கிம்மின் சாகசங்கள்.

இந்தியாவைக் கதைக் களமாகக் கொண்டு ஹாலிவுட்டில் வெளியான திரைப்படங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பான்மை படங்கள் இந்தியாவைப் பற்றிய மோசமான சித்திரத்தையே முன்வைக்கின்றன. பிரிட்டிஷ் படங்களில் இந்தியாவினை ஆண்ட வெள்ளைக்காரர்களின் பெருமை மற்றும் சாகசங்கள் வியந்து போற்றப்படுகின்றன. ஹாலிவுட் படங்களிலும் இந்தியா என்பது காடுகளும் வனவிலங்கும் சாமியார்களும் ஏமாற்றுக்காரர்களும் கொண்ட ஒரு தேசம். அந்தத் தேசத்தை நல்வழிப்படுத்த வெள்ளைக்காரர்கள் மிகவும் கஷ்டப்பட்டார் என்ற பிம்பமே முன்னெடுக்கப்படுகிறது.

பிரெஞ்சு இயக்குநர்களால் உருவாக்கப்பட்ட இந்தியாவைப் பற்றிய படங்களே இந்தியாவின் உண்மையான முகத்தை அடையாளம் காட்டுகின்றன. குறிப்பாக Jean Renoir இயக்கிய The River எத்தனை அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

எழுத்தாளரும் கவிஞருமான ருட்யார்ட் கிப்ளிங்கின் கிம் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கிம் என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்தேன். 1950ல் எடுக்கபட்ட படம். விக்டர் சாவில் இயக்கியிருக்கிறார்.

கிப்ளிங் இந்தியாவில் பிறந்தவர். அவரது தந்தை ஜான் லாக்வுட் கிப்ளிங் கலைகள் கற்பிக்கும் பேராசிரியராக வேலை செய்தார். கிப்ளிங்கின் குடும்பம் மும்பையில் வசித்தது. 1875ல் ஜான் லாக்வுட் கிப்ளிங் புதிதாக நிறுவப்பட்ட மாயோ ஸ்கூல் ஆஃப் ஆர்ட் மற்றும் லாகூர் அருங்காட்சியகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் அவர்கள் லாகூருக்கு இடம் பெயர்ந்தார்கள். கிப்ளிங் அங்கே ஆறு ஆண்டுகள் செய்தியாளராகப் பணியாற்றியிருக்கிறார். அந்த நாட்களில் அவர் எழுதிய கட்டுரைகளுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாகப் பின்பு அலகாபாத்திலுள்ள பயோனியர் இதழில் பணியாற்ற அழைக்கப்பட்டார்.

1888 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு எழுத்தாளராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக் கிப்ளிங் இங்கிலாந்து பயணத்தை மேற்கொண்டார். அங்கிருந்தபடியே தனது எழுத்துப்பணியைத் தொடர்ந்தார். இந்திய வாழ்க்கை பற்றிய அவரது கதைகள் பிரிட்டனில் புகழ்பெற்றன. இந்திய வாழ்க்கையைப் பற்றிக் கிப்ளிங் எழுதியவை பெரும்பாலும் சுவாரஸ்யத்திற்காக உருவாக்கப்பட்ட பொய்களே. இந்தியர்கள் குறித்த அவரது பார்வை மரபான பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் எண்ணத்தையே பிரதிபலித்தது. வெள்ளைக்காரர்களை இந்தியர்களை மீட்க வந்த தேவதூதர்கள் போலவே கிப்ளிங் எழுதியிருக்கிறார்.

கிம் என்ற கிப்ளிங்கின் நாவல் லாகூரில் அநாதைச் சிறுவனாகச் சுற்றி அலையும் கிம்மின் கதையை விவரிக்கிறது. 13 வயதான கிம் தன் கழுத்தில் சிறிய தாயத்து ஒன்றை அணிந்திருக்கிறான். அதில் அவன் யார் என்பதன் ரகசியம் அடங்கியிருக்கிறது.

ஆப்கானிய குதிரை வியாபாரியான மஹபூப் அலி என்ற வணிகனுக்குக் கிம் உதவிகள் செய்கிறான். ஒரு நாள் கிம் திபெத்தைச் சேர்ந்த வயதான புத்த பிக்கு ஒருவரைச் சந்திக்கிறான். அவர் ரிவர் ஆப் ஆரோ எனப்படும் புத்தரின் அம்பு பாய்ந்த இடத்திலிருந்து உருவான நதியைத் தேடி அலைந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார். அது நித்தியத்தின் நதி என்றும் அதில் குளித்தால் நமது பாவங்கள் யாவும் கரைந்துபோய்விடும் என்றும் லாமா கூறுகிறார்

கைபர்பாஸ் வழியாக ரஷ்யர்கள் இந்தியா மீது தாக்குதலைத் நடத்தத் திட்டமிடுகிறார்கள்  என்பதைப் பற்றி அறிந்த மஹபூப் அலி . இந்தத் தகவலை கிம் மூலமாகக் பிரிட்டிஷ்-இந்தியா ரகசிய சேவையின் தலைவர் கர்னல் கிரெய்டனுக்கு அனுப்பி வைக்கிறார்.

லாமாவின் சீடனாக இணைந்து கொள்ளும் கிம் அவருடன் நதியைத் தேடிப் பயணிக்கிறான். போகும் ஊர்களில் லாமாவிற்காக உணவு கேட்டுக் கிம் யாசிக்கிறான். எவரும் உணவளிக்க முன்வருவதில்லை. உடனே கிம் பொய் சொல்லி தந்திரம் செய்து உணவைப் பெறுகிறான்.

ஒரு இடத்தில் கருநாகத்தைக் கிம் கொல்ல முற்படும் போது லாமா தடுக்கிறார். அந்தப் பாம்பினை நாம் ஏன் கொல்லவேண்டும், அதற்கும் வாழ உரிமையிருக்கிறது என்கிறார். லாமாவின் வழிகாட்டுதல்கள் கிம்மை மாற்றுகின்றன.

லாமா அவனை மிகவும் நேசிக்கிறார். பயணத்தின் நடுவே கர்னல் கிரெய்டனிடம் ரகசியத் தகவலை தெரிவிக்கிறான் கிம். யுத்தம் உருவாகப்போகிறது என்ற உண்மை அவனுக்குத் தெரியவருகிறது.

இந்தச் சூழலில் ஒரு படைமுகாமில் வைத்துக் கிம் ஒரு ஐரிஷ் சிப்பாயின் மகன் என்ற உண்மை தெரிய வருகிறது. கிம்பல் ஓ’ஹாரா என்ற உண்மை பெயருடன் அவன் வெள்ளையர்கள் படிக்கும் பள்ளியில் சேர்க்கப்படுகிறான். அதற்கு எவ்வாறு லாமா உதவி செய்கிறார், சதிவலையின் பின்னலுக்குள் கிம் எப்படி மாட்டிக் கொள்கிறான் என்பதையும் கதை விவரிக்கிறது.

ரயிலில் முதன்முறையாக ஏறமுற்படும் லாமா அதைச் சாத்தனின் கருவி என்றே நினைக்கிறார். படம் முழுவதும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியர்களை மீட்க வந்த தெய்வங்களாகக் காட்டப்படுகிறார்கள்.

மஹபூப் அலியாக எரோல் பிளின் நடித்திருக்கிறார். அவரது வழக்கமான ஸ்டைல் மற்றும் வாள் சண்டைகள் எதுவும் இதில் கிடையாது. ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச பகுதிகளில் படமாக்கியிருக்கிறார்கள்.

கிம்மை விடவும் படத்தில் வரும் லாமா தான் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறார். அவரது தேடல் நிஜமானது. அவர் கிம் மீது காட்டும் நேசமும் அவனுக்காகச் செய்யும் உதவிகளும் சிறப்பாகக் காட்டப்படுகின்றன. குறிப்பாகக் கிம் பள்ளியில் சேர்க்கப்படுவதற்காக லக்னோ வருவதற்கு முன்பாக லாமா வந்து அவனுக்காக ஒன்றரை நாட்கள் காத்திருப்பது மறக்கமுடியாத காட்சி.

படம் முழுவதும் இந்தியச் சிறுவனைப் போலக் கிம் நடந்து கொள்ள முயல்கிறான். ஆனால் அவன் ஒரு போதும் இந்திய சிறுவன் ஆவதேயில்லை. அதைவிடவும் இந்தியர்களை விடவும் சாகிப்பின் பிள்ளைகள் மேம்பட்டவர்கள் என்றே எண்ணமே கிப்ளிங்கிடம் காணப்படுகிறது. இந்தப் படத்தில் கிம் ஒரு வெள்ளைக்காரன் என்பதற்கு அவனது தோலின் நிறம் வெண்மையாக இருக்கிறது என்பதே காரணமாகச் சொல்லப்படுகிறது. அவன் மாறுவேடம் போட்டுக் கொள்வது போலவே இந்தியச் சிறுவனாக மாறுகிறான். கிம்மிடம் சிறுவர்களுக்கான அசலான வெளிப்பாடு எதுவுமில்லை. அவன் பெரியவர்களைப் போலவே நடந்து கொள்கிறான். சுருட்டுப் பிடிக்கிறான். ஏமாற்றுகிறான். அவன் வயதை ஒத்த இந்திய சிறுவனை விடவும் அவன் உயர்வானவன் என்ற பிம்பமே உருவாக்கபடுகிறது.

இதே போல யுத்த காலத்தில் உளவாளியாகச் செயல்பட்ட இவானின் கதையைத் தார்கோவெஸ்கி Ivan’s Childhood எனப்படமாக்கியிருக்கிறார். மிகச்சிறந்த படமது. தார்க்கோவெஸ்கி மாபெரும் கலைப்படைப்பாக அந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார். ஆனால் ஹாலிவுட் மசாலாவாக மட்டுமே கிம்மை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமாக இருந்த ஜெனரல் ஓ டயருக்கு இங்கிலாந்தில் நிதி திரட்டிக் கொடுத்துக் கௌரவித்தார்கள். அதற்கு நிதி வழங்கியவர்களில் ஒருவர் கிப்ளிங். எழுத்தாளராக இருந்த போதும் அவர் பிரிட்டிஷ் விசுவாசியாகவே நடந்து கொண்டார். இந்தியாவில் பிறந்து வளர்ந்த போதும் இந்தியாவின் மக்களையும் மனதையும் அவர் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

You should believe only your eyes…and not the voices of others என்று படத்தில் ஒரு வசனம் இடம்பெறுகிறது. அது கிப்ளிங் காட்டிய இந்தியாவிற்கும் பொருத்தமான ஒன்றே.

••

••

.

0Shares
0