காலைக் குறிப்புகள் 30 சிறப்பு மௌனம்.

நோபல் பரிசு பெற்ற பின்பு  ஜப்பானிய எழுத்தாளரான கென்ஸாபுரோ ஒயி இனி தான் எழுதப்போவதில்லை. தன்னுடைய வேலை முடிந்துவிட்டது என்று ஒரு பேட்டி கொடுத்தார்.

ஏன் அப்படி சொல்கிறீர்கள் என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு. என் எழுத்திற்கு அடிப்படையாக ஒரேயொரு காரணமிருந்தது அது என் மகன் ஹிக்காரி. மூளை வளர்ச்சியற்ற அவன் நலமடைய வேண்டும் என்பதற்காகவே எழுதினேன். அந்தப் பணியை சரியாக செய்துவிட்டதாக உணர்கிறேன். ஆகவே இனி எழுதத் தேவையில்லை என்று பதில் சொன்னார்

உங்கள் மகனுக்காக மட்டும் தான் இத்தனை ஆண்டுகள் எழுதினீர்களா என ஒரு பத்திரிக்கையாளர் கேட்டதற்கு, ஹிக்காரி மற்றும் ஹிரோஷிமா. இந்த இரண்டும் தான் என்னை எழுத வைத்தது என்று பதில் தந்தார்

அவர் சொன்னது உண்மை

அவரது வாழ்க்கையில் நடந்த உண்மைகளை அறிந்தால் இந்தப் பதில் எவ்வளவு நிஜமானது  என்பதை உணரமுடியும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாளில் மனச்சோர்விலிருந்து விடுபடுவதற்காகத் தனது புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்கத் துவங்கினார் கென்ஸாபுரோ ஒயி.

படிக்கப் படிக்க மனதில் உற்சாகமோ, நம்பிக்கையோ எதுவும் ஏற்படவில்லை. தன்னுடைய புத்தகத்தால் தனக்குக் கூட மகிழ்ச்சி உருவாகவில்லையே. பின்பு எப்படி அது வாசகனுக்கு மகிழ்ச்சியை, நம்பிக்கையை உருவாக்கும் என்று  கவலையோடு யோசித்தார். அதுவரை எழுதிய புத்தகங்களின் மீது பெரும் ஏமாற்றமும் வெறுப்பும் உருவானது.

தனது எழுத்தின் போக்கினை, மையத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அன்று தான் தீர்மானம் செய்தார். அதன் சில வாரங்களுக்குப் பிறகு பத்திரிக்கையாளராக ஹிரோஷிமாவிற்குப் பயணம் மேற்கொண்டார். அங்கே அணுவீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்யும் மருத்துவரைச் சந்தித்து உரையாடினார்.

அந்த மருத்துவர் “அணுவீச்சின் பாதிப்புத் தலைமுறைகள் தாண்டியும் நீடிக்கக்கூடாது. இவர்களுக்கு என்னவிதமான உடற்பிரச்சனைகள் உருவாகும் என்று இப்போது துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. இவர்களில் பலரும் சாகக்கூடும். மரணத்தை என்னால் தடுக்கமுடியாது. ஆனாலும் மீட்சி உண்டு என்ற நம்பிக்கையை உறுதியாகக் கொண்டபடியே வேலை செய்து கொண்டிருக்கிறேன். இவர்களைப் பற்றி உலகம் கவலைப்படாமல் இருக்கலாம். இவர்களுக்கு நான் தேவை.  அதை முழுமையாக உணர்ந்திருக்கிறேன். அப்படி உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் தேவை. அவர்கள் உங்களை மட்டுமே உலகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்“ என்று  சொன்னார்.  

மருத்துவரின் பேச்சு கென்ஸாபுரோ ஒயி மனதில் புதிய வெளிச்சத்தை கொண்டுவந்தது. அதன்பிறகு அவரது எழுத்து மாறத்துவங்கியது.

நெருக்கடியான தருணத்தில் ஒரு எழுத்தாளர் தன்னுடைய புத்தகத்தை வாசிக்கும்போது அதிலிருந்து உண்மையான உத்வேகம் அடைவாரா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

புத்தகம் ஒரு வாசகனுக்கு ஏற்படுத்தும் தாக்கம் வேறு எழுத்தாளன் அடையும் உணர்வுகள் வேறு.

எழுதும் நாட்களில் எழுத்தாளனுக்குச் சந்தோஷத்தையும் மீட்சியினையும் எழுத்துத் தரக்கூடியது. இருளிலிருந்து விடுபடுவதற்கான வெளிச்சம் போல எழுத்து செயல்பட்டிருப்பதாகப் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். சிலர் எழுதுவதன் வழியே மட்டுமே தனது வாழ்வின் துயரங்களைக் கடந்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் எழுதி முடிக்கப்பட்டுப் புத்தகமாக வெளியான பிறகு, அது எழுத்தாளனிடமிருந்து துண்டிக்கப்பட்டு விடுகிறது.

தனது காயங்களைத் திரும்பப் பார்த்துக் கொள்ளும் போர்வீரனைப் போன்றது தான் எழுத்தாளன் தன் புத்தகங்களைத் தானே படித்துப் பார்ப்பது. வலியே முதன்மையாகத் தெரியும்.

சுயபுகழ்ச்சியை விரும்பும் சிலரைத் தவிரப் பெரும்பான்மை எழுத்தாளர்கள் தன் புத்தகங்களைத் தானே எடுத்துப் படிக்க விரும்புவதில்லை. தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதில்லை.  புகைப்படம் எடுக்கக் கையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது கூச்சமடைகிறார்கள். காதல் கடிதத்தை கையாளுவது போல ரகசியமாக எடுத்துப் பார்க்கிறார்கள் ஆங்காங்கே படிக்கிறார்கள். ரகசியமாக வைத்துவிடுகிறார்கள்.

சிறுவயதில் அணிந்த ஆடையை வளர்ந்த பிறகு அணிந்து கொள்ள முடியுமா என்ன.

எழுத்தாளன் தன் புத்தகத்தைத் திரும்பப் படிக்கத்துவங்கியதும் அதன் குறைகளை, போதாமைகளை உணரத்துவங்குகிறான். அது குற்றவுணர்ச்சியைத் தான் வெளிப்படுத்துகிறது. 

படகு செய்பவன் அதில் பயணிக்க விரும்புவதில்லை. அது பிறருக்கானது.

சிறந்த சமையற்காரன் சமையலின் போது ருசி பார்ப்பான். அதுவும் கண்ணில் பார்த்து ருசி சொல்லும் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு போதும் பெரிய இலைபோட்டுத் தான் சமைத்த உணவைத் தானே ருசித்துச் சாப்பிடமாட்டான்.

மூளை வளர்ச்சி குன்றிய தனது மகனுக்கு ஹிக்காரி என்று பெயர் வைத்திருக்கிறார் கென்ஸாபுரோ ஒயி . அதன் பொருள் ‘வெளிச்சம்’.

அவன் குழந்தையாக இருந்தபோது மருத்துவப் பரிசோதனைக்காகப் பெரிய மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துப் போயிருக்கிறார்கள். மருத்துவர் அவனுக்கு மூளையில் ஒரு அறுவை சிகிட்சை செய்ய வேண்டும். அதைச் செய்யாவிட்டால் அவனால் உயிர்வாழ முடியாது. ஒருவேளை அறுவை சிகிச்சை செய்தாலும் அவனது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுப் படுக்கையிலே வாழ்நாளைக் கழிக்க வேண்டியது வரும் என்றிருக்கிறார்.

பயந்து போன கென்ஸாபுரோ ஒயி ,இதைத் தவிர வேறு வழியில்லையா எனக்கேட்டதற்கு அந்த மருத்துவர். இந்த நிலையில் வைத்துக் கொண்டிருந்தால் அவன் உங்களுக்கு வீண்சுமை போலாகிவிடுவான் எனப் பேசியிருக்கிறார்.

தன் மகனை எப்படிக் காப்பாற்றி வளர்க்க வேண்டும் எனத் தனக்குத் தெரியும் எனக் கென்ஸாபுரோ ஒயி அன்றே முடிவு செய்து கொண்டார்.

அவரும் அவரது மனைவியும் ஹிக்காரியை தாங்களே கவனித்து வளர்ப்பதென முடிவு எடுத்தார்கள். இதற்கான நிறைய கவனம் எடுத்துக் கொண்டார்கள். காத்திருந்தார்கள்.

தன் மனைவியின் உறுதியான, நிதானமான, இடைவிடாத செயல்பாடும், ஆழ்ந்த நம்பிக்கையுமே தன் மகனை மீட்டெடுத்தது என்கிறார். கென்ஸாபுரோ ஒயி

பேச்சு வராத ஹிக்காரிக்கு ஆர்வம் உருவாக்குவதற்காக விதவிதமான பறவைகளின் குரலைக் கொண்ட ஒலிநாடாக்களை வீட்டில் ஒலிக்க விட்டிருக்கிறார்கள். அவன் பறவைகளின் குரல் வழியாகவே உலகை அறிந்திருக்கிறான்.

பறவைகளின் குரலைக் கேட்கும் போது அவன் சந்தோஷம் அடைவான். ஆனால் எந்த எதிர்வினையும் தர மாட்டான். இப்படி நாள்தோறும் புதுப்புது பறவைகளின் ஒலியை வீட்டில் ஒலிக்கச் செய்திருக்கிறார் ஒயி.

ஒவ்வொரு நாளும் தன் மகனின் மௌனம் தங்கள் மீது பெரும் பாரமாக இறங்கியது. அவன் ஏன் பேச மறுக்கிறான் என்று பல இரவுகள்  அழுதிருப்பதாகச் சொல்கிறார்.

வேதனை தான் எழுத்தின் மூல ஊற்று. உலகம் அறியாத தந்தையின் கண்ணீர் தான் எழுத்தாக மாறி நோபல் பரிசு வரையான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.

ஆறு வயதான ஹிக்காரியை அழைத்துக் கொண்டு கென்ஸாபுரோ ஒரு நாள் காட்டிற்குள் சென்றார். அங்கே ஒரு ஒரு பறவையின் குரலைக் கேட்டு எதிர்வினை தரும்விதமாகவே ஹிக்காரி நீர்க்கோழி என்ற முதல் வார்த்தையைப் பேசினான். அந்த மகிழ்ச்சிக்கு இணையே கிடையாது என்கிறார் ஒயி

தன் மகனின் மீட்சிக்கான நம்பிக்கையை உருவாக்கும் விதமாகவே தனது எழுத்து மாறியது. ஆகவே தன்னுடைய எழுத்தின் நோக்கம் குணப்படுத்துதல். இது என் மகனை மட்டுமில்லை அவனைப் போலத் தனிக்கவனம் செலுத்த வேண்டிய யாரோ ஒரு தந்தைக்கு, தாயிற்கு உதவி செய்யும் என்று நம்பினேன். அது தான் நடந்தது.

தன் படைப்புகள் வழியாக ஜப்பான் முழுவதும் மக்கள் ஹிக்காரியினையும் அவனை ஒத்த பிள்ளைகளையும் புரிந்து கொண்டார்கள் என்றும் சொல்கிறார் கென்ஸாபுரோ ஒயி

ஹிக்காரிக்கு பத்து வயதான போது அவனுக்கு மொசார்ட் பீதோவன் என உலகப்புகழ் பெற்ற இசைமேதைகளின் இசையை அறிமுகம் செய்திருக்கிறார். மொசார்ட்டின் எந்த இசைத்துணுக்கைக் கேட்டாலும் உடனே அவன் அது எந்த இசைக்கோர்வை என்று சொல்லிவிடுவான்.

வளர்ந்து பெரியவனாகி இன்று ஹிக்காரி ஒரு இசையமைப்பாளராக ஆகியிருக்கிறான். அவனது இசைத்தகடுகள் பல லட்சம் விற்பனையாகி சாதனை செய்திருக்கிறது.

இசையை ஆழ்ந்து கேட்கத் துவங்கிய பிறகு அவனுக்குப் பறவைகளின் குரல் மறந்து போய்விட்டது என்கிறார் ஒயி. இது ஆச்சரியமான விஷயம்.

ஹிக்காரியைப் போலவே தான் நமக்கும் உலகம் இயற்கையின் குரல் வழியாக அறிமுகமாகிறது. மூன்று வயதில் ஆட்டுக்குட்டிகளின் குரலை, அணிலின் கீச்சொலியை, குயிலின் பாடலை, வேப்பிலைகளின் ஒசையை கேட்டு வியந்து போயிருந்தேன்.  உலகம் ஒசைகளால் தான் நிரம்பியிருந்தது. புதிய புதிய குரல்கள்.  குரலை வைத்து உருவம் எப்படியிருக்கும் என கற்பனை செய்வேன். கிழே விழுந்தாலும் குரல் கொடுக்காத துணிகளுக்காக வருத்தப்படுவேன்.  வளரவளர உலகின் ஒசை பின்னுக்குப் போய் மனிதக்குரல்கள். அதிலும் உத்தரவுகள். ஆணைகள். ரகசியப்பேச்சுகள். கெடுபிடிகள் என கேட்டுக்கேட்டு பேச்சைக் கொண்டு தான் உலகை ஆள முடியும் என்பதைக் கற்றுக் கொண்டேன். இந்த மாற்றத்திற்குள் நுழையாத ஹிக்காரியின் உலகை தான் ஒயி எழுதுகிறார்.

சிறப்புக் கவனம் எடுக்க வேண்டிய குழந்தைகளை உலகம் ஏன் புறக்கணிக்கிறது. அவமதிக்கிறது. புரிந்து கொள்ள மறுக்கிறது. அந்தப் பெற்றோர்களின் அடக்கப்பட்ட கண்ணீரை, மனத்துயரை புரிந்து கொள்ளாமல் ஏன் பரிகாசம் செய்கிறார்கள்.  இந்த உலகின் மன்னிக்கமுடியாத குற்றம் இது போன்ற பெற்றோர்களை அவமதிப்பதாகும்.

ஹிக்காரியின் தாய் அவனை வளர்க்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். அவர் ஒருபோதும் சோர்ந்து போய்விடவில்லை. தவறான ஆலோசனைகள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. அவன் இன்று அடைந்துள்ள வெற்றி என்பது தாயின் வெற்றியே.

வாழ்க்கையின் அர்த்தத்தை ஹிக்காரி தனக்குக் கற்றுக் கொடுத்தான். பறவையின் வழியே அவன் சொந்தக்குரலை மீட்டுக்கொண்டான். என்கிறார் ஒயி.

இயற்கையே தவிர வேறு சிறந்த மருத்துவர் எவர் இருக்க முடியும். தன் மகனுக்கான மீட்சியை ஒயி கண்டறிந்த விதம் முக்கியமானது. பறவைகளின் ஒலியைக் கொண்டு அவனை மீட்க முடியும் என்று அவர் நம்பினார். அதை ஆழமாகச் செயல்படுத்திப் பார்த்திருக்கிறார்.

இன்றும் ஹிக்காரி நூற்றுக்கும் குறைவான வார்த்தைகளை மட்டுமே பேசுகிறான். ஆனால் இசையின் வழியே ஆயிரமாயிரம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறான்.

வாழ்க்கையில் நுட்பமாக ஒன்றைக் கண்டறிய முடிந்தால் மட்டுமே எழுத்திலும் கண்டறிய முடியும் என்கிறார் ஓயி. இது தான் எழுத்தின் ரகசியம்.

கென்ஸாபுரோ ஒயி எழுதிய A PERSONAL MATTER மிகச்சிறந்த நாவல் அதுவும் Bird என்ற முதற்சொல்லில் தான் துவங்குகிறது. ஆனால் அது பறவையைக் குறிக்கவில்லை. ஒரு மனிதனின் பெயராக விளங்குகிறது.

சிறப்புக் கவனம் வேண்டுகிற குழந்தைகளின் மௌனம் என்பது தனித்துவமான மொழி. அதைப் புரிந்து கொண்ட பெற்றோர்களே அந்தப் பிள்ளைகளைச் சரியாக வளர்க்கிறார்கள். உருவாக்குகிறார்கள். 

நோயிலிருந்து குணப்படுத்த மருத்துவம் மட்டுமே உதவிசெய்வதில்லை. இயற்கையின் வழியிலும் நம்பிக்கையான சொற்களின் மூலமும் மீட்சியை உருவாக்க முடியும். அதைத் தான் தன்னுடைய படைப்புகளில் கென்ஸாபுரோ ஒயி செய்திருக்கிறார்.

••

0Shares
0