காலைக்குறிப்புகள் -9. ஒரு விளையாட்டு.

இதாலோ கால்வினோவின் Numbers in the Dark சிறுகதைத் தொகுப்பில் Making Do என்றொரு சிறுகதை உள்ளது. இன்றைய ஊரடங்கு வாழ்க்கையின் விசித்திரத்தை 1985லே கால்வினோ எழுதியிருக்கிறார். இலக்கியம் பலநேரம்வாழ்க்கையின் முன்னறிவிப்பு போலவே இருக்கும் என்பதன் அடையாளமிது. கால்வினோவின் சிறுகதைகள் விசித்திரமும் யதார்த்தமும் ஒன்று கலந்தவை. சமகாலப்பிரச்சனைகளை அவர் மாய எழுத்தின் மூலம் வெளிப்படுத்தக்கூடியவர். கதைமொழியிலும் கதை சொல்லும் விதத்திலும் கால்வினோ நிகழ்த்திய சாதனைகள் அபாரமானவை.

Making Do கதையில் ஒரு நகரில் எல்லாமும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. எதற்காக இந்தத் தடை என்ற காரணம் சொல்லப்படுவதில்லை. ஆனால் பொழுதுபோக்குகள், கேளிக்கைகள் என வழக்கமாக நடக்கும் எல்லா விஷயங்களும் தடைசெய்யப்பட்டிருந்தன.. அந்த ஊரில் தடைசெய்யப்படாத ஒரே விஷயம் கிட்டிப்புள் விளையாட்டு மட்டுமே

ஆகவே மக்கள் நகரத்திலுள்ள புல்வெளியில் ஒன்று கூடி கிட்டிப்புள் விளையாடி மகிழ்ந்தார்கள். அது சிறார் விளையாட்டு என்பதை மறந்து பெரியவர்களும் உற்சாகமாக விளையாடினார்கள். ஏன் இந்தத் தடை என்று யாருக்கும் தெரியவில்லை. ஒருவரும் தடை குறித்துப் புகார் தெரிவிக்கவுமில்லை. கிடைத்த வாழ்க்கைக்குள் வாழுவதற்குப் பழகியிருந்தார்கள்.

அப்படியே ஆண்டுகள் கடந்து செல்ல ஆரம்பித்தன. ஒரு நாள் ஆட்சியாளர்கள் எல்லாவற்றையும் தடை செய்வதற்கு ஒரு காரணமும் இல்லை என்பதைக் கண்டறிந்தார்கள். ஆகவே விரும்பியதை யாரும் செய்யலாம் என்று குடிமக்களுக்குத் தெரிவிக்கத் தூதுவர்களை அனுப்பி வைத்தார்கள். அந்த நகருக்கு வந்த தூதுவர்கள் இப்போது தடை எதுவும் இல்லை. யாரும் எந்த விளையாட்டினையும் விளையாடலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம் என்று அறிவித்தார்கள்.

ஆனால் அதை மக்கள் பொருட்படுத்தவேயில்லை. அவர்கள் எப்போதும் போலவே கிட்டிப்புள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

நீங்கள் விரும்பியதைச் செய்யும் சுதந்திரம் கிடைத்துவிட்டது. இனி தடையில்லை என்று தூதுவர்கள் சொன்ன போதும் மக்கள் அதைக் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. அவர்களுக்குக் கிட்டிப்புள் விளையாடுவதே போதுமானதாக இருந்தது.

தூதர்கள் அவர்கள் ஒரு காலத்தில் ஈடுபட்டிருந்த பல அற்புதமான மற்றும் பயனுள்ள தொழில்களை நினைவூட்டினர், இப்போது மீண்டும் ஒரு முறை அவற்றில் ஈடுபடலாம் என்று ஆலோசனை சொன்னார்கள். ஆனால் ஒருவரும் அதைக் கேட்டுக் கொள்ளவேயில்லை.

முடிவாகக் கிட்டிப்புள் விளையாடுவதைத் தடை செய்வது என்று ஆட்சியாளர்கள் முடிவு செய்தார்கள்

அவ்வளவு தான் மக்கள் கொதித்து எழுந்தார்கள். கிளர்ச்சி செய்தார்கள். வன்முறை வெடித்தது. உடனே ஆட்சியாளர்கள் கிட்டிப்புள் விளையாடுவதை மீண்டும் அனுமதித்தார்கள்.

மக்கள் மகிழ்ச்சியாகப் பழையபடி கிட்டிப்புள் விளையாட ஆரம்பித்தார்கள். என்று கால்வினோவின் கதை முடிகிறது.

நெருக்கடிக்குள் வாழப்பழகியவர்கள் இப்படித்தானே நடந்து கொள்வார்கள். நாஜி காலத்தின் தடைகளை மனதில் கொண்டு கால்வினோ இந்தக் கதையை எழுதியிருக்கிறார். ஆனால் அக்கதை இன்றைக்கும் பொருத்தமானதாகவே உள்ளது.

இந்தக் கதையின் மறுபக்கம் போல Stefan Zweig’யின் Chess என்ற கதையில் சிறையில் அடைபட்ட டாக்டர் பி என்ற கதாபாத்திரம் கற்பனையிலே சதுரங்கம் விளையாடிக் கொண்டேயிருக்கிறார். சித்திரவதையிலிருந்து தப்பிக்க அது ஒன்று தான் வழி. அவர் விடுதலையாகி கப்பலில் வரும் போது தான் உலகச் சதுரங்க சேம்பியனுடன் செஸ் விளையாட வேண்டிய சூழல் உருவாகிறது. அப்போது தான் நேரடியாக அவர் சதுரங்கத்தை விளையாடுகிறார். விறுவிறுப்பான சதுரங்கப் போட்டி நடக்கிறது

சிறைப்பட்டிருந்த டாக்டர் பியை விளையாட்டு தான் உயிர்வாழச் செய்கிறது. கறுப்பு வெள்ளை கட்டங்கள் அவர் மனதில் தான் தோன்றுகின்றன. சதுரங்க காய்களாக அவர் பயன்படுத்தியவை கிழிந்த காகிதங்கள். தனக்குத் தானே விளையாடிக் கொண்டேயிருக்கிறார். ஆகவே விளையாட்டு என்பது பலநேரங்களில் உயிர் மீட்சியாக மாறிவிடும் என்பதையே ஸ்வேக் சுட்டிக்காட்டுகிறார்

நெருக்கடியிலிருந்து தப்பிக்க மனிதர்களுக்கு ஒரு பற்றுக்கோல் தேவை. எதுவாகயிருந்தாலும் அந்த ஒன்றைப் பற்றிக் கொண்டு வாழத் துவங்கிவிடுவார்கள்.

டாக்டர் விக்டர் பிராங்கல் மரணதண்டனைக்காகக் காத்திருந்த யூத முகாம்களில் மக்கள் இரவில் ஒன்று கூடி கதைப்புத்தகம் படித்தார்கள். கதையில் வருவது போல வாழ்க்கை திடீரென மாறிவிடும் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்கள். புத்தகம் முடியும் வரை உயிர்வாழுவோம் என்று நினைத்தார்கள். அந்த நம்பிக்கை அவர்களைக் காப்பாற்றியது என்று குறிப்பிடுகிறார்.

கால்வினோ, ஸ்வேக் இருவரும் நெருக்கடிக்குள் மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையே முதன்மைப்படுத்தியிருக்கிறார்கள். இலக்கியம் மனிதர்களின் ஆழ்ந்த நம்பிக்கைகளை எப்போதும் அடையாளப்படுத்துகிறது. அதைக் காரணத்தால் விளக்கிவிட முடியாது.

The only kind of literature that is possible today: a literature that is both critical and creative. என்று கால்வினோ தெரிவிக்கிறார். அது அவரது சிறுகதையில் முழுமையாகவே வெளிப்படுகிறது

•••

.

0Shares
0