காலைக் குறிப்புகள் 19 நினைவின் நறுமணம்

ஜப்பானிய இயக்குநர் ஓசுவின் திரைப்படம் ஒன்றில் திருமணமாகிச் செல்லும் மணப்பெண்ணை வீட்டிலிருந்து அழைத்துப் போகிறார்கள். அவள் தந்தையிடம் ஆசி பெறுகிறாள். அப்போது இத்தனை ஆண்டுகள் தன்னை வளர்த்து அன்பு செலுத்தியதற்கு நன்றி தெரிவிக்கிறாள். தந்தை அவளது எதிர்காலம் கடந்தகாலத்தை விடவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறார். அந்தக் காட்சியை என்னால் மறக்கமுடியவில்லை

கடந்தகாலத்தை விடவும் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைப்பது தான் இலக்கியத்தின் பணியும். அந்தத் தந்தையின் ஆசியைப் போன்ற ஒரு பணியைத் தான் எழுத்தாளனும் மேற்கொள்கிறான். அதே படத்தில் மகள் தந்தையிடம் ஆசி பெற்று வெளியேறும் போது அவள் அமர்ந்திருந்த இடத்தினை ஒரு பெண் சுற்றிவலம்வந்து அந்தப் பெண்ணின் பொருட்களை எடுத்துச் செல்கிறாள்.

வெற்றிடத்தை ஏன் வலம் வருகிறார்கள் என்று புரியாமல் அந்தப்படம் குறித்த கட்டுரை ஒன்றை வாசித்தேன். அது ஒரு நம்பிக்கை. மகள் இல்லாத போதும் அந்த வெற்றிடம் அவளது நினைவின் அடையாளமாக இருக்கும். வெற்றிடத்தையும் வணங்கியே  விடைபெற வேண்டும் என்று ஜப்பானியர்கள் நினைக்கிறார்கள்.

வெற்றிடத்தை வணங்குவது ஒரு மரபு. இந்தியாவில் இதைப் பல இடங்களிலும் காணமுடியும். தந்தையின் மனதில் அந்த மகள் என்றைக்கும் மாறாத இடத்தில் சாஸ்வதமாக இருக்கப்போகிறாள். அது தான் உண்மை. திரைப்படம் இலக்கியத்தின் நுட்பங்களைக் கைக்கொள்வது என்றால் இது போன்றது தான். ஜப்பானிய மரபின் தொடர்ச்சியை ஒருவர் அதன் இலக்கியங்களில் மட்டுமின்றித் திரையிலும் காணமுடிகிறது என்பது சந்தோஷமானதே.

Scent of Apples” by Bienvenido N Santos. என்ற சிறுகதைத் தொகுப்பினை வாசித்தேன். பிலிப்பைன்ஸைச் சேர்ந்த எழுத்தாளரின் சிறுகதைகள். இதில் ஆப்பிள்களின் வாசனை என்ற கதை சாண்டோஸின் பார்வையில் சொல்லப்படுகிறது.

கதை அவர் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதைப் பற்றியது. அந்தக் கூட்டத்தில் செலஸ்டினோ ஃபேபியா என்ற விவசாயி ஒரு கேள்வியைக் கேட்கிறார். அந்த விவசாயியும் பிலிப்பைன்ஸை விட்டு இருபது ஆண்டுகளுக்கு முன்பாக வெளியேறி வாழுகிறவர் என்பது தெரியவருகிறது. அவர் நீண்ட நாட்களாகப் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒருவரைக் கூட நேரில் சந்திக்கவில்லை. அதற்காக அவர் சாண்டோஸின் கூட்டத்திற்கு வந்ததாகச் சொல்கிறார்.

அவர் சாண்டோஸிடம் பிலிப்பைன்ஸில் இப்போது பெண்கள் முன்பு போல இருக்கிறார்களா அல்லது மாறிவிட்டார்களா என்று கேட்கிறார். இதற்கு எப்படிப் பதில் சொல்வது என்று சாண்டோஸிற்குத் தெரியவில்லை. அவர் முன்பு பெண்கள் எப்படி இருந்தார்கள் என்று நீங்கள் விரிவாகச் சொன்னால் உங்கள் கேள்விக்கான பதிலை நான் சொல்ல முடியும் என்கிறார்

அதற்கு அந்த விவசாயி அந்தக்காலத்தில் பெண்கள் குடும்பத்தின் மீது மிகவும் அன்பு செலுத்தினார்கள். கடினமான உழைப்பை மேற்கொண்டார்கள். கணவனிடம் விசுவாசமாக இருந்தார்கள். அடக்கமாக நடந்து கொண்டார்கள். நம்பிக்கையோடு இருந்தார்கள். எளிமையான ஆடை அணிந்தார்கள் என்று தனது சுய அனுபவத்தைச் சொல்கிறார்.

இதைக்கேட்ட சாண்டோஸ் பெண்கள் தங்கள் தோற்றத்தில், செயல்களில் மாறிவிட்டாலும், அவர்களின் ஆதாரமான அன்பும் நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் மாறிவிடவில்லை. நீங்கள் புறத்தோற்றத்தை வைத்து அவர்களை எடைபோடாதீர்கள். தேவையற்ற கட்டுப்பாடுகளை, ஒடுக்குமுறையைப் பெண்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பது நல்லதொரு மாற்றமே என்கிறார்

இந்த விளக்கத்தில் அந்த விவசாயி மகிழ்ச்சியடைகிறார், நிகழ்ச்சி முடிந்தபிறகு சாண்டோஸை அந்த விவசாயி ஒரு நாள் தன் வீட்டிற்கு வரும்படி அழைக்கிறார். தன் மனைவி நீண்டகாலமாகப் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒருவரைச் சந்திக்கவேயில்லை. ஆகவே நீங்கள் வீட்டுக்கு வந்தால் அவள் மிகவும் சந்தோஷப்படுவாள் என்கிறார். அந்த அழைப்பை சாண்டோஸ் ஏற்றுக் கொள்கிறார். அருகிலுள்ள பண்ணையில் அந்த விவசாயி வேலை செய்வதை அறிந்து அங்கே ஒரு நாள் செல்கிறார் சாண்டோஸ்

அந்தப் பண்ணைக்குப் போகும் வழியில் வழியில் நிறைய ஆப்பிள் மரங்களைக் காணுகிறார், அந்த மரங்கள் அவரது பால்யகாலத்தை நினைவுபடுத்துகின்றன. பிரிந்த வந்த ஊரின் அடையாளம் போல அந்த மரங்கள் காணப்படுகின்றன. அவர் திடீரெனத் தனது சொந்த ஊரைத் தனது பூர்வீக வீட்டை நினைத்து ஏங்குகிறார், ஃபேபியா சந்தித்த போது அவரும் அந்த ஆப்பிள் மரங்களைக் காணும் போது ஊரை நினைவுகொள்வதாகச் சொல்கிறார். அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த போதும் இருவரும் தங்கள் இளமைக்காலத்தை நினைவில் வைத்திருக்கிறார்கள், ஆனால் ஊரில் இப்போது எல்லாம் மாறிவிட்டது என்று நினைப்பது இருவருக்கும் வருத்தமாக இருக்கிறது.

தனக்கு உடல்நலமற்று போன ஒரு தருணத்தில் தன்னை விட்டு நீங்காமல் உடனிருந்தாள் ரூத். மருத்துவமனையில் கூடவே இருந்தாள் என்று பேபியோ நினைவு கொள்கிறான்.

ஃபேபியாவின் மனைவி ரூத்தின் உருக்குலைந்த தோற்றம் வருத்தமளிக்கிறது. பேபியாவிடம் விடைபெறும் போது தான் சொந்த ஊருக்குப் போகம் திட்டமிட்டுள்ளதாகவும் அவனுக்காக ஏதாவது செய்தி கொண்டு செல்லவேண்டுமா எனக்கேட்கிறார்

வேண்டாம். ஊரில் யாரும் என்னை நினைவில் வைத்திருக்கமாட்டார்கள். நான் வெளியேறிப் போன ஒருவனாக அடையாளமற்று இருந்துவிடுகிறேன் என்கிறார்ஃபேபியா.

ஊர் என்பது இருவரது மனதில் தான் இருக்கிறது. நிஜம் அவர்கள் சந்திக்க முடியாதது. மாற்றங்களை மனது ஏற்றுக் கொண்டாலும் நினைவு அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஏதோ ஒரு பொருளோ, நிகழ்வோ, மனிதரோ ஊரை நினைவுபடுத்திவிடுகிறார்கள்

ஃபேபியா மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறான். ஆனால் அவன் மனதில் இன்னமும் பழைய உலகிற்கும் பழைய வாழ்க்கைக்கும் திரும்பிப் போக வேண்டும் என்ற ஏக்கம் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் அவன் போக மாட்டான். போவது சாத்தியமில்லை என்று அறிந்து வைத்திருக்கிறான்.

ஃபேபியா பெண்களைப் பற்றிக் கேட்ட கேள்வியைப் போல அவன் மனைவி ஆண் குறித்து ஒரு கேள்வியும் எழுப்புவதில்லை.

பெண்கள் மாற்றத்தை ஏற்றுக் கொள்வதும் ஆண்கள் மாற்றத்தை ஏற்றுக் கொள்வதும் ஒன்றுபோலில்லை.

முகமறியாத ஒரு ஆளை அவர் தனது சொந்த ஊர்க்காரர் என்ற ஒரு காரணத்திற்காகவே ரூத் அன்போடு வரவேற்கிறாள். அவருக்கு ஆப்பிள் நறுக்கிக் கொடுத்து உபசரிக்கிறாள். தன் ஊரைச் சேர்ந்த ஒருவரை நேரில் பார்ப்பதற்கு ஏன் ரூத் இவ்வளவு ஏங்குகிறாள். அந்த மனிதர் வடிவில் அவள் தன் ஊரையே மறுமுறை சந்திக்கிறாள். அது போதும் ரூத் போன்ற பெண்களுக்கு.

Remembrance of things past is not necessarily the remembrance of things as they were.” என்கிறார் மார்சல் ப்ரௌஸ்ட்.  எழுத்தாளன் கடந்த காலத்தை அவ்வாறு தான் எழுத்தாக்குகிறான்

••

0Shares
0