காலைக்குறிப்புகள் 22 இதிகாசத்தின் நிழல்.

பீட்டர் புரூக் தயாரித்த மகாபாரதம் நாடகத்தை நேரில் கண்டதில்லை. 9 மணி நேரம் நடக்கக்கூடியது. பின்பு அது தொலைக்காட்சிக்கு ஏற்ப ஆறு மணி நேரத்திற்குள் குறைக்கப்பட்டது. இந்தத் திரைவடிவத்தைப் பார்த்திருக்கிறேன்.

ஜீன் கிளாடே கேரியர் தான் இதன் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். நாடக வடிவமும் அவர் எழுதியதே. பன்னாட்டுத் தயாரிப்பில் உருவான அந்த நாடகத்தில் திளெரபதியாக நடித்தவர் மட்டுமே இந்தியர். மல்லிகா சாராபாய் என்ற பரத நாட்டியக் கலைஞர்.

பீஷ்மர், அர்ச்சுனன். பீமன், கிருஷ்ணர் பற்றி நமக்கு இருந்த பிம்பங்களை முற்றிலும் மாற்றிவிடுகிறது இந்தத் திரைவடிவம்.

பீட்டர்புரூக் புகழ்பெற்ற நாடக இயக்குநர் மற்றும் திரைப்பட இயக்குநர் அவர் மகாபாரதத்தை நாடகமாக்க வேண்டும் என்று விரும்பி எட்டு ஆண்டுகள் இதற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்.

மகாபாரதத்தை நாடகமாக்கித் தர வேண்டும் என்று பீட்டர் புரூக் கேட்டுக் கொண்டதற்காக அதன் பிரெஞ்சு மொழியாக்கத்தை ஓராண்டு கேரியர் படித்திருக்கிறார். இதே நேரம் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள மகாபாரத மொழிபெயர்ப்பை பீட்டர் புரூக் படித்திருக்கிறார். பின்பு அடுத்த ஓராண்டு முழுவதும் கூடிப்பேசி மகாபாரதம் குறித்து விவாதித்திருக்கிறார்கள். அதன் பிறகே எந்த நிகழ்வுகளை வைத்துக் கொள்வது எதை நீக்குவது என்று முடிவு செய்திருக்கிறார்கள்

மகாபாரதம் தொடர்பான கலைவடிவங்கள். கலைஞர்கள். வேறுவேறு பதிப்புகள் மற்றும் ஆய்வாளர்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக இந்தியப்பயணம் ஒன்றை கிளாடே கேரியரும் பீட்டர் புரூக்கும் மேற்கொண்டார்கள்.

இவர்களுடன் கலை இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் உடன் வந்தார்கள். ஐந்து பேர் கொண்ட ஒரு குழு மகாபாரதத்தைத் தேடி இந்தியா வந்த அனுபவத்தைக் கிளாடே கேரியர் ஒரு நூலாக எழுதியிருக்கிறார்

Big Bhishma in Madras_ In Search of the Mahabharata with Peter Brook என்ற அந்த நூலில் மகாபாரதத்தைத் தேடிய அவர்கள் பயணம் மிகச் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது

பிரான்சிலிருந்து விமானத்தில் டெல்லி வந்து இறங்குகிறார் கிளாடே கேரியர். அவரை வரவேற்க வேண்டியவரை விமான நிலையத்தில் காணவில்லை. கேரியர் கையில் இந்தியப்பணம் கிடையாது. குளிரில் எங்கே போவது எப்படிப் போவது எனத் தெரியவில்லை. இப்படித் தான் அவரது இந்தியப்பயணம் துவங்குகிறது. பிரெஞ்சு தூதரக உதவியோடு தங்குகிறார். பின்பு பீட்டர் புரூக்கோடு மும்பைக்கு வந்து சேருகிறார்கள். அங்கே ஒரு நடுத்தர ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நிதிநிலை இல்லாததே காரணம்.

இந்தியா குறித்து அவருக்குள் இருந்த பிம்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கின்றன.

இந்தியாவில் தொன்மங்கள் என்பது என்றோ மறைந்து போன நிகழ்வுகளில்லை. அவை உயிரோடு இருக்கும் விஷயம். இன்றும் தொன்ம நிகழ்வுகள் அப்படியே அரங்கேறுகின்றன என்கிறார் கேரியர்.

அவர்கள் மும்பையிலிருந்து அஜந்தா எல்லோரா காணச் செல்லுகிறார்கள். அங்கே பௌத்த சிற்பங்களைக் கண்டு வியக்கிறார் கேரியர்.

பின்பு அங்கிருந்து பெங்களூர் பயணம். உடுப்பில் யட்சகானம் நிகழ்ச்சியைக் காணுகிறார்கள். கர்நாடகா வழியாக ஒரு அம்பாசிடர் காரில் கேரளா செல்கிறார்கள்.

அம்பாசிடர் கார் இந்தியாவில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதைப் பற்றியும் கேரியர் எழுதியிருக்கிறார்

கேரளாவில் கதகளி மற்றும் தெய்யம் நிகழ்ச்சியைக் காணுகிறார்கள். களரியைப் பார்வையிடுகிறார்கள். கேரளாவிற்கும் மகாபாரதக் கதைக்குமான உறவை அறிந்து கொள்கிறார்கள்.

கேரளாவிலிருந்து மதுரைக்கு வரும் அவர்கள் மீனாட்சியம்மன் கோவிலைப் பார்வையிடுகிறார்கள். கோவிலின் பிரம்மாண்டம் அவர்களை வியக்கவைக்கிறது. மதுரையிலிருந்து திருச்சி. பின்பு கும்பகோணம் சிதம்பரம் என்று சுற்றிவருகிறார்கள். கடலூர் வழியாகப் புதுவைக்கு வந்து சேர்ந்து அங்குள்ள பிரெஞ்சு உணவகங்களை, விடுதிகளைக் கண்டு ஆச்சரியமாகிறார்கள்.

சென்னையில் வந்து தங்கி பல்வேறு இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகளைக் காணுகிறார்கள். அதில் கலாசேஷத்ராவில் பரதநாட்டியம் பார்த்த அனுபவத்தை எழுதியிருக்கிறார். பின்பு மகாபலிபுரத்திலுள்ள மகாபாரதச் சிற்பங்களைப் பார்வையிடுகிறார்கள். பின்பு சென்னையிலிருந்து கல்கத்தா பயணம். அங்கே இயக்குநர் சத்யஜித்ரேயை சந்திக்கிறார்கள். அவருடன் மகாபாரதம் குறித்து விவாதிக்கிறார்கள்.

இருபது ஆண்டுகளைச் செலவு செய்து மொத்த மகாபாரதத்தையும் கவிதை நடையில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ள பேராசிரியர் பி.லால் அவர்களைச் சந்தித்து உரையாடுகிறார்கள்.

பின்பு அங்கிருந்து ஒரிசா சென்று அங்கே நாட்டுப்புற கலைவடிவங்களில் மகாபாரதம் பற்றி அறிந்து கொள்கிறார்கள்

இப்படி இந்தியா முழுவதும் சுற்றியலைந்து அவர்கள் மகாபாரதம் பற்றி ஏராளமான விஷயங்களைத் திரட்டுகிறார்கள். ஒவ்வொரு மாநிலமும் அதற்கெனத் தனி மகாபாரத வடிவத்தைக் கொண்டிருக்கிறது. மகாபாரதம் தொடர்பான நாடகங்கள். கூத்து, விழாக்கள். சடங்குகள் இன்றும் நடைபெறுகின்றன. மகாபாரதம் என்பது இந்தியர்களுக்கு ஒரு பிரதியில்லை.

தான் திரட்டிய ஆயிரக்கணக்கான தகவல்களிலிருந்து தேவையானதை எடுத்துக் கொண்டு நாடக வடிவத்தை எழுதுகிறார் கேரியர்

உண்மையில் அது பெரிய சவால். சாதுர்யமாக அதை நாடக வடிவமாக உருவாக்கியிருக்கிறார். அது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நாடகமாக நிகழ்த்தப்பட்டது. உலகெங்கும் பெரிய வரவேற்பைப் பெற்றது. பின்பு தொலைக்காட்சித் தொடராக வெளியானது.

இது போன்ற மகாபாரத தேடலை நானும் மேற்கொண்டிருக்கிறேன். உப பாண்டவம் எழுதும் நாட்களில் நான்கு ஆண்டுகள் இப்படிச் சுற்றியலைந்திருக்கிறேன்.

வெளிநாட்டவரால் மகாபாரதத்தின் ஆன்மாவைப் புரிந்து கொள்ள இயலாது. அது இந்தியர்களின் மனநிலையோடு தொடர்பு கொண்டது. மகாபாரதம் என்பது இந்தியாவின் பூர்வ நினைவுகளின் தொகுப்பு. இந்தியாவில் பல்வேறுவிதமான மகாபாரத வடிவங்கள் இருக்கின்றன. அந்தக் கதை அன்றாடம் வீடுகளில் ஏதோ ஒரு வடிவில் பேசப்படுகிறது. மகாபாரதக் கதாபாத்திரங்களின் பெயர்களைப் பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள். இப்படி மகாபாரதப் பெயர்கள் இல்லாத மாநிலமேயில்லை.

ஆகவே மகாபாரதத்தைக் கிளாடே கேரியர் புரிந்து கொண்ட விதம் எளிமையானது. அவரால் மகாபாரதத்தின் ஆழ்நிலைகளை அறிந்து கொள்ள முடியவில்லை. பீட்டர்புரூக்கின் நாடகவடிவம் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்படும் நடனநிகழ்ச்சியைப் போலவே இருக்கிறது. தொலைக்காட்சித் தொடரில் கதை சொல்லிய முறை மற்றும் இசை மட்டுமே எனக்குப் பிடித்திருந்தன

தூர்தர்ஷனில் வெளியான மகாபாரத வடிவம் நேர்த்தியாகவே உருவாக்கப்பட்டிருந்தது. அதற்குத் திரைக்கதை எழுதியவர் உருதுக்கவிஞரும் எழுத்தாளருமான டாக்டர் ரஹி மசூம் ரேஸா. அந்தத் தொலைக்காட்சி தொடரின் எழுத்துவடிவமும் வெளியாகியிருக்கிறது. மிகச் செறிவான வசனங்கள் கொண்ட தொடரது.

இந்தக் கட்டுரைத் தொகுப்பில் பி லால் சொன்ன கதை ஒன்றை கிளாடே கேரியர் நினைவுபடுத்துகிறார்

ஒரு முனிவர் தனது சீடனுடன் பயணம் மேற்கொள்கிறார். தாக மிகுதியால் ஒரு மரத்தடியில் நின்றபடியே தனது சீடனிடம் குடிக்கத் தண்ணீர் கொண்டுவரும்படி சொல்கிறார்.

சீடனும் தண்ணீர் தேடி அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்கிறான். அங்கே ஒரு அழகான பெண்ணைச் சந்திக்கிறான். அவளது அழகில் மயங்கி அவள் பின்னாலே அவளது வீட்டிற்குப் போகிறான். அந்தப் பெண்ணின் தந்தையிடம் பேசி அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். இனிமையான குடும்ப வாழ்க்கை துவங்குகிறது. அவனுக்குப் பிள்ளைகள் பிறக்கிறார்கள். வளருகிறார்கள். அவனுக்கு முதுமை வருகிறது. திடீரென ஒரு நாள் தனது குரு குடிக்கத் தண்ணீர் கேட்டாரே என்ற நினைவு வருகிறது. அவசரமாக அந்த இடத்தை நோக்கி தண்ணீரோடு செல்கிறான்

அவனைக் கண்டதும் குரு உனக்காக நான் நீண்ட காலமாகக் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார் எனக் கதை முடிகிறது

முனிவர் ஏன் சீடன் தண்ணீர் கொண்டுவருவான் என ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடக்கிறார். ஏன் சீடன் முதுமையில் தனது குருநாதர் தண்ணீர் கேட்டதை நினைவில் வைத்து அவரைத் தேடி வருகிறான். இந்தக் காத்திருப்பின் பொருள் என்ன.

யார் செய்தது சரி தவறு என்பதைத் தாண்டி நீங்கள் செய்யவேண்டிய கடமை எது, எந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ற அடிப்படையை இந்தக் கதை எழுப்புகிறது

இன்னொரு விதமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு குவளை தண்ணீர் கொண்டுவரும் காலம் தான் நமது வாழ்வின் சகல இன்பதுன்பங்களும். வாழ்க்கை அவ்வளவு சிறியதே.

குரு ஏன் கடைசியில் சீடனைக் கோவித்துக் கொள்ளவில்லை. தனது கடமையை ஒருவன் உணர ஆரம்பித்த மறுநிமிடம் அவன் தான் செய்த தவற்றை நினைத்து வருத்தத் துவங்கிவிடுகிறான். அவனது மனசாட்சியே அவனுக்கான தண்டனையைத் தந்துவிடும் என்று நம்புகிறார்.

இந்தக் கதை போல மகாபாரதத்தினுள் நிறையக் கிளைக்கதைகள் உள்ளன. அவை வெறும் சுவாரஸ்யத்திற்கான சேர்க்கப்பட்டவையில்லை. ஆழமான உண்மைகளை வெளிப்படுத்தவே அவை உருவாக்கப்பட்டிருக்கின்றன.

மகாபாரதம் பற்றி நிறையப் புனைவுகள் வந்துள்ளன. ஆனால் ஆய்வுப்பூர்வமாகக் குறைவாகவே எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஐராவதி கார்வே எழுதிய யுகாந்தா என்ற புத்தகம் மிகச்சிறப்பானது. சாகித்ய அகாதமி தற்போது அதை வெளியிட்டிருக்கிறார்கள்.

••

0Shares
0