கி.ரா.வுடன் ஒரு காலைப்பொழுது

நேற்று பாண்டிச்சேரியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனைச் சந்திப்பதற்காக சென்றிருந்தேன், என்னோடு வில்லியனூர் பழநி என்ற நண்பரும் வந்திருந்தார்,  பழநி உற்சாகமான வாசகர், மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் வாழ்க்கையைப் பற்றி கவிதை வடிவில் ஒரு நூலை எழுதியிருக்கிறார், கி.ராஜநாராயணன் வீடு விமானநிலையம் செல்லும் சாலையில் உள்ள லாஸ்பேட் ஏரியாவின் அரசுக் குடியிருப்பில் உள்ளது,

பைக்கில் அவரது வீட்டை தேடிச் சென்று கொண்டிருந்தோம், மழைக்குப் பிந்திய சாலைகளில்  ஆங்காங்கே நீர்தேங்கியதால் வாகனநெருக்கடி அதிகமாக இருந்தது.

முந்திய இரவு நல்ல மழை பெய்திருந்தது, காலை ஐந்து மணிக்கு எழுந்து அறையில் இருந்து நடந்து  கடற்கரைக்குச் சென்றேன் , மழைக்குப் பிந்திய கடலைப் பார்ப்பது அலாதியானது, கடல் அப்போது தன்னியல்பில் இல்லை, பாண்டிச்சேரி கடலின் சுபாவத்தில் அதிக மூர்க்கமும் இல்லை, ஒடுங்குதலும் இல்லை, அது குழந்தையின் அழுகையைப் போல விட்டுவிட்டு உயர்வதும் எழுவதுமாகவே இருக்கிறது,

முந்திய நாள் பகலின் வெக்கையை முற்றிலும் கரைந்துப் போயிருந்தது மழை, விடிகாலைக்காற்றின் இதமும் நீண்டு விரிந்த கடல்முகமும் அடைத்துச்சாத்தப்பட்ட கடைகளும் மென்இருளிலும் நடைபயிற்சிக்காகக் கடந்து செல்பவர்களின் மூச்சொலியுமாக காலையின் அனுபவம்  புத்துணர்வாக இருந்தது,

காலைதுவங்கும் நிமிசம் போல அற்புதம் உலகில் வேறு எதுவுமில்லை, வெளிச்சம் கசியத்துவங்கி மெல்ல விரிந்தோடி நிரம்பி பகலின் கைகளில் உலகம் தன்னை ஒப்படைத்துக் கொண்டுவிட்டது, பகலை ஆளும் சூரியன் மெல்ல உயர்ந்து கடலின் மீது நின்று சகலரையும் பார்க்கத் துவங்கினான், மழையால் தேங்கிய நீர்திட்டு ஒன்றை ஒரு நாய் முகர்ந்து பார்த்துவிட்டு தலையை சிலுப்பியபடியே ஒடிக் கொண்டிருந்தது, மீன்பிடி படகுகள் கடலின் தொலைவில் மிதந்து கொண்டிருந்தன,  டூப்ளே சிலையருகே நடந்து சென்றேன், டூப்ளே நகரை பார்த்துக் கொண்டேயிருக்கிறான், அவனை யாரும் நின்று பார்ப்பதாக தெரியவில்லை, நடந்து செல்லும் யாருடைய நினைவிலாவது அவன் இருப்பானா என்ன,   அற்புதமாக வடிவமைக்கப்பட்ட சிலையாக இருந்தது, பலமுறை அந்தச் சிலையை பார்த்திருக்கிறேன், ஆனால் காலைவெளிச்சத்தில் அச்சிலையை காணும் போது தனித்த ஈர்ப்புடையதாக இருந்தது,

பழமை ஒருபக்கமிருந்தாலும்  பாண்டிச்சேரி நகரம் உருமாறிக் கொண்டேயிருக்கிறது, அதன் புறநகர வளர்ச்சி எல்லா பெருநகரங்களையும் போல மிக வேகமாகவிரிந்து கொண்டேயிருக்கிறது, மணலேறிக்கிடந்த பகுதிகள் யாவும் இப்போது வீடுகளும் வீதிகளுமாக இருக்கின்றன, பாண்டிச்சேரிக்குப் பலமுறை வந்து போயிருக்கிறேன், திரைக்கதை விவாதம் ஒன்றிற்காக பாண்டிச்சேரியில் ஒன்றரை மாதங்கள் தங்கியே இருந்தேன், ஆகவே அந்த நகரின் சின்னஞ்சிறு தெருக்களைக் கூட அறிந்திருக்கிறேன், ஞாயிறுகிழமை சந்தையே அதன் தனிவிசேசம், அன்று நகரம் கூடுதல்பரபரப்பு கொண்டுவிடுகிறது

பாண்டிச்சேரியை ஒரு திறந்தவெளி மதுக்கூடமாக சித்தரிக்கும் பொதுபுத்தி அர்த்தமற்றது, சொல்லபோனால் அதை விட அதிகமாக சென்னையில் குடிப்பவர்கள் இருக்கிறார்கள், பிரெஞ்சுக் கலாச்சாரத்தின் தனித்துவமே அந்நகரின் சிறப்பு, அது பேச்சில். ருசியில். உபசரிப்பில். கலைகளில் மேலோங்கியிருக்கிறது, நகரினுள் உள்ள எல்லா முக்கிய வீதிகளும் கடற்கரையில் முடிகின்றன என்பதால் அதன் சாலைகளின் அழகும் அற்புதமானது,

கடற்கரையோரம் இத்தாலியில் இருந்து மனஅமைதி வேண்டி வந்திருந்த ஒருவன் கடற்காட்சிகளைப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தான், இருபது வயதே இருக்ககூடும், தனக்கு புதுச்சேரி மிகவும் பிடித்துப்போய்விட்டதாக சொல்லியபடியே ஒரு அரிய தருணத்திற்காக வானத்தை பார்த்தபடியே கேமிராவோடு காத்துக் கொண்டிருந்தான், அவனோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன், இத்தாலியிலும் இலக்கியங்களைப் படிப்பதில் இன்றுள்ள இளைஞர்களுக்கு விருப்பமில்லை, விளையாட்டும் இசையுமே தங்களது உலகம் என்று சொல்லியபடியே என்னோடும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டான்,

உப்பளம் சாலையில் இருந்த எனது விடுதிக்குத் திரும்பி நடந்து வந்த போது அரவிந்தர் ஆசிரமத்தை சேர்ந்த இளம் பெண்துறவி ஒருத்தி நீலநிற மலர்களை கையில் ஏந்தியபடியே வெளிர்சிவப்புஉடை அணிந்தவளாக கடந்து போவதைக்கண்டேன், அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த தூய்மையும் கண்களில் இருந்த அன்பும் மயக்கமூட்டுவதாக இருந்தது,

••

கிரா குடியிருப்பது மத்தியதர அரசு ஊழியர்களுக்காக ஒதுக்கபடும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் முதல்மாடி, அரசு ஒதுக்கீட்டில் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது, ஆறு வீடுகள் கொண்ட அந்த அடுக்ககத்தில் கிராவைத் தவிர வேறு யாருமே குடியிருக்கவில்லை, பேச்சுத்துணைக்கு கூட ஆள் இல்லாத தனிமை பார்த்தவுடனே முகத்தில் அறைவது போலிருக்கிறது,

தூசியடைந்து அழுக்கேறியிருக்கிறது அந்த அடுக்குமாடிகுடியிருப்பு,  முகப்பு இரும்பு கேட் கூட துருவேறியிருக்கிறது, அதைத் தள்ளி திறக்கையில் ஒரு நாளில் அது சிலமுறை தான் திறக்கபடுகிறது என்பதற்கு அறிகுறியாகச் சப்தமிடுகிறது,  சுத்தம் செய்யப்படாத படிக்கட்டுகள், உதிர்ந்த இலைகளும் காய்ந்து போன காகிதங்களுமாக இறைந்து கிடக்கும் குடியிருப்பின் புறவெளி என முற்றிலும் பராமரிப்பு அற்றுப் போயிருந்தது ,

பைக் சப்தம் கேட்டதும் வீட்டு ஜன்னலில் தெரிந்தது கிராவின் முகம், சிலருக்கு தான் முதுமை உருவாக்கும் அழகு வசீகரமாகயிருக்கிறது, கிராவின் முதுமை அது போன்று தனித்துவ அழகுடையது, அவரது தோற்றத்திலே ஒரு விசேச ஈர்ப்பு இருக்கிறது, காரணம் அவரது மூக்கு, அது சிற்பங்களில் இருப்பது போன்று கச்சிதமானது, படியிறங்கி அவர் கிழே வருவதற்குள் நாங்கள் மேலே ஏறிச் சென்று கொண்டிருந்தோம்,

கிராவின் துணைவியார் கணபதியின் அன்பான வரவேற்புக்குரலில் ஊரின் பாசம் ஒட்டிக் கொண்டிருந்தது, அந்தக் குரல் பாண்டிச்சேரிக்கு வந்து இத்தனை ஆண்டுகளிலும் நகரவழக்கின் கலப்பில்லாத அசல் கரிசல்குரலாக இருந்தது, அம்மாவும் அய்யாவும் மட்டுமே வசிக்கிறார்கள், போதுமான வசதிகள் அற்ற வீடு, ஜன்னலை ஒட்டிய சாய்வுஇருக்கையில் அமர்ந்திருந்தார், அருகில் மூக்கு கண்ணாடியுடன் ஐநூறுக்கும் அதிகமான புத்தகம் ஒன்றின் கைப்பிரதி வாசித்துப் பாதியில் வைக்கப்பட்டிருந்தது, கிழக்குப் பக்கச் சுவரில் இரண்டிக்கும் மேலான ஒரு பெரிய பேனா மாட்டப்பட்டிருந்த்து, இலக்கிய நிகழ்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட புகைப்படம், சிறிய தொலைக்காட்சிப்பெட்டி, அதிகம் வெளிச்சமற்ற சிறிய சமையலறை, ஒழுங்குசெய்யப்பட இடமற்ற நெருக்கடி அந்த அறையெங்கும் பரவியிருந்தது,

கிராவின் முகத்தில் மெல்ல வாட்டமிருந்தபோதும் அதைக் காட்டிக் கொள்ளாத புன்னகையோடு இருந்தார், ஊருக்குப் போயிருந்திருந்தீர்களா என்று கேட்டவுடன் இப்போதைக்கு போகவில்லை என்றவர் தனது கோபல்லகிராமம் நாவல் பென்குவின் பதிப்பாக ஆங்கிலத்தில் வெளியாகி வந்துள்ளதை எடுத்துவந்து காட்டினார், மொழிபெயர்ப்பு பற்றி பேசத்துவங்கினோம், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு சிறப்பாக மொழியாக்கம் செய்கின்றவர்கள் குறைவு, ஆங்கிலப்புத்தகங்களுக்கு இருப்பது போல லிடரரி ஏஜென்ட் தமிழில் இல்லை, ஆகவே நமது புத்தகங்கள் ஆங்கில வாசக உலகினை அடைய இன்னும் நூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் போல என்பதாக பேச்சு நீண்டது

கிராவோடு பேசிக் கொண்டிருப்பது ஒரு அலாதியான அனுபவம், அவர்  தமிழ்மரபின் தனிப்பெரும்கதைச்சொல்லி,அவருக்குள் தோண்டத் தோண்ட ஊறிக் கொண்டேயிருக்கும் சுனையாக கதைகள் சுரந்து கொண்டேயிருக்கிறது, அவரது தமிழ் இலக்கியப்புலமை அபாரமானது,

ஒரு தனிப்பாடலை அய்யா மேற்கோள் காட்டிப் பேசினார், வறுமையில் வாடும் புலவன் வசதிபடைத்த ஒருவனைத் தேடிப்போகிறான், அந்தப் புரவலர் ஒருவன் எவ்வளவு பரிசுகளை ஏற்றுக் கொள்ளமுடியுமோ அவ்வளவு வாறி வழங்கக் கூடியவர், அவரைத்தேடி போகின்ற வழியில் புலவன் ஒரு இரவு சத்திரத்தில் தங்குகிறான், வயிறு பசிக்கிறது ஆனால் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை, அப்போது அவன் தன்னோடு கூடவே இருக்கும் வறுமையைப் பார்த்து பேசுகிறான்,

நாளைக்கு நீ என்ன ஆகப்போகிறாய் என்று தெரியாமல் இப்போது என்னோடு விளையாடிக் கொண்டிருக்கிறாய், பொழுதுவிடிந்தால் போதும் உன்பாடு திண்டாட்டம் தான் என்று  வறுமையைக் கேலி செய்கிறான், என்று சொல்லிவிட்டு  அது தான் புலவர்களின் இயல்பு என்றார்

தமிழ் இலக்கியத்தில் வறுமையை எதிர்கொள்ளும் விதம் எப்படியெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது என்பதைப்  பற்றியதாக பேச்சு நீண்டது, பேச்சினை கிரா ஆழ்ந்து கவனிப்பதுடன் மற்றவர் பேசிமுடித்தபிறகே தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார், அப்போதும் கூட அவருக்குள் ஏதோ நினைவுகள் வந்து போவது போல சட்டென மௌனமாகிவிடுகிறார், எதற்கு இந்த வீண்பேச்சு என்று உணரும் தருணங்களில் அவரது புருவம் லேசாக சுழிக்கிறது, மற்றபடி இசை கேட்பது போலவே அடுத்தவரின் பேச்சைக் கேட்கிறார்.

பேச்சின் ஊடாக பாதிரி மரத்தைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார்,  அதன் பழம் பற்றிப் பேசியபடியே பாண்டிச்சேரியில் உள்ள அரிய தாவர வகைகள், மரங்கள். கவனிப்பார் இன்றி கைவிடப்பட்டதை வருத்ததோடு பகிர்ந்து கொண்டார்,

குடியிருக்கும் வீடு போதுமான வசதிகள் கொண்டதாகயில்லை, இதை விடப் பெரிய வீட்டினை ஒதுக்கித் தரும்படியாக கவர்னர் வழங்கிய உத்தரவை ஒரு அரசுஅதிகாரி உருமாற்றி தன்னையும் இப்படி அரசு ஊழியர்களுக்கு இடையில் தள்ளிவிட்டதாக சிரிப்போடு நினைவு கொள்கிறார், அந்தச் சிரிப்பின் ஊடாக அவரது வேதனை ஒளிந்து கொண்டிருப்பதை நன்றாக உணர முடிகிறது,

கிராவின் மனதில் கதைகள் கொப்பளித்துக் கொண்டேயிருக்கின்றன, அவரது நினைவு பெரும்வனத்தைப் போல விரிந்து கிடக்கிறது, அதன் உள்ளே கரிசல் மண்ணில் வாழ்ந்து மறைந்து போன எத்தனையோ மனிதர்கள் நடமாடிக் கொண்டேயிருக்கிறார்கள், கேட்டும் வாசித்தும் அறிந்த கதைகள் நினைவில் ஒளிர்ந்தபடியிருக்கின்றன, முறையாகப் பயின்ற இசையும் அதன் உன்னதங்களும்  மாறாத சங்கீதமாக அவருக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன, அவர் ஒரு குலப்பாடகனைப் போல தான் அறிந்த மனிதர்களின் வாழ்வைக் கதையாக்கிக் கொண்டேயிருக்கிறார்

தான் தொகுத்த வட்டார வழக்குசொல் அகராதி பற்றியும், நாட்டுபுறக் கதைகளஞ்சியம் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார், நான் இதாலோ கால்வினோ. கவிஞர் யேட்ஸ் போன்றவர்கள் நாட்டார்கதைகளைத் தொகுத்துப் புத்தகமாக்கியதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன், அகராதியியலின் வரலாற்றைப் பற்றி பேச்சு விரிந்தது.

கிராவிற்கு 89 வயது என்றார், நம்பவேமுடியவில்லை , பேச்சில் தளர்வோ  சோர்வேயில்லை, இன்னமும் எழுதும் ஆர்வமும் உற்சாகமும் அப்படியே இருக்கிறது, தனது கதைகளைப் பற்றி அவர் ஒருவார்த்தை கூட பெருமை பேசுவதேயில்லை, அந்தத் தன்னடக்கமும், தன்னைப் பற்றிய சுயவிமர்சனமும் அவரது தனிக்குணமாக இருக்கிறது, பேச்சு முழுவதிலும் இளம்எழுத்தாளர்களை மனதார பாராட்டிக் கொண்டேயிருக்கிறார், கூடுதலாக தமிழ் இலக்கியம் மேம்பட எவையெல்லாம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆதங்கமும் கலந்திருக்கிறது

பாண்டிச்சேரித் தண்ணீர் ருசி தனக்குப் பழகிவிட்டது, அதனால் அங்கேயே தங்கிவிட்டேன் என்று சொன்னார், அவர் பாண்டிச்சேரியில் வசித்தாலும் அவரது மனது கரிசலையும் அதன் உக்கிரமான சூரியனையும் வேம்பு படர்ந்த கிராமங்களையும் அதன்விவசாயிகளையும். சுழிக்காற்றையும் சுற்றிவந்தபடியே இருக்கிறது,

கதைசொல்லியாக  அவரே எனது ஆசான், தமிழ் இலக்கியத்தில் கரிசலின் குரலை உயர்த்திப்பிடித்த அவரே தமிழின் உன்னதக் கதைஞன்.

விடைபெறும் போது அவரது கைகளைப் பற்றிக் கொண்டேயிருந்தேன், அந்த தொடுதலின் வழியே அன்பும் ஆசியையும் உணர முடிந்தது நெகிழ்வாக இருந்தது, பாரத்தேவிக்கு அவர் எழுதிய கடிதங்கள் நூலினைக் கையெழுத்திட்டுத் தந்தார்,

டால்ஸ்டாய் தனது பண்ணை வீட்டிலிருந்து மாஸ்கோ நகரிற்கு இடம்பெயர்ந்து சென்றதைக் குறிப்பிடும் போது, அகன்ற கிளைகள் உள்ள ஒரு ஒக் மரத்தை தன் இருப்பிடத்திலிருந்து பிடுங்கி நகரில் கொண்டு வந்து நட்டு வைத்திருப்பதைப் போலிருக்கிறது எனது வாழ்க்கை என்று எழுதியிருக்கிறார்

திரும்பி வரும் வழியெல்லாம் ஏனோ அந்த வரிகள் நினைவில் வந்தபடியே இருந்தன.

••

0Shares
0