காலைக்குறிப்புகள் 20 எங்கிருந்து கிடைக்கின்றன

அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளரான சிந்தியா ஓசிக்  கட்டுரை ஒன்றில் எழுத்தாளர்களிடம் தொடர்ந்து கேட்கப்படும் ஒரு கேள்வி பற்றி எழுதியிருக்கிறார்.  இந்தக் கதைகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதே அக் கேள்வி.

இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத எழுத்தாளரே கிடையாது. ஏன் தொடர்ந்து இப்படி ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது.

ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் அறிஞரிடம்  கண்டுபிடிப்பிற்கான எண்ணம் எங்கிருந்து கிடைத்தது என்று எவரும் கேட்பதில்லை. வேறு துறை சார்ந்த அறிஞர்கள் எவரிடம் இப்படி ஒரு கேள்வி முன்வைக்கப்படுவதில்லை. ஆனால் எழுத்தாளர்களிடம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

எழுத்தாளன் தானே ஒன்றே யோசித்து எழுத மாட்டான் என்று மக்கள் நம்புகிறார்கள். அவனது படைப்பிற்கான ஐடியா எங்கிருந்தோ கிடைக்கிறது. அவற்றைச் சேகரித்து எழுத்தாக்கி விடுகிறான் எனவும் நம்புகிறார்கள்.  வெளியிலிருந்து கிடைக்கும் விஷயங்களைக் கொண்டு செய்வதே படைப்பு எனப் பொது வாசகர்கள் கருதுகிறார்கள் என்கிறார் சிந்தியா ஒசுக்.

இப்படி ஒரு கேள்வியை நாம் மறுக்கவும் முடியாது. காரணம் அனுபவங்களை, செய்திகளை, தகவல்களைச் சேகரித்து அதிலிருந்து கதைகள், நாவல் எழுதும் எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள் தானே.  ஆகவே அதை வாசகர்களின் தவறாகக் கருதமுடியாது.

எழுத்தாளன் பல்வேறு வகைப்பட்ட தகவல்கள். செய்திகள். அனுபவங்கள் இவற்றைத் தனது கச்சாப்பொருளாகக் கொள்கிறான் என்பது உண்மையே. அதே நேரம் அவற்றை அப்படியே அவன் பயன்படுத்திக் கொள்வதில்லை.

டால்ஸ்டாயின் பண்ணை அருகில் ஒரு பெண் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுவிடுகிறாள். குடும்பப் பிரச்சனை காரணம் அவ்வளவு தான் டால்ஸ்டாயிற்குக் கிடைத்த தகவல். அவரே நேரில் சென்று அந்த இடத்தைப் பார்வையிடுகிறார். அந்தச் சம்பவம் அவர் மனதில் ஆழப்பதிந்து போய்விடுகிறது. பின்னாளில் அது அன்னாகரீனினா நாவலாக உருவெடுக்கும் போது அதன் பிரம்மாண்டம் முற்றிலும் வேறுவிதமாகிறது. அது தான் படைப்பாளின் ஆளுமை,

சிந்தியா ஒசிக் இரண்டு வகையான எழுத்து முறை உள்ளது என்கிறார். ஒன்று நினைவிலிருந்து எழுதுவது. மற்றொன்று ஐடியாவிலிருந்து எழுதுவது. நினைவிலிருந்து எழுதும் எழுத்தாளர்கள் சுய அனுபவங்கள் மற்றும் பிறரது அனுபவங்களைச் சேகரித்து அதிலிருந்து அழகாகக் கதையை உருவாக்கி விடுவார்கள்.

ஆனால் ஐடியாவிலிருந்து எழுதுபவர்களுக்கு இது போன்ற சேகரிப்புகள் தேவைப்படாது. அவர்கள் கதாபாத்திரங்களின் மனநிலையை, ஆழமான உளவியல் சிக்கல்களை நோக்கி கதையைக் கொண்டு செல்கிறார்கள்.

ஐடியாவாக இருந்தாலும் நினைவிலிருந்து எழுதினாலும் கற்பனை தான் எழுத்தாளனின் ஆதாரப் பொருள். கற்பனையின் வழியே அவன் நிஜத்தை எப்படி மறுஉருவாக்கம் செய்கிறான் என்பதிலே கலை வெளிப்படுகிறது.

எந்த நிகழ்வையும் அப்படியே யாரும் எழுத்தில் பிரதிபலித்து விட முடியாது. ஐடியாவை முதன்மையாகக் கொண்டு எழுதுகிறவர்கள் தத்துவம் மெய்யியல், விஞ்ஞானம் தொன்மம், புராணீகம் என எந்த விதமான ஐடியாவிலிருந்தும் தனது படைப்புகளை உருவாக்குகிறார்கள். விநோதமான, சிக்கலான, மாயமான கதைகளை அவர்களால் எழுத்தாக்க  முடிகிறது. ஆனால் நினைவிலிருந்து எழுதும் படைப்புகள் அப்படியானவையில்லை. அவை உணர்ச்சிப்பூர்வமாகக் கதையை முன்னெடுக்கின்றன.

பிரிட்டிஷ் எழுத்தாளரான ஹென்றி ஜேம்ஸ் பொது இடங்களுக்குச் செல்லும் போது கையில் சிறிய குறிப்பேடு ஒன்றைக் கொண்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஏதாவது சுவாரஸ்யமான சம்பவமோ, தகவல்களோ கிடைத்தால் உடனே குறித்துக் கொண்டுவிடுவார். அது போல விருந்துக்குச் செல்லும் போது அங்கே வரும் மனிதர்களின் பெயர்கள் தோற்றம் பேச்சு முறை இவற்றைக் குறிப்பேட்டில் பதிந்து கொள்வார். வீடு திரும்பிய பிறகுத் தனது குறிப்பேட்டில் அந்த நிகழ்வைச் சிறுகதையாக எழுத வேண்டும் என்று அடிக்குறிப்பும் போட்டுக் கொள்வார். ஆனால் அவர் கதையை எழுதி முடிக்கும் போது அவர் பார்த்த, அல்லது கேட்ட சம்பவமோ, நிகழ்வோ அதிலிருந்து மறைந்து போயிருக்கும். முற்றிலும் புதிய தளத்தில். புதிய கோணத்தில் அந்தச் சம்பவத்தைக் கதையாக எழுதியிருப்பார். மரத்திலிருந்து சிற்பம் உருவாக்குவது போன்ற பணி என்றே தனது எழுத்தைப் பற்றி ஹென்றி ஜேம்ஸ் குறிப்பிடுகிறார்

அவரது காலத்தில் சினிமா அறிமுகமானது. ஆனால் ஹென்றி ஜேம்ஸ் ஒரு திரைப்படத்தைக் கூடத் தன்வாழ்நாளில் கண்டதில்லை. அதில் அவருக்கு விருப்பமும் இல்லை. நாடகங்களைத் தான் பெரிதும் கொண்டாடி வந்தார். நிறைய நாடகங்களைத் தேடித் தேடிப் பார்த்திருக்கிறார். டைப்ரைட்டர். கார் என நவீன வசதிகள் வந்தபோது அதைப்பயன்படுத்திக் கொண்ட ஹென்றி ஜேம்ஸ் ஏன் சினிமாவை விரும்பவில்லை. எளிமையான காரணம் சினிமாவை அவர் ஒரு கலைவடிவமாகக் கருதவில்லை. அவரது கதைகளைப் பின்னாளில் சினிமாவாக எடுத்துச் சிறந்த கலைப்படைப்பாக உருவாக்கியிருக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமான முரண்.

குறிப்பாக ஹென்றி ஜேம்ஸின் தி போர்ட்ரெய்ட் ஆஃப் எ லேடி நாவலை ஜேன் காம்பியன் மிகச்சிறந்த படமாக உருவாக்கியிருக்கிறார். சினிமாவும் இலக்கியமும் வேறுவேறு தளத்தில் இயங்குகின்றன.

டட்லி ஆண்ட்ரூ சினிமாவையும் இலக்கியத்தையும் வேறுபடுத்திக் காட்டும் விதமாக இவ்வாறு எழுதுகிறார்.

Generally film is found to work from perception toward signification, from exterior facts to interior motivations and consequences, from the givenness of a world to the meaning of a story cut out of that world. Literary fiction works oppositely. It begins with signs (graphemes and words) building to propositions which attempt to develop perception. As a product of human language it naturally treats human motivation and values, seeking to throw them out onto the external world, elaborating a world out of a story.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வங்க நாவலைப் படித்துக் கொண்டிருந்த போது அதன் முன்னுரையில் அனுபவ தரித்திரம் என்றொரு சொல்லை வாசித்தேன். அனுபவங்கள் கிடைக்காமல் அதைத்தேடி அலையும் ஒருவரைப் பற்றிச் சொல்லும் போது அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் . தேடிச் சென்று சேகரித்த அனுபவங்களைக் கொண்டு ஒரு நல்ல கலைப்படைப்பினை உருவாக்கி விட முடியாது. அது எளிய விஷயமில்லை. எழுத்தாளனுக்கு இன்ஸ்பிரேஷன் தேவை தான். ஆனால் இன்ஸ்பிரேஷன் மட்டுமே எழுத்தாகி விடமுடியாது.

இந்தியாவிற்கு ஒரு முறை கூட வந்திராத போர்ஹெஸ் இந்தியாவைப் பற்றிச் சிறப்பாகக் கதை எழுதியிருக்கிறார்.

பிறரது அனுபவங்களைச் சேகரிப்பதை விதைகளைச் சேகரிப்பதாகவே ஹென்றி ஜேம்ஸ் குறிப்பிடுகிறார்.

உண்மை தான் கதைகளுக்கும் விதை இருக்கத்தானே செய்கிறது. இந்த விதையைக் கொண்டு அந்த எந்த விருட்சத்தின் முழுமையை அறிந்து கொள்ள முடியாது. ஆனால் அந்த விதைகளை நாம் எவ்வாறு ஒரு மரமாக வளர்த்து எடுக்கப்போகிறோம் என்பது சவாலே.

சிந்தியா ஒசுக் எழுத்தாளனிடம் வாசகர் கேட்கும் கேள்விக்குப் பின்னால் எழுத்து என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்ற எண்ணம் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் எந்த அனுபவத்தையும் எழுதி விட முடியும் என்ற தொனி இருக்கிறது என்கிறார். அதுவும் உண்மை தான்.

பெரும்பான்மை வாசகர்கள் உண்மையில் எழுத்தின் ரகசியத்தை அறிந்து கொண்டுவிட்டால் உடனே நாமும் அது போன்ற ஒன்றை எழுதிவிட முடியும் என்று நம்புகிறார்கள். அது நிஜமில்லை.

ஆயிரக்கணக்காகக் கதைக்கருக்கள். நிகழ்வுகள் பொதுவெளியில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் எழுதுவது எளிதான விஷயமில்லை.

உங்கள் கண்முன்னால் ஒரு ஆப்பிளை வைத்து வண்ணப்பென்சிலால் அதைப் படமாக வரையுங்கள் என்று யாராவது சொன்னால் எளிதான விஷயமாகத் தான் தோன்றும். ஆனால் வரையத் துவங்கியபிறகே அதன் முப்பரிமாணமும் வண்ணமும் ஆப்பிள் என்பது ஒரு வடிவம் என்பதும் புரிய ஆரம்பிக்கும். ஒரு ஆப்பிளை அப்படியே காகிதத்தில் வரைவதற்குச் சில மாதங்கள் பயிற்சியும் கைத்திறனும் தேவைப்படும். அப்போதும் நிஜமான ஆப்பிளில் வரும் வாசனையை ஓவியத்தில் உருவாக்க முடியாது. கலையின் வேலை நகலெடுப்பதில்லை. அது நிஜம் போலவே இன்னொன்றை உருவாக்குகிறது. நம்ப வைக்கிறது.

ஆன்டன் செகாவின் குறிப்பேட்டினை வாசித்தால் அதில் நூறு கதைகள் எழுதுவதற்கான குறிப்புகள் இருக்கின்றன. அவற்றைச் செகாவ் கதையாக மாற்றவில்லை. ஆனால் கதையாக எழுத வேண்டும் என்ற ஆசையை எழுதியிருக்கிறார். அது தான் எழுத்தாளனின் இயல்பு. எழுத்தாளர்கள் எப்படி நிகழ்வுகளை, சம்பவங்களைச் சேகரிக்கிறார்கள் என்பது விநோதமான விஷயம். அதை வரையறை செய்யவோ, கண்டுபிடிக்கவோ முடியாது.

தனது எழுத்தின் ரகசியம் என எழுத்தாளர்கள் சொல்லும் பலவிஷயங்கள் பொய்யானவை.. உண்மையை அவன் பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதேயில்லை. பகிர்ந்து கொள்ளத் தேவையுமில்லை என்கிறார் சிந்தியா ஒசுக்.

••

0Shares
0