காலைக்குறிப்புகள் 13 நாவலின் வழி தேடுதல்

நியால் வில்லியம்ஸ் எழுதிய “The History of Rain” நாவலில் ரூத் ஸ்வைன் என்ற படுக்கையில் கிடக்கும் பெண் கதைகளுக்குள்ளாகத் தனது தந்தையைத் தேடுகிறாள். நாம் ஒவ்வொருவரும் ஒரு நீண்ட கதையே என்கிறது இந்த நாவல்.

We are our stories. We tell them to stay alive or keep alive என்றே நாவல் துவங்குகிறது.

இளமையிலே நோயுற்ற ரூத் ஸ்வைன் படுக்கையிலே கிடக்கிறாள். சுற்றிலும் புத்தகங்கள். கதைகளுக்குள் தனது தந்தையைத் தேடிக் கண்டுபிடிக்க முயல்கிறாள் ரூத்.

படுக்கையில் இருந்தபடியே ரூத் தனது குடும்பத்தின் நான்கு தலைமுறைகளின் கதையை விவரிக்கிறார், இந்த வரலாற்று கதையை தனது சொந்த கதையுடன் பின்னிப்பிணைக்கிறார்.

மிகை கற்பனை போலத் தோன்றினாலும் ரூத்தின் தேடுதலைத் தான் நாம் அனைவருமே மேற்கொள்கிறோம்.

கதைகளின் வழியே எப்படி ஒரு கதாபாத்திரத்தைக் கண்டறிய முடியும். தந்தை வசித்த காலமும் அன்றைய சமூக நிகழ்வுகளும் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.அவற்றிலிருந்து அவர் வாழ்ந்த காலத்தின் முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடியும். தந்தை மதநம்பிக்கை கொண்டவராக இருந்திருந்தால் அன்றைய மதநம்பிக்கைகள் வழிபாடுகள் எவ்வாறு இருந்தன என்பதைக் கதைகள் சொல்கின்றன. அதிலிருந்து தந்தையின் அந்தப்பக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம். இப்படித் துண்டுதுண்டாகச் சேகரித்துத் தந்தையின் உருவத்தைக் கண்டறிவது தான் எளிய வழி. ஆனால் ரூத் கதையில் இப்படி முயலவில்லை. அவள் தான் வாசிக்கும் புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு விஷயத்தைக் கண்டறிகிறாள். தந்தையின் இளமைக்காலம். அவரது விவசாய முயற்சிகள். அவருடன் தனக்கிருந்த உறவு என  பல்வேறு புள்ளிகளை தொட்டு அதன் வழியே தனது குடும்பவரலாற்றை மீள் உருவாக்கம் செய்ய முற்படுகிறாள். சிதறடிக்கப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பாகவே நாவல் விரிகிறது.

ஒரு நாவலை வாசிக்கும் போது கதைக்குள் நாம் அறிந்த மனிதர்களைத் தேடுகிறோம். சில நேரம் நம் உருவமே கூடத் தெரிவதும் உண்டு. கதாபாத்திரங்களின் வழியே நம்மை நாமே அடையாளம் கண்டு கொள்ள முயல்கிறோம். பலர் இழந்து போன வாழ்க்கையை, அடைய முடியாத சந்தோஷங்களைக் கதைகளில் வழியே பெறுகிறார்கள். சிலர் அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகளிலிருந்து தப்பிக்கக் கதைகளை வாசிக்கிறார்கள்.

நம் மறக்கமுடியாத நினைவுகளைக் கதைகளாக மாற்றிக் கொண்டுவிடுகிறோம். நம் பள்ளிப்பருவத்தைப் பற்றி யாராவது கேட்டால் உடனே ஒரு கதை போலத் தானே சொல்ல ஆரம்பிக்கிறோம். கதைகளின் ஊடாக என்ன தேடுகிறார்கள் என்பது விசித்திரமானது.

ரஷ்யாவில் ஒரு மருத்துவர் அவர் வாசிக்கும் நாவல்கள் ஒவ்வொன்றிலும் அதன் கதாபாத்திரங்களுக்கு என்ன நோய் உள்ளது என்பதைப் பட்டியலிட்டிருக்கிறார். அந்தக் கதாபாத்திரங்களுக்கு என்ன மருந்து கொடுத்துச் சரி செய்ய வேண்டும் என்று தனது மருத்துவப் பரிந்துரையினையும் இணைத்து வெளியிட்டிருக்கிறார்.

பிரிட்டனில் ஒரு விமர்சகர் நாவலில் கதாபாத்திரங்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காகவே நாவல் படிப்பதாகச் சொல்கிறார்.

கதைகளில் நன்மை வெல்ல வேண்டும் என்றே பெரும்பான்மை வாசகர்கள் நினைக்கிறார்கள். காரணம் நிஜவாழ்க்கையில் அப்படி நடப்பது குறைவு தானே.

டிக்கன்ஸின் நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் உண்மையானது தானா என ஆராய்ந்திருக்கிறார்கள். உண்மையில் அந்தப் பெயர்களில் வாழ்ந்த மறைந்தவர்களைப் பற்றிக் குறிப்புகள் இருக்கின்றன. என்றால் அந்தப் பெயரில் டிக்கன்ஸ் எழுதியதும் நிஜவாழ்வும் ஒன்றா என்ற கேள்வி எழுகிறது. இரண்டும் ஒன்றில்லை. ஆனால் அந்தப் பெயர் கொண்ட மனிதனிடமிருந்து தனது புனைவை டிக்கன்ஸ் உருவாக்கிக் கொள்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஒரு பேராசிரியர் இளவயதில் காணாமல் போன தனது சகோதரன் ஒருவனை ஒரு நாவலில் வரும் கதாபாத்திரத்தின் வழியே அடையாளம் கண்டுகொண்டு அந்த எழுத்தாளரைத் தேடி அமெரிக்கா சென்றிருக்கிறார். எழுத்தாளரும் அது போன்ற ஒரு மனிதனைத் தான் உணவகம் ஒன்றில் சந்தித்த விபரத்தைச் சொல்லவே அது தன் தம்பி என்பதைக் கண்டறிந்து அவர்கள் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.

அந்தப் பேராசிரியருக்கு நாவல் என்பது உண்மையைக் கண்டறிய உதவிய ஒரு வழிகாட்டுதல். மற்றவர்களுக்கு அது வெறும் புனைவு.

வாசியுங்கள். காத்திருங்கள். உண்மையை அறிவீர்கள் என்று இந்த நாவலில் ரூத் சொல்கிறாள். அது நிஜமே.

••

0Shares
0