கிராஸ்தமியின் நாய்

பீட்டர் புரூகல் வரைந்த “தி ஹண்டர்ஸ் இன் தி ஸ்னோ,” உலகப்புகழ் பெற்ற ஓவியம். இந்த ஓவியத்தின் தனிச்சிறப்பு வேட்டைக்காரர்கள் வீடு திரும்பும் பனிக்காலக் காட்சியை மிகத்துல்லியமாகப் புரூகல் வரைந்திருப்பதே.

களைப்புடன் வீடு திரும்பும் வேட்டைக்காரர்கள் ஒரு புறம், மறுபுறம் தொலைதூரப் பனி மலை. அதன் அடிவாரக் கிராமத்துச் சிறுவர்களின் விளையாட்டு. விவசாயிகளின் வேலைகள். மரக்கிளையில் அமர்ந்துள்ள காகம்.

மூன்று வேட்டைக்காரர்களும் சோர்வடைந்து வீடு திரும்புகிறார்கள். அவர்களில் ஒருவரிடம் வேட்டையாடிய நரி காணப்படுகிறது. நாய்களும் சோர்ந்திருக்கின்றன.

நிக்கலாஸ் ஜோங்ஷெக் என்ற பிரபுவிற்காகப் புரூகல் பனிரெண்டு மாதங்களையும் பனிரெண்டு ஓவியங்களாக வரைந்து தருவதாக ஒத்துக் கொண்டிருந்தார். அந்த வரிசையில் ஜனவரி மாதக்காட்சியே இந்த ஒவியம்.

இன்று புரூகல் வரைந்த எல்லா ஓவியங்களும் கிடைக்கவில்லை. ஐந்து ஓவியங்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளன. ஜனவரி மாதத்தின் பனிக்காலத்தை எத்தனை அழகாக வரைந்திருக்கிறார் புரூகல்.

ஒரு குளிர்கால நாளின் பின் மதியமே இந்த ஒவியக்காட்சி. தூரத்து மலையின் அழகு நம்மை மயக்குகிறது.

நெதர்லாந்தின் புகழ்பெற்ற நிலக்காட்சி ஓவியராகக் கொண்டாடப்பட்டவர் புரூகல். இந்த ஓவியம் அதற்கான சாட்சியம் என்றே சொல்வேன்.

ஓவியத்தைக் காணும் போது குளிரின் அடர்த்தியை நாம் உணருகிறோம். காகங்களின் சிறகடிப்பையும், அதன் சிறகடிக்கும் ஓசையும் கூடக் கேட்கிறோம். தூரத்து மனிதர்களின் காலடிச்சப்தம் உறைந்து போயுள்ளது. நாய்களின் முகம் துல்லியமாக வரையப்படவில்லை. ஆனால் நாய்களின் உடல் அவை வேட்டையாடி திரும்பிய களைப்பில் இருப்பதை உணர்த்துகின்றன.

நாய்களின் வால்களைப் பாருங்கள். அவை தாழ்ந்திருக்கின்றன. முயலின் கால்தடம் போல ஒன்று காணப்படுகிறது. ஒருவேளை முயல் பனியில் தப்பியோடியிருக்கக் கூடும். நெதர்லாந்தின் பனிக்காலக்காட்சியை ஒவியம் முழுமையாகச் சித்தரிக்கிறது.

மரங்களில் இலைகளே இல்லை. கிளைகளில் பனிபடிந்திருக்கிறது. வேட்டைக்காரர்களின் அருகில் நெருப்பில் சோளம் சுடுகிறவர்கள் வேட்டைக்காரர்களைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. தொலைவில் பனிச்சறுக்கு ஆடும் சிறுவர்களிடம் தான் எவ்வளவு உற்சாகம்.

விரும்பியது கிடைக்காமல் தான் வேட்டைக்காரர்கள் திரும்புகிறார்கள். அவர்கள் கையிலுள்ள குத்தீட்டி பெரிய வேட்டையைத் தேடி அவர்கள் போனதை அடையாளப்படுத்துகிறது.

இந்த ஓவியத்தின் நகல் பிரதி ஒன்றை என் வீட்டின் ஹாலில் மாட்டி வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இந்த ஓவியத்தை பத்து நிமிடமாவது பார்ப்பேன். பனிக்காட்சியின் மீதான வியப்பு மாறவேயில்லை.

இந்த ஓவியத்தை ரஷ்ய இயக்குனர் ஆந்த்ரே தார்கோவெஸ்கி தனது Solaris படத்தில் அழியாத நினைவின் அடையாளமாகப் பயன்படுத்தியிருக்கிறார், இதே ஓவியத்தை Lars von Trier தனது Melancholia படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்.

சமீபத்தில் ஈரானிய இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியின் கடைசிப் படமான 24 frames படத்தில் முதல் பிரேமாக இவ்வோவியத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். இப்படத்தின் அற்புதம் புரூகேலின் இந்த ஒவியத்தை உயிர் பெறச்செய்ததே.

ஒவியச்சட்டகத்தின் மீது பனிபெய்கிறது. காற்றில் இலவம்பஞ்சு பறப்பது போலப் பனித்துகள் பறக்கிறது. ஓவியத்தினுள் ஒரு நாய் நடந்து போகிறது. மணிசப்தத்துடன் மாடுகள் கடந்து போகின்றன. காகம் சப்தமிடுகிறது. நாய் மரத்தில் மூத்திரம் பெய்கிறது.

Cinema is truth at 24 frames a second, என்றார் பிரெஞ்சு இயக்குனர் கோடார்ட். அப்பாஸ் கிராஸ்தமியோ இயற்கையின் பேருண்மையைத் தனது கேமிராவின் வழியே பதிவு செய்திருப்பதாகக் கூறுகிறார். கிராஸ்தமி படத்தில் மனிதர்களில்லை. மான்களும், பனிக்காற்றும், பறவைகளும் மரங்களும் நாய்களுமே காணப்படுகின்றன.

மிகுந்த கவித்துவமாக இந்தப் படத்தொகுப்பை உருவாக்கியிருக்கிறார். அனிமேஷன் தொழிற்நுட்பத்தின் வழியே புரூகேலின் ஓவியத்தினை உயிர்பெறச் செய்திருப்பது உணர்வெழுச்சி தருகிறது

ஒவியம் என்பது ஒரு ஷாட். இந்த ஷாட்டிற்கு முன்பும் பின்பும் என்ன ஷாட்டுகள் இருந்திருக்கக் கூடும் என்ற கற்பனையே தன்னை இப்படம் உருவாக்கத் தூண்டியது என்கிறார் அப்பாஸ் கிராஸ்தமி.

அப்பாஸ் கிராஸ்தமி திரைப்பட இயக்குனர் மட்டுமில்லை. அவர் சிறந்த ஒவியர். கவிஞர், புகைப்படக்கலைஞர், கலை இயக்குநர்.

கிராஸ்தமியின் கவிதைகள் Walking with the Wind என்ற பெயரில் வெளியாகியுள்ளன. 24 frames படத்திலுள்ள புகைப்படங்கள் யாவும் கிராஸ்தமி எடுத்தவையே.

1940-ல் டெஹ்ரானில் பிறந்த அப்பாஸ் கிராஸ்தமி ஓவியராகவே வாழ்க்கையைத் துவங்கினார். பின்பு கிராபிக் டிசைனராகத் திரைத்துறையில் பணியாற்றினார். திரைப்படங்களின் டைட்டில் உருவாக்குவதில் அதிக விருப்பம் கொண்டிருந்தார். Saul Bass என்ற அமெரிக்கக் கிராபிக் டிசைனர் வரைந்த ஹாலிவுட் திரைப்படங்களின் டைட்டில்கள் மீது அவருக்கு மிகுந்த விருப்பமிருந்தது. அது போன்ற கலைவெளிப்பாட்டினை முன்னெடுக்கவே கிராஸ்தமியும் முயன்றார்

அவரது முதல் படம் bread and alley. அவரது சகோதரர்கள் எழுதிய திரைக்கதையைப் படமாக்கினார். அதிலும் முக்கியப் பாத்திரமாக இருந்தது ஒரு நாய். abstract painting போலவே தனது படங்களை உருவாக்கியதாகக் கூறுகிறார் கிராஸ்தமி.

‘Taste of Cherry’, ‘Where is the friends Home’, ‘Through the Olive trees’, ‘Close up’, ‘Life and nothing more’, ‘Ten’ ஆகியவை அப்பாஸ் கிராஸ்தமி இயக்கிய முக்கியமான திரைப்படங்கள்.. குழந்தைகளின் உலகை இவரளவிற்கு நிஜமாகக் காட்சிப்படுத்திய இயக்குனர்கள் குறைவே.

பார்வையாளர்கள் தாங்கள் விரும்பியபடி அரூப ஒவியத்தைப் புரிந்து கொள்வது போன்றதே தனது திரைப்படங்களும். ஓவிய ரசனை போலத் திரைப்பட ரசனையும் முக்கியமானதே. சினிமாவில் எல்லாவற்றையும் சொல்லிவிடக்கூடாது .subtext ஆக உள்ளவற்றைப் பார்வையாளர்கள் தங்கள் அறிவின், அனுபவத்தின் துணை கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். true art should be timeless என்பதே அவரது எண்ணம்.

தி ஹண்டர்ஸ் இன் தி ஸ்னோ ஓவியம் தற்போது வியன்னாவின் குன்ஸ்டோஸ்டிரிசாசிக்கஸ் அருங்காட்சியகத்திலுள்ளது. புரூகேலின் மாறாத பனிக்காலத்தின் அழகை ஒவ்வொரு நாளும் பார்வையாளர்கள் ரசித்துப் பார்த்தபடியே இருக்கிறார்கள்.

••

0Shares
0