குட்டி இளவரசன்


இந்த நூற்றாண்டின் சிறந்த நாவல்களில் ஒன்றான குட்டி இளவரசன் இதுவரை 173 மொழிகளில் வெளியாகி 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளது. 1943ல் வெளியான இந்த நாவல் தமிழில் 1981 ஆண்டு க்ரியா பதிப்பக  வெளியீடாக வந்துள்ளது. மிக சிறப்பாக இந்த நாவலை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தவர்கள் மதனகல்யாணி மற்றும் வெ. ஸ்ரீராம்.அந்துவான்த் செந்த் எக்ச்பெரி ( Antoine de Saint-Exupery)பிரெஞ்சு எழுத்தாளர். இவர் விமான ஒட்டியாக ராணுவத்தில் பணியாற்றியவர்.


இவர் ஒரு முறை விமானகோளாறு காரணமாக சகரா பாலைவனத்தில் அடையாளம் தெரியாத இடம் ஒன்றில் தரையிறங்கினார். அங்கே மனிதர்கள் யாருமேயில்லை . கண்ணுக்கு எட்டிய வரை மணல். இயற்கையின் விநோதம் விரிந்து கிடந்தது. ஒரு நபர் ஒட்டும் விமானம் என்பதால் துணைக்கும் யாருமில்லை.


பகலிரவாக எங்கே போவது என்று தெரியாமல் ஆகாசத்தையும் காற்றையும் மணலையும் பார்த்தபடியே கிடந்தார்.  அந்த நாட்களில் அவர் மனது அடைந்த திகைப்பு, பரவசம், பயம், கற்பனை அவருக்குள் ஆழமான மாற்றத்தை உருவாக்கியது.


1923 ராணுவத்தை விட்டு வெளியே வந்த பிறகு  எழுதுவதில் ஆர்வமாகி தனது முதல்புத்தகத்தை 1925 ஆண்டு வெளியிட்டார். 1944 கார்ஸிகாவில் போர்கோ என்ற இடத்திலிருந்து விமானத்தில் சென்ற போது அவரது விமானம் ஆகாசத்தில் திடீரென தொடர்பிலிருந்து மறைந்துபோனது. தனது கதையில் வரும் குட்டி இளவரசனை போல எக்ச்பெரி  வாழ்வும் என்ன ஆனது என்று தெரியாத மர்மமாகவே முடிந்து போனது.


 இன்று வரை அவரது மரணம் உறுதி செய்யப்படவில்லை. அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அதன் துண்டுகள் சமீபத்தில் கண்டு எடுக்கப்பட்டன. ஆனால் எக்சுபெரி என்னவானார் என்பது துல்லியமாக அறியமுடியவில்லை.


இவரது இலக்கிய சேவையை சிறப்பிக்கும் விதமாக பிரெஞ்சு தேசம் ஐம்பது பிராங்க் நோட்டில் அவரது கதையில் வரும் குட்டி இளவரசன் மற்றும் யானையை விழுங்கிய மலைப்பாம்பு ஆகிய படங்களை வெளியிட்டுள்ளது.


எது குட்டி இளவரசனை திரும்ப திரும்ப படிக்க வைக்கிறது.


குழந்தைகள் புத்தகம் என்று பொது அடையாளம் சூட்டப்பட்ட போதும் எக்சுபெரியின் நாவல் வாழ்வின் ஆழமான உண்மைகளை எடுத்துச் சொல்கிறது. குட்டி இளவரசன் கேட்கும் கேள்விகள் தத்துவார்த்தமானவை. வாழ்வின் புதிர்தன்மையையும் அபத்தத்தையும் விவரிப்பவை. உலகை எந்த மனத்தடையும் அற்று நெருங்க சொல்பவை.


சுயசரிதை தன்மையுடன் துவங்குகிறது நாவல். எனக்கு ஆறு வயதான போது ஒரு அற்புதமான படத்தை கண்டேன். அது ஒரு காட்டுவிலங்கை மலைப்பாம்பு ஒன்று விழுங்கிக் கொண்டிருப்பதை காட்டியது. அந்த படத்தை கண்டதும் அது போல ஒன்று வரையலாமே என்று நானும் ஒரு சித்திரம் தீட்டினேன். என்னுடைய படத்தை பெரியவர்களிடம் காட்டிய போது அவர்கள் ஒருவருக்கும் புரியவில்லை. அப்போது தான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது


பெரியவர்கள் ஒரு போதும்  எதையும் தாங்களாகவே புரிந்து கொள்வதில்லை. எப்போதும் ஒயாமல் விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பு தருவதாக இருக்கிறது.


என்று ஆரம்பிக்கிறது நாவல்.விமான ஒட்டியாக உள்ள கதை சொல்லி ஆறு வருசங்களுக்கு முன்பு விமானம் பழுதடைந்து ஒரு பாலைவனத்தில் விமானத்தை இறக்குகிறான். அங்கே  துணைக்கு யாருமேயில்லை.  வாழ்வா சாவா என்ற பிரச்சனையில் தனியே  தடுமாறுகிறான். தற்செயலாக விடியலின் போது ஒரு சின்ன குரல் அவனை அழைக்கிறது. அது குட்டி இளவரசனின் குரல். அழகான சிறுவயது தோற்றம்.


அவன் தனக்கு ஒரு  ஆட்டுக்குட்டியை வரைந்து தரும்படியாக கேட்கிறான். சின்ன பையனாக இருக்கிறான். இங்கே எப்படி வந்தான் என்று புரியாமல் அவன் கேட்டபடியே ஒரு ஆட்டுகுட்டியின் படம் வரைந்து தருகிறான் விமானி..  அந்த சிறுவன் வேறு ஒரு கிரகத்திலிருந்து வந்திருப்பதை அறிந்து  அவனிடம் விசாரிக்கிறான். சிறுவன் தான் எங்கிருந்து வந்தேன் என்பதை சொல்ல துவங்குகிறான்.


அந்த சிறுவனின் கிரகம் ஒரு வீட்டினை காட்டிலும் சற்றே பெரியது. அவன் தன்னுடைய கிரகத்தில் ஒரே நாளில் நாற்பத்து மூன்று முறை சூரியன் மறைவதை பார்த்ததாக சொல்லியபடியே ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும் போது சூரிய அஸ்தமனங்கள் மனத்துக்கு பிடித்திருக்கிறது என்று சொல்கிறான்.


குட்டி இளவரசன் பூக்களோடு பேசுகிறான். சித்திரத்தில் உள்ள ஆடு என்ன சாப்பிடும் என்று கவலை கொள்கிறான். மலருக்கு ஏன் முள் தேவைப்படுகிறது என்று சிந்திக்கிறான். தனி ஒருவனாக கிரகத்தில் அவன் வாழ்வதால் அந்த கிரகத்தை சுத்தம் செய்வது முதல் சகல வேலைகளையும் அவன் ஒருவனே செய்கிறான்.


 ஒரு வேலையை தேடிக் கொள்ளவும் அறிவை வளர்த்துக் கொள்ளவும் தன்னை சுற்றிய சிறு கிரகங்களை நோக்கி அவன் பயணம் செய்ய  துவங்கினான்.


முதல் கிரகத்தில் ஒரு அரசன் வாழ்ந்து வந்தான். அவன் குட்டி இளவரசனை கண்டதும் ஆகா இதோ ஒரு குடிமகன் என்று உற்சாகமாக வரவேற்று  தன் அதிகாரத்தை காட்ட துவங்குகிறான். இன்னொரு கிரகத்தில் ஒரு தற்பெருமைகாரனை சந்திக்கிறான். அடுத்த கிரகத்தில் ஒரு குடிகாரன். மற்ற கிரகத்தில் ஒரு பிசினெஸ்மேன். ஆறாவது கிரகத்தில் ஒரு வயதான எழுத்தாளர் . இப்படி அவன் சந்தித்த மனிதர்கள் யாவரும் அவனை தனது வேலையாள் போல அபத்தமாகவே நடத்துகிறார்கள்.


ஏழாவதாக அவன் பூமிக்கு வருகிறான். அங்கே ஒரு பாம்பை சந்திக்கிறான். அது அவனோடு பேசுகிறது. மனிதர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று குட்டி இளவரசன் கேட்ட போது பாம்பு மனிதர்கள் தங்களது இருப்பிடத்திலும் தனியாகவே இருக்கிறார்கள் என்று சொல்கிறது. வழியில் ஒரு மலரை சந்தித்து அதன் சுகதுக்கங்களை கேட்கிறான். வழியில் ஒரு நரியை சந்திக்கிறான்.


நரி அவனிடம் சொல்கிறது இதயத்திற்கும் பார்வை உண்டு. அது கண்களுக்கு தென்படாததை பார்க்க முடியும் என்கிறது


அதனால் நரியோடு நட்பு கொள்கிறான் . அதன்பிறகு விமானஒட்டியை சந்தித்து அவனுடன் பழகி நட்பாகிறான். தனது தனிமையயை விமான ஒட்டி குட்டி இளவரசனோடு கழிக்கிறான்.குட்டி இளவரசன் வானில் உள்ள நட்சத்திரங்கள் வெறும் ஒளி அல்ல. அவை கண்ணுக்கு தெரியாத சிரிப்பு. அதை நீ உணர வேண்டும் என்று கற்று தந்துவிட்டு பிரிந்து போய்விடுகிறான். உயிர்தப்பி சொந்த ஊர்  வந்த விமானி தன் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தை. அந்த குட்டி இளவரனையும் அவன் உலகின் மீது கொண்டுள்ள பற்றையும் நினைவில் கொண்டபடி அவன் மறுமுறை வரக்கூடும் என்று ஏக்கத்துடன் காத்திருப்பதோடு முடிகிறது


அதிக திருப்பங்கள். கதாபாத்திரங்கள் கிடையாது. குட்டி இளவரசன் பல நேரங்களில் ஒரு தீர்க்கதரிசியை போல நடந்து கொள்கிறான். ஒரு மலரை பாதுக்காப்பாக காப்பாற்ற தெரியாத மனிதர்கள் எப்படி பூமியை காப்பாற்றுவார்கள் என்று கேட்கிறான்.


அது போலவே ஆயிரக்கணக்கான ரோஜா வளர்க்க தெரிந்த மனிதனுக்கு ஒரு ரோஜாவினை கூட புரிந்து கொள்ள முடிந்ததில்லை என்று ஆதங்கம் கொள்கிறான். இயற்கை மனிதனுக்கு என்னவெல்லாம் தந்திருக்கிறது. அதை மனிதர்கள் எப்படி கண்டுகொள்ளாமல் சிதைக்கிறார்கள் என்பதையே நாவல் விவரிக்கிறது


குட்டிஇளவரசன் மிக நவீனமான ஒரு கதாபாத்திரம். அவனால் எலி நரி போன்றவற்றை எளிமையாக புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனிதர்களை புரிந்து கொள்ள முடியவில்லை. நாம் ஒருவரிடமிருந்து மற்றவர் விலகி போகவும் துண்டிக்கவும் தான் முயற்சிக்கிறோம். ஒருவரோடு ஒருவர் உறவை ஏற்படுத்திக் கொள்ள விருமபுவதில்லை என்கிறது நரி. அது தான் எக்சுபரியின் குரல்.


96 பக்கங்களே உள்ள இந்த சிறிய நாவல்  ஆழமான மனப்பாதிப்பை உருவாக்க கூடியது.


 பெரியவர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தவர்கள் தான் . அவர்களுக்கே இது சமர்பணம் என்று நாவலின் முகப்புரை கூறுகிறது.


திரைப்படம், குழந்தைகள் திரைப்படம்,, நாடகம் . இசைநாடகம், தொலைக்காட்சி தொடர், காமிக்ஸ்,ரேடியோ நாடகம் என்று நாற்பதுக்கும் மேற்பட்ட வடிவங்களில் குட்டி இளவரசன் மாற்றம் கண்டுள்ளது.


நமக்குள் உள்ள சிறுவனை விழிப்படையச் செய்வதற்காக ஒரு முறை  அவசியம் குட்டி இளவரசனை வாசியுங்கள். கவித்துமான அனுபவத்தை பெறுவீர்கள்.


 


The Little Prince- Antoine de Saint-Exupery- France- Gallimard- 1943


***

0Shares
0