காலைக்குறிப்புகள் 12 ஜூலியன் பார்ன்ஸின் கிளி

எழுத்தாளர் ஜூலியன் பார்ன்ஸின் அப்பா அம்மா இருவரும் பிரெஞ்சு ஆசிரியர்கள். அம்மாவின் பூர்வீகம் பிரான்ஸ். பிரிட்டனில் வசித்த போதும் அவர்கள் மனதிலிருந்தது பிரெஞ்சு தேசமும் அதன் பண்பாடுமே. வீட்டில் பிரெஞசு பேசிக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். ஜூலியன் பார்ன்ஸ் பள்ளியில் பிரெஞ்சு மொழி பயின்றார். விடுமுறைக் காலத்தினைக் கழிக்கப் பிரான்ஸ் போவது அவரது வழக்கம். பெரிய நகரங்களை விடவும் பிரான்சின் கிராமப்புறங்களைத் தான் மிகவும் நேசிப்பதாகக் கூறும் ஜூலியன் பார்ன்ஸ்

பிரெஞ்சு இலக்கியத்தின் ஒப்பற்ற படைப்பாளியான குஸ்தாவ் ஃப்லோபேர் எழுதிய மேடம்பவாரி (Gustave Flaubert – Madame Bovary) பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவல் என்றாலும் எக்காலத்துக்குமான மிகச்சிறந்த இலக்கியப்படைப்பு என்று புகழுகிறார்.

சல்மான் ருஷ்டியின் மீது பட்வா விதிக்கபட்டதும் அவரைப் பிரிட்டீஷ் ஏர்வேஸ் தங்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்கள். ஆனால் பிரான்சின் விமானச்சேவை தனிநபர்களின் சுதந்திரத்தை தாங்கள் மதிக்ககூடியவர்கள். இது போன்ற மதக்ககாரணங்களால் எழுத்தாளர் ஒருவர் கொலைமிரட்டல் விடுவிக்கப்பட்டிருப்பதை தங்களால் ஏற்க முடியாது. அவர் விரும்பினால் எப்போதும் தங்கள் விமானசேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வெளிப்படையாக அறிவித்தார்கள். பிரிட்டனை விடவும் பல மடங்கு அறிவார்ந்தது பிரெஞ்சு சமூகம் என்கிறார் ஜூலியன் பார்ன்ஸ்.

Flaubert’s Parrot என்றொரு நாவலை எழுதியிருக்கிறார் பார்ன்ஸ். அதில் ஃப்லோபேர் வீட்டில் வைத்திருந்த பாடம் செய்யப்பட்ட கிளி எதுவெனக் கண்டறியும் பிரத்வொயிட் என்ற கதாபாத்திரத்தின் தேடலை விவரிக்கிறார். ஒன்று போல இரண்டு கிளிகள் இருப்பதாகவும் அதில் எது பிளாபெர்ட் எழுதும் மேஜையிலிருந்தது என்பதைத் தேடத்துவங்கி பல்வேறு கிளிகளை அவர் கண்டறிகிறார். இந்த நாவல் ஃப்லோபேரின் சிலையிலிருந்து துவங்கி. அவரது வாழ்க்கையின் முக்கியத் தருணங்களை விவரிக்கிறது.

1907 ஆம் ஆண்டில் ஃப்லோபேரின் சிலை அவரது அபிமானிகளால் உருவாக்கப்பட்டது. ஆனால் யுத்தகாலத்தில் இந்தச் சிலையை உருக்கி ஆயுதங்களை உருவாக்கப் பயன்படுத்திக் கொண்டார்கள். இதன்பிறகு 1964 ஆம் ஆண்டில், புதிதாக வெண்கலச்சிலை உருவாக்கப்பட்டது. அது தான் தற்போதிருக்கும் சிலை.

ஒரு எழுத்தாளனின் சிலையை உருக்கி ஆயுதம் செய்திருக்கிறார்கள் என்பது விநோதமானது.

பிரெஞ்சு பண்பாட்டினையும் வாழ்க்கையும் குறித்து Something to Declare: Essays on France என்றொரு புத்தகத்தை ஜூலியன் பார்ன்ஸ் எழுதியிருக்கிறார். இதை வாசிக்கையில் இது போன்ற ஒரு புத்தகத்தைத் தான் சுந்தர ராமசாமி எழுத விரும்பினார் எனத் தோன்றியது.

என் இருபது வயதில் முதன்முறையாகச் சுந்தர ராமசாமியைக் காண நாகர்கோவில் சென்ற போது நான் ஒரு கல்லூரி மாணவன். அப்போது தான் எழுதத் துவங்கியிருந்தேன். ஆனாலும் என்னை மிக முக்கிய விருந்தினரைப் போல வரவேற்று உணவளித்து நீண்ட நேரம் சுந்தர ராமசாமி பேசிக் கொண்டிருந்தார். அந்த உரையாடலின் துவக்கமாக இருந்தது ஆல்பெர் காம்யூவின் அந்நியன் நாவல்.

அந்த நாவலை நான் வாசித்திருக்கிறேனா என்று கேட்டு அதைப் பற்றி நீண்ட நேரம் சுந்தர ராமசாமி பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு நவீன பிரெஞ்சு சிந்தனையாளர்கள் மீதும் எழுத்தாளர்கள் மீதும் பெரும் விருப்பமும் மரியாதையும் இருந்தது. தனது ஜேஜே சில குறிப்புகள் நாவலில் அதைப்பற்றி நேரடியாக எழுதியிருக்கிறார்.

சுந்தர ராமசாமி பாரீஸிற்குச் சென்றிருக்கிறார். பிரெஞ்சு கலை விழா ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். ஜூலியன் பார்ன்ஸ் போல அவரும் பிரான்ஸ் முழுவதையும் காண ஆசை கொண்டிருப்பார். ஆனால் செல்லவில்லை.

ஏன் அவர் பிரெஞ்சு இலக்கியம் பற்றியோ பண்பாடு பற்றியோ அதிகம் எழுதவில்லை என்று இப்போது தோன்றுகிறது.

அமெரிக்காவிற்குப் பலமுறை சென்று வந்த போதும் அதைப்பற்றிக் குறைவாகவே எழுதியிருக்கிறார். சார்த்தரின் நாடகமான மீளமுடியுமா பற்றி ஒரு முறை சுந்தர ராமசாமி வியந்து பேசியது நினைவிற்கு வருகிறது. சுந்தர ராமசாமியின் நாவல் பிரெஞ்சில் வெளியாகியிருக்கிறது. எந்தப் பிரெஞ்சு இலக்கியங்களைத் தான் மிகவும் நேசித்தாரோ அந்த எழுத்துலகம் அவரை எப்படி எதிர்கொண்டது என்பது பற்றி அவர் எதையும் எழுதியிருக்கவில்லை. தனிப்பட்ட விஷயம் என்று கருதியிருக்கலாம்.

ஆனால் சமகாலப் பிரெஞ்சு இலக்கியங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும். அவர்களின் பண்பாடு மற்றும் அரசியல் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைச் சுந்தர ராமசாமியே ஏற்படுத்தினார். புதிய சிந்தனைகளைப் பற்றிப் பேசும் போது அவரது கண்கள் ஒளிர்வதைக் கண்டிருக்கிறேன்.

ஒரு முறை அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது கு.அழகிரிசாமி ஃப்லோபேரின் குறுநாவல் ஒன்றை மொழியாக்கம் செய்திருக்கிறார். அதைக் கிராம நூலகத்தில் எடுத்து வாசித்திருக்கிறேன் என்றேன். அந்தச் செய்தி அவருக்கு வியப்பாக இருந்தது. கு.அழகிரிசாமியா என்று மறுமுறையும் கேட்டார்.

மேடம்பவாரி தமிழில் சுருக்கப்பட்ட பதிப்பாக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் மிகவும் சுமாரான மொழியாக்கம்..

Annie Ernaux என்ற பிரெஞ்சு பெண் எழுத்தாளரின் புத்தகங்களைத் தற்போது நான் விரும்பி படிக்கிறேன். இவரது The Years என்ற நாவல் ஒரு புதிய வகையான சுயசரிதையாக எழுதப்பட்டிருக்கிறது. 1941ல் இருந்து 2006 வரையிலான காலகட்டத்தில் நடந்த சமூக விஷயங்களையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் ஒன்று சேர்த்துச் சிதறடிக்கப்பட்ட வடிவத்தில் இந்த நாவலை மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார்.

இதை வாசிக்கும் போது மனதில் சுந்தர ராமசாமி பிரெஞ்சு இலக்கியங்களை வியந்து பேசியதே நினைவிற்கு வந்தது.

சுந்தர ராமசாமி தனது கட்டுரை ஒன்றில் இவ்வாறு சொல்கிறார்

“படைப்பு என்னென்ன வலுக்களைக் கொண்டிருந்தால் அது சமூகத்தை அதிகளவுக்குப் பாதிக்கும் என்று நான் இளம் வயதில் யோசிக்கத் தொடங்கினேன். அவ்வளவு பெரிய கேள்விக்கு விடை கண்டுபிடிக்கக்கூடிய அளவுக்கு என் மூளைக்கு அப்போது திராணி கிடையாது. ஆனால் ஆசை சார்ந்து கேள்விகள் வருகின்றன. மூளைக்குத் திராணி வரும் காலம் வரையிலும் ஆசை காத்துக் கொண்டிருப்பதில்லை.எழுத்தாளர்கள் பொறுமையாகப் புதிய சிந்தனைகளைக் கவனிக்கத் தொடங்க வேண்டும். ஒரு புதிய சிந்தனையைக் கற்றுக் கொள்வதற்கு முன்னரே எதிர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு யாரும் வரமுடியாது. காலம் மாறுகிறபோது புதிய சிந்தனைகள் உருவாகிக் கொண்டே இருக்கும். அவற்றைப் பார்த்து கலவரப்பட வேண்டியதில்லை. நம் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு நம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு நம் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு புதிய உண்மைகள் இருக்குமென்றாலும் அந்தப் புதிய உண்மைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். “

இந்த ஆசை தான் அவரை பிரெஞ்சு இலக்கியங்களை மிகவும் நேசிக்க வைத்திருக்கிறது

••

0Shares
0