காலைக்குறிப்புகள் 14 நாவலின் வரைபடம்

ஒரு நாளில் இரண்டு பக்கங்கள் எழுதினால் போதும் ஒரு ஆண்டிற்குள் ஒரு நாவலை முடித்துவிடலாம் என்று நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் சரமாகோ சொல்கிறார். ஐரோப்பிய எழுத்தாளர்கள் ஒரு நாளில் இத்தனை சொற்கள் என்று வார்த்தைகளை எண்ணி எழுதக்கூடியவர்கள்.  அன்றாடம் எழுதும் பழக்கம் உள்ளவர்களுக்கு எழுதுவது விருப்பமான வேலையாகிவிடும். ஆனால் புதிதாக எழுத ஆரம்பிக்கிறவர்களுக்கு ஒரு நாளில் மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் எழுதுவது என்பது இயலாத ஒன்றே.

பெரும்பான்மை நாவலாசிரியர்கள் தனது நாவலுக்கான அடிப்படைகளைக் குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்கிறார்கள். அல்லது அத்தியாயங்களைப் பிரித்து வைத்துக் கொண்டு அதன் பிறகே எழுத ஆரம்பிக்கிறார்கள்.

எனக்கு நாவல் எழுதும் போது மேகம் போலச் சிறிய அளவே கதை தெரியும். நகர்ந்து செல்லும் மேகக்கூட்டத்தைப் போலத் தன்போக்கில் கதை வளர்ந்து செல்லும். எடிட்டிங் போது தான் நாவலின் முழுமையான வடிவத்தை உருவாக்குவேன்.

அசோகமித்திரனின் ஒற்றன் நாவலில் ஒருவன் தனது நாவலை வரைபடமாக வரைந்து வைத்திருப்பான். அந்த வரைபடத்தை அப்படியே எழுத்தில் கொண்டு வர வேண்டியது தான் என்று சொல்லுவான். அது எளிய விஷயமில்லை. நம் விருப்பங்கள் யாவையும் நாவலாக்குவது இயலாத காரியம். சில நேரம் நாவலின் கதை துவங்கி சில அத்தியாயங்களில் முடிந்துவிடும். அப்புறம் அதைத் தொடர முடியாது.

டால்ஸ்டாய் அப்படி ஒரு சரித்திர நாவலை எழுத ஆரம்பித்து ஐம்பது பக்கங்களில் நிறுத்திவிட்டதாகச் சொல்கிறார்.

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது கடைசி நாவலான Memories of My Melancholy Whores கதைக்கருவை ஜப்பானிய எழுத்தாளரான கவாபத்தாவின் House of the Sleeping Beauties நாவலிலிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கவாபத்தா அந்தக் கதையைக் கையாண்ட விதமும் மார்க்வெஸ் கையாண்ட விதமும் முற்றிலும் மாறுபட்டது. ஒரு நாவலிலிருந்து இன்னொரு நாவல் உருவாவது என்பது மேற்குலகில் சாத்தியம்.

மிலன் குந்தேரா தனது நாவல்களை ஒன்பது அத்தியாயங்கள் வரும்படி எழுத வேண்டும் என்றே திட்டமிடுவார். விதிவிலக்காக இரண்டு நாவல்கள் அப்படி அமையவில்லை. மற்றபடி அவருக்கு நாவல் என்பது இசைக்கோர்வையைப் போல ஒரு ஒழுங்கு கொண்டது.

கவாபத்தா தனது Snow Country நாவலை முதலில் சிறுகதையாகவே எழுதினார். பின்பு அந்தக் கதையின் தொடர்ச்சியாக இன்னொரு கதையை வேறு இதழில் வெளியிட்டார். அதன் ஓராண்டிற்குப் பிறகு மூன்றாவது அத்தியாயம் போல ஒரு கதையை எழுதி வெளியிட்டார். இப்படிச் சில ஆண்டுகளாக அவர் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து இடைவெளிகளைப் புதிதாக எழுதி வெளியானதே Snow Country நாவல். ஆனால் நாவலை வாசிக்கிறவர்களுக்கு இந்தக் கால இடைவெளி தெரியவே தெரியாது. நாவல் ஒரு மலரைப் போல முழுமையாக உருக்கொண்டிருக்கும்.

ஜப்பானின் புகழ்பெற்ற நாவலாசிரியர்கள் பெரும்பாலும் நூறு முதல் இருநூறு பக்கங்களுக்குள் தான் நாவலை எழுதியிருக்கிறார்கள். தற்போது முரகாமி தான் பெரிய பெரிய நாவல்களை எழுதுகிறார். சிறிய நாவல்கள் என்பது மினியேச்சர் ஓவியம் போன்றது என்கிறார் கவாபத்தா,

சரமாகோ போன்றவர்கள் ஒரு நாவலை எழுதத் துவங்கும் முன்பு அதன் பின்புலம் குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்கிறார்கள். அதற்காக நிறையப் பயணம் மேற்கொள்கிறார்கள்.

சரமாகோவின் The Elephant’s Journey ஒரு உண்மை சம்பவத்திலிருந்து உருவான நாவல். 1552ல் போர்த்துகல் அரசர் தனது உறவினரான ஆஸ்திரியாவின் ஆளுநர் மாக்ஸ்மிலியனுக்குத் திருமணபரிசாக ஒரு யானையைத் தருகிறார். லிஸ்பனில் இருந்த அந்த யானையை எப்படி வியன்னா வரை நடத்திக் கொண்டு செல்கிறார்கள் என்பதே கதை. இந்த யானை இந்தியாவிலிருந்து கொண்டுபோகப்பட்டது. அதன் பெயர் சாலமன். அந்த யானையோடு  சுப்ரோ என்ற யானைப் பாகனும் காவல் வீரர்களும் உடன் செல்கிறார்கள். பனியினுள் ஒரு யானையின் நெடும்பயணமே நாவல். இதற்காக யானை சென்ற வழி முழுவதிலும் சரமாகோ பயணம் செய்திருக்கிறார். அன்றைய தேவாலயப்பதிவுகள். மற்றும் இந்த யானையின் பயணம் குறித்து எழுதப்பட்ட தகவல்கள். வாய்மொழிக்கதைகள் அத்தனையும் சேகரித்திருக்கிறார். குறிப்பாக யானையைக் குளிர் தாக்கும் போது அதன் உடல்நலம் எப்படிப் பாதிக்கபடும் என்று மருத்துவர்களிடம் ஆலோசனை செய்திருக்கிறார். இந்தியாவிலிருந்து யானை எப்படி லிஸ்பன் கொண்டுவரப்பட்டது. இந்தியப் புராணங்கள், தொன்மங்களில் யானை எவ்வாறு இடம்பெற்றுள்ளது. என்பதை எல்லாம் வாசித்திருக்கிறார்கள்., இவ்வளவு விரிவான ஆய்வின் பிறகே நாவலை எழுத துவங்கியிருக்கிறார்.

ஜப்பானில் ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்ற எழுத்தாளர் தி.ஜானகிராமன் அவர்களின் வீட்டுத்தோட்டம் அலங்கோலமாக இருப்பதாக உணருகிறார். இதைப்பற்றி நண்பரிடம் பேசியபோது நண்பர் அந்தத் தோட்டத்தைக் கவனமாக உருவாக்கியிருக்கிறோம். எங்கள் கை பட்டதே உங்களுக்குத் தெரியாது. இயற்கையாக உள்ளது போலத் தோற்றமளிக்கச் செய்வது தான் எங்கள் தோட்டக்கலையின் வெற்றி என்றார்

நாவலும் அப்படிப் பட்டது தான். அதில் எழுத்தாளன் செய்துள்ள கலைநுட்பங்கள் துருத்திக் கொண்டு தெரியக்கூடாது.  ஒரு செடி வளர்வது போல இயல்பாக நாவல் வளர்ந்து நிற்க வேண்டும். அதே நேரம் கதையை மட்டும் சொல்வது நாவலின் வேலையில்லை. அது பத்தொன்பதாம் நூற்றாண்டோடு முடிந்துவிட்டது. கதை வழியாக நாம் நிறையச் சொல்ல முடியும். விவாதிக்க முடியும். ஆராய முடியும் என்பதே நவீன நாவல்களின் பணி. ஆகவே சரமாகோ ஒரு உண்மை நிகழ்விலிருந்து தனது கதைக்கருவை எடுத்துக் கொண்டாலும் அதைக் கத்தோலிக்கச் சமயம் சார்ந்த வரலாற்றின் மீளாய்வாக உருமாற்றுகிறார். யானை நாவலில் ஒரு குறியீடாக மாறிவிடுகிறது.  விசித்திரமான அந்த பயணத்தின் வழியே அன்றைய காலகட்டமும் அதன்மனிதர்களும் கண்முன்னே உலவ ஆரம்பிக்கிறார்கள். அது தான் படைப்பாளியின் வெற்றி.

••

0Shares
0