந்தப் பழங்குடி கடவுள் செவ்வியல் வடிவம் பெறும் முயற்சியாகவே பிரம்மாண்டமான சூரியக்கோவிலாக மாற்றம் அடைந்திருக்க கூடும்.

அப்படி பழங்குடிகளின் கடவுளாக இருந்து உருமாற்றம் பெற்ற வடிவம் போலவே பூரி ஜெகனாந்தர் கோவில் உள்ளது, அங்குள்ள தெய்வத்திற்கு கைகால்கள் கிடையாது, மரத்தால் தான் கடவுளின் உருவம் செய்யப்படுகிறது, ஜெகனாதரை வணங்குவதிலும் நிறையப் பழங்குடியினரின் அம்சங்கள் காணப்படுகின்றன.

கொனார்க் கோவிலினுள் சூரியனின் மிகப்பெரிய சிற்பம் உள்ளது, அந்தச் சூரியனின் தோற்றம் அற்புதமானது, இளமை ததும்பும் முகம், வளைந்த துல்லியமான புருவங்கள், சாந்தம் ததும்பும் முகம், பாதி மூடியது போன்ற கண்கள், போர்வீரனின் உடலமைப்பு போன்ற கச்சிதமான உடற்கட்டு, சூரியனைப்போலவே அவனது குதிரைகளும் தனித்துவமாக இருக்கின்றன, அலங்கரிக்கப்பட்ட குதிரையில் சூரியன் வருவது போன்ற சிற்பமது,

சூரியனின் வாகனமாக குதிரையை ஏன் தேர்வு செய்தார்கள், குதிரையும் சூரியனும் எப்படி ஒன்றோடு ஒன்று கலந்தன,  ஏழு நாட்களை ஏழு குதிரைகள் என்று எப்படி உருவாகினார்கள், குதிரையால் பின்னால் ஒடமுடியாது என்பதற்கு தான் இது உருவாக்கபட்டதா

தென்னிந்தியக் கோவில்களில் இருந்து கொனார்க் பெரிதும் மாறுபட்டது, வெளியே இருந்து பார்க்கையில் அதன் பிரம்மாண்டம் நமக்குப் புலப்படாது, அருகில் நெருங்கிச் சென்று பார்க்கையில் கோவில் விஸ்வரூபம் கொண்டதாகிவிடுகிறது, கோவிலின் முன்பாக நிற்கையில் நீர்வீழ்ச்சியின் முன் நிற்கும் சிறுவனைப்போலவே என்னை உணர்ந்தேன்.

தொழுநோயில் இருந்து மீட்சி பெறுவதற்கான இடம் என்று நம்ப்படுவதால் இன்றும வழியோரத்தில் தொழுநோயாளிகளை அதிகம் காண முடிகிறது, சிற்பத்தொகுப்பு ஒன்றில் தொழுநோயாளி ஒரு பெண்ணுடன் கலவியில் இடம் பெறும் சிற்பமும் இருக்கிறது,

தொழுநோயிற்கும் சூரியனுக்குமான உறவையும்,  உலகெங்கும்சூரியனுக்கு கோவில் கட்டுவது பற்றியும் ஆராந்துள்ள பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் கொனார்க் கோவில் பற்றி  தனது கட்டுரையில் நிறையப் புதிய தகவல்களைக் கூறுகிறார்.

சூரியன் ஆணா பெண்ணா என்பதில் ஒவ்வொரு தேசத்திலும் ஒருவித விளக்கம் காணப்படுகிறது, கிழக்கு இந்தோனேஷியாவில் சூரியன் ஆண் பெண் என்று இருவடிவிலும் காணப்படுகிறது,  போன்டா பழங்குடியில் சூரியனும் சந்திரனும் அண்ணன் தங்கை, ஒரு நாள் தங்கை நிர்வாணமாகக் குளிக்கையில் அண்ணன் பார்த்துவிடவே தங்கை இனிமேல் உன் முகத்தை நேரடியாகப் பார்க்கவே மாட்டேன் என்று பிரிந்து போய்விட்டதாக பழங்குடி கதை கூறுகிறது.

போன்டோ பழங்குடியினர்  தொழுநோயை சூரிய வெளிச்சம் நலமடையச்செய்யும என்று நம்புகிறார்கள், உலகில் எங்கெல்லாம் சூரியனுக்கு கோவில் இருக்கிறதோ அதன் அருகில் சந்திரபாஹா என்ற நதி ஒடுவதாகக் குறிப்புகள் காணப்படுகின்றன, இங்கும் கூட அது போன்ற கண்ணுக்குப்புலப்படாத சந்திரபாஹா நதி ஒடுவதாக மக்கள் நம்புகிறார்கள்

சூரியனுக்குச் சாத்தப்படும் மலர் எருக்கம்பூ அது மருத்துவ ரீதியாக  தொழுநோயை குணமாக்ககூடியது, ஆகவே சூரியனோடு தொழுநோய் குணமாக்கும் சடங்கு சேர்ந்துவிட்டது என்றும் இதைத் தமிழ்நாட்டில் உள்ள சூரியனார் கோவிலில் எருக்கம்பூ சாத்தப்படுவதை முன்வைத்து பாலகிருஷ்ணன் தனது கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்

கலவிச்சிற்பங்கள் இக்கோவிலில் இடம் பெற்றதற்கு காரணம் சூரியன் ஜீவ உற்பத்தியை உருவாக்கும் கடவுள், அவர் வழியாகவே உயிர்கள் தோன்றுகின்றன, ஆகவே சூரியனின் முன்பாக பாலின்ப சேர்க்கைகளும் அதன் வழி உயிர்தோன்றும் விந்தையும் காட்சியாக்கப் பட்டிருக்கின்றன என்கிறார்கள்

கஜிராஹோ கலவிச்சிற்பங்களும் கொனார்க் கலவிச் சிற்பங்களும் முற்றிலும் வேறுபட்டவை, உடல் அமைப்பு ,உணர்ச்சி வெளிப்பாடு, கலைநுட்பம் மூன்றிலும் நிறைய வேறுபாடுகளை காணமுடிகிறது,

பதிமூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த கொனார்கில் எப்படி ஆப்ரிக்க ஒட்டகச் சிவிங்கி வந்தது, அந்தச் சிற்பத்தை பார்த்தால் முழங்கால்வரை ஆடை அணிந்த சிலர் ஒட்டகசிவிங்கியை மன்னருக்குப் பரிசாக அளிப்பதற்கு கொண்டு வருவது போலதான் காணப்படுகிறது, சாதவாகர்கள் எனப்படும் ஒரிசா வணிகர்கள் கடல்கடந்து வணிகம் செய்துள்ளதற்கு நிறைய சான்றுகள் உள்ளன,

இந்தக் கோவிலின் சிற்பத்தொகுதிகளில் ஒன்றாக உள்ள யானைகளின் அணிவகுப்புகளைப் பாருங்கள், இதை மட்டுமே ஒரு நாள் பார்க்க வேண்டும், யானையின் அத்தனை நடவடிக்கைகளும் இங்கே சிற்பமாக்கபட்டிருக்கின்றன, அப்படியான யானை வரிசையில் ஒன்றாக ஆப்ரிக்க யானையும் காணப்படுகிறது,

ஆப்ரிக்க யானை எப்படி இந்திய யானைகளின் வரிசையில் வந்து சேர்ந்து கொண்டது, ஆப்ரிக்க யானையின் தோற்றம் மற்றவையிலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கிறது, ஒரிசாவிற்கும் ஆப்ரிக்காவிற்கும் பதிமூன்றாம் நூற்றாண்டில் நேரடியான கடற்வணிகம் நடைபெற்றிருக்கிறது என்பதன் வரலாற்று சாட்சி போலவே இந்த ஒட்டகசிவிங்கி உள்ளது

கோவிலின் சுற்றுச்சுவரில் பயணம் செல்லும் குழுவின் சிற்பத்தொகுதியொன்று உள்ளது, அதில் பயணவண்டி, வழியில் அடுப்புமூட்டி சமைத்துச் சாப்பிடும் காட்சி, பானைகள், சமைக்கும் பெண்ணின் உடை, விறகு வைத்துஎரிக்கும் அடுப்பு, பார மூட்டைகள்,  காவலர்கள், என பயணக்குழு முழுமையான சிற்பங்களாக ஒளிர்கின்றது

ஒட்டகச்சிவிங்கி கடல் வணிகர்களின் வழியே வங்காளத்திற்கு அறிமுகானது என்ற ஒரு குறிப்பை முன்பு வாசித்திருக்கிறேன், இந்தச் சிற்பத்தை காணும் போது எப்படி ஒட்டகசிவிங்கியை கப்பலில் ஏற்றிக் கொண்டுவந்தார்கள், அதை மக்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள், அது எப்படி ஒரிசாவின் சூழலுக்குப் பழகியது, அதை யார் பராமரித்தார்கள் என்ற நிறைய கேள்விகள் எழுகின்றன

கொனார்கின் நடனமண்டப நுழைவாயிலில் யானையை வீழ்த்தும் சிங்கத்தின் பிரம்மாண்டமான சிற்பமொன்று உள்ளது, சிங்கத்தை எப்போதுமே பௌத்த அடையாளச் சின்னமாக கருதுகிறார்கள், இங்கே சிங்கம் யானையை வெற்றி காண்பது பௌத்த வெற்றியைக் குறிக்கிறது என்று ஹாப்மென் என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார்

எனக்கு அந்த சிங்கத்தின் நாக்கை மிகவும் பிடித்திருந்தது, இப்படி நாக்கை துருத்திக் கொண்டிருக்கும் சிங்கத்தை காண்பது அரிது, பாய்ச்சலின் துடிப்பேறிய நாக்கை என் விரலால் தொட்டு பார்த்தேன், வார்த்தையில் அடங்காத அதிர்வை உருவாக்கியது , அது போலவே சிங்கத்தின் மூக்கு அமைப்பும் அபாரமாக வடிவமைக்கபட்டிருக்கிறது

சிற்பத்தொகுதிகள் உள்ள கோவில்களை காணும்போது அதன் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நாள் ஒதுக்கினால் மட்டுமே சிற்பங்களை நிதானமாகக் காணமுடியும், அது போலவே கல்சிற்பங்களின் நுட்பங்களை அறிய வேண்டும் என்றால் அதனை நுண்மையாக அவதானிக்க வேண்டும், சிற்பத்தில் உள்ள மரம், செடி, பூக்கள் ஆண் பெண்களின் தோற்றம், உடை, நிற்கும் நிலை, பார்வை, முகபாவம், உணர்ச்சி வெளிப்பாடு, பின்புலமாக உள்ள மிருகங்கள், இயற்கையின் லயப்பு, தனித்துவம் என்று அதன் பல்வேறு நிலைகளை  ஆழ்ந்து அறியும் போது மட்டுமே அதன் கலைதன்மையைப் புரிந்து கொள்ள முடியும்,

அதன்பிறகு கூடுதலாக அந்தச் சிற்பங்களின் பின்புலம், அதன் பாணி மற்றும் அதில் உள்ள சங்கேதங்கள் பற்றி நிறைய வாசித்து அறிய வேண்டும், ஆகவே கொனார்கில் போய் புகைப்படம் எடுத்துவந்துவிட்டால் அதை பார்த்துமுடித்துவிட்டதாக சொல்ல முடியாது,

ஒரிசா மாநிலத்தின் சிற்பங்கள் தனித்த அழகுடையவை, தென்னிந்தியச் சிற்பங்களை விடவும் இங்கே உடல்களின் வாளிப்பு மற்றும் நெகிழ்வுத் தன்மை அதிகமாக இருக்கிறது, அது போலவே விலங்குச் சிற்பங்களில் காணப்படும் உணர்ச்சிவெளிப்பாடு அபாரமானது, குறிப்பாக யானைச்சிற்பங்கள் அத்தனையும்  தனித்துவமானவை, வியந்து வியந்து யானையை உருவாக்கியிருக்கிறார்கள், கேரளாவில் காணப்படும் யானைச் சிற்பங்களில் ஒருவிதமான பொதுதன்மையை காணமுடியும், ஒரிசா யானைசிற்பங்களில் நிறைய மாறுபாடுகள், விசேச நுட்பங்கள் காணப்படுகின்றன,

கலவிச்சிற்பங்கள் தமிழ்நாட்டிலும் சில கோவில்களில் காணப்படுகின்றன, அவற்றில் உடல் முக்கிய அம்சமாக இருக்காது, ஆனால் கொனார்கின் கலவிச்சிற்பங்கள் பித்தேறிய நிலையின் கொண்டாட்டச் சிற்பங்களாக ஒளிர்கின்றன, உடல்வேட்கையின் எண்ணிக்கையற்ற நிலைகள், சூட்சுமங்கள்,லயப்பு யாவும் சிற்பத்தில் உயிரோட்டமாக உருவாக்கபட்டிருக்கின்றன, காமம் குறித்த திறந்த புத்தகம் என்றே இந்தக் கோவிலைக் குறிப்பிடுவேன்,

கல்லின் மொழி வழியாக காமம் பேசப்படுவது அபூர்வமாக இருக்கிறது, சூரியனை வழிபட வந்த கிராமவாசிகள் கலவிச்சிற்பங்களை இயல்பாகப் பார்த்துச் சிரித்து கடந்து போகிறார்கள், மத்திய தரவர்க்கத்து பயணிகள் தான் கலவிச் சிற்பங்களைக் கண்டு முகம்சுழிப்பதுடன், அதைச் சிறுவர்கள் காணவிடாதபடி கண்ணைப் பொத்தி அழைத்துக் கொண்டு போகிறார்கள்,

சூரியனின் தேர்சக்கரத்தின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள போட்டியிடும் பலரும் அந்த தேர்சக்கரத்தினுள் எவ்வளவு வேலைப்பாடுகள் உள்ளன என்பதை நின்று கவனித்துப் பார்ப்பதேயில்லை,

கோடான கோடி ஆண்டுகள் கடந்து சென்ற போதும் சூரியன் பற்றிய வியப்பும் திகைப்பும் இன்னமும் மனிதனுக்கு அடங்கவேயில்லை, அதை வணங்குவதும் வழிபடுவதும், அஞ்சுவதும், விலகிச்செல்வதும், காத்திருப்பதுமாக தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறான்

கொனார்கின் மீதும் சூரியவெளிச்சம் படுகிறது, கல்லில் உருவாக்கபட்ட தேர்ச்சக்கரத்தில் சூரிய வெளிச்சம் ஊர்ந்து போகிறது, பகல் இரவு என்று பிரிக்கபட்ட இரண்டு பாதங்களுடன் சூரியன் நிதானமாக நடந்து கொண்டிருக்கிறான்,

சூரியனின் ஏழு குதிரைகளுக்கு என்ன பெயர்,  அந்தக் குதிரைகள் ஒரே ஜாதியை சேர்ந்தவையா, அக் குதிரைகள் ஏன் ஒசை எழுப்புவதேயில்லை என்று என்னோடு வந்திருந்த  அகழ்வாய்வுத்துறையைச் சேர்ந்த நண்பரைக் கேட்டேன், அவர் சொன்னார் அதெல்லாம் கதை சார், கதைக்கு காரணம் கேட்டா என்ன சொல்வது, இந்தக் கோவிலைச் சுற்றி நூற்றுக்கணக்கில் கதைகள் இருக்கின்றன சிற்பங்களை பார்க்கின்றவர்கள் தானே கதைகளை உருவாக்கிவிடுகிறார்கள்,

ஒருவேளை யாரோ சொன்ன கதைகள் தான் சிற்பமாகியிருக்கலாம், அல்லது சிற்பத்திலிருந்து நிறைய கதைகள் பிறந்திருக்கலாம், இன்றைக்கு எது கதை, எது உண்மை என்று பிரிக்கமுடியாது, எப்படியோ கல்லிற்கு கதைக்கும் நீண்டகாலமான உறவிருக்கிறது  என்றார்

எனக்கு கல்லையும் பிடித்திருக்கிறது, அதன் கதையையும் பிடித்திருக்கிறது என்றேன், அவர் கடிகாரத்தை பார்த்தபடியே நேரமாச்சி போகலாமா என்று கேட்டார், அப்போது தான் கவனித்தேன் சூரியனின் கோவிலைப்பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒரு சதவீதம் கூட வானில் செம்மை கரைந்தோட ஒளிர்ந்து கொண்டிருக்கும் சூரியனை நிமிர்ந்து பார்க்கவேயில்லை,

சூரியனையே பார்த்துக் கொண்டிருந்தேன், எல்லா நாளையும் போல அன்றும் சூரியன் கரைந்தோடும் மஞ்சள் வெளிச்சத்துடன் மேற்கில் போய்க் கொண்டிருந்தது, சூரியனின் சிரிப்பு தான் அதன் வெளிச்சம் என்று முண்டா பழங்குடியினரின் ஒரு கவிதை சொல்கிறது,

வெளிச்சம் இயற்கையின் மகத்தான அதிசயம்,

புத்தம் புதிதாக அன்று தான் முதன்முறையாக சூரியனைப் பார்ப்பது போல பரவசமாக இருந்தது.

••

0Shares
0