எழுத்தின் நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கான கட்டுரைகள், நூல்கள் தமிழில் மிகக் குறைவாகவே எழுதப்பட்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் நிறைய நூல்கள் உள்ளன. ஆனால் பெருமளவு பல்கலைகழகப் பேராசிரியர்கள் எழுதியது. வகுப்பறைப் பாடமாகவோ, அல்லது பயிற்சிமுகாமிற்கான கையேடு போலவோ தயாரிக்கபட்டவை.
தனது படைப்புகள் மற்றும் படைப்பின் நுட்பங்கள் பற்றி எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களே நாம் வாசிக்க வேண்டியவை. இதே பொருளில் அவர்கள் ஆற்றிய உரைகளும் முக்கியமானதே.
ஹார்வர்ட் பல்கலைகழகத்தால் நடத்தப்படும் NORTON LECTURES வரிசையில் T .S. Eliot, Jorge Luis Borges, Czeslaw Milosz, Nadine Gordimer, Orhan Pamuk ஆற்றிய உரைகள் சிறப்பானவை. இதில் சில தனிநூலாகவும் வெளியாகியுள்ளன.
குறிப்பாக ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் கவிதை குறித்து ஆறு உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். இதன் எழுத்துவடிவம் This Craft of Verse என்ற நூலாக வந்துள்ளது. இளம்கவிஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். கவிதையை ஆழ்ந்து புரிந்து கொள்வதற்கும், அதன் சிறப்பியல்புகளை அறிந்து கொள்வதற்கும் இதனை இலக்கிய வாசகர்களும் வாசிக்க வேண்டும்.
இந்த உரையின் ஆடியோ தொகுப்பு இணையத்தில் கிடைக்கிறது. அதைக் கேட்கும் போது போர்ஹெஸின் வகுப்பறையில் நாமே அமர்ந்திருப்பதைப் போல உணரலாம்.
1985ம் ஆண்டு NORTON LECTURES வரிசையில் ஆறு உரைகளை நிகழ்த்துவதற்காக இதாலோ கால்வினோ அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் உரையாற்றும் முன்பாக அவர் காலமாகிவிட்டதால் உரைக்குறிப்புகள் Six Memos for the Next Millennium என்ற நூலாக வெளியாகியுள்ளது.
நாவலின் எதிர்காலம் என்ற பொதுதலைப்பில் இந்த உரைகளைத் தயாரித்திருக்கிறார். ஆறாவது உரை தயாரிக்கப்படவில்லை. ஆனால் எதைப்பற்றிப் பேச விரும்பினார் என்பதை நூலின் முன்னுரையில் காண முடிகிறது
புதிய நூற்றாண்டில் நாவல்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதைப் பற்றிய அவரது எண்ணங்களே இந்த உரைகளின் அடித்தளம். உண்மையில் நவீனத்துவத்திலிருந்து பின்நவீனத்துவத்தை நோக்கிய நகர்வையும். அதன் தேவையினையும் கால்வினோ உணர்ந்திருக்கிறார்.
கால்வினோ தனது உரைக்கான தயாரிப்பில் பெரும்பாலும் செவ்வியல் படைப்புகள் மற்றும் ஐரோப்பிய இலக்கியங்களை உதாரணமாகக் காட்டுகிறார். ஆனால் அவர் கவனப்படுத்தும் எழுத்தின் நுட்பங்கள் முக்கியமானவை.
LIGHTNESS (லேசான தன்மை), Quickness (விரைவுத்தன்மை), Exactitude (துல்லியம்) visibility (தெரிவு நிலை) Multiplicity (பன்முகத்தன்மை) consistency (நிலைத்தன்மை) என ஆறு கருப்பொருட்களைத் தேர்வு செய்திருக்கிறார். இவை ஒரு படைப்பாளிக்கு ஏன் தேவை என்பதை விரிவாக விளக்குகிறார்.
கால்வினோவின் ஆழ்ந்துபரந்த வாசிப்பு மற்றும் இலக்கிய வடிவங்கள் குறித்த புரிதல் வியப்பளிக்கிறது.
லேசான தன்மை என்பதை மேலோட்டமாக என்று புரிந்து கொண்டுவிடக்கூடாது, இது உணர்வின், புரிதலின், வெளிப்பாட்டின் இலகுத்தன்மை பற்றியது. பெரியதோ, சிறியதோ எல்லா நிகழ்வுகளும் உணர்வுகளும் அதற்கான எடையைக் கொண்டிருக்கின்றன. நினைவின் வழியே அவை பகிரப்படும் போது சில வேளை எடையற்றும் பல வேளை கூடுதல் எடையோடும் வெளிப்படுகின்றன. ஒரு வகையில் லேசானதன்மை என்பதை வாழ்க்கை குறித்த அறிவியலின் பார்வை என்று சொல்லலாம்.
துல்லியமே படைப்பிற்கான நம்பகத்தன்மையை உருவாக்குகிறது. செய்திகள் தரும் துல்லியம் வேறு. படைப்பில் வெளிப்படும் துல்லியம் வேறு. படைப்பில் துல்லியம் என்பது உணர்வாலும், உண்மையாலும், நிகழ்வு வெளிப்படும்முறையாலும் சாத்தியமாகிறது. பலநேரம் இவை யாவும் ஒன்றிணைந்தும் வெளிப்படுகின்றன. வாசகன் இந்தத் துல்லியத்தைக் கண்டு வியப்படைகிறான். நெருக்கம் கொள்கிறான்.
வேகம், அல்லது விரைவுத்தன்மை படைப்பில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பது முக்கியமானது. செயற்கையாக ஒரு விரைவுதன்மையைப் பொழுதுபோக்குப் படைப்புகள் உருவாக்குகின்றன. இலக்கியத்தில் விரைவுதன்மை என்பது காலம் மற்றும் வெளியை கையாளும் முறையில் உருவாகிறது.
இந்த நூலில் கால்வினோ இத்தாலிய நாட்டுபுறக்கதைகளிலிருந்து தான் கற்றுக் கொண்ட நுட்பங்களைப் பற்றியும் கூறுகிறார். அவரே இத்தாலிய நாட்டுப்புறக்கதைகளைத் தொகுத்திருக்கிறார். கதை சொல்லப்படும் முறையே அவரைக் கவருகின்றது. நாட்டுப்புறக்கதைகளில் மாயமும் யதார்த்தமும் இணைந்தே வெளிப்படுகின்றன.
கால்வினோ தனது உரையொன்றின் முடிவில் ஒரு சீனக்கதையினைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். அது தத்துவவாதியும் ஓவியருமான சுவாங் சூவைப் பற்றியது.
சீன அரசன் ஒரு நாள் சுவாங் சூவிடம் நண்டு ஒன்றை வரையச் சொன்னான். அதற்கு அவர் தனக்கு ஐந்து ஆண்டுகள், ஒரு வீடு மற்றும் பன்னிரண்டு வேலைக்காரர்கள் தேவை என்று பதிலளித்தார்.
மன்னரும் அவர் கேட்டவற்றைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தார். ஐந்து வருடங்கள் கடந்தும் சுவாங் சூ நண்டை வரையவில்லை.
இது பற்றிக் கேட்டதற்கு “எனக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் தேவை,” என்று பதிலளித்தார். அதையும் மன்னர் ஏற்றுக் கொண்டார்.
பத்து வருடங்களின் முடிவில், சுவாங் சூ தனது தூரிகையை எடுத்து, ஒரு நொடியில், ஒரே வீச்சில், இதுவரை எவரும் கண்டிராத படி நண்டு ஒன்றை ஒவியமாக வரைந்து முடித்தார்.
இக்கதை வெளிப்பாட்டின் வேகம், மற்றும் படைப்பின் உச்சநிலையை வெளிப்படுத்துகிறது. சீனாவில் தேர்ந்த மாட்டுத்தரகர்கள் சந்தையில் மாடு விற்கப் போகும் போது மாட்டின் எடையைக் கண்ணால் பார்த்தே சொல்லிவிடுவார்களாம். அதுவும் துல்லியமாக. அது போன்ற வெளிப்பாட்டினையே எழுத்தும் வேண்டுகிறது.
கால்வினோவின் புலப்படாத நகரங்களை வாசிக்கும் போது அவர் முன்வைக்கும் எழுத்தின் நுட்பங்கள் எப்படி அவரது எழுத்தில் வெளிப்படுகின்றன என்பதை அறிய முடிகிறது.
இலக்கியத்தின் எல்லையற்ற ஆற்றல்களையும், அதன் எதிர்காலத்தையும் பற்றிய கனவுகளுடன் இந்த உரையை நிகழ்த்த கால்வினோ விரும்பியிருக்கிறார். ஆனால் காலம் அதை அனுமதிக்கவில்லை. எழுத்தின் நுட்பங்களில் ஒன்றாக இல்லாமல் விதியாக அமைவது, காலம் நம்மை எழுத அனுமதிக்க வேண்டும் என்பதே.