குதிரைகள் பின்னோக்கி ஓடுவதில்லை.

Sergio Leone: The Way I See I Things என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். A Fistful of Dollars, The Good, the Bad, and the Ugly , Once Upon a Time in the West, Once Upon a Time America போன்ற சிறந்த படங்களை இயக்கியவர் செர்ஜியோ லியோனி. இவரது திரையுலக வாழ்க்கை மற்றும் நினைவுகளை அவருடன் பணியாற்றிய கலைஞர்கள் இந்த ஆவணப்படத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

செர்ஜியோ லியோனியின் அம்மா ஒரு நடிகை. அவரது தந்தை ஒரு நடிகர் மற்றும் இயக்குநர். ஆகவே லியோனி பிறந்தது முதலே சினிமா சூழலில் தான் வளர்க்கப்பட்டார். சார்லி சாப்ளின் தான் அவருக்குப் பிடித்தமான இயக்குனர். பிடித்தமான எழுத்தாளராக ஹோமரைக் குறிப்பிடுகிறார். ஹோமரின் கதாபாத்திரங்களில் முழுமையான கெட்டவருமில்லை. முழுமையான நல்லவருமில்லை. அவர் தான் மனிதனின் உண்மையான இயல்பை எழுத்தில் அடையாளம் காட்டியவர் என்கிறார்.

செர்ஜியோ லியோனி சட்டம் படித்தவர்., பின்னர்ப் புகழ்பெற்ற இத்தாலிய இயக்குனரான விட்டோரியோ டிசிக்காவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

ரோமில் படமாக்க வந்த பல அமெரிக்க இயக்குநர்களுக்கு உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார். குறிப்பாக ராபர்ட் வைஸ், பிரெட் ஜின்மேன் மற்றும் வில்லியம் வைலர் போன்ற இயக்குனர்களுடன் பணியாற்றிய அனுபவமிருந்தது. செர்ஜியோ லியோனியின் முதற்படம் The Colossus of Rhodes.

லியோனியின் A Fistful of Dollars படம் வெளியான போது அதைக் கடுமையாக விமர்சித்த இத்தாலிய திரை விமர்சகர் ஒருவர் பின்னாளில் லியோனியின் படங்களை ரசித்துக் கொண்டாடியதோடு செர்ஜியோ லியோனியின் பாஸ்போர்ட்டில் அவர் இத்தாலி நாட்டைச் சார்ந்தவர் என்பதை மாற்றிச் சினிமா தேசத்தைச் சேர்ந்தவர் எனப்போட வேண்டும் என்று கூறினார். அது மிகப்பொருத்தமான மதிப்பீடு.

ஒரு நேர்காணலில் English is not my language. I work with intuition. With interpreters. I have my own method. I know exactly what I want from actors. Sometimes, I even recite the role to the actor if it’s not clear என்று லியோனி குறிப்பிடுகிறார். அவருக்கு இத்தாலியைத் தவிர வேறு மொழி எதுவும் தெரியாது. ஆங்கிலம் தெரியாத செர்ஜியோ லியோனி எப்படி ஹாலிவுட்டில் படம் இயக்கினார் என்பது வியப்பளிக்கிறது.

கிளிண்ட் ஈஸ்வுட்டிற்கு இத்தாலி தெரியாது. ஆகவே லியோனி, வாட்ச் மீ என்ற ஒரேயொரு ஆங்கில வார்த்தையை வைத்துக் கொண்டு ஈஸ்வுட்டை நடிக்க வைத்திருக்கிறார். லியோனின் படக்குழுவில் இருந்தவர்கள் அத்தனை பேரும் இத்தாலியர்கள்.

தயாரிப்பாளருக்குக் கதை சொல்லுவது என்றால் செர்ஜியோ லியோனி நடித்துக்காட்டி துப்பாக்கி சப்தம். குதிரைகள் வரும் சப்தம் இவற்றோடு தான் கதை சொல்லுவார். அவர் கதை சொல்லும் போது கண்முன்னே காட்சிகள் விரிந்து போகும். லியோனியின் கதை சொல்லும் முறை வியப்பூட்டக்கூடியது என்கிறார் ஆவணப்படத்தில் லியோனியின் தயாரிப்பாளர்.

படப்பிடிப்புத் துவங்குவதற்கு முன்பாகவே கதையை விரிவாகச் சொல்லி இசையமைப்பாளர் எனியோ மோரிகோனிடம் முக்கியக் காட்சிகளுக்கான இசைக்கோர்வையைப் பெற்றுவிடுவார். அந்த இசையை ஒலிக்கவிட்டே படப்பிடிப்பு நடத்துவார். ஆகவே அவரது காட்சிகள் இசையின் மீது உருவாக்கப்பட்ட பிம்பங்களாகும். இசை உயரும் போது காட்சிக்கோணமும் உயர்ந்து செல்லும்.

என் படங்களின் உண்மையான வசனகர்த்தா இசையமைப்பாளர் எனியோ மோரிகோன் தான். அவர் வசனத்தின் தேவையில்லாமலே காட்சியைத் தனது இசையின் வழியே விவரித்துவிடுவார் என்கிறார் லியோனி.

இவரது முதல் படம் A Fistful of Dollars இது அகிரா குரசேவாவின் யோஜிம்போ படத்தின் இத்தாலிய வடிவமாகும். அனுமதி பெறாமலே இந்தப் படத்தை அவர் எழுதி இயக்கினார்.

படம் பெரிய வெற்றி பெற்றதும் படத்தைப் பாராட்டிய அகிரா குரசேவா படத்திற்கு முறையான அனுமதி பெறவில்லை ஆகவே உரிய தொகை வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். படத்தின் உரிமையைப் பெற அவருக்கு இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் தரப்பட்டது. இது குரசேவா தனது திரைப்படங்களின் வழியே பெற்ற தொகையை விடப் பல மடங்கு அதிகம். இவ்வளவிற்கும் யோஜிம்போ படமும் The Glass Key என்ற அமெரிக்கப் படத்தின் பாதிப்பில் உருவானதே. A Fistful of Dollars படம் இத்தாலியில் பணத்தை வாறிக்குவித்தது.“ஸ்பாகட்டி வெஸ்டர்ன்” எனப்படும் அவர் இயக்கிய முதல் மூன்று படங்கள் Dollars Trilogy என்று அழைக்கப்படுகின்றன, இந்த மூன்று படங்களிலும் கதாநாயகனுக்குப் பெயர் கிடையாது.

லியோனியை போல முக்கியக் கதாபாத்திரங்களின் கண்களை க்ளோசப்பில் படம்பிடித்தவர் ஒருவருமில்லை. அவர் தனக்கான திரைமொழியைத் தானே உருவாக்கிக் கொண்டார். படப்பிடிப்பின் போது காட்சிகள் முழுமையாக நிறைவு தரும்வரை படமாக்கிக் கொண்டேயிருப்பார். நிறையக் காட்சிகளைப் படமாக்கிவிட்டுப் படத்தொகுப்பின் போதே அவர் இறுதி வடிவத்தை உருவாக்குவார். அப்படியும் அவரது படங்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஓடக்கூடியவை. ஒவ்வொரு படத்திலும் அவர் எடுத்துப் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளின் அளவு ஒருமணி நேரம் ஒடக்கூடியதாகயிருக்கும்.

செர்ஜியோ லியோனியின் படங்களைப் பார்த்துவிட்டு வெஸ்டர்ன் படங்களின் தந்தை எனப்படும் ஜான் போர்டு என்னை விட மிகச்சிறப்பாக வெஸ்டர்ன் படங்களை இயக்கியிருக்கிறீர்கள் என்று வியந்து பாராட்டியிருக்கிறார். செர்ஜியோ லியோனி இறந்த போது அவரது மரண ஊர்வலத்தில் இவ் வாசகத்தைப் பெரிய பதாகையில் எழுதிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

Once Upon a Time America செர்ஜியோ லியோனி படங்களிலே மிகச்சிறந்த மாஸ்டர் பீஸ். ஒரு கேங்ஸ்டர் படத்தை இத்தனை கலைநேர்த்தியோடு உருவாக்க முடியும் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். Harry Grey எழுதிய Hoods என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே Once Upon a Time in America படத்தை உருவாக்கினார்.

எழுத்தாளர் நார்மன் மெயிலர் Once Upon a Time in America படத்தின் திரைக்கதையை எழுத அழைக்கப்பட்டார். அவர் எழுதிய திரைக்கதை லியோனிக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டார். லியோ பென்வெனுட்டி மற்றும் ஸ்டூவர்ட் காமின்ஸ்கி இருவரும் திரைக்கதை எழுத அழைக்கப்பட்டார்கள். இரண்டு ஆண்டுகாலம் திரைக்கதை எழுதும் பணி நடைபெற்றது.

நிலக்காட்சி ஓவியங்களைப் போலவே தனது காட்சிகளை உருவாக்கக்கூடியவர் லியோனி. ஒரு காட்சியில் நடிகர்களை எங்கே நிற்க வைப்பது. எப்படி அவர்களை இயங்கச் செய்வது என்பதில் லியோனி தனித்துவமிக்கவர். Once Upon a Time in the West படத்தின் துவக்ககாட்சி சினிமா வரலாற்றில் மறக்கமுடியாதது. ஒரு ரயில் வருவதற்காகக் காத்திருக்கும் மூவரின் மனநிலையை மிக அழகாகப் பதிவு செய்திருப்பார். அதிலும் தொப்பியில் விழும் நீர்த்துளியின் சப்தம். முகத்தினைச் சுற்றும் ஈயை விரட்டும் இன்னொருவன். காற்றாலையின் சப்தம். தந்தி கம்பங்களின் அதிர்வு. ஆளற்ற வெட்டவெளி. என அந்தக் காட்சி ஒரு மாயத்தன்மை கொண்டிருக்கிறது. திடீரெனத் தொலைவில் ரயில் வரும் ஓசை கேட்கிறது. அவர்கள் தயார் ஆகிறார்கள்.

அதுவரை படத்தில் இசை கிடையாது. இயற்கையான ஒலிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ரயில் வந்து நின்றதும் மவுத் ஆர்கன் சப்தம் கேட்கிறது. அது தான் இசை துவங்கும் புள்ளி. அடுத்த சில நிமிடங்களில் அதிரடியாகத் துப்பாக்கிச் சண்டை நடக்கிறது. இசையை வெகு பொருத்தமாகப் பயன்படுத்தக்கூடியவர் செர்ஜியோ லியோனி.

துப்பாக்கி மௌனமானது. அது பேசத்துவங்கினால் எதிராளி இறந்துவிடுவான். அது தான் எனது பாணி என்கிறார் லியோனி.

நடிகர்களின் முக அசைவுகளையும் கண்களையும் வைத்து உரையாடலின் தேவையில்லாமல் காட்சிகளை நகர்த்திக் கொண்டு போவதே அவரது பாணி.

ஹாரிசன் சாலிஸ்பரியின் The 900 Days: The Siege of Leningrad என்ற புத்தகத்தின் உரிமையைப் பெற்ற லியோனி அதைப் படமாக்க விரும்பினார். லெனின்கிராடு தவிரவேறு எங்கும் அதைப்படமாக்க முடியாது என்பதை உணர்ந்து 1971ல் சோவியத் யூனியனிற்குச் சென்றார். ரஷ்ய அரசு அவருடன் இணைந்து படத்தை உருவாக்குவதில் ஆர்வம் காட்டியது. முன்தயாரிப்புப் பணிகள் நடைபெற்றன. ஆனால் 1989ல் உடல்நலமற்று லியோனி இறந்துவிடவே அந்தப்படம் உருவாக்கப்படவில்லை.

Once Upon a Time America சோவியத் ஒன்றியத்தில் வெளியிட அனுமதிக்கப்பட்ட லியோனின் முதல் திரைப்படமாகும். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

ராம்போ படம் உலகெங்கும் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருந்த போது அதைக் காணுவதற்காகச் சென்றார் லியோனி. படம் அவருக்குப் பிடிக்கவில்லை. இது தான் சினிமா என்றால் இனி தனது படங்களை அமெரிக்காவில் ரசிக்கமாட்டார்கள் என்று தெரிவித்தார். சினிமாவின் திசை மாறியதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். ஆகவே அவர் ஒதுங்கிக் கொண்டார் என்கிறார்கள்.

I’m more a director of gestures and silences. And an orator of images என்கிறார் செர்ஜியோ லியோனி. அவரது திரைப்படங்களைப் பற்றிய சரியான மதிப்பீடு இதுவேயாகும்.

••

27.10.2019

0Shares
0