காலைக்குறிப்புகள் 21 நோபல் பரிசின் பின்னால்

இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றுள்ள கவிஞர் லூயிஸ் க்லூக் பெயரைக் கூட இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை. பரிந்துரைப் பட்டியலிலிருந்த நாவலாசிரியர் கூகி வா தியாங்கோ, கவிஞர் ஆன் கார்ஸன், ரஷ்ய நாவலாசிரியர் ல்யூட்மிலா உலிட்ஸ்கயா, சீன எழுத்தாளர் யான் லியான்கே, முரகாமி, ஜமைக்கா கின்கைட் போன்றவர்களை வாசித்திருக்கிறேன். ஆனால் எந்தப் பரிந்துரையாளரும் லூயிஸ் க்லூக் பெயரைச் சொல்லவேயில்லை. நோபல் பரிசு கமிட்டி இது போன்ற திகைப்பூட்டும் ஆச்சரியங்களைத் தருவதை வழக்கமாக மாற்றிவிட்டார்கள்.

ஸ்வீடிஷ் அகாடமி ஒரு விசித்திரமான அமைப்பு. அதில் பதினெட்டு நிரந்தர உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மை வயதானவர்கள். அவர்களுக்கு ஸ்வீடிஷ் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகள் மட்டுமே தெரியும். புதிய உறுப்பினர்களை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்கிறார்கள் . அப்படித் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களை ஸ்வீடன் மன்னர் அங்கீகரிக்க வேண்டும்.

இந்த நிரந்தர உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் நவீன இலக்கியத்தைத் தாண்டிய வாசிப்பு அனுபவமில்லாதவர்கள். அதிலும் மரபான செவ்வியல் இலக்கியங்களை மட்டுமே வாசித்தவர்கள்.

சர்வதேச அளவில் முக்கியமான விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு தேர்வுக் குழுவில் சர்வதேச அளவில் உறுப்பினர்களே கிடையாது. குறிப்பாக ஆசிய மொழிகள் அறிந்தவர்கள் ஒருவர் கூடக் கிடையாது.

ஸ்வீடீஷ் மட்டுமே அறிந்த மூத்த உறுப்பினர்கள் ஆண்டின் துவக்கத்திலே யாருக்கு விருது வழங்கவேண்டும் என்பதை முடிவு செய்துவிடுகிறார்கள். பின்பு அவருக்கு விருது வழங்கப்படுவதற்கு ஏற்ப வழிகளை உருவாக்குகிறார்கள்.

இது பற்றி யோசே சரமாகோ தனது நோட்புக் என்ற நூலில் சிறிய பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். தனது புத்தகம் ஒன்றை நோபல் பரிசின் நிரந்த உறுப்பினர்களில் ஒருவராக உள்ள கெஜல் எஸ்ப்மார்க்கிற்கு சரமாகோ அர்ப்பணம் செய்திருக்கிறார். இதற்கு முக்கியக் காரணம் எஸ்ப்மார்க் செய்த பேருதவி.

சரமாகோவின் Blindness நாவல் ஆங்கிலத்தில் வெளியானவுடனே ஸ்வீடிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த நாவலை அகாடமியின் உறுப்பினர்கள் வாசித்து 1998ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கலாம் என்று முன்னதாகவே முடிவு செய்துவிட்டார்கள். இந்தத் தகவலே கூடச் சரமாகோவிற்குத் தெரியவந்துவிட்டது.

ஆனால் அவரது புதிய நாவலான ஆல் தி நேம்ஸ் அந்த ஆண்டு வெளியாகியிருந்தது. அது ஆங்கிலத்திலோ. ஸ்வீடிஷ் மொழியிலே மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை. ஒருவேளை அது தரமற்ற நாவலாக இருந்தால் சரமாகோவிற்கு வழங்கப்படும் விருது கேள்விக்குரியதாகி விடும் என உறுப்பினர்கள் நினைத்தார்கள். இந்தச் சூழலில் கெஜல் எஸ்ப்மார்க் அதை வாசித்து உறுப்பினர்களுக்குப் பரிந்துரை செய்வதென முடிவு செய்தார்.

அதன்படி அந்த நாவலின் பிரதியை வாங்கி அகராதியின் துணையோடு தனக்குத் தெரிந்த போர்த்துகீசிய மொழியைக் கொண்டு வாசித்தார். கூடவே நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் சுருக்கத்தையும் ஸ்வீடிஷ் மொழியில் மொழியாக்கம் செய்து கமிட்டியின் முன்னால் சமர்ப்பித்தார். அவர்கள் அதை வாசித்துப் பார்த்து நாவல் சிறப்பாக உள்ளது என்பதாக முடிவு செய்தார்கள். அதன்பிறகே சரமாகோவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சரமாகோ நோபல் பரிசுக்குத் தகுதியான எழுத்தாளர். மிகச்சிறந்த புனை கதையாசிரியர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது பெயரை முன்பே குழு முடிவு செய்துவிட்டு இது போன்ற ஒரு சோதனையைச் செய்திருக்கிறார்கள் என்பது தான் விஷயம். நோபல் குழுவின் முன்பு எஸ்ப்மார்க் போன்ற ஒருவர் செய்த சிபாரிசு தான் சரமாகோவிற்கான விருதை சாத்தியப்படுத்தியது. ஆகவே தான் அவருக்குத் தனது புதிய நாவலை சரமாகோ சமர்ப்பணம் செய்திருக்கிறார்

இது வெளிப்படையாக சரமாகோ எழுதிய குறிப்பு. உண்மையில் திரைமறைவில் இப்படி நிறைய நாடகங்கள். உதவிகள். சிபாரிசுகள் நடக்கவே செய்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பகிரங்கமாகவே கமிட்டி உறுப்பினர்கள் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டது. அதன் காரணமாக இலக்கிய விருது வழங்கப்படவில்லை.

இது போன்ற சர்ச்சை எதுவும் உருவாகிவிடக்கூடாது என்பதில் இந்த ஆண்டு நோபல் குழு தீர்மானமாக இருந்தது என்கிறார்கள்.

நோபல் குழு தனது அனைத்து கூட்டங்களையும் நோபல் நிறுவனத்தின் சிறப்பு அறை ஒன்றில் நடத்துவது வழக்கம். அந்த அறையின் உட்புறத்தை கட்டிடக் கலைஞர் கார்ல் பெர்னர் வடிவமைத்துள்ளார். கமிட்டி அறையின் சுவர்களில் அனைத்து பரிசு பெற்றவர்களின் புகைப்படங்களும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் சின்னங்களும் இடம்பெற்றுள்ளன

நோபல் பரிசு லூயிஸ் க்லூக்கிற்கு அறிவிக்கப்பட்டதும் இந்திய ஊடகங்கள் அனைத்தும் அவரை வாழ்த்தி அவரது கவிதைகளை மொழியாக்கம் செய்து வெளியிட்டன. ஆனால் இந்தியாவிலிருந்து ஏன் நோபல் பரிசுக்கு ஒருவரும் பரிந்துரைக்கப்படவில்லை. நோபல் விருதுக்குத் தகுதியான இந்திய எழுத்தாளர்கள் யார் யார் என்று எந்தப் பரிந்துரையும் நான் காணவில்லை.

கடந்த பத்தாண்டுகளில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற எவரையும் விடச் சிறந்த இந்தியப் படைப்பாளிகள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பிராந்திய மொழியில் எழுதுகிறார்கள் என்பதும் ஆங்கில வெளிச்சம் அவர்கள் மீது படுவதில்லை என்பதுமே இந்தப் புறக்கணிப்பிற்கு முக்கியக் காரணம்.

நோபல் பரிசிற்கு மாற்றாக ஒரு விருதை 2018ல் உருவாக்கினார்கள். இந்தப் பரிசை பெற்றவர் எழுத்தாளர் மேரிஸ் கான்டே(Maryse Condé) சர்வதேச அளவில் நன்கொடைகள் மூலம் திரட்டப்பட்ட £87,000 பவுண்டு விருது தொகை அவருக்கு வழங்கப்பட்டது.

இர்விங் வாலஸ் The Prize என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார். இது நோபல் பரிசிற்காக எப்படியெல்லாம் காய் நகர்த்துகிறார்கள் என்பதை விவரிக்கிறது. இந்த நாவல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது.

2020 ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் விருதை அறித்த குழுவில் குழு Anders Olsson, Per Wästberg, Jesper Svenbro, Mats Malm, Mikaela Blomqvist, Rebecka Kärde, Henrik Petersen ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள்.

இவர்களில் ஆண்டர்ஸ் ஓல்சனுக்கு வயது 71. இவர் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். கவிஞர். ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்ட இவர் தற்போது நோபல் கமிட்டியின் தலைவராக உள்ளார். கவிதை மற்றும் கட்டுரைகள் என 15 புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

இரண்டாவது உறுப்பினராகப் பெர் எரிக் வாஸ்ட்பெர்க் 1997 முதல் ஸ்வீடிஷ் அகாடமியின் உறுப்பினராக உள்ளார். அவரது வயது 86. இவர் ஸ்வீடனில் பிரபலமான தினசரி ஒன்றின் ஆசிரியர்.

மூன்றாவது உறுப்பினரான ஜெஸ்பர் ஸ்வென்ப்ரோ 1944 இல் பிறந்தவர். அவரது வயது 76. இவரும் ஒரு கவிஞரே. கிரேக்க இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். 2006 முதல் ஸ்வீடிஷ் அகாதமி உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்.

நான்காவது உறுப்பினராக மேட்ஸ் மால்ம் 1964 இல் பிறந்தார். 56 வயதான இவர் தான் இளைய உறுப்பினர். இவர் கவிதைகள் குறித்து ஆய்வு செய்து வருபவர். ஸ்காண்டிநேவிய கவிதைகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

ஹென்ரிக் பீட்டர்சன், ஸ்வீடிஷ் மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் 2018 ஆம் ஆண்டில், ஸ்வீடிஷ் அகாடமியின் புதிய நோபல் குழுவின் ஐந்து வெளி உறுப்பினர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்

மைக்கேலா ப்ளொம்க்விஸ்ட் ஒரு கவிதை விமர்சகர். 2018ல் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ரெபேக்கா அஹல்பெர்க் ஸ்வீடிஷ் விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவர்கள் இருவருமே வயதில் இளையவர்கள். இவர்களும் வெளி உறுப்பினர்களே.

மேற்குறிப்பிட்ட உறுப்பினர்களே இலக்கியத்திற்கான நோபல் விருதை முடிவு செய்கிறார்கள். தற்காலிக உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகள் பணியாற்றுவார்கள். இந்த நோபல் விருது குழுவிற்குச் சிறப்பு ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அவர்களே உலகெங்குமிருந்து சிறந்த எழுத்தாளர்களைக் குழு முன்பாகப் பரிந்துரை செய்கிறார்கள்.

நோபல் பரிசிற்கான இந்த விருதுக்குக் குழுவில் ஒரு நாவலாசிரியர் கூட இல்லை என்பது வியப்பளிக்கிறது.

இலக்கியத்திற்கான நோபல் குழு பரிந்துரைக்கத் தகுதியுள்ள நபர்களுக்கு அழைப்புக் கடிதங்களை அனுப்புகிறது. இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள். முந்தைய ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்றவர்கள். இலக்கிய அமைப்புகள். மொழியியல் அறிஞர்கள் அடங்குவர்.

எந்த எழுத்தாளரும் தன்னை நோபல் பரிசிற்குப் பரிந்துரை செய்து கொள்ள முடியாது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இந்தப் பரிந்துரைக்கான கடிதங்கள் நோபல் கமிட்டி மூலம் அனுப்பப்படுகின்றன. ஜனவரி 31 வரை பரிந்துரை ஏற்கப்படுகிறது. பின்பு ஏப்ரலில் முதற்கட்ட தேர்வாளர்களாக 15 முதல் 20 எழுத்தாளர்களின் பெயர்களைக் குழு தேர்வு செய்கிறது. இதிலிருந்து ஐந்து எழுத்தாளர்கள் இறுதி பட்டியலுக்கு மே மாதத்தில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஜூன்-ஆகஸ்ட் மாதங்களில் அகாடமியின் உறுப்பினர்கள் இந்த எழுத்தாளர்களின் முக்கியப் படைப்புகளைப் படித்து மதிப்பீடு செய்கிறார்கள். அதன்பிறகு செப்டம்பரில் நோபல் குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி இறுதி;j தேர்வு குறித்து விவாதிக்கிறார்கள்

அக்டோபர் தொடக்கத்தில், அகாடமி இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரைத் தேர்வு செய்கிறது. பதிவான வாக்குகளில் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றவரே இறுதியானவர் என முடிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் விருது அறிவிக்கப்படுகிறது.

டிசம்பர் 10 ஆம் தேதி விருது வழங்கும் விழா ஸ்டாக்ஹோமில் நடைபெறுகிறது, அதில் 10 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ஏழு கோடி ரூபாய் விருதுத்தொகை மற்றும் ஒரு தங்கபதக்கம். பாராட்டுரை வழங்கப்படுகிறது.

இந்த விருது தொகையைப் போல மூன்று மடங்கு பணம் அவர்கள் அடுத்த ஆண்டில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள். உரைகள். மற்றும் புதிய வெளியீடுகள் மூலம் கிடைக்கும் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

இந்த ஆண்டு விருது கிடைத்தவுடன் அந்தச் சந்தோஷத்தை யாரிடம் சொல்வதெனத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் எழுத்தாளர்கள் என்று லூயிஸ் க்லூக் சொல்லியிருக்கிறார். கசப்பான உண்மை. உலகெங்கும் இதே கதை தான் போலும். அத்தோடு இந்த விருதுப் பணத்தில் புதிதாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்.

நோபல் பரிசு பெற்ற பிறகு ஒரு கவிஞர் உலகிற்குச் சொன்ன செய்திகள் இவையே.

நோபல் பரிசின் ஏற்புரைகள் சுவாரஸ்யமானவை. இவை தனி நூலாக வெளியிடப்பட்டிருக்கின்றன. இணையத்தில் நாம் அந்த உரைகளைக் கேட்கவும் காணவும் முடியும். இந்த உரைகளில் கவாபத்தா, வில்லியம் பாக்னர், ஐசக் பாஷவிஸ் சிங்கர், பாப்லோ நெரூதா, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் போன்றவர்களின் உரைகள் சிறப்பானவை. குறிப்பாக ஐசக் பாஷவிஸ் சிங்கர் தனது நோபல் பரிசு உரையில் அவையைச் சிரிக்க வைக்கிறார். இது அபூர்வமான விஷயம். பெரும்பான்மை உரைகள் தீவிரமானவை. இது போலவே ‘இட்டிஷ்’ மொழியின் சிறப்புகளை அவர் எடுத்துச் சொல்லும் விதமும் அற்புதம்.

ஹெமிங்வே நோபல் பரிசை நேரில் பெறவில்லை. விமான விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவரால் ஸ்டோக்ஹோம் செல்ல இயலவில்லை. அவரது ஏற்புரை மட்டுமே வாசிக்கபட்டது. இது போலவே பிரெஞ்சு எழுத்தாளரான ழான் பால் சார்த்ரே தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை ஏற்கவில்லை.

நோபல் பரிசு விருது வழங்கும் விழாவில் சுவீடன் மன்னர் கலந்து கொண்டு விருதை வழங்குவார். விழாவைத் தொடர்ந்து ஸ்டாக்ஹோம் சிட்டி ஹாலில் 250 மாணவர்கள் உட்படச் சுமார் 1,300 பேருக்கு விருந்து வழங்கப்படும். விருது பெற்றவர் என்ன உடையில் வர வேண்டும். எப்படி விருது பெற வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் இருக்கின்றன. முன்னதாக ஒத்திகை நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது.

இந்த ஆண்டு நோபல் விருது வழங்கும் விழா இணையம் வழியாக நடைபெறப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

1913 ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் கவிஞர் வில்லியம் பட்லர் யேட்ஸ், அவரது முயற்சியின் காரணமாகவே தாகூர் விருது பெற்றார். நூற்றாண்டினைக் கடந்த போதும் நோபல் கமிட்டியின் கவனம் இந்தியா மீது திரும்பவேயில்லை. 2004 ஆம் ஆண்டில் விஸ்வ பாரதி பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் இருந்த தாகூரின் நோபல் பரிசு தங்கப்பத்தகம் திருடப்பட்டது. இன்று வரை அது மீட்கப்படவேயில்லை.

••

0Shares
0