காலம் எழுப்பும் கேள்வி

ஈஸ்கிலஸ் மற்றும் சோபாக்ளிஸ் எழுதிய கிரேக்கநாடகங்களை முழுமையாக மொழியாக்கம் செய்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். இவர் கோவை வானொலி நிலையத்தின் இயக்குனராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். சில காலம் சென்னை பண்பலையிலும் பணியாற்றியிருக்கிறார். கிரேக்க இலக்கியங்களை, சிந்தனைகளை வாசிப்பதற்காகத் தன் வாழ்நாளை செலவு செய்துவருபவர் ஸ்டாலின். கிரேக்க அழகியல். சிந்தனைகள், நாடகங்கள் எனப் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளார். வரலாற்று மாணவரான ஸ்டாலின் தனது விருப்பத்தின் பெயரில் கிரேக்க இலக்கியங்களைத் தானே முனைந்து கற்றுக் கொள்ளத்துவங்கி இன்று அறிஞராக உயர்ந்திருக்கிறார்.

ஸ்டாலினின் மொழிபெயர்ப்பு மூலத்தை உள்வாங்கிய எளிய மொழியாக்கமே. தனது நோக்கம் தமிழில் கிரேக்க செவ்வியல் படைப்புகள் வாசிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே எனக்குறிப்பிடுகிறார்.

சோபாக்ளிஸ் எழுதிய 7 நாடகங்களின் தொகுப்பை ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டார். அந்த விழாவில் கலந்து கொண்டு நான் உரையாற்றினேன்.

கிரேக்க நாடகங்களை வாசிக்கும் போது தொன்மத்தின் நீட்சியாக அவை இருப்பதை உணர்கிறேன்., அதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் போட்டியே நாடகங்களின் மையம். எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்காக வான்குரல் கேட்கிறார்கள். ஆரக்கிள் எனப்படும் அறிவிப்பு செய்யும் பெண்ணின் குரல் தெய்வத்தின் எதிரொலியாகவே இருக்கிறது.

முக்கியக் கிரேக்க நாடகங்கள் யாவும் பாதியில் துவங்குகின்றன. முன்பின்னாக நகர்ந்து அவை கதையை விவரிக்கின்றன. கோரஸ் என்பது மனசாட்சியின் குரலைப் போலவே இருக்கிறது. பல நேரம் கோரஸாக ஒலிப்பவர்கள் நீதிமான்களாக இருந்திருக்கிறார்கள்.

கிரேக்கர்கள் தங்களின் தொன்மத்தை வரலாற்றின் பிரிக்கப்படமுடியாத பகுதியாகக் கருதுகிறார்கள். தங்கள் வம்சாவளியை அறிந்து கொள்ளத் தொன்மத்தை ஆராய்கிறார்கள். கிரேக்க கடவுள்கள் மனிதர்களைப் போலவே குடும்பவாழ்வும், தனித்த வேலையும், நியதிகளும் கொண்டிருக்கிறார்கள். கிரேக்க கடவுள்கள் நித்யமானவர்கள். அவர்கள் நோயுறுவதில்லை. சில நேரங்களில் அவர்கள் காயம் அடைவார்களே அன்றி இறந்து போவதில்லை. கிரேக்க நாடகங்கள் சடங்கின் நிகழ்த்துகலை போலவே இருக்கிறது.

கோடைவிழாவின் அங்கமாகவே நாடகங்கள் நடந்திருக்கின்றன. அதுவும் நாடகப்போட்டிகளில் பங்குபெற்று பரிசு பெற்ற நாடகங்கள் இவை. சோபாக்ளிஸ் இரண்டாவது இடமே பெற்றிருக்கிறார். முதலிடம் பெற்ற நாடகம் எதுவெனத் தெரியவில்லை.

கிரேக்கத்தில் மாவீரர்கள் வாழ்ந்த காலம் வீர யுகமாகக் கருதப்படுகிறது. வீரயுகத்தின் கதையும் கடவுள் யுகத்தின் கதையும் ஒன்று கலந்ததே கிரேக்க இலக்கியம். கடவுள்களின் உறவால் பூமியில் வீரதீர குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்கள் கடவுளின் வாரிசாகவே கருதப்படுகிறார்கள்.

புனைவின் உச்சநிலையாகக் கிரேக்கத் தொன்மங்கள் அடையாளப்படுத்தபடுகின்றன கிரேக்க நாட்டில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே நாடகக் கலை வளர்ச்சியடைந்திருக்கிறது. . துன்பியல் நாடகம், இன்பியல் நாடகம் மற்றும் அங்கத நாடகம். எனக் கிரேக்க நாடகம் மூன்று வகைப்பட்டது. ஈஸ்கிலஸ், சோபோக்கிளிஸ், யூரிப்பிடிஸ், அரிஸ்டோபன்ஸ் ஆகியோர் முக்கிய நாடகாசிரியர்கள்

கிரேக்கர்களுக்கும் டிராய்க்கும் இடையில் நடந்த டிராஜன் யுத்தம் இலக்கியப்படைப்புகளுக்குப் பெரும்களமாக விளங்கியிருக்கிறது. இந்தியக்கடவுள்களைப் போலவே கிரேக்கத்தில் கடவுள்கள் தனது நேரடிப்பெயராலும் பல்வேறு புனைப்பெயர்களாலும் அழைக்கபடுகிறார்கள், யுத்தம். சாபம், விலக்கப்பட்ட பாலுறவு. வன்பாலுறவு, முறைகேடான காதல், காமக்கிளர்ச்சி இவற்றைக் கிரேக்க இலக்கியங்கள் பிரதானமாக விவாதிக்கின்றன. கிரேக்க சமுதாயத்தின் இம் முக்கியப் பிரச்சனைகள் தொன்மங்களின் வழியாக விவாதமாகின்றன,

.ஈடிபஸ் மன்னன் நாடகத்தில் அவன் தன் நாட்டைப் பீடித்துள்ள நோயிற்கான காரணத்தையே ஆராயத்துவங்குகிறான். அது அவனது பிறப்பு ரகசியமாக வெளிப்படுகிறது. தான் தந்தையைக் கொன்று தாயை புணர்ந்தவன் என அறிந்தவுடன் தன் கண்களைத் தானே தோண்டிக் கொண்டு குருடாகிவிடுகிறான். ஈடிபஸ் ஏன் தன் பார்வையை மட்டும் அழித்துக் கொள்கிறான். தனது குற்றத்திற்காக ஏன் ஈடிபஸ் சாகவில்லை.

அது ஈடிபஸ் அறியாமல் நடந்த தவறு தானே. நாடகத்தில் வரும் ஸ்பிங்ஸ் என்ற விநோதமிருகம் ஒரு புதிரை சொல்லி பதில் கேட்கிறது. பதில் சொல்லமுடியாதவர்களைக் கொன்றுவிடுகிறது. அப்புதிருக்கு ஈடிபஸ் விடையளிக்கிறான். பதில் கிடைத்த ஸ்பிங்ஸ் தற்கொலை செய்து இறந்து போகிறது. பதில் கிடைத்தால் ஏன் ஸ்பிங்ஸ் இறந்து போக வேண்டும். உண்மையில் அது பதிலை வேண்டவில்லை. மீட்சியில்லாத மனிதவாழ்க்கையின் அவலத்தையே அது கேள்வியாக முன்வைக்கிறது. . உண்மையில் ஸ்பிங்ஸாக உருமாறியிருப்பது காலமே,

காலம் தான் அக்கேள்வியை ஈடிபஸிடம் கேட்கிறது. அவன் காலத்தின் கேள்விக்கே பதில் அளிக்கிறான். காலம் அந்தப் பதிலால் திருப்தியடையாமல் மறைந்து போகிறது. ஆனால் காலம் வேறொரு புதிரை அவனிடம் ஒப்படைத்துவிட்டுப் போகிறது. அது மனிதவாழ்க்கையை எது முடிவு செய்கிறது. மனிதர்களின் அறிந்த, அறியாத செயல்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டுமா. தன் வாழ்க்கை ஒரு புதிர் என மனிதன் அறிவானா என்ற காலத்தின் கேள்விக்கு ஈடிபஸிடம் பதில்லை. அவன் தன்னை ஆராயத்துவங்கி முடிவில் தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறான்.

பார்வை இழந்த பிறகு அவன் நாட்டை விட்டு வெளியேறுகிறான். அவனுக்குப் பின்பு அரியணைக்குப் போட்டி நடக்கிறது. அவனது மகன்கள் ஆருடம் கேட்கிறார்கள். வான்குரல் யாருக்கு ஈடிபஸின் ஆதரவு இருக்கிறதோ அவரே அரசாளமுடியும் என அறிவிக்கிறது. இப்போது கண்தெரியாத ஈடிபஸைத் தேடி வருகிறார்கள் அவனது பிள்ளைகள். அவனிடம் ஆதரவு கேட்கிறார்கள். அவன் யாருக்கும் ஆதரவு தர மறுக்கிறான். முடிவில் தங்களுக்குள் சண்டையிட்டு அவர்கள் மடிகிறார்கள்

ஈடிபஸ் அரசன் நாடகத்தின் பிற்பகுதியை வாசிக்கும் போது சமகாலத் தமிழக அரசியல் சூழல் அப்படியே கண்முன்னே வந்து போகிறது.

கிரேக்கநாடகங்களை வாசித்துப் புரிந்து கொள்வது எளிதானதில்லை. ஆங்கிலத்தில் நல்ல மொழியாக்கங்கள் வந்துள்ளன. ஆயினும் நாடகங்களின் பின்புலமும் தொன்மமும் வரலாறு அறிந்திருக்க வேண்டியது அவசியம். தமிழில் ஸ்டாலின் எளிய நடையில் சரளமாகக் கிரேக்க நாடகங்களை வாசிக்க வைக்கிறார். அது மிகுந்த பாராட்டிற்குரிய விஷயமாகும்.

புகைப்படம்

நன்றி ஸ்ருதிடிவி

0Shares
0