காலைக்குறிப்புகள் -26 தற்செயலின் வரைபடம்

ரஷ்யக் கவிஞர் அன்னா அக்மதோவாவின் குறிப்பு ஒன்றில் ஒரு நிகழ்வு விவரிக்கபடுகிறது.

ஒரு நாள் தோழியுடன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு பாலத்தின் அருகில் ஏதோ யோசனையுடன் நின்றுவிட்டார். தோழி அவரிடம் என்ன யோசனை என்று கேட்டதற்குக் கவிஞரும் தன் தோழியுமான மரினா ஸ்வெட்டேவா எப்படியிருக்கிறாள் என்று விசாரித்திருக்கிறார். உடனே தோழி ஆச்சரியமாக, இதே இடத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மெரினா உன்னைப் பற்றி விசாரித்தாள். ஒரே இடத்தில் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. இது எப்படிச் சாத்தியம் எனக் கேட்டாள்.

அன்னாவிற்கும் அது ஆச்சரியமாகவும் புதிராகவுமே இருந்தது. அந்தப் பாலத்தின் அருகே வரும்வரை தான் மரினாவைப் பற்றி நினைக்கவில்லை என்றும், அப் பாலம் அவளை நினைவுபடுத்திவிட்டது என்றும் சொன்னார்.

கிட்டதட்ட இது போன்ற பதிலை தான் மரினாவும் சொன்னாள். ஒரு பாலம் ஏன் கவிஞரை நினைவுபடுத்துகிறது என்று கேட்டார் தோழி.

கவிஞர்கள் பாலத்தைப் போன்றவர்கள் . பாலம் தனிமையானது. பாலம் கடந்து செல்லும் வழி. அங்கே யாரும் தங்கிவிடுவதில்லை. சாலையை விடவும் உயர்ந்து நின்ற போதும் சாலையின் சந்தோஷம் பாலத்திற்குக் கிடையாது என்றார் அன்னா அக்மதேவா.

அன்னாவின் வாழ்க்கையும் மரினாவின் வாழ்க்கையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றதே. அன்னா அக்மதோவா மரினாவைப் பற்றி நலம் விசாரித்த ஒன்றிரண்டு நாட்களில் மரினா தற்கொலை செய்து கொண்டு இறந்து போனாள்.

மரினா ஸ்வேடேவா 1922 இல் ரஷ்யாவை விட்டு வெளியேறி 1939 இல் மாஸ்கோவுக்குத் திரும்புவதற்கு முன்பு பாரிஸ், பெர்லின் மற்றும் ப்ராக் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தார்.அவரது கணவர் செர்ஜி எஃப்ரான் மற்றும் மகள் அரியட்னா எஃப்ரான் ஆகியோர் உளவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்; அவரது கணவர் தேசத்துரோகி என அறிவிக்கபட்டு தூக்கிலிடப்பட்டார்.

மெரினாவும் அவரது பதினாறு வயது மகனும் வெளியேறி எலாபுகாவுக்குப் புறப்பட்டனர். அவளிடம் பணம் இல்லை, வேலை இல்லை, கவிதை எழுதும் உத்வேகம் அவளை விட்டு வெளியேறியிருந்தது. பேரழிவிற்குள்ளான, ஏமாற்றமடைந்த, தனிமையில் இருந்த ஸ்வெட்டேவாவுக்கு வாழ்வின் மீதான பிடிப்பேயில்லை. அவள் ஆகஸ்ட் 31, 1941 அன்று தற்கொலை செய்து கொண்டாள். இதன் சில தினங்களுக்கு முன்பாகத் தான் அன்னா அவளைப் பற்றி விசாரித்தது நடந்தது.

அன்னா அக்மதோவா ரஷ்யக் கவிஞர். நிக்கோலாய் குமிலியோவ்வை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அது முறையான திருமணமில்லை. அவர்கள் சேர்ந்து வாழ்ந்தார்கள். குமிலேவ் தொடர்ந்து பயணம் செய்கிறவர். ஆகவே பெரும்பாலான நேரங்களில் தனித்தனியாக வாழ்ந்தனர்; குமிலியேவ் பலமுறை ஆப்பிரிக்காவுக்குப் பயணம் செய்திருக்கிறார். அவர்களின் காதல் உறவினை முறித்துக் கொள்வதாகக் குமிலியேவிடம் சொன்னபோது அவர் அவளுக்குச் சந்தோஷம் தருவதாக இருந்தால் அந்தப் பிரிவினை தான் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்.

எதிர்ப்புரட்சியாளர் என்ற தவறான குற்றச்சாட்டில் 1921 இல் குமிலியோவ் சுட்டுக் கொல்லப்பட்டார். அது அன்னாவினை நிலைகுலையச் செய்தது. அதன் சில வருஷங்களுக்குப் பிறகு அன்னாவின் மகன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான். அவனைச் சிறையிலிருந்து மீட்பதற்காக அன்னா போராடினார்.

ஒரே வாழ்க்கையைத் தான் இரண்டு பெண் கவிகளும் வாழ்ந்திருக்கிறார்களோ என்று தோன்றியது. அன்னா தன் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ள சம்பவத்தைத் தற்செயல் எனக் கருத வேண்டியதில்லை. தற்செயலாகத் தோன்றினாலும் அது ஒருவகை நினைவூட்டல். அந்தப் பாலத்தின் முன்னால் அவர்கள் ஒருவரையொருவர் நினைத்துக் கொள்வது இணைபிரியாத நேசத்தின் அடையாளம்.

ஞானக்கூத்தன் பாலம் குறித்து ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதில்

கல்லும் கலவையும் கொண்டு

கரணையால் தடவித் தடவி

சாவிப் பொத்தல் மாதிரித் தெரியும்

ஆட்கள் சிலரால் கட்டப்பட்டாலும்

கட்டிடம் இல்லை பாலம்.

முன்னாளெல்லாம் பாலம்

தியானித்திருக்கும் நீருக்கு மேலே

இந்நாளெல்லாம் பாலம்…

நிலத்திலும் உண்டு அதன் முதுகெலும்பு.

என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. நீருக்கு மேல் பாலம் தியானித்திருக்கும் என்பது முக்கியமான வரி. தண்ணீரைக் கடக்கத்தான் அந்தக் காலத்தில் பாலம் அமைத்தார்கள். இன்று நிலத்திலும் பாலம் தேவைப்படுகிறது. உருவாக்கப்படுகிறது.  அந்த வகையில் நவீன வாழ்க்கையின் அடையாளம் பாலம்.

சொந்த வாழ்வின் துயரங்களுக்குள் அமிழ்ந்து கிடந்த இரண்டு பெண்கவிகளும் அது குறித்துப் புலம்பவில்லை. சுய இரக்கம் தேடிக் கொள்ளவில்லை. அவர்களின் கவிதை எரிகல்லைப் போல வேகமும் ஒளியும் கொண்டிருக்கிறது.

இரண்டு பெண்கவிகளும் ரஷ்யாவிலிருந்து வெளியேறி வாழ்ந்தவர்கள். புகலிடத்தில் தங்கள் கவிதைகளை எழுதினார்கள். வாழும் போது அவர்களுக்கான கௌரவமும் புகழும் கிடைக்கவில்லை.

மாஸ்கோவில் ஏற்பட்ட ஒரு பஞ்சத்தின் போது, மரினா தனது மகளுக்கு உணவளிக்கக் குடும்ப ஆதரவோ பணமோ இல்லாமல் ஒரு அனாதை இல்லத்தில் தங்க வைத்தார், மகள் அங்கே பட்டினியால் இறந்து போனாள்.

அன்னா அக்மதோவா, ஒசிப் மண்டேல்ஸ்டாம், மரினா ஸ்வெட்டேவா, போரிஸ் பாஸ்டெர்னாக் ஆகிய நால்வரும் நெருக்கமான நண்பர்கள். நால்வர் அணி என்றே அவர்களைக் குறிப்பிடுகிறார்கள். கவிதையே அவர்களை ஒன்று சேர்த்தது.

தற்செயல்களின் பின்னுள்ள புதிரைத் தான் கவிஞர்கள் எழுதுகிறார்கள். கவிதையில் தற்செயல் என்பது விந்தையானது. அன்றாட வாழ்க்கையில் தற்செயல் பெரிய விஷயமில்லை.முக்கியத்துவம் தரப்படுவதுமில்லை. ஆனால் தற்செயல்களின் ஒழுங்கினையும், வெளிப்பாட்டினையும் கவிஞர்கள் ஆராய்கிறார்கள். தற்செயலின் வரைபடத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள்.

நாம் ஒருவரை எப்போது நினைத்துக் கொள்கிறோம் என்பது முக்கியமானது. நினைவில் சிலர் குறிப்பிட்ட வயதில். குறிப்பிட்ட தோற்றத்தில் உறைந்து விடுகிறார்கள். காலம் அவர்களுக்கு நரையும் நோவும் தந்து முதுமையின் பள்ளத்தாக்கில் உலவச் செய்யக்கூடும். ஆனால் அவர்கள் எவர் மனதிலோ அழியா இளமையுடன் இருக்கிறார்கள்

இளவரசன் ஜெங்கி என்பவன் அப்படி உலகின் நினைவில் என்றும் இளமையானவனாக, காதலின் அடையாளமாக இருக்க விரும்புகிறான். அவனுக்கும் வயதாகிறது. பார்வை மங்குகிறது. அழகான பெண்ணை அடையாளம் காணமுடியவில்லை. ஆனால் இந்த உண்மை உலகிற்குத் தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறான். மலைப்பகுதியில் ஒதுங்கி வாழுகிறான். மார்க்ரெட் யூரிசனாரினின் கதையில் ஜெங்கியின் நினைவில் அவனை மிகவும் நேசித்த பெண்ணுக்கு இடமேயில்லை. அப்படியானது தான் வாழ்க்கை.

தற்செயல்களின் புத்தகத்தை எவராவது உருவாக்க நினைத்தால் அது முடிவில்லாமல் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

1916ல் முதன்முறையாக அன்னாவின் கவிதைகளை வாசித்தார் மரினா. அந்தக் கவிதைகள் மிகவும் பிடித்திருந்தன. ஆகவே அவரைச் சந்திக்கப் பீட்டர்ஸ்பெர்க்கிற்கு வருகை தந்தார். ஆனால் அன்னா அப்போது ஊரில்லை. அந்த ஏமாற்றத்தை மரினாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மரினா இது பற்றி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தான் எழுதிய கவிதைகளை அன்னாவிற்கு அனுப்பிக் கருத்துக் கேட்பது மரினாவின் வழக்கம். அன்னா தன் கைப்பையில் எப்போதும் மரினாவின் கவிதைகளை வைத்திருப்பார். அடிக்கடி எடுத்து படித்துக் கொள்வார். மரினா தன் கவிதைகளை அன்னா அக்மதோவாவிற்கு சமர்பணம் செய்திருக்கிறார்.

சுழிக்காற்றில் சிக்கிக் கொண்டதைப் போல வாழ்க்கையில் எதிர்பாராத இழப்புகள், துயரங்களுக்குள் சிக்கித் தவித்தார் அன்னா. அதிகாரத்தின் மீதான பயம். தனிமை. நண்பர்களின் மரணம் இவை அவரை மிகுந்த துயரம் கொள்ளச் செய்தன. கவிதை ஒன்று தான் அவரது ஒரே ஆறுதலாக இருந்தது. கவிதையின் வழியாகவே அவர் தனது மீட்சியை அடைத்தார்.

அன்னாவின் சிறிய குறிப்பு அவரைப்பற்றியும் மரினாவை பற்றியுமான பல்வேறு நினைவுகளைக் கொந்தளிக்கச் செய்துவிட்டது. தற்செயலின் மீதான வியப்பு குறையவேயில்லை.

0Shares
0