காலைக்குறிப்புகள் 16 மகிழ்ச்சியின் தூதுவன்

தபால்காரரை எதிர்பார்த்து எழுத்தாளர்கள் காத்திருப்பது குறித்து எழுத்தாளர் ஜான் பிரைன்  எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்தேன்.

பாப்லோ நெரூதாவிற்கு வரும் தபால்களைக் கொண்டு வருவதற்கென்றே தனியே ஒரு தபால்காரர் இருந்தார். தினமும் நூற்றுக்கணக்கில் கடிதங்கள் வருவது வழக்கம். அதில் பாதிக் காதல் கடிதங்கள்.

விண்ணுலகிலிருந்து ஒரு தேவதூதன் வருவது போலவே தபால்காரர் நம் வீதிக்கு வருகிறார். அவரது கையிலுள்ள கடிதங்கள் எத்தனை பேரை மகிழ்ச்சிப்படுத்தப் போகின்றன என்று அவருக்குத் தெரியும். உண்மையில் அவர் தான் மகிழ்ச்சியின் தூதுவர். அதே நேரம் சில கடிதங்கள் சிலரது வாழ்க்கையைப் புரட்டிப் போடக்கூடியவை. எதிர்பாராத செய்திகளைக் கொண்டவை என்பதையும் அவர் அறிந்திருப்பார். ஒரு துறவியைப் போல அவர் சுகதுக்கங்களை ஒன்றாகக் காணுகிறார் என ஜான் பிரைன் குறிப்பிடுகிறார்.

தபால்காரர் என்றவுடன் என் மனதிலிருக்கும் பிம்பம் அவரது காக்கி உடை, சைக்கிள், அதில் கட்டாக வைக்கப்பட்டுள்ள தபால்கள். அவரது தோள்பை. பெரும்பான்மை தபால்காரர்கள் மெலிந்த தோற்றம் கொண்டவர்களே.

இன்றைக்கு யாரும் தபால்காரருக்காகக் காத்திருப்பதில்லை. இது மின்னஞ்சலின் யுகம். ஆனால் சென்ற தலைமுறைக்குத் தபால்காரர் தான் உலகம். அதுவும் கதைகளைப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு அது வெளியாகுமா எனத் தெரியாமல் காத்திருந்தபோது பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து வரும் பதில் கடிதம் முக்கியமானது.

பெரும்பான்மை எழுத்தாளர்கள் தங்கள் கதை நிராகரிக்கப்பட்டதாக வந்த கடிதத்தை வாசித்து மனம் உடைந்து போயிருக்கிறார்கள். அந்த நிராகரிப்புக் கடிதங்களைச் சேகரித்து வைத்துக் கொண்ட எழுத்தாளர்களும் உண்டு. ஆனால் கதை தேர்வு செய்யப்பட்டிருப்பதாக வரும் தபால் எத்தனை மகிழ்ச்சியைத் தந்தது என்பது உணர்ந்தவர்களுக்குத் தான் தெரியும்.

கதை வெளியான இதழ் தபாலில் தான் வந்து சேரும். அபூர்வமாக எங்கிருந்தோ ஒரு வாசகர் கதையைப் பாராட்டி கடிதம் எழுதுவார். எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதிக் கொள்வார்கள். எழுத்தாளர் கி.ராஜநாராயணனும் கண்ணதாசனும் நிறையக் கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவை தொகுப்பாக வந்திருக்கின்றன. புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் கண்மணி கமலாவிற்கு என வெளியாகியிருக்கிறது. மறக்கமுடியாத கடிதத் தொகுப்பது.

எனது சொந்த ஊரான மல்லாங்கிணற்றில் வீட்டிற்கு அருகில் தபால் நிலையம். ஆகவே தபால்பை பேருந்து வந்து இறங்கிய உடனே தபால் நிலையத்திற்குப் போய்விடுவேன். சந்தா கட்டிய பத்திரிக்கைகள் தபாலில் வருவது வழக்கம். நிச்சயம் இரண்டோ மூன்றோ கடிதங்கள் வருவதும் உண்டு. கதைகள் தொடர்ந்து வெளியாகி எழுத்தாளராக அடையாளம் காணப்பட்ட பிறகு தினமும் பத்து பதினைந்து கடிதங்கள் வரத்துவங்கி சில நாட்களில் ஒரு கட்டுக் கடிதம் வருவதுமுண்டு. சென்னைக்கு வந்தபிறகு வீட்டின் வாசலில் தபால்போடும் பெட்டி ஒன்றை மாட்டி வைத்தேன். சில நாட்கள் அது நிறைந்துவிடும். நிறையத் தபால்களைக் காணுவது மிகுந்த சந்தோஷமாக இருக்கும்.

தனக்கு வரும் தபால்களைச் சுந்தர ராமசாமி பாதுகாத்து வைப்பதைக் கண்டிருக்கிறேன். அவர் கடிதங்களை டைப் செய்து அனுப்பி வைப்பார். ஆனால் நான் கடிதங்கள் எதையும் பாதுகாத்து வைத்துக் கொள்ளவில்லை. சுபமங்களாவில் எனது கதை நகர் நீங்கிய காலம் வெளியான போது அதைப் பாராட்டி சுந்தர ராமசாமி ஒரு தபால் அட்டை போட்டிருந்தார். சுபமங்களா ஆசிரியர் கோமல் சுவாமிநாதன் அதை நேரில் என்னிடம் ஒப்படைத்தார். நீண்ட நாட்களுக்கு அந்தத் தபால் அட்டையைப் பத்திரமாக வைத்திருந்தான். வீடு மாறிய போது அதுவும் காணாமல் போய்விட்டது.

சில நாட்கள் கோணங்கிக்குத் தபால் எழுதி பெட்டியில் போட்டுவிட்டு அந்தத் தபால் போய்ச் சேருவதற்குள் அவரை நேரில் சென்று சந்தித்துவிடுவதும் உண்டு.

பேனா நண்பர்கள் என்று முகமறியாத நண்பர்கள் உருவாவதுண்டு. இதற்கான விளம்பரங்கள் கூடப் பேப்பரில் வெளியாகும். அப்படி ஒரு பேனா நண்பர் நீண்ட காலத்திற்குக் கடிதம் எழுதிக் கொண்டேயிருந்தார். ஏனோ அவரை ஒரு முறை கூடச் சந்திக்கவேயில்லை.

கதைக்குச் சன்மானமாக ஐம்பது ரூபாயை முதன்முறையாக மணி ஆர்டரில் பெற்றபோது சந்தோஷமாக இருந்தது. பொங்கல் வாழ்த்து அட்டைகளைக் கைநிறைய கொண்டு போய்த் தபாலில் போட்டதும் நிறைய நண்பர்களிடமிருந்து பொங்கல் வாழ்த்து அட்டைகளைப் பெற்றதும் மறக்கமுடியாதது. பொங்கல் வாழ்த்து அட்டைகள் இப்போது மறைந்துவிட்டன. ஆனால் அதைத் தேர்வு செய்து விருப்பமானவர்களுக்கு அனுப்பி வைப்பது எத்தனை சந்தோஷமான விஷயம்

துகார்ட் (Roger Martin du Gard) எழுதிய தபால்காரன் நோபல் பரிசு பெற்ற நாவல். தபால்காரனின் உலகை மிகச்சிறப்பாகப் பதிவு செய்த நாவலிது. போரில் மகன் இறந்துபோய்விட்ட தகவலை மறைத்து ஒரு தாயிற்குத் தபால்காரரே தொடர்ந்து கடிதங்கள் எழுதுவதாக ஒரு ரஷ்யக் கதையை வாசித்திருக்கிறேன். மலைக்கிராமங்களுக்குத் தபால் கொண்டு போய்த் தருபவரைப் பற்றிய Postmen in the Mountains மறக்கமுடியாத படம். ‘The Postman’s White Nights’ என்ற ரஷ்யப் படத்தில் தொலைதூர தீவுகளுக்குத் தபால் கொண்டு செல்லும் தபால்காரனின் வாழ்க்கை விவரிக்கப்படுகிறது.

தபால்காரருக்குத் தெரியாத மனிதர்களே இல்லை. அவருக்குத் தெரியாத ரகசியம் எதுவுமில்லை. ஆனால் அவர் எதையும் வெளியில் பகிர்ந்து கொள்வதில்லை.

THE POSTMAN (JOSEPH-ÉTIENNE ROULIN) என வான்கோ தனக்குக் கடிதம் கொண்டு வரும் ஓவியரை அழகான ஓவியமாக வரைந்திருக்கிறார். வான்கோ தனது சகோதரன் தியோவிற்கு எழுதிய கடிதங்கள் மிகச்சிறப்பானவை. அவை தனிநூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன

மழைநாளிலும் குடையோடு வரும் தபால்காரனின் முகம் நினைவிலிருக்கிறது. அந்த உலகம் இன்றில்லை. இந்த உலகில் பிரிவு உணரப்படுவதேயில்லை. கடிதம் தந்த சந்தோஷத்தை மின்னஞ்சல் தருவதேயில்லை.

••

0Shares
0