காலைக்குறிப்புகள் 28 தனிமையும் கனவுகளும்

எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் தனது நேர்காணல் ஒன்றில் அன்றாடம் தனக்கு வரும் கனவுகளை ஒரு நோட்டில் குறித்து வைத்துக் கொண்டு வருவதாகச் சொல்கிறார். அவற்றை என்ன செய்வார் என்று சொல்லவில்லை. கனவுகளிலிருந்து எழுதுவதற்கான கருவைப் பெறுவதாக எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். ரஸ்கின் பாண்டிற்கும் கனவு வழிகாட்டவே செய்கிறது.

திப்புசுல்தான் தனது கனவுகளை இது போலத் தொடர்ந்து பதிவு செய்து வந்ததோடு அவற்றிற்கு விளக்கம் என்னவென்று ஆராய்ந்துமிருக்கிறார். அவை தனி நூலாக வெளிவந்துள்ளன.

ரஸ்கின் பாண்டின் சிறார்கதைகைள் தலைமுறைகள் தாண்டி இன்றும் வாசிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி பாடப்புத்தங்களில் இடம்பெற்ற இவரது சிறுகதைகளைப் படிக்காத இந்திய மாணவர்களே இருக்கமாட்டார்கள். நானும் என் பள்ளி நாட்களில் படித்திருக்கிறேன்.

தனது நேர்காணலில் ரஸ்கின் பாண்ட். எழுபது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்கிறார். நீண்டகாலமது. எழுத்து தான் அவரது நினைவாற்றலைத் தக்கவைத்திருக்கிறது. துல்லியமாகத் தன்னால் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை எழுதமுடியும். அதற்கு நினைவாற்றலே காரணம் என்கிறார்.

இயற்கையோடு இணைந்து வாழுகிறவர் என்பதால் அவரது கதைகளில் பறவைகளும் விலங்குகளும் குளிரும் பனியும் மழையும் ஒன்று சேர்ந்து வெளிப்படுகிறது.

எப்படி இன்றும் கதைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள் என்று கேட்டதற்கு உணவு உண்பது, தண்ணீர் குடிப்பது போல எழுத்தும் அன்றாடச் செயல்பாடாக மாறிவிட்டது. எழுதுவதற்கு முன்பு கதையை முழுவதுமாக மனதில் உருவாக்கிக் கொண்டே எழுத அமருவேன். எழுதுகிற வேலை என்பது மனதிலிருப்பதைப் பிரதியெடுப்பது மட்டுமே என்கிறார்.

ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இப்படி ஒரு பாணி இருக்கிறது. எவரும் எவரையும் பின்பற்றமுடியாது.

ரஸ்கின் பாண்டின் வீடு மிசோரியில் உள்ளது. வீட்டின் ஜன்னலைத் திறந்தால் தூரத்து மலைகள் சுற்றிலும் அடர்ந்த மரங்கள். மலைநகர வாழ்க்கை தன்னைச் சுதந்திரமாக உணர வைக்கிறது. எழுத வைக்கிறது என்கிறார்.

சிறார்களுக்கான புத்தகங்களை மட்டுமே எழுதி ஒருவர் இத்தனை பேரும் புகழும் பெற்றிருப்பது ஆச்சரியமானது. ஆங்கிலத்தில் எழுதியதால் அவரால் எழுத்தை நம்பி வாழ முடிந்திருக்கிறது. பென்குவின் போன்ற பதிப்பகங்கள் அவரைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. பத்திரிக்கைகளில் பத்திகள் எழுதினார். அரசின் சார்பாகப் பல்வேறு திட்டப்பணிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

அவரது சில கதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியிருக்கிறது. ஆகவே தனித்துச் சுதந்திரமாக வாழும் அளவிற்கு வசதியாகவே இருக்கிறேன் என்கிறார் ரஸ்கின் பாண்ட்.

ரஸ்கின் பாண்ட் என்ற பெயரைப் பற்றி நேர்காணல் செய்கிறவர் கேட்டபோது தான் பிரிட்டிஷ் வம்சாவளியைச் சார்ந்தவர். பஞ்சாப் மாநிலத்தின் கசௌலியில் பிறந்தவன். தன் தந்தை அலெக்சாண்டர் பாண்ட் ஜாம்நகர் அரசரின் மகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணியைச் செய்துவந்தார். ஆகவே குடும்பம் ஜாம்நகரில் வசித்தது. என்று பதில் சொல்கிறார்

அவரது நினைவுகள் கடந்தகாலத்தினுள் பறக்கத்துவங்குகிறது. தனது பழைய புகைப்படங்களைப் புரட்டி வாழ்வின் கடந்து போன பக்கங்களை நினைவு கொள்கிறார்.

ரஸ்கின் மற்றும் அவரது சகோதரி எலன் இருவரும் ஆறு வயது வரை ஜாம்நகரில் வாழ்ந்தனர். பின்னர் ரஸ்கினின் தந்தை பிரிட்டிஷ் விமானப்படையில் சேரவே அவரும் சகோதரியும் அம்மாவுடன் பாட்டி வீடான டெஹ்ராடூனிற்கு இடம்மாறினார்கள். முசோரியில் உள்ள போர்டிங் ஸ்கூலில் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். கல்லூரி படிப்பே கிடையாது.

ரஸ்கின் பாண்டிற்கு எட்டுவயதான போது அவரது அம்மா ஒரு பஞ்சாபியைத் திருமணம் செய்து கொண்டுவிட்டார். அது குடும்பத்தில் பெரிய பிரச்சனையை உருவாக்கியது.

அம்மா வேறு திருமணம் செய்து கொண்டுவிடவே ரஸ்கின் தந்தையுடன் வசிக்கப் புதுதில்லிக்குச் சென்றார். தந்தையின் நேசமே தன்னை உருவாக்கியது என உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்கிறார் பாண்ட். இந்த அன்பு நீடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளில் எதிர்பாராமல் தந்தை இறக்கவே ரஸ்கின் நிலைகுலைந்து போனார்.

மீண்டும் தாயோடு சேர்ந்து வாழ டெஹ்ராடூனிற்கே சென்றார். அன்பிற்கான ஏக்கம். தனிமை, தந்தையில்லாத வருத்தம் எனச் சொந்த வாழ்க்கையின் துயரம் அவரை எழுதும்படி தூண்டியது. 1951 இல் தனது பதினாறாவது வயதில் எழுதத் துவங்கிய ரஸ்கின் பாண்ட் இன்றுவரை எழுதிக் கொண்டேயிருக்கிறார்.

சொந்த வாழ்வின் துயரங்களை எழுத்தாளன் கலையாக மாற்றிவிடுகிறான். அந்தப் படைப்பில் துயரத்தின் சாயலே இல்லை. பதின்வயதின் கனவுகளும் சந்தோஷமும் ஏக்கமும் மட்டுமே வெளிப்படுகிறது. பதின்வயதில் ஏற்பட்ட காதல் தோல்வியும், பிரிவும் தன் படைப்பில் சோகத்தை உருவாக்கியது உண்மை என்றாலும் விரைவில் அதிலிருந்து விடுபட்டுவிட்டேன் என்கிறார் ரஸ்கின் பாண்ட்

குழந்தைகளுக்காக அவர் எழுதிய உலகம் வண்ணமயமானது. சுவாரஸ்யமானது. சிறார்களின் மனதைத் துல்லியமாகச் சித்தரித்த கதைகள் அவை. அவர் ஒருபோதும் சிறார்களுக்கு அறிவுரை சொல்வதில்லை. ஒருமுறை பள்ளி ஒன்றுக்குச் சிறப்பு ஆசிரியராக ஒரேயொரு வகுப்பு எடுக்க அவரை அழைத்திருந்தார்கள். மாணவர்களின் விளையாட்டுத்தனத்தையும் குறும்பினையும் கண்டிக்க மனமின்றிச் சுதந்திரமாக அனுமதித்தார். வகுப்பில் ஒரே களேபரம் ஏற்பட்டுத் தலைமை ஆசிரியர் தலையிட்டு வகுப்பை அமைதிப்படுத்தியிருக்கிறார். தன்னால் சிறுவர்களின் விளையாட்டுத்தனத்தைக் கண்டிக்கமுடியாது. அது உற்சாகமான மனதின் வெளிப்பாடு. அதை ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்கிறார் ரஸ்கின் பாண்ட். இந்த மனநிலை தான் அவர் குழந்தைகளுக்காக எழுதுவதன் முக்கியக் காரணி.

முப்பது வயதில் காமன்வெல்த் பரிசை பெற்றபிறகே அவருக்கான இலக்கிய இடம் உறுதியானது. தனது புத்தகங்களுக்கான பதிப்பாளரைத் தேடி லண்டன் சென்ற பாண்ட் அங்கே சில காலம் வசித்தார். பின்பு இந்தியா திரும்பி 1963 முதல் முசோரியில் வசிக்கத் துவங்கினார்.

திருமணம் செய்து கொள்ளாத ரஸ்கின் பாண்ட் தனது வளர்ப்புப் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மாதம் ஒருமுறை முசோரியிலுள்ள புத்தகக் கடை ஒன்றுக்கு வருகை தந்து தன் புத்தகங்களில் கையெழுத்துப் போடுகிறார். வாசகர்களுடன் உரையாடுகிறார்.

ஜேம்ஸ் பாண்ட் புகழ்பெறுவதற்கு முன்பே எழுத ஆரம்பித்த பாண்ட் நான் தான். ஆகவே எனக்கு ஜேம்ஸ்பாண்டால் ஒரு பிரச்சனையுமில்லை என வேடிக்கையாகச் சொல்கிறார்.

பலரும் அவரை வெளிநாட்டவர் என்றே இன்றும் நினைக்கிறார்கள். அவரோ நான் இந்தியாவில் பிறந்தவன். இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறவன் என்கிறார். சாகித்ய அகாதமி விருது, பத்மபூஷண் விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் ரஸ்கின் பாண்ட்.

The Room on the Roof இவரது முக்கியமான நாவல். இது ரஸ்டி என்ற ஆங்கிலோ இந்தியச் சிறுவனைப் பற்றியது. ரஸ்கின் பாண்டின் சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது. ரஸ்கினின் காதல் நிகழ்வுகளே மீனாவின் மீதான ரஸ்டியின் காதலாக வெளிப்படுகிறது.

தன்னை எவரும் புரிந்து கொள்ளவில்லை. அன்புகாட்டவில்லை என்ற ரஸ்கினின் குழந்தைப்பருவ ஏக்கம் அவரது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுகிறது.

சிறுவர்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதன் அர்த்தங்களைப் பற்றிக் கவலைப்படாமல் வாசிக்கிறார்கள். அர்த்தங்களை முழுமையாகப் புரிந்து கொள்வது மிக அபூர்வமாகவே காணப்படுகிறது. நிகழ்வுகளின் சுவாரஸ்யமும் விநோதமுமே அவர்களைத் தொடர்ந்து படிக்க வைக்கிறது.

ஒருவன் தன் பத்து வயதில் அணிந்து கொண்ட சட்டை அவனுடைய இருபதாம் வயதில் அவனுக்குப் பொருந்துவதில்லை. ஆனால் அவன் பத்து வயதில் படித்த புத்தகம் அவனுக்கு எண்பது வயது ஆகும் போதும் பிடித்தமானதாகவே இருக்கிறது. கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது. அது தான் நல்ல புத்தகத்தின் அடையாளம்.

எழுத்து வாசகனுக்கு மட்டும் மீட்சியளிப்பதில்லை. எழுத்தாளனுக்கும் சொந்த வாழ்க்கையின் துயரங்களிலிருந்து விடுபட்டு மீட்சி அளிக்கவே செய்கிறது.

0Shares
0