காலைக்குறிப்புகள்- 27 மணலில் வரைந்த ஓவியம்

பிக்காஸோவை பற்றி ரே பிராட்பரி ( Ray bradbury) ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதன் பெயர் In a Season of Calm Weather. பாப்லோ பிக்காஸோ ஓவியங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த பிராட்பரி அவரை முக்கியக் கதாபாத்திரமாக்கி இக் கதையை எழுதியிருக்கிறார்.

ஜார்ஜ் ஸ்மித் என்ற அமெரிக்கன் தன் மனைவியுடன் பிரான்சிலுள்ள கடற்கரை ஒன்றுக்கு விடுமுறைக்குச் செல்கிறான். ஸ்மித் பிக்காஸோவின் தீவிர ரசிகன். பிக்காஸோவை ஒவியவுலகின் கடவுளாக நினைப்பவன். அவர்கள் விடுமுறைக்குச் சென்றிருந்த கடற்கரைக்குச் சில மைல் தொலைவில் பிக்காஸோ தங்கியிருக்கிறார் என்ற செய்தியை கேள்விப்பட்ட ஸ்மித் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறான்.

எப்படியாவது ஐந்தாயிரம் டாலர் பணம் சேர்த்து அதைக் கொண்டு போய்ப் பிக்காஸோ கையில் கொடுத்து அவருக்கு விருப்பமான எதையாவது வரைந்து வாங்கிக் கொண்டுவிட வேண்டும் என்று கனவு காணுகிறான் ஸ்மித்

மனைவியுடன் கடற்கரையில் இருக்கும் போது இதே கடற்கரையில் எங்கோ ஒரு தொலைவில் பிக்காஸோவும் இருக்கிறார் என்ற நினைப்பு அவனை மேலும் மகிழ்ச்சிப்படுத்துகிறது. எப்படியாவது அவரை ஒருமுறை சந்தித்துவிட முடியாதா என்று ஏங்குகிறான். இதைப் புரிந்து கொண்ட அவனது மனைவி அதெல்லாம் சாத்தியமற்ற விஷயம். வந்த இடத்தில் சுகமாகக் கடலில் நீந்தி மகிழ்வோம் என்கிறாள்.

பிக்காஸோவின் கண்கள் வழியாகவே அந்தக் கடற்கரையை, சூரியனை, மலர்களை, கடற்கரையோர வசிப்பிடங்களை ஸ்மித் காணுகிறான். அவை பிக்காஸோவின் வண்ணங்களால் ஒளிர்கின்றன. தான் பிக்காஸோவின் ஓவிய உலகினுள் நுழைந்து திரிவது போலவே உணருகிறான்.

கடலில் அவனைக் குளிக்கச் சொல்லிவிட்டு மனைவி விடுதி அறைக்குத் திரும்பிப் போகிறாள். தனியே மணலில் திரியும் ஸ்மித் தொலைவில் ஒரு மனிதனைக் காணுகிறான். அந்த மனிதன் மணலில் புதைந்துகிடந்த ஐஸ்கிரீம் குச்சி ஒன்றை எடுத்து மணலில் படம் வரைய ஆரம்பிக்கிறான். ஆசையாக, சிறுவர்கள் விளையாடுவது போலத் தன்னை மறந்து ஒவியம் வரைகிறான். கிரேக்கச் சிங்கங்கள், மத்திய தரைக்கடல் ஆடுகள், தங்கம் நிறம் கொண்ட கன்னிப்பெண்கள், மனிதமுகமும் குதிரை உடலும் கொண்ட தேவதைகள். மலர்களை வாறி இறைத்தபடியே ஓடும் குழந்தைகள். கொம்புடைய குதிரைகள்., என வசீகரமான தோற்றங்கள் உருவாகின்றன. திடீரென மண்ணில் முளைத்துவிட்ட உருவங்கள் போல உயிரோட்டமாக இருந்தன.

தொலைவில் நின்றபடியே அதைக் கவனிக்கும் ஸ்மித்திற்கு அது பிக்காஸோ தான் என்று தெரிகிறது. தான் சந்திக்க விரும்பிய பிக்காஸோ தன் கண்முன்னே மணலில் வியப்பூட்டும் ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கிறார். அங்கே அவர்கள் இருவரையும் தவிர எவருமேயில்லை. இந்தத் தருணம் கடவுள் தனக்குத் தந்த பரிசு என நினைக்கிறான் ஸ்மித்.

பிக்காஸோ தான் படம் வரைவதை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பதை உணரவேயில்லை. திடீரென அவர் யாரோ தன்னைப் பார்ப்பதை அறிந்தவர் போலப் புன்முறுவல் செய்கிறார். அவருடன் கைகுலுக்க வேண்டும் எனப் பரபரப்புக் கொள்கிறான். ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான். பிக்காஸோ அந்த ஓவியத்தை அப்படியே விட்டு நடக்கத் துவங்குகிறார்

மணலில் வரையப்பட்ட ஓவியத்தை முன்பின்னுமாக நடந்து ஸ்மித் ரசிக்கிறான். அறைக்கு ஓடிப்போய் ஒரு கேமிரா எடுத்து வந்து அதைப் புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று துடிக்கிறான். அதற்குள் சூரியன் மறைந்துவிடுமே என்று கவலையாக இருக்கிறது. மணலில் வரையப்பட்ட ஓவியத்தை எப்படிக் காப்பாற்றுவது. அந்த மணலை அள்ளி விழுங்கிவிட வேண்டியது தானா.

மாபெரும் கலைஞன் வரைந்த மணல் ஓவியத்தை என்ன செய்வது எனத் தெரியவில்லை. மெல்லச் சூரியன் மறைந்து கொண்டுவருகிறது. கண்ணிலிருந்து அந்த ஒவியம் மறைவதற்குள் முழுமையாக, ஆசை தீர அதைப் பார்த்து அனுபவித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அது தான் ஒரே தீர்வு

முழுமையாக ஓவியத்தை ரசிக்கிறான். இருள் கவிகிறது. மெல்ல தன் அறைக்குத் திரும்புகிறான். அவன் நீண்ட நேரம் கடலில் குளித்துத் திரும்பியிருக்கிறான் என நினைத்துக் கொண்டு மனைவி விசாரிக்கிறாள். அவளிடம் தூரத்தில் அலைகள் வரும் சப்தம் கேட்கிறதா என்கிறான். அவளுக்கு அந்தச் சப்தம் கேட்கவில்லை.

அலை அந்த ஒவியத்தை அழிக்கப்போகிறது என்பதை ஸ்மித் உணர்ந்து கொள்வதுடன் கதை முடிகிறது

உண்மையில் இந்த நிகழ்வு ஸ்மித்தின் கற்பனையில் நிகழுகிறதா. அல்லது நிஜம் தானா. பிக்காஸோவை அவன் பார்த்தது உண்மையா. சிறுவனைப் போலப் பிக்காஸோ மணலில் ஓவியம் வரைவது அவனது கற்பனையா. இல்லை நிஜம் தானா.

நிஜம் என்றாலும் கற்பனை என்றாலும் பிக்காஸோ கடற்கரை மணலில் ஓவியம் வரையும் காட்சி அற்புதமாகவுள்ளது. அவர் வரைந்த ஓவியத்தைப் படிக்கும் நாம் கண்ணில் காணமுடிகிறது. எவரும் ஒரு போதும் சொந்தம் கொள்ள முடியாத அந்த மணல் ஓவியம் இயற்கையின் அங்கம் போல மாறிவிடுகிறது

பிக்காஸோவை நேரில் சந்திக்கும் போது ஸ்மித் ஏன் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பிக்காஸோ அந்தக் கடற்கரையில் ஒரு விளையாட்டு சிறுவன் போல நடந்து கொள்கிறார். அவர் யாரோ வீசி எறிந்து போன ஐஸ் குச்சியில் படம் வரைகிறார். அது தான் பெருங்கலைஞனின் எளிமை. அசலான வெளிப்பாடு.

தூரிகைகள் இன்றி ஐஸ்குச்சியில் வரைந்தாலும் அவரால் அற்புதமான உருவங்களை வரைந்துவிட முடிகிறது. தான் வரைந்த உருவங்களை அவர் ரசிக்கிறார். கடலுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டது போல அந்த ஓவியத்தை அப்படியே விட்டுப் போகிறார்

பிக்காஸோவை பற்றிய The Mystery of Picasso படத்தில் கேமிராவின் முன்பாகப் பிக்காஸோ படம் வரைகிறார். கோடுகள் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்பெறுகின்றன. அபூர்வமான அனுபவத்தைத் தரும் படமது.

ஸ்மித் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்துப் பிக்காஸோவின் சிறிய ஓவியம் ஒன்றை விலைக்கு வாங்கக் கனவு காணுகிறான். இங்கோ அவன் கண்முன்னால் பெரிய ஓவியம் மண்ணில் மலர்ந்திருக்கிறது. ஆனால் அதைச் சொந்தம் கொண்டாட முடியாது.

மறக்கமுடியாத பொன்னிற ஒளி வீசும் அந்தியை நாம் எப்படிச் சொந்தம் கொண்டாட முடியாதோ. பூரண நிலவின் வெண்ணிற பொழிவை எப்படி நமக்கு மட்டுமானது எனக் கைப்பற்றி வைத்துக் கொள்ள முடியாதோ அந்த இடத்திற்கு ஒரு கலைப்படைப்பும் சென்றுவிடுகிறது.

இந்த இடத்தில் கலை இயற்கையென மாறுகிறது. அது தான் ரே பிராட்பரியின் சிறப்பு. எழுத்தின் வழியே இது போன்ற அபூர்வமான தருணத்தை உருவாக்கியதே இந்தக் கதையின் தனித்துவம்.

பிக்காஸோ வரைந்த ஓவியம் அலையால் அழிக்கபட்டுவிட்டாலும் ஸ்மித்தின் மனதில் அழிவற்ற ஓவியமாக எப்போதும் இருக்கப்போகிறது. அது தான் அவனுக்குக் கிடைத்த பரிசு. இந்த ஒவியத்தை வரைந்த பிக்காஸோவும் அதைப் பார்த்த ஸ்மித்தும் தவிர உலகில் வேறு யாரும் அதைப் அறிய மாட்டார்கள். ஸ்மித் அந்த வகையில் அதிர்ஷ்டசாலி.

ஒரு வேளை மொத்த கதையும் பிக்காஸோவின் நினைவில் தனித்திருக்கும் ஸ்மித் கற்பனை செய்ததாகவும் இருக்கக் கூடும். அதுவும் சாத்தியம் தானே. அவன் ஒரு கனவுலகவாசி என்பது கதையின் முதல்பகுதியிலே சொல்லப்படுகிறது. அவன் புற உலகை பிக்காஸோவின் படைப்பாகவே கருதுகிறான்.

இந்தக் கதையின் தலைப்பு வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. வேர்ட்ஸ்வொர்த் அழகினைப் பற்றி மிகச்சிறப்பாக எழுதியவர். அவரது கவிதையின் ஒரு வரியைத் தலைப்பாக்கியது பொருத்தமானது.

இந்தக் கதை 1957ம் ஆண்டு, பிளேபாய் பத்திரிகையில் வெளியானது. கதைக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக 90 நிமிஷங்கள் ஓடக்கூடிய படமாகவும் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு ரே பிராட்பரியே திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

ஸ்மித்தைப் போலப் பிக்காஸோவை காணுவதற்காக நாட்கணக்கில் அவர் வீட்டின் முன்பாகக் காத்துக்கிடந்தவர்களைப் பற்றியும் பிக்காஸோவின் காலணியைத் திருடிப் போன திருடனைப் பற்றியும் வாசித்திருக்கிறேன். இந்தக் கதையில் அதிக உரையாடல்கள் இல்லை. குறிப்பாகப் பிக்காஸோவும் ஸ்மித்தும் பேசிக் கொள்வதேயில்லை. இந்த மௌனம் தான் இளம்படைப்பாளி கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்

••

0Shares
0