“Happy families are all alike; every unhappy family is unhappy in its own way.” என டால்ஸ்டாயின் அன்னாகரீனினா நாவலின் முதல்வரி உள்ளது. புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளரான உர்சுலா லெ குவின் தனது நேர்காணல் ஒன்றில் இந்த வரியை மறுத்து நாவலின் அழகான முதல்வரி என்பதற்கு மேல் இதற்கு மதிப்பில்லை என்கிறார்.
சந்தோஷமான குடும்பங்கள் யாவும் ஒன்று போல இருக்கின்றன என்பது கற்பனை. எந்த இரண்டு சந்தோஷமான குடும்பங்களும் ஒன்று போல இருப்பதில்லை. சந்தோஷம் என்பதை எதை வைத்து வரையறை செய்வது. மகிழ்ச்சியற்ற குடும்பங்களைப் போலவே சந்தோஷமான குடும்பங்களும் தனித்தனியாகவே உள்ளன என்கிறார் உர்சுலா..
இதற்கு உதாரணமான தன்னையே காட்டுகிறார். சந்தோஷமான தனது குடும்பம் இன்னொரு சந்தோஷமான குடும்பம் போல இல்லையே என்கிறார்.
உர்சுலா லெ குவின் வாதம் முதற்வரியை புரிந்து கொள்ளாமல் பேசப்படும் வெட்டிவாதம் என்பேன். காரணம் சந்தோஷமான குடும்பங்கள் ஒன்று போல இருப்பது சந்தோஷத்தை அனுபவிப்பதில். வெளிப்படுத்துவதில் காணமுடிகிறது. வெளிச்சத்தைப் போலவே சந்தோஷம் வீட்டை அழகு செய்கிறது. முகங்களை ஒளிர வைக்கிறது.
ஊரே சிரிக்கிறது என்று எழுத்தாளர் எழுதினால் ஊர் எப்படிச் சிரிக்கும் என்று கேட்பது போலத் தானிருக்கிறது உர்சுலா லெ குவின் வாதம். சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொள்வதில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. துயரத்தில் அப்படியில்லை. வேதனையுற்ற குடும்பம் எப்படி நடந்து கொள்ளும் என்று யாராலும் கணித்துவிட முடியாது.
ஸ்டீன்பெக்கின் நாவலில் புகலிடம் தேடி அலையும் குடும்பம் ஒரு இடத்தில் தற்காலிகமாகக் கூடாரம் அமைத்துத் தங்குகிறார்கள். குடும்பத் தலைவியான பெண் அடுப்பு மூட்டி இனிப்பு தயாரிக்கிறாள். இந்தக் கஷ்டத்திலும் இனிப்பு எதற்காக எனக்கேட்கையில் இனிப்பு சாப்பிடுவதன் வழியே தற்காலிகமாகச் சந்தோஷத்தை அனுபவிக்கலாமே என்கிறார். இப்படித் தான் வாழ்க்கையிருக்கிறது.
சந்தோஷமான குடும்பங்கள் வாழ்நாள் முழுவதும் அப்படியே இருந்துவிடுவதில்லை என்று டால்ஸ்டாயிற்குத் தெரியும்.
நாவலில் அன்னாகரீனனா சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை கொண்டிருப்பது போல தான் தோன்றுகிறது. ஆனால் தனது சந்தோஷம் வெறும் தோற்றம் தான். நிஜமான சந்தோஷம் என்பது வேறு என பின்பு தான் உணருகிறாள். விரான்ஸ்கியோடு வாழும் போது சந்தோஷமாக இருப்பது போல உணருகிறாள். ஆனால் அது தற்காலிக சந்தோஷம் என்று புரிகிறது. உண்மையில் அவளுக்கு சந்தோஷம் கிடைப்பதேயில்லை.
உர்சுலா லெ குவின் தனது சாதுர்யத்தின் வழியே டால்ஸ்டாயை மறுக்க முயல்கிறார். அது தோல்வியாகவே தான் முடிகிறது
பேராசிரியர் அ மு.பரமசிவானந்தம் தனது வாழ்க்கை வரலாற்றை இளமையின் நினைவுகள் என்ற பெயரில் எழுதியிருக்கிறார்..
அவரது சிறுவயதில் குடும்பச் சொத்துகளைப் பிரிக்கும் போது அவரது அம்மாவிற்கும் பெரியம்மாவிற்கும் ஏற்பட்ட மனக்கசப்பைப் பற்றி எழுதியிருக்கிறார்.
அம்மாவும் பெரியம்மாவும் சகோதரிகள். அண்ணன் தம்பியைத் திருமணம் செய்து கொண்டு அடுத்தடுத்த வீட்டில் குடியிருந்தார்கள். ஆனால் பெரியம்மாவிற்குப் பிள்ளைகள் இல்லை. அது அவர்களுக்குப் பெரும் குறையாக இருந்தது. மெல்ல இரண்டு குடும்பங்களுக்கும் விரிசல் உருவாகி உறவு முறிந்தது.
குடும்பச் சொத்துகளைப் பாகம் பிரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்
வீட்டிலுள்ள வெண்கலப் பாத்திரங்களைப் பங்கிட்டுக் கொள்ளும் போது நான்கு கிண்ணம் கொண்ட தூக்கு கொத்து ஒன்றிருந்தது. அதை அப்படியே யாராவது ஒருவர் எடுத்துக் கொள்ளலாம் என்றால் இருவரும் கேட்கவில்லை. அதன் விலையைக் கொடுத்து எடுத்துக் கொள்ளவும் சம்மதிக்கவில்லை. அந்தப் பாத்திரத்தைப் பிணைத்திருந்த கம்பியை இரண்டு துண்டாக்கி இரண்டு இரண்டு கிண்ணமாகப் பிரித்தார்கள். ஆளுக்கு இரண்டு கிண்ணம் வந்தது. இதை இருவரும் பயன்படுத்த முடியாது என்ற போதும் இருவரும் விட்டுக் கொடுக்க மனமற்றவர்களாக நடந்து கொண்டார்கள்.
பாகப்பிரிவினைக்குப் பிறகு அம்மாவும் பெரியம்மாவும் பேசவேயில்லை என்கிறார் பரமசிவானந்தம். அவரது அம்மா சில ஆண்டுகளில் இறந்து போய்விடுகிறார். பின்பு பெரியம்மாவும் இறந்து போனதும் பிரிந்து போன குடும்பச் சொத்துகள் ஒன்றாகின்றன. இப்போது எந்தக் கிண்ணத்தை அவர்கள் கூறு போட்டார்களோ அந்த இரண்டும் அவர் ஒருவருக்கே வந்து சேருகிறது.
ஒரு சிறுகதை போலிருக்கும் இந்தக் காட்சி என்றோ நடந்த ஒரு விஷயமில்லை. இன்றும் குடும்பப் பிரிவினையில் இது போன்ற கசப்பான நிகழ்வுகள் உருவாகவே செய்கின்றன.
இருவரும் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள். தனக்குப் பயன்படாவிட்டாலும் அடுத்தவர் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம் எப்படி உருவாகிறது.
பிரிவினைக்குப் பிறகு அம்மாவிற்கும் பெரியம்மாவிற்குமிருந்த மோதலை ஊர் மக்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒருவரை பற்றி மற்றவரிடம் வம்பு பேசினார்கள். வெறுப்பைத் தூண்டிவிட்டார்கள். இருவருக்கும் நிலம் வாங்குவதில் போட்டி ஏற்பட்டது. பரஸ்பரம் தேவையில்லாத கஷ்டங்களை உருவாக்கிக் கொண்டார்கள் என்கிறார்.
என்றோ நடந்து முடிந்த விஷயம் என்றாலும் அந்தக் கிண்ணம் மறக்கமுடியாத பொருளாக மனதில் பதிந்துவிடுகிறது.
••