காலைக்குறிப்புகள் -27 தன்னை இழந்தவர்கள்

லாக்டவுன் நாட்களில் அரசு உயரதிகாரியாக உள்ள எனது நண்பர் தனது பிள்ளைகளுடன் கேரம் விளையாடத் துவங்கினார். ஆரம்பத்தில் மதிய நேரம் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தவருக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாகிவிடவே இரவு பதினோறு மணி வரை சலிக்காமல் விளையாட ஆரம்பித்தார். மகனுக்கோ, மகளுக்கோ விருப்பமில்லை என்று எழுந்து கொள்ள முயன்றால் கோபம் கொண்டுவிடுவார்.  அவருக்காக மனைவி நீண்ட நேரம் துணையாக விளையாட வேண்டியிருந்தது.

இது போலவே காலை ஆறுமணிக்கெல்லாம்  கையில் காபியுடன்  மகளை விளையாட அழைக்க ஆரம்பித்துவிடுவார். இதனால் அவரது குடும்பமே எரிச்சலானது. ஆனால் அவரால் கேரம் விளையாடுவதை நிறுத்த இயலவில்லை.

லாக்டவுன் என்பதால் அலுவலகம் போகவில்லை. வெளியே யாரையும் சந்திக்கவும் முடியாது என்பதால் சதா விளையாடிக் கொண்டேயிருந்தார். சில நாட்கள் இரவில் யாரும் விளையாட வராத போது தானே தனியாக விளையாடுவார். மாறி மாறி இரண்டு பக்கமும் எழுந்து உட்கார்ந்து காய்களைச் சிதறடிப்பார்.

அது ஒரு விளையாட்டு என்பதே அவருக்கு மறந்து போக ஆரம்பித்தது. விளையாடுவதற்கு ஆட்கள் வேண்டும் என்பதற்காகவே மனைவி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரத்தை அடுத்த சொந்த ஊருக்குக் கிளம்பிப் போனார். அங்கே அவரது பூர்வீக வீடு இருந்தது. வீட்டில் நிறைய ஆட்கள் இருந்தார்கள். ஆகவே ஊருக்குப் போன சில நாட்களில் அவருடன் விளையாட எப்போதும் துணையிருந்தார்கள். ஆனால் அவர்களும் நாள் முழுவதும் கேரம் ஆடுவது என்றால் எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

முகத்திற்கு நேராகச் சொல்லிவிட்டாலும் அவரால் கேரம் விளையாடுவதை நிறுத்திக் கொள்ளமுடியவில்லை. அவரது கைவிரல்கள் சிவந்து வீக்கம் கொண்டுவிட்டன. ஏதோ கேரம் விளையாட்டில் சாம்பியன் ஆக முயன்றவர் போல வெறியோடு விளையாடிக் கொண்டிருந்தார். மனைவியும் பிள்ளைகளும் பயந்து போனார்கள். அவரைத் திசைதிருப்புவதற்காக வேறு விளையாட்டுகளை விளையாட அழைத்தார்கள். அவர் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் பகலிரவாக விளையாடினார். திடீரென ஒரு நாள் மதியம் பாதி விளையாட்டில் எழுந்து கொண்டு கேரம்போர்டினைத் தூக்கி கிணற்றில் போட்டுவிட்டார்.

எதற்காக அப்படிச் செய்தார். என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அதன்பிறகு அவர் கேரம் விளையாடவேயில்லை. அதைப் பற்றி யாராவது பேசினாலும் கோபம் கொள்ள ஆரம்பித்தார்.

சூதாட்டத்தில் தான் இப்படி நடக்கும் என்பார்கள். சூதில் மட்டுமில்லை. தனக்கு விருப்பமான விஷயம் எதிலும் ஆழ்ந்து ஈடுபட ஆரம்பித்துவிட்டால் பின்பு அதைக் கைவிடுவது எளிதானதில்லை. இந்த நண்பருக்குக் கேரம் விளையாடுவது பொழுதுபோக்கிற்கானது என மறந்து போய்விட்டது.

மற்றவர்களைப் பற்றி அவர் பொருட்படுத்தவேயில்லை. தனது வெற்றியை மிகப்பெரிய விஷயமாகக் கருதினார். குடும்பத்தினரின் கஷ்டங்கள். கேலிப்பேச்சுகள் எதையும் அவர் கண்டுகொள்ளவில்லை. ஏன் இப்படி ஆனது. மனம் ஏன் திடீரென இத்தனை மூர்க்கமாகிவிடுகிறது. என ஒருவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை

இந்த ஒரு விஷயத்தைத் தவிர அவரது வழக்கமான செயல்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இனிமையாகப் பேசினார். நடந்து கொண்டார்.

தீவிரமான வெறியோடு விளையாடிக் கொண்டிருந்தவர் எப்படி ஒரு புள்ளியில் அதிலிருந்து வெளியே வந்தார் என்பது குடும்பத்தினருக்குப் புதிராக இருந்தது. அவருக்கும் அது திடீர் ஞானமாகத் தோன்றியிருக்கக் கூடும்.

லாக்டவுன் நெருக்கடி ஒருவரை எந்த அளவு மூர்க்கம் கொள்ள வைக்கும் என்பதற்கு இவரே ஒரு உதாரணம்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான பெர்னான்டோ ஸோரன்டினோ. (Fernando Sorrentino) எழுதிய The Horn Player சிறுகதையை வாசித்தேன். இதே பித்து நிலையின் மாற்று வடிவம் போல அந்தக் கதை எழுதப்பட்டிருந்தது. வாசிக்க வாசிக்க என் நண்பரின் முகமே கண்ணில் வந்து கொண்டிருந்தது.

வங்கி ஒன்றில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்குத் திடீரென ஹார்ன் இசைக்கருவியை வாசிப்பதில் ஆர்வம் உண்டாகிறது. ஆரம்பத்தில் அவர் தட்டுத்தடுமாறி வாசிக்கிறார். குளியல் அறையில் யாரும் அறியாமல் வாசித்துக் கொண்டிருக்கிறார். மெல்ல அந்தப் பழக்கம் தீவிரமடைய ஆரம்பிக்கிறது. பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றிய கவலையின்றி அவர் சப்தமாக ஹார்ன் வாசிக்கிறார். பகலிரவாக வாசிக்கிறார். ஞாயிறு வெளியே கூடச் செல்வதில்லை. மனைவி தொல்லை தாங்கமுடியாமல் காதில் பஞ்சு அடைத்துக் கொள்கிறாள். எங்கே சென்றாலும் ஹார்ன்னை உடன் கொண்டு செல்லுகிறார்.

ஒரு நாள் அலுவலகத்திற்கு இசைக்கருவியைக் கொண்டு செல்லும் அவர் ஓய்வு நேரத்தில் தனியே வாசிக்க ஆரம்பிக்கிறார். தன்னை மறந்து அதிகச் சப்தமாக அவர் வாசிக்கிறார். கழிப்பறை வாசலில் அலுவலகமே திரண்டு நிற்கிறது. மேலாளர் அவரைக் கோவித்துக் கொள்கிறார். ஆனால் தான் ஒரு தவறும் செய்யவில்லை. ஹார்ன் வாசிப்பது தனது விடுதலை உணர்வின் வெளிப்பாடு என்பது போலவே நினைக்கிறார்.

அலுவலக ஊழியர்கள் கேலி செய்கிறார்கள். அதை அவர் கண்டுகொள்ளவில்லை. அலுவலகத்திற்கு இனி ஹார்ன் கொண்டு வரக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறார். இதனால் அடிக்கடி ஏதாவது ஒரு பொய்க் காரணத்தைச் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு ஒடி ஹார்ன் வாசிக்கத் துவங்குகிறார். கணவரின் இந்த விபரீத செயலைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரது மனைவி அவரை விட்டு விலகிப் போய்விடுகிறாள்.

ஒரு நாள் அவரது வங்கியில் கடன் கேட்டு ஒரு வணிகர் வருகிறார். அவரது பேச்சு வங்கி ஊழியருக்கு எரிச்சலூட்டுகிறது. தன்னுடைய வீட்டிற்கு அவசரமாகப் போய் ஹார்ன் எடுத்து வருகிறார். அந்த மனிதரின் முகத்திற்கு எதிராக ஹார்ன் வாசிக்கிறார். அது ஒரு எச்சரிக்கை போல , மிரட்டல் போல, எதிர்ப்புணர்வு போல அமைகிறது. அலுவலகம் ஒன்று திரண்டு தடுத்தபோதும் அவர் இசைப்பதை நிறுத்தவில்லை. அவரது வாசிப்பின் வேகம் அதிகமாகிறது

மேனேஜர் அவர் மீது பாய்ந்து ஹார்ன் இசைக்கருவியைப் பிடுங்கமுயற்சிக்கிறார். ஊழியர் விலகிக் கொள்ளவே மேலாளர் கீழே விழுந்து அடிபடுகிறார். தான் செய்யும் காரியத்தின் விபரீதத்தைப் புரிந்து கொள்ளாமல் ஹார்ன் வாசித்தபடியே இருக்கிறார். முடிவில் அவரது வேலை போகிறது. தனக்கு விருப்பமான ஹார்னுடன் வெளியேறுகிறார்

அப்போது தான் தான் ஒரு மனச்சுழலில் சிக்கிக் கொண்டிருப்பது அவருக்குப் புரிகிறது. ஹார்னை தூக்கி எறிகிறார். அவரது எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள் அபத்தமாகத் தோன்றினாலும் மனிதர்கள் அறிந்தே இப்படியான பித்துக் கொள்கிறார்கள் எனத் தோன்றுகிறது

என் நண்பர் கேரம் விளையாடி போது ஏற்பட்ட தீவிர ஈடுபாடும் இந்த ஹார்ன் இசைப்பவரின் செயலும் ஒன்று தான். லாக்டவுன் நண்பரைச் செயலற்றவராக மாற்றியிருந்தது. அலுவலகம், அதிகாரம், பரபரப்பு என இருந்தவருக்கு அந்த உலகம் தன்னை விட்டு பறிக்கப்பட்டதும் விளையாட்டில் தனது அதிகாரத்தை, வேகத்தைக் காட்டத் துவங்கிவிட்டார்.

இதே நெருக்கடி தான் வங்கி ஊழியருக்குக் கதையில் நடக்கிறது. அவர் வங்கி வேலையில் சலிப்படைந்து போயிருக்கிறார். வாடிக்கையாளர்கள் இல்லாத மதிய நேரங்களில் வங்கி ஊழியர்கள் வெட்டி அரட்டை அடிக்கிறார்கள். வம்புப் பேச்சு பேசுகிறார்கள் என்று எரிச்சல் அடைகிறார். ஆனால் அவர்களுடன் தான் வேலை செய்ய வேண்டும். அதிலிருந்து தப்பவே அவர் ஹார்ன் இசைக்க ஆரம்பிக்கிறார். அவர் ஒரு இசைக்கலைஞரில்லை. ஆனால் அவருக்கு ஒரு புதிய வெளிப்பாடு தேவைப்படுகிறது. அதை ஹார்ன் பூர்த்தி செய்துவிட்டது

ஹார்ன் வாசிப்பவர் வேலை போன காரணத்தால் இசையிலிருந்து விலகிப்போகிறார். என் நண்பருக்கோ தானே அது நடந்துவிட்டது. கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் ஒரு நிலையில் ஆவியாகி மறைந்துவிடுவது போன்ற நிலையது

இந்தக் கதையை வாசிக்கும் ஒருவருக்கு இப்படி எல்லாம் நடக்குமா. மிகை கற்பனை என்று தான் தோன்றக்கூடும். ஆனால் இந்த லாக்டவுன் கால வாழ்க்கையானது இது இயல்பான வெளிப்பாடு தான் என அடையாளம் காட்டிவிட்டது.

பொருளாதார நெருக்கடிகள் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் இது போன்ற புதிய மனநெருக்கடிகளை லாக்டவுன் காலத்தில் பலரும் சந்தித்திருக்கிறார்கள்.

சிலர் ஒரு நாளில் ஏழெட்டு முறை சாப்பிட்டிருக்கிறார்கள். சிலர் அதிகமான நேரம் உடற்பயிற்சி செய்து கைகால் வலி ஏற்பட்டுச் சிகிச்சை எடுத்திருக்கிறார்கள். சிலருக்கு இரவில் உறக்கம் வரவேயில்லை. சிலர் ஒரு நாளில் ஐந்து சினிமா பார்த்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் புதிய கலைகளைக் கற்றுக் கொள்ள முயன்று உடனிருப்பவர்களின் பொறுமையைச் சோதித்திருக்கிறார்கள். தோட்டவேலைகள். மீன் வளர்ப்பது, பொம்மை செய்வது, சமைக்கக் கற்றுக் கொள்வது, என ஏதேதோ வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். வெளியுலகம் என்பது எத்தனை ஆயிரம் பற்சக்கரங்கள் கொண்டது என்பதை ஊரடங்கு காலத்தில் தான் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது

நெருக்கடி காலங்களில் மனிதர்கள் ஏன் விசித்திரமாக நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளப் பெர்னான்டோ ஸோரன்டினோவின் கதை உதவுகிறது.

சூதாட்டக்கூடத்தில் அறிந்தே தஸ்தாயெவ்ஸ்கி தோற்றிருக்கிறார். வெளியே மனைவி தனக்காகக் காத்திருக்கிறாள் என்று உணர்ந்த போதும் அவரால் வெளியே போக முடியவில்லை. சூது அவரை இழுத்துக் கொண்டிருந்தது. வங்கி ஊழியர் தன் சந்தோஷத்தைக் கண்டறிகிறார். அதை நீடிக்க விரும்புகிறார். உலகம் அதைப்பற்றி என்ன நினைக்கிறது எனத் தஸ்தாயெவ்ஸ்கிக்கோ, வங்கி ஊழியருக்கோ, என் நண்பருக்கோ முக்கியமில்லை. காரணம் அவர்கள் தனியுலகில் சஞ்சரிக்கிறார்கள். விடுபட்ட பிறகே அதன் அபத்தத்தை உணருகிறார்கள். இழப்பை நினைத்து வருந்துகிறார்கள்.

இலக்கியமே இந்தப் புதிரான மனநிலையை அவிழ்த்துக்காட்டுகிறது. உலகிற்குப் புரிய வைக்கிறது.

••

0Shares
0