காலைக் குறிப்புகள் 23 கடந்து செல்லும் காட்சி.

ஸ்டானிஸ்லாவ் டிகாத் புகழ்பெற்ற போலந்து எழுத்தாளர், நாடக ஆசிரியர் . இவர் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி எழுதிய குறுங்கதை ஒன்றை சுகுமாரன் கல்குதிரை தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழுக்காக மொழியாக்கம் செய்து கொடுத்திருந்தார்.

தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஓர் அறியப்படாத நிகழ்ச்சி என்ற அந்தக் கதை மிகச்சிறப்பானது. கரமசேவ் சகோதரர்கள் நாவலை தஸ்தாயெவ்ஸ்கி ஏன் எழுதினார் என்பதற்கு இக் கதை ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. இன்னொரு விதத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் வாசகர்களில் ஒருவராகக் கடவுளுமிருக்கிறார் என்று சுட்டிக்காட்டுகிறது.

இந்தக் கதையில் வரும் கடவுள் ஆறு நாட்களில் செய்து முடித்த தனது படைப்பு முழுமையானதில்லை என்றே கூறுகிறார். எழுத்தாளன் முழுமையற்ற வாழ்க்கையைத் தனது புனைவின் வழியே முழுமையாக்க முயலுகிறான் என்பதாகக் கதை சொல்கிறது.

அபூர்வமான குறுங்கதையைச் சுகுமாரன் நேர்த்தியாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

கதையை நீங்களே வாசியுங்கள்

ஓர் இரவு. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தனது கையெழுத்துப் பிரதியில் திருத்திக் கொண்டிருந்தார் தாஸ்தயேவ்ஸ்கி.திடீரென்று யாரோ கதவைத் தட்டினார்கள்.

இந்த நேரங்கெட்ட நேரத்தில் எந்த விருந்தாளியும் வருவது வழக்கமில்லை. தனக்கோ ஒரு வேலையாள் கூடக் கிடையாது. பிறகு இந்த அகாலத்தில் யாராக இருக்கும்?

ஆனால் குரலில் கொஞ்சம் கூடப் பரப்பரப்பைக் காட்டாமல் சாதாரணமாகச் சொன்னார்.

வாருங்கள் , உள்ளே, வாருங்கள்”.

மடக்குக் கதவுகள் மெதுவாகத் திறக்கப்பட்டன. அறை முழுவதையும் அசாதாரண ஒளியால் நிறைத்துக் கொண்டு ஓர் உருவம் தோன்றியது. முதற் பார்வையிலேயே அது சாதாரண மனிதனல்ல என்று விளங்கியது. நீண்ட தாடியும், கறுத்த மேலங்கியும் தொய்ந்த காலுறைகளும் உணர்த்திய அசாதாரணத்தன்மையைத் தாஸ்தயேவ்ஸ்கி மனப்பூர்வமாகப் புறக்கணித்தார். விநோதமான எதிலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்று வாழ்க்கை அனுபவங்களிருந்து இதற்குள் அவர் கற்றுக் கொண்டிருந்தார். எனவே எந்த வார்த்தையும் பேசாமல் அறைக்குள் நுழைந்து தன் முன் நிற்கும் விசித்திர உருவத்தைப் பார்த்தும் கூட இதில் இயல்பை மீறியதாக எதுவுமில்லை என்பதுபோல உணர்ச்சியற்றவராக இருந்தார்.

அறிமுகமற்றவரின் தோற்றத்தில் தெரிந்த அசாதாரணத்தன்மையை ஒதுக்கி விட்டு நெடுநாள் பழகிய நபரிடம் சொல்வதுபோலச் சொன்னார்

உட்காருங்கள், உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும்?”

அந்தப் பரிச்சயமற்ற மனிதர் அறை நடுவில் ஒரு நடன் ஆசிரியரின் கால் அசைவுகளை நினைவுபடுத்துவதுபோல நின்று கொண்டிருந்தார். தன்னுடைய எதிர்பாராத வருகையும் தோற்றமும்குற்றமும் தண்டனையும்எழுதிய ஆளிடம் எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை என்பதை அவர் கவனித்தார்.

திடீரென்று ஞானோதயம் உண்டானவர்போல முதல் வாசகத்தை உச்சரித்தார்.

நான் காப்ரியேல் தேவதூதன்”.

சொர்க்கத்துக்கும் பூமிக்கும் அதிபதியானவர் என்னை உங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறார்

சிரமமான எதையோ செய்து முடித்ததைபோல மௌனமானார் அவர். நீண்ட நேரத்துக்குப் பிறகு பின்வருமாறு சொன்னார்:

அவருக்கு உங்களுடன் சில முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேச விருப்பம். அதற்காக உங்களை அழைத்துச் செல்வது என் கடமை

தாஸ்தயேவ்ஸ்கி இருக்கையிலிருந்து எழுந்து கோட்டைச் சரி செய்து கொண்டே சொன்னார்

நான் எப்போதுமே தயார்

கடவுள் தன்னுடைய அடர்ந்த வெண்நிறத் தாடியை வருடிக் கொண்டே தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் சொல்ல ஆரம்பித்தார்.

நண்ப, இங்கே இருக்கும் நாங்கள் எல்லாரும் உன்னதத்தை நோக்கி உங்கள் திறமை பறந்து உயர்வதை அக்கறையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்

தாஸ்தயேவ்ஸ்கி அந்தப் பாராட்டுக்குப் பணிவுடம் தலை வணங்கினார்.

ஆனால்எனக்கு அதை எப்படி விளக்குவதென்று புரியவில்லை. நான் சொல்ல விரும்புவதுஅதாவதுநீங்கள் காட்டுகிற உலகம் இருண்டே இருக்கிறது. நீங்கள் வாழ்க்கையின் கருமையான பக்கத்தை மட்டுமே பார்க்கிறீர்கள். அதன் நன்மைகளைப் பார்ப்பதே இல்லைஅதுமட்டுமல்லஇவற்றையெல்லாம் வெறும் ஆறே நாட்களில் சிருஷ்டித்தேன் என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்கவனக் குறைவால் ஒருவேளை பிசகுகள் நேர்ந்திருக்கலாம்ஆனாலும்…”

கடவுள் தன்னுடைய நிலைமையை விளக்க மிகவும் சிரமப்பட்டுக் கொண்டி ருந்தார். எனினும் அதற்கிடையிலும் எழுத்தாளரின் மேதைமையைப் பாராட்ட மறந்து விடவில்லை.

அதிகாரியின் தொனியில் அல்ல; ஆலோசகனின் பரிவுடனேயே இதைச் சொல்கிறேன்என்பதைப் புரியவைப்பதில் அவர் பிரத்தியேக அக்கறை கொண்டிருந்தார்.

கடவுளின் பரிதாபமான நிலைமை தாஸ்தயேவ்ஸ்கியை சங்கடப்படுத்தியது. அவருக்கு என்னால் என்ன செய்ய முடியும்? அவருக்கு நிச்சயம் ஒரு துணை தேவை.

வீட்டுக்குத் திரும்பிய உடனேயேகரமசோவ் சகோதரர்களை எழுத ஆரம்பித்தார் தாஸ்தயேவ்ஸ்கி.

இப்படி எழுத்தாளர்களைக் கதாபாத்திரமாகக் கொண்டு இப்படி நிறையச் சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ரேமண்ட் கார்வரின் “Errand” சிறுகதை ஆன்டன் செகாவின் கடைசி நாட்களை விவரிக்ககூடியது. மிக முக்கியமான கதை.

நான் போர்ஹெஸ், லியோ டால்ஸ்டாய். ஆன்டன் செகாவ். புதுமைப்பித்தன். ஆத்மநாம், ஞானக்கூத்தன் இவர்களைக் கதாபாத்திரமாக வைத்துச் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். இதை மட்டுமே தனியே தொகுத்து ஒரு தொகுப்பாகக் கொண்டு வரலாம்.

There’s a story behind every story என்பார்கள். தனது சிறுகதைகள் பற்றி முக்கியப் படைப்பாளிகள் குறைவாகவே பேசியிருக்கிறார்கள். அவர்களின் சொந்த வாழ்க்கையை அறியும் போது கதை எங்கேயிருந்து உருவானது என்பதைக் கண்டு கொள்ள முடிகிறது.

ஆன்டன் செகாவின் நிறையக் கதைகள் அவரது சொந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து உருவாக்கபட்டதே. டால்ஸ்டாயும் தனது ராணுவ நாட்களைப் பின்புலமாகக் கொண்டு சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

சிறுகதை எழுதுவதற்கான முறையும் நாவலும் முற்றிலும் வேறுபட்டது. போர்ஹெஸ் போன்ற சிலர் சிறுகதைகளை மட்டுமே எழுதியிருக்கிறார்கள். நாவல் எழுத முயற்சிக்கவில்லை.

கதை பிறந்த கதை என்று ஒரு தொகுப்பு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளியாகியுள்ளது. அதில் தனது கதை உருவான விதம் பற்றிப் பல்வேறு எழுத்தாளர்கள் விவரித்திருக்கிறார்கள்.

எஸ்தர் சிறுகதையை எப்படி எழுதினேன் என்று வண்ணநிலவன் பின்நகர்ந்த காலம் நூலில் எழுதியிருக்கிறார். கதை உருவாகும் விதம் இப்படியானது தான்

மதியம் மூன்று மணி சுமாருக்குப் புதுக்கோட்டை , தஞ்சாவூர் மார்க்கத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது சாரி சாரியாக மாட்டுவண்டிகள் சென்றன. வண்டிகளில் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் எனப் பாத்திர பண்டங்கள், துணிமூட்டைகளுடன் பயணம் செய்தனர். வண்டிகளின் பின்னே இளைஞர்கள் நடந்து வந்தனர் சிறிது தூரத்தில் மீண்டும் இதேபோல் வண்டிகளில் செல்லும் குடும்பங்கள் தென்படும். தஞ்சாவூர் , கும்பகோணம் வருகிற வரைதொடர்ந்து இதுபோல் குடும்பம் குடும்பமாக வண்டிகளில் சென்று கொண்டிருந்தனர்.

காபி சாப்பிடுவதற்காக ஒரு இடத்தில் பஸ்ஸை நிறுத்தினபோது , இப்படி வண்டிகளில் குடும்பம் குடும்பமாக எங்கே போகிறார்கள் என்று விசாரித்தேன். அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வேலை செய்து பிழைப்பதற்காகக் குடும்பம் குடும்பமாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது . அந்த வருஷம் மாநிலம் முழுவதும் கடுமையான வறட்சி . பருவ மழை பொய்த்து விட்டது. குளம் , கண்மாய்கள், ஆறுகள் எல்லாம் வறண்டு கிடந்தன . கிராமப்புறங்களில் விவசாயம் அறவே நின்றுவிட்டது. அதனால் சற்று வளமான தஞ்சை மாவட்டத்தில் எதாவது விவசாய வேலைகள் செய்து பிழைக்கலாம் என்று அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

இந்த விஷயம் என்னை வெகுவாகப் பாதித்தது . பாண்டிச்சேரிக்கு என் அறைக்கு வந்த பின்பும் அந்தக் கருத்து மெலிந்த மனிதர்களின் முகங்களும் , வண்டிகளை இழுத்துச் சென்ற மாடுகளின் கண்ணீர்க் கறை படிந்த கண்களும் என் நினைவில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன . சொந்த ஊரில் வாழ வழியில்லாமல் போவதென்பது எவ்வளவு கொடிய துயரம்.

அந்தத் துயரத்தை மறப்பதற்கு எனக்குப் பல தினங்கள் பிடித்தன . ஒரு இரவு மிக நீண்ட சிறுகதை ஒன்றை எழுதினேன். அதற்குஎஸ்தர்என்று பெயரிட்டேன். அப்போதும் அந்த விவசாயிகளை மறக்க முடியவில்லை . மறுநாளே இன்னொரு சிறுகதையும் எழுதினேன். அதற்குமிருகம்என்று தலைப்பு வைத்தேன். அந்த இரண்டு சிறுகதைகளையும் கணையாழிக்கு அனுப்பி வைத்தேன்.

வண்ணநிலவனின் எஸ்தர் மிருகம் இரண்டும் முக்கியமான சிறுகதைகள். எழுத்தாளன் கடந்து செல்லும் சிறிய காட்சியிலிருந்து அற்புதமான சிறுகதையை உருவாக்கிவிட முடியும் என்பதற்கு இந்தக் கதைகளே சாட்சி

••

0Shares
0