Football is the love of form. A spectacle that scarcely leaves a trace in the memory and does not enrich or impoverish knowledge. This is its appeal : it is exciting and empty. -Mario Vargas Llosa
நேற்று உலகப்கோப்பை கால்பந்தாட்டத்தில் ஜெர்மனியின் ரசிகனாக விளையாட்டை ரசித்து கொண்டிருந்தேன். அற்புதமான போட்டியது. விளையாட்டு முடிந்த பிறகும் மனதில் பந்தை துரத்தி ஒடிக்கொண்டேயிருக்கிறார்கள். நான் தொலைக்காட்சி பார்ப்பதே அபூர்வம். அதை அணைத்துவைத்துவிட்டு பலமணி நேரம் என்னால் பார்த்துக் கொண்டிருக்கும். ஒடிக்கொண்டிருக்கும் போது எதிரில் உட்கார முடியாது.
கால்பந்தாட்டம் பார்வையாளர்களின் நரம்புகளை முறுக்கேற்றுகிறது. ஒரு கோல் போட்டு முடிந்து திரும்பும் வீரனுக்காக குரல் கொடுக்க வேண்டும் போல உணர்ச்சியேற்றுகிறது. அரங்கில் உள்ள பார்வையாளர்களின் எழுச்சி தான் விளையாட்டின் உத்வேகம்.
பார்க்கப் பார்க்க நமது இருப்பிடம் மறைந்து கால்பந்தின் பின்னாடியே கண்கள் ஒடுகின்றன. பந்தின் விதி மிகவும் புதிரானது. அது யாருடைய கால்களில் எப்போதும் சுழன்று கோலாகப்போகிறது என்று யார் அறிவார்கள். பந்தைக் கோல் போஸ்டின் நுனிவரை கொண்டுபோய்விடும் வீரன் அது தடுக்கபடும்போது அடையும் துயரம் எழுத்தில் இதுவரை வராத ஒன்று.
கால்பந்து மைதானம் உணர்ச்சிகளின் மிதமிஞ்சிய வெளிப்பாட்டு களமாக உள்ளது.பந்தை முன்னெடுத்துச் செல்பவனை உலகமே பார்த்து கொண்டிருக்கிறது. மைதானத்தில் இருந்த பார்வையாளர்களில் ஒரு பெண் கண்களை மூடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். பாவம் கடவுள் இந்நேரம் இதே பதைபதைப்போடு கால்பந்தாட்டம் பார்த்துக் கொண்டிருப்பார் என்று அறியாமல்.
கடிகாரத்தின் துடிப்பு மைதானத்தின் இதயநாடியைப் போல ஒலிக்கிறது. நிமிசங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை விளையாட்டினை தவிர வேறு எங்குமே நாம் உணர்வதில்லை.
நம் ஊரில் கால்பந்து போட்டிகள் தொலைக்காட்சியில் பார்க்கபடுவதில் நூறில் ஒரு பங்கு கூட நேரில் பார்க்கபடுவதுமில்லை. விளையாடப்படுவதுமில்லை. எல்லா நட்சத்திர விடுதிகளின் பாரிலும் புட்பால் மேட்ச் பார்ப்பதற்கு என்றே தனித்த இடம் அமைந்திருக்கிறார்கள். குடிக்காதவர்களால் மேட்ச் பார்க்க முடியாது என்று நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை.
தமிழில் விளையாட்டினை முன்வைத்து எழுதப்பட்ட நாவல்கள், சிறுகதைகள் என்ன இருக்கிறது என்று யோசித்து கொண்டேயிருந்தேன். அப்படி எதையும் நான் வாசித்தாக நினைவிலே இல்லை. இவ்வளவு தமிழர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இதுவரை கிரிக்கெட் புலத்தில் ஏதாவது நல்ல நாவல் எழுதப்பட்டிருக்கிறதா என்ன?
சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.நாவலில் புட்பால் விளையாடுவது பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. ஜே.ஜே. ஆல்பெர் காம்யூவின் சாயல் கொண்டவன் என்பது காரணமாக இருக்ககூடும். சுந்தர ராமசாமி கால்பந்தாட்டம் பற்றி சிறுகதை எழுதியிருக்கிறார். ஆதவன் கதைகளில் கிரிக்கெட் ஆடுவது அதிகம் சிலாகிக்கபடுகிறது.சுஜாதா கிரிக்கெட் பற்றி ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அது மிக சுமாராகவே இருந்தது. கபடி, சிலம்பாட்டம், பராம்பரிய விளையாட்டுகள் பற்றியும் கூட யாரும் தனித்து நாவல் எழுதியிருப்பார்களா என்பது சந்தேகமே. ஜல்லிகட்டு பற்றி சி.சு. செல்லப்பா வாடிவாசல் எழுதியிருக்கிறார். அது அற்புதமான நாவல்.
ஆல்பெர் காம்யூ கால்பந்தாட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். சிறுவயதில் கால்பந்து அணியில் சேர்ந்து ஆடியிருக்கிறார். காசநோய் காரணமாக அவரால் இளைஞனாக இருந்த போது விளையாட முடியாமல் போயிருக்கிறது. ஆனால் அவர் கால்பந்தை தீவிரமாக நேசித்தார். நாடகம் பார்ப்பதை விட கால்பந்தை காண்பது மேலானது என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. கால்பந்தை அவர் குறீடாகவே கண்டார். சேர்ந்து ஆடுவது. பந்தின் பின்னால் ஒடுவது. பந்து சேர வேண்டிய இலக்கு. மைதானத்தின் மையம் என்று அவர் கால்பந்தாட்டத்தின் வழியே வாழ்க்கை குறித்த நுண்ணிய பார்வைகளை வெளிப்படுத்தினார். அவரது அந்நியன் நாவலில் (The Stranger) கால்பந்தாட்டரசிகர்களின் மனநிலை பற்றிய குறிப்பு வருகிறது.
ஜார்ஜ் ஆர்வெலும் விளாதிமிர் நபகோவ் இருவரும் கால்பந்தாட்டத்தில் கோல்கீப்பராக விளையாடியிருக்கிறார்கள். அவர்களுக்கு கால்பந்தாட்டம் மீது தீவிர ஈடுபாடு இருந்தது. கால்பந்து என்பது ஒரு விளையாட்டில்லை. அது ஒரு சடங்கு. ஒரு திருவிழா. அது வாழ்வின் அதி உற்சாகமான தருணம் என்கிறார் உம்பர்த்தோ ஈகோ.
மலையாளத்தில் என்.எஸ். மாதவன் ஹிகுடா என்ற அற்புதமான சிறுகதை எழுதியிருக்கிறார். தமிழில் அது மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அது கால்பந்தாட்டம் பற்றியது. ஹிகுடா கொலம்பிய அணியின் கோல்கீப்பர். scorpionkick என்ற உதைமுறையை உருவாக்கியவர் இவரே.
மிகுந்த உணர்ச்சிவசப்படும் இவர் கடத்தல் வழக்கு ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைப்பட்டவர். முன்கோபி. ஆனால் விளையாட்டில் அவர் கில்லாடி. அதை வைத்து என்.எஸ்.மாதவன் அற்புதமான சிறுகதையை எழுதியிருக்கிறார்.
ஹாலிவுட்டில் கால்பந்தாட்டம் மற்றும் ரக்பி பற்றி ஐம்பதுக்கும் அதிகமான படங்கள் வெளியாகி உள்ளன. அநேகமாக இரண்டு வருசங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு புட்பால் படம் மிக அதிகமாக பேசப்பட்டு வெற்றிபெறுவது வழக்கம். சமீபத்தைய உதாரணமான ரக்பி திரைப்படம் Invictus . மார்க்கென் ப்ரீமெனுக்காக அவசியம் காண வேண்டிய படமது.