கால் முளைத்த கதைகள்

விமர்சனம்
••
தமிழக அரசின் புதிய பாடநூலில் கால்முளைத்த கதைகள் தொகுப்பிலிருந்து ஒரு கதை இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் நிறையப் பேர் இந்த நூலை ஆர்வமாக வாசித்து விமர்சனம் எழுதி வருகிறார்கள். இணையத்தில் நான் படித்த ஒரு விமர்சனத்தை பகிர்ந்து தருகிறேன்
•••
ஆந்தைக்குத் தூங்குவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஆகவே அது பகல் முழுவதும் தூங்கிக் கொண்டேயிருக்கும்.
ஒரு நாள் ஒரு ஆந்தை மரத்தில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தது.
அப்போது மரங்கொத்தி ஒன்று அந்த மரத்தை கொத்தத் துவங்கியது. இதனால் தூக்கம் கலைந்த ஆந்தை கோபத்துடன் ஏன் மரத்தைக் கொத்துகிறாய் என்று கேட்டது.
மரங்கொத்தியோ நான் எனது பசிக்கு மரத்தைச் சாப்பிடுகிறேன். நீ ஏன் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கிறாய் என்று கேட்டது.
பதில் சொல்வதற்குள் ஆந்தை கொட்டாவி விட்டுக் கொண்டே மறுபடியும் தூங்கியது.
மறுநாள் அந்த மரத்தில் ஒரு தூக்கணாங் குருவி ஒன்று கூடு கட்டியது. அதன் சப்தம் கேட்டு விழித்த ஆந்தை  யார் நீ… எதற்காகக் கூடு கட்டுகிறாய் என்று கேட்டது.
குளிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வீடு கட்டுகிறேன் என்றது குருவி.
ஆந்தையோ சலிப்பாக  என்னை குளிர் ஒன்றும் செய்யாது நான் கூடு கட்டத் தேவையில்லை என்று சொல்லிவிட்டு தூங்கிவிட்டது.
குளிர்காலம் வந்தது. நட்சத்திரங்கள் கூட நடுங்கத் துவங்கின. மரங்களில் இருந்த கூடுகளில் பறவைகள் அடைந்து கொண்டு விட்டன.
ஆந்தையோ குளிரில் நடுங்கியது. கூடு கட்டுவது எப்படி என்றே தெரியாமல் போய்விட்டோமே என்று கலங்கியது. பனி நாளுக்கு நாள் அதிகமாகி ஆந்தையை வாட்டி எடுத்து
எப்படியாவது ஒரு கூடு கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆந்தை முடிவு செய்தது.
இதற்காக சுள்ளிகளைப் பொறுக்கி வந்து மரத்தில் அடுக்கியது. அதற்குள் சோம்பேறித்தனம் அதிகமாகிவிட திரும்பவும் தூங்கத் துவங்கிவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஆந்தையால் கூட்டைக் கட்ட முடியவில்லை.
இது தென் ஆப்பிரிக்காவின் ஒரு பழங்குடியினத்தவரின் கதை.
இதுபோல நெல் எப்படி உருவானது?
நாய் ஏன் வாலை ஆட்டுகிறது?
வானவில் ஏன் தோன்றுகிறது
பெண்களுக்கு ஏன் தாடி வளர்வதில்லை?
என பல்வேறு நாடுகளில் சொல்லப்படும் 80 கதைகளைத் தேர்வு செய்து மொழிபெயர்த்து ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார் எஸ். ராமகிருஷ்ணன்,
உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினத்தவர்கள் சொன்ன கதைகளிலிருந்து இந்த தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்காக எழுதப்பட்ட நூலாக சொல்லப்பட்டாலும் அனைவரும் படிக்கும்படி மிகவும் சுவாரசியமாக இருக்கிறது
குழந்தைகளுடைய மகிழ்ச்சிக்காகத் தன் பங்களிப்பை செய்திருக்கின்ற எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் நாமெல்லாம் நன்றி சொல்லலாமே
நன்றி :
https://tamilhelp.wordpress.com
புத்தகம் தேவைப்படுகிறவர்கள் தொடர்புக்கு
தேசாந்திரி பதிப்பகம்
கால் முளைத்த கதைகள். விலை ரூ 100
0Shares
0