கீயிங்கே வனத் திருடன்


 


 


 


 


 


 


 


செல்மா லாகெர்லெவின் தேவமலர் ஒரு குறுநாவல். அதை எனது பதினெட்டாவது வயதில் முதன்முறையாக வாசித்தேன். பின்மதிய நேரமது. வாசிக்கத் துவங்கும் போது வெளியில் இருந்த வேம்பின் காற்று வீசிக் கொண்டிருப்பதை லேசாக உணரமுடிந்தது. நான்கு பக்கங்களை கடந்து போவதற்குள் கதை ஒரு சுழலைப் போல என்னைத் தனக்குள் இழுத்துக் கொண்டு போகத் துவங்கியது.


நாவலில் வரும் சம்பவங்களின் பின்னால் ஒரு நிழலைப் போல மெளனமாக சென்று கொண்டிருந்தேன். வெளியிலிருந்த காட்சிகள் யாவும் மறைந்து போய்விட்டன அமர்ந்திருந்த அறையும், ஜன்னலும் கூட கண்ணில் தெரியவில்லை. வேம்பின் இலையசைவு கூட கவனத்தில் இல்லை. ஏதோவொரு முன்அறியாதொரு கானகத்திற்குள் பிரவேசித்துவிட்டது போல உணரமுடிந்தது.


கீயிங்கே என்ற காட்டிற்குள் தலைமறைவாக வாழ்ந்துவரும் திருடனையும் அவனது மனைவி குழந்தைகளையும் பற்றியது தேவமலர். திருடன் மிக மூர்க்கமானவன். அவனது வேலை காட்டிற்குள் வருபவர்களை அடித்து பணம் பறிப்பது. சமீப காலமாக காட்டிற்குள் அதிகம் பயணிகள் வராமல் போனதால் அவன் செய்வதறியாமல் தனது மனைவி குழந்தைகளை பிச்சை எடுப்பதற்காக அருகாமை நகரத்திற்கு அனுப்பி வைக்கிறான்.


அவனது மனைவிக்கு பிச்சை எடுப்பதில் விருப்பமில்லை. அவள் நகரில் உள்ளவர்களை மிகவும் அலட்சியமாக பார்த்தபடி நடக்கிறாள். அவளோடு ஐந்து குழந்தைகளும் யாசகம் கேட்டு வருகிறார்கள். அவர்கள் ஊவிட் என்ற மாளிகையை கடந்து போகிறார்கள். அந்த மாளிகை துறவிகளுக்கான மடாலயம். அதன் கதவுகள் மூடப்பட்டிருந்தன. கதவைத் தட்டியதும் திறந்த வாயிற்காப்போன் அவர்களுக்குத் தேவையான ரொட்டிகளை தந்துவிட்டு கதவை முடிக் கொள்கிறான். அப்போது அவளது சிறிய மகள் அம்மாவின் பாவாடையைப் பிடித்து இழுத்து கோட்டைச் சுவரில் இன்னொரு சிறிய வாசல் இருப்பதை காட்டுகிறாள்.


திருடனின் மனைவி அக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்கிறாள். அங்கேயொரு அழகான பூந்தோட்டமிருக்கிறது. அந்த தோட்டத்தில் உள்ள விதவிதமான பூக்களை கண்டதும் ஆசையோடு அருகில் செல்கிறாள். ஆனால் களையெடுத்துக் கொண்டிருந்தவன் அவளைத் தடுத்து நிறுத்தி துரத்துகிறான். அவள் மறுத்து அவனோடு சண்டையிடுகிறாள்.


அப்போது மடாலயத்தின் தலைமை துறவியான ஹான்ஸ் அங்கே வருகிறார். அவர் திருடனின் மனைவி தான் உருவாக்கிய பூந்தோட்டத்தைப் பார்க்கட்டும் என்று அனுமதிக்கிறார். அவள் பிரமிப்போடு தோட்டத்திலிருந்த ஒவ்வொரு செடியாக பார்க்கிறாள்.


முடிவில் ஹான்ஸ் அது போல ஒரு அழகான தோட்டத்தை அதன் முன்பாக அவள் கண்டிருக்கிறாளா என்று கேட்கிறார். அவள் வியப்போடு இல்லை என்கிறாள். ஆனால் நிமிஷத்திற்குள் மனம் மாறி அதைவிடவும் அழகானதொரு தோட்டத்தை தான் கண்டிருப்பதாகச் சொல்கிறாள். அப்படியெதுவும் இருக்கமுடியாது என்று ஹான்ஸ் கோபக்குரலில் சொல்லவே. அவள், கீயிங்கே வனத்தில் கிறிஸ்துமஸிற்கு முந்திய இரவில் காடு பூக்கும் அதை அவர் கண்டிருக்கிறாரா என்று கேட்கிறாள்.


அவர் இல்லையென்றதும் அதை காணவேண்டுமானால் திருடனின் குற்றங்களை மன்னித்து அவன் நகரில் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்பதோடு அவர் மட்டும் தனியே வனத்திற்குள் வரவேண்டும் என்கிறாள். அவரும் சம்மதிக்கிறார்


திருடனின் மனைவி தான் சொன்னது போலவே கிறிஸ்துமஸிற்கு முந்திய இரவில் அவரை அழைத்துவருதற்கு தனது மகனை அனுப்பி வைக்கிறாள்.ஹான்ஸ் தனியே புறப்பட்டு வருகிறார். வழியெல்லாம் மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக விருந்தும் களிப்புமாகயிருப்பதைக் காண்கிறார். தான் ஒரு திருடனின்வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டியிருக்கிறதே என்ற மனக்கவலை அவருக்குள் இருந்தது.


கீயிங்கே வனத்திற்குள் அவர் வந்த போது அது இருண்டிருந்தது. அவர் பாறைபுடவொன்றில் குடியிருந்த திருடனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவர்கள் குடும்பம் வறுமையாலும் பனியாலும் பீடிக்கபட்டிருந்தது. பண்டிகையை கொண்டாடுவதற்கு கூட அவர்களிடம் பொருளில்லை .திருடனின் மனைவி நள்ளிரவில் காட்டில் சந்தோஷம் துவங்கும் வரை அவரை படுத்துக் கொள்ளும்படியாகச் சொன்னாள். அவர் படுத்துக் கொண்டார். ஆனால் உறக்கம் கொள்ளவில்லை.திருடனின் மனைவியோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.


நள்ளிரவுக்கு பின்பு திருடனின் மனைவி திடீரென எதையோ கேட்டு சந்தோஷமானவள் போல, காட்டில் ஒலிக்கும் மணிச்சப்தம் உங்களுக்கு கேட்கிறதா என்று கேட்டாள். அவர் கேட்கவில்லையே என்றபடி படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்து பார்த்தார். அவள் மிக சந்தோஷமாக காடு விழித்துக்கொள்ள துவங்கிவிட்டது என்றாள்


அவர் கானகத்தின் உள்ளே சில அடிகள் நடந்து சென்றார். அப்போதுவரையிருந்த இருள் விலகத்துவங்கி வானிலிருந்து ஒளி தரையிறங்கி யாவையும் ஒளிரச் செய்தது. அவர் பார்த்துக் கொண்டிருந்த போதே அங்கிருந்த தரையாவும் பசுமையாகியது. விதவிதமான பறவைகளின் கீச்சிடலும் ஆற்றின் சலசலப்பும் பெருகியது. எண்ணிக்கையற்ற நிறங்களில் பூக்கள் அரும்பத் துவங்கின. நறுமணமும் ஒளியும் காடெங்கும் நிரம்பியது. அவரால் நம்பமுடியவில்லை. வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்


காட்டிற்குள் எங்கிருந்தோ மாடுகளை ஒட்டிக்கொண்டு இடையர்கள் பாடல்களை பாடியபடி வந்தார்கள். அவர் பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் வர்ணஜாலம் போல பூக்கள் நிறம் மாறிக் கொண்டிருந்தன. ஒரு மரத்திலிருந்து உதிர்ந்த மஞ்சள் பூ ஒன்றை கையில் எடுத்துப் பார்த்தார். அவர் கையில் பார்த்துக் கொண்டிருந்த போதே அது காயாகி பின்பு கனிந்து பழமாகவும் மாறியது. காடெங்கிலும் கோடிக்கணக்கான பச்சை நிற வண்ணத்துபூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. விந்தையை காணமுடியாமல் அவர் மனம் நடுங்கியது. எங்கிருந்தோ வந்த காட்டுநரியொன்று திருடனின் மனைவியின் கால்களைச் சுற்றிக் கொண்டு ஒரு நாயைப் போல விளையாடிக் கொண்டிருந்தது.


திருடனின் குழந்தைகள் பழங்களை பறித்துத் தின்று கொண்டிருந்தார்கள். காடெங்கும் தேவகானம் போல இசையும் உற்சாகமும் நிரம்பியது. திருடனின் மனைவி சொன்னது எத்தனை நிஜம் என்பதை ஹான்ஸ் உணர்ந்தார். அப்போது தனது மதகுருவைத் தேடி ரகசியமாக காட்டிற்குள் வந்த அவரது சீடன், அந்த விந்தையை சாத்தானின் மாயக்காட்சிகள் என்று நினைத்து, அவை யாவும் அழிந்து போகட்டும் என்று உரத்துக் கத்தினான். மறுநிமிஷம் காட்டிலிருந்த யாவும் மறையத்துவங்கியது.


ஹான்ஸ் மனமுடைந்து போனார். தான் சொன்னது போல திருடனுக்கு மன்னிப்பு தரவேண்டுமானால் அதற்கு சாட்சியாக ஒரேயொரு தேவமலர் வேண்டும் என்று ஒரு செடியிலிருந்த பூவைப் பறிக்க முயற்சித்து கீழே விழுந்தார். அந்தவனம் மீண்டும் இருண்டுகொண்டுவிட்டது. கீயிங்கே வனத்தில் நடந்ததை புரியாத சீடன் தனது குருவை து¡க்க முயற்சிக்கும் போது அவர் இறந்து போயிருந்தார். அவரது மூடிய கையில் சிறிய கிழங்கு போல ஒன்றிருந்தது. அதை அவன் மடலாயத்திற்குக் கொண்டு போய் நட்டு வைத்தான். மறுஆண்டின் கிறிஸ்துமஸின் போது அந்த செடியில் தேவமலர் பூக்க துவங்கியது. பிஷப் அந்த ஆச்சரியத்தை கண்டு திருடனுக்கு மன்னிப்பு வழங்கினார்.


அதை சொல்வதற்காக கீயிங்கே காட்டிற்கு வந்தான் சீடன். ஆனால் அந்த கிறிஸ்துமஸிற்கு முந்திய இரவில் காட்டில் தேவமலர் பூக்கவில்லை. காடு விழித்துக் கொள்ளவுமில்லை. அங்கிருந்த விந்தை விலகிப் போய்விட்டிருந்தது. திருடனின் மனைவி ஹான்ஸ் தான் சொன்ன வார்த்தையை காப்பாற்றிவிட்டார் அது போல திருடனும் இனி திருட மாட்டான் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு நகரத்திற்கு புறப்பட்டாள். சீடன் தனது தவறுக்கு பிராயசித்தமாக அதே காட்டிற்குள் தங்கிவிடுகிறான். நடந்த அற்புதங்களுக்கு சாட்சியாக ஒரேயொரு தேவமலர் இன்றும் அந்த மடாலயத்தில் வருடத்துக்கொருமுறை பூத்துக் கொண்டிருக்கிறது.


***


செல்மா லாகர்லெவ் ஒரு ஸ்வீடீஷ் நாவலாரிசிரியை. நோபல் பரிசு பெற்றவர். அவரது மதகுரு நாவல் தமிழில் மொழிபெயர்க்கபட்டிருக்கிறது. மிகவும் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளரான செல்மா லாகர்லெவ் பல ஆண்டுகள் நோபல் பரிசின் தேர்வு குழுவிலும் பணியாற்றியிருக்கிறார்.


தேவமலர் வாசித்து முடித்தபோது அது தரும் அனுபவம் தனித்துவமான மனஎழுச்சியாகும். குறிப்பாக காடு விழித்துக் கொள்ளுமிடம் ஒரு அரிய தரிசனமாகும். காட்டின் நுட்பங்களையும் விந்தையையும் காட்சியாக உருமாற்றி காட்டியிருக்கிறார் செல்மா லாகர்லெவ். அந்த காடு உயிர்பெறும் தருணத்தில் ஏற்படும் விவரணைகள் சங்க கவிதைகளில் குறிப்பாக கபிலரின் பாடல்களுக்கு நிகரானதாக சொல்லலாம்


அந்த நாவலில் வரும் திருடனின் மனைவி கதாபாத்திரம் மிகவும் உயர்ந்த பாத்திரப் படைப்புகளில் ஒன்று. அவள் திருடனின் மனைவி என்பதற்காக குற்ற உணர்வு கொண்டவள் இல்லை. அது போலவே விந்தையைக் கண்டறிந்தவள் என்ற பெருமிதமுமில்லை. அவள் வாழ்வை நேரிடையாகச் சந்திக்கிறாள். அவளது கணவனை விடவும் வனம் சாந்தமானதாகத் தான் அவளுக்குப் பழகியிருக்கிறது. அவள் தன்னை அவமதிக்கும் எதோடும் சண்டையிடத் தயாராக இருக்கிறாள்.


அவளது கோபம் இயற்கை அவளுக்கு கற்றுத்தந்தது. பாறையோடு பா¨றாயாக வாழ்ந்த அவளது பகல், இரவுகள் அவள்மீது வடுக்களாக படிந்திருக்கின்றன. அவள் கதையின் முதல் பத்தியில் துவங்கி கடைசி வரை தன் முழு ஆளுமையை பரவவிட்டபடியிருக்கிறாள்.


திருடன் சுபாவம் மாறாதவன். காடு விந்தையால் நிரம்பிய போதும் தன் சுபாவத்தை மாற்றிக் கொள்வதில்லை. அவனுக்கு விந்தையாக இருப்பது வாழ்வின் புதிர்கள் தான். அவன் மற்றவர்களை போல வாழ விரும்புகிறான். காடு அவனுக்கு மறைந்து வாழுமிடம் மட்டுமே, அதன் பிரம்மாண்டமும் நுட்பமும் அவனுக்கு பரிச்சயமாகவேயில்லை. விந்தையை இழந்தே அவன் வேறிடம் செல்வதற்கு சாத்தியமாகிறது.


ஹான்ஸ் பாதிரியின் கதாபாத்திரமும் தனித்துவமானதே. விந்தை எப்போதும் சாதாரண மனிதனுக்கு நெருக்கமாகயிருக்கிறது என்பதை அவர் உணர்ந்து கொள்ளும் விதம் அருமையானது .ஒரேயொரு வரியில் இடம் பெற்றுள்ள திருடனின் குழந்தையொன்றும் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது. அக்குழந்தை தான் முதன்முதலாக மடாலயத்திலிருந்த பூந்தோட்டத்தின் சிறிய வாசலை காண்கிறது. அதை தன் தாயிடம் காட்டி தருகிறது. பாஷை பழகாத அந்த குழந்தைக்கு தான் விந்தையின் ரகசிய வாசல்கள் கண்ணுக்கு தெரிகின்றன போலும். அது போலவே அந்த காடு விழித்துக் கொள்ளும் போது திருடனின் மனைவியை சுற்றி வரும் நரியும் எழுத்தின் முடிவற்ற சாத்தியங்களை எடுத்துக் காட்டுவதாகயிருக்கிறது.


நாவலில் கீயிங்கே வனம் ஒரு வெறும் களமாகமட்டும் அமையவில்லை, அது ஒரு கவித்துமான படிமம். ஒரு கனவு. மொத்த நாவலையும் ஹான்ஸ் துறவிக்கு ஏற்படும் கனவென்று கூட வாசிக்க இயலும். ஆனால் கனவிலிருந்து பாதிரி ஒரு தேவமலரை பறிந்து வந்துவிட்டாரா என்ற கேள்வி தான் அதன் இயல்பு உலகிற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.


இலக்கியத்தின் முக்கியபணியே அரியதான தருணங்களை எழுத்தில் பதிவுசெய்வது தான். அந்த வகையில் காடு விழித்துக் கொள்ளும் அரிய தருணம் இந்த நாவலில் பதிவாகியுள்ளது .காடு விழித்துக் கொள்ளும் என்ற படிமம் தரும் அனுபவம் கவிதையின் உயர்நிலைக்கு ஒப்பானது.


நாவலை வாசித்து முடிக்கும் போது மனதில் வெளிப்படுத்த முடியாத துக்கமும் விந்தையை அறிந்த வியப்பும் ஒரே நேரத்தில் சாத்தியமாகிறது. செல்மா லாகர்லெவின் கவித்துவமான மொழியும் கதை சொல்லும் முறையும் நுட்பமும் வியக்க வைக்கின்றன.தமிழ் நாவலை வாசிப்பது போன்று அத்தனை லகுவாக மொழியாக்கம் செய்துள்ள .நா.சு.வும் மிகுந்த பாராட்டுக்குரியவர்.


காட்டின் மீது மனிதன் கொண்டிருந்த அவநம்பிக்கை தான் அதன் அற்புதங்களிலிருந்து அவனை துண்டித்துவிட்டது. மனிதன் தனது சிருஷ்டி பற்றி அத்தனை கர்வம் கொள்ளுமளவு பெரிதாக எதையும் சாதித்துவிட வில்லை. இயற்கை மிகுந்த மர்மமானது. அதன் வசீகரமே அதன் மெளனம் தான். அந்த மெளனத்தின் அடியில் எத்தனையோ அற்புதங்கள் புதையுண்டிருக்கின்றன. காடு ஒரு சூழல் மட்டுமில்லை. அது இயற்கை கொள்ளும் ஒரு நிலை. ஷேக்ஸ்பியரின் மாக்பெத்தில் காடு தனது இருப்பிடத்தை விட்டு நகர்ந்து வரும் நாளில் மரணம் நேரிடும் என்ற படிமம் இடம் பெறுகிறது. பெளத்த துறவிகளால் காடு ஒரு தியானநிலையின் வெளிவடிவமாகவே கொள்ளப்படுகிறது.


செல்மா லாகர்லெவின் இந்த புத்தகத்தை பற்றி எனது நண்பர்கள் பலரோடு பலமுறை விவாதித்திருக்கிறேன். என் அம்மாவிலிருந்து சகோதரிகள் வரை அத்தனை பேரும் அதை வாசித்து மகிழ்ந்திருக்கிறார்கள். நான் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அதன் பக்கங்கள் புதிதாகவேயிருக்கின்றன. காடும் அதன் நுட்பமும் மனதில் அழியாத படிமமாக உருக் கொண்டுள்ளது.


கீயிங்கே வனத்திலிருந்த திருடனுக்கும் எனக்கும் ஏதோவொரு அறியா பந்தம் உருவாகியிருக்கிறது. அவன் எனது ஊர் மனிதனை போலதானிருக்கிறான்.அவனது முகம் கூட எனக்கு பரிச்சயமானது போலவேயிருக்கிறது. அவனோடு ஒரு கவளம் சோற்றை பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்றும் அந்த பாறையிடுக்கில் ஒரு இரவு தங்கி கொள்ள வேண்டும் என்றும் மனது ஆசைப்படுகிறது. இந்த நாவலின் வெற்றியே இது தானோ?


      தேவமலர்செல்மா லாகர்லெவ்   மொழிபெயர்ப்பு. .நா.சு.  தமிழ்சுடர் பதிப்பகம். 1956


 

0Shares
0